ஸ்ரீல பிரபுபாதருக்கும் சமூக நல பணியாளரான அசோக் சுகனிக்கும் இடையே மும்பையில் நிகழ்ந்த உரையாடல்.

 

திரு.சுகனி: உங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தியாவில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறது. எங்களது வெற்றியையும் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் பம்பாயின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களது கண் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 5,200 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதற்கு வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் பகவத் கீதையைப் பின்பற்றுகிறோம். கண் சிகிச்சை செய்வதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று பகவத் கீதை கற்பிக்கவில்லை. இந்த மாதிரியான எந்தவொரு தத்துவத்தையும் கிருஷ்ணர் பகவத் கீதையில் வழங்கவில்லை. அஃது உங்களது சொந்தக் கருத்து. ஆனால் நாங்கள் பகவத் கீதையை உள்ளது உள்ளபடி கடைப்பிடிக்கிறோம். அதுவே உங்களது செயலுக்கும் எங்களது செயலுக்கும் இடையிலான வேறுபாடாகும். வெறும் கண்களுக்கு மட்டும் சிகிச்சையளிப்பதற்கு பதிலாக, நாங்கள் மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை வழங்குகிறோம். மக்களுக்கு கிருஷ்ண உணர்வை வழங்கினால், அவர்கள் மீண்டும் பிறவியெடுக்க வேண்டியதில்லை. பௌதிக உடலே இல்லாதபோது, பௌதிகக் கண்களும் இருக்கப் போவதில்லை. எந்த நோயும் இல்லை. இதுவே துன்பத்தில் இருப்பவருக்கான உண்மையான உதவியாகும்.

சிலர் கண்களை கவனிக்கின்றனர், சிலர் வயிற்றை வளர்க்கின்றனர், சிலர் பற்களைப் பராமரிக்கின்றனர், சிலர் அதை கவனிக்கின்றனர், சிலர் இதை கவனிக்கின்றனர். ஆனால் இவை பிரச்சனைகளை நிறுத்தப் போவதில்லை. உண்மையான பிரச்சனை பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய். நீங்கள் பிறந்ததனால்தான் உங்களுக்கு இந்தக் கண்கள் இருக்கின்றன, அதனாலேயே நோய்கள் வருகின்றன. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய்ஶீபிறப்பை ஏற்றால், முதுமை, நோய், இறப்பு ஆகியவற்றையும் ஏற்றாக வேண்டும். மருத்துவமனைகளால் தற்காலிக நிவாரணத்தை வழங்க இயலும். ஆனால் அவை பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். உங்களால் அத்தகைய தீர்வை வழங்க முடிந்தால், கண் பிரச்சனை என்பதே இருக்காது.

நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வதாகவும், அவனுக்கு தலைவலி, வயிற்று வலி, கண் வலி ஆகிய அறிகுறிகள் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். மருத்துவர் அந்த அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து வழங்கினால் அது நோய்க்கு தீர்வாகுமா? நிச்சயமாக இல்லை. அவனுக்கு நோய் இருக்கிறது, அந்த நோயை குணப்படுத்தினால், அந்த நோயினால் எழுந்த அறிகுறிகளும் தானாக சரியாகி விடும். அதுபோலவே, பௌதிக உலகிலுள்ள அனைவரும் பிறப்பு, இறப்பு எனும் தொடர் சுழற்சியில் இருக்கின்றனர். பகவத் கீதை அவர்களுக்கான தீர்வை வழங்குகிறது, மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுக்காமல் இருப்பதற்கான வழியை வழங்குகிறது.

பகவத் கீதையில் கிருஷ்ணர் தற்காலிக துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளுமாறு கூறுகிறார். உடல் நிரந்தரமானதல்ல; அதுபோலவே, உங்களது நோயும் நிரந்தரமானதல்ல. ஆகவே, தற்காலிகமான துன்பத்தை பொறுத்துக் கொண்டு–அதற்கான நிரந்தரத் தீர்வைத் தேட வேண்டும். அதாவது, மீண்டும்மீண்டும் பிறத்தல், இறத்தல் எனும் தொடர் சுழற்சியை நிறுத்த வேண்டும். பிறப்பு, இறப்பு ஆகியவற்றை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆகவே, அவர்கள் தற்காலிகமான பிரச்சனைகளில் மும்முரமாக உள்ளனர்.

மரணத்தருவாயில் எவ்வாறு உடலை விட்டு வெளியேறினால் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்பதை பகவத் கீதை கற்பிக்கிறது. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி. இறைவனின் திருநாட்டிற்குச் சென்ற பின்னர், இப்பௌதிக உலகில் பிறவியெடுக்க வேண்டிய நிலை இருக்காது. இதுவே அனைத்து பிரச்சனைகளுக்குமான உண்மையான தீர்வு.

திரு.சுகனி: பட்டினி குறித்து தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் அதனைத் தீர்ப்பதற்கான முயற்சியில்…

ஸ்ரீல பிரபுபாதர்: பட்டினி? அது பிரச்சனையே இல்லை. வேதங்கள் கூறுகின்றன, நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம்/ ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான். அனைத்து உயிர்வாழிகளுக்கும் பகவான் உணவளிக்கின்றார். ஒருவனுக்கு உணவு வழங்கப்படவில்லை எனில், அது கடவுளின் ஆசிர்வாதம், அவனைத் திருத்துவதற்கான கடவுளின் ஏற்பாடு.

எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டுள்ளது என கொள்வோம். ஆகையால், அதன் தந்தை அவனுக்கு எந்த உணவும் வழங்கவில்லை. அது பட்டினி அல்ல, அதற்கு தந்தை உதவுகிறார் என்றே அர்த்தம். அதுவே நோய்க்கான தீர்வு. குழந்தை எதற்காக குற்றம்சாட்ட வேண்டும்? பட்டினி என்பதெல்லாம் கற்பனையான மனதினால் எழும் பிரச்சனை, ஆனால் நாங்கள் எதையும் கற்பனை செய்வதில்லை. நாங்கள் சாஸ்திரங்களிலிருந்து அறிவைப் பெறுகிறோம். தத் தே  ஸுஸமிக்ஷமானோ… பக்தன் பசியுடன் இருந்தாலும், அவன் அதனைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதனை அவன் கடவுளின் ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்கிறான். நான் ஏதோ தவறிழைத்துள்ளதால், பகவான் என்னை இத்தகைய சூழ்நிலையில் வைத்திருக்கிறார். அவர் எனக்கு உதவியே புரிகிறார்,” என்று பக்தன் எண்ணுகிறான். இதுவே எங்களது பார்வை. இதுவே சாஸ்திரபூர்வமானது.

கடவுள் ஏன் சிலருக்கு கருணை காட்டுகிறார், சிலருக்கு கருணை காட்டுவதில்லை? இது நியாயமில்லை,” என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் இக்கேள்வி முட்டாள்தனமானது, கடவுள் யாருக்கும் அநியாயம் இழைப்பதில்லை. கடவுள் நல்லவரே, மக்கள்தான் கடவுளை அறியாமல் வாழ்கின்றனர். உங்களுக்கு புத்தி இல்லாத காரணத்தினால் மக்கள் பசியுடன் இருப்பதைப் பார்த்து, கடவுள் நல்லவர் அல்லர் என்று கூறுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில், நீங்கள்தான் நல்லவராக இல்லை; ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தவறின் காரணமாகவே துன்பத்தை அனுபவிக்கிறான். ஆகவே, பக்தர்கள் தங்களது துன்பங்களை கிருஷ்ணரது ஆசிர்வாதமாக ஏற்கின்றனர். இவ்வாறு எண்ணுவதால், முக்திக்கான பாதை (முக்தி-பதே ஸ தாய-பாக்) பக்தர்களுக்குத் திறக்கப்படுகிறது.

திரு.சுகனி: உலகில் கடவுளின் இந்த செயல்பாட்டினைப் புரிந்துகொள்வது எங்களுக்கு கடினமாகத் தெரிகிறது, அது நியாயமற்றதாகவும் தோன்றுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையின்மையே உண்மையான பிரச்சனை. கடவுள் என்பவர் நீங்கள் கேட்பவற்றை வழங்குபவர் என்றும், உங்களது தேவைகளை பூர்த்தி செய்பவர் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்ஶீஇதுவே உங்களது கடவுள் நம்பிக்கை. கடவுளே, நீங்கள் எனக்கு உதவாவிடில், நான் உங்களுக்கு சேவை செய்ய மாட்டேன்.” இவ்வாறு மக்கள் கடவுளைத் தங்களது சேவகனாகக் கருதுகின்றனர்.

ஜெர்மனியிலிருந்த எனது ஆன்மீக சகோதரர் என்னிடம் கூறினார், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் சண்டைக்குச் சென்றிருந்த சமயத்தில், வீட்டிலிருந்த பெண்கள் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்று, போருக்குச் சென்றுள்ள எங்களது தந்தை, கணவன், மகன் ஆகியோர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும்,” என்று பிரார்த்தித்துக் கொண்டனர். ஆனால், அவர்களில் யாரும் வீடு திரும்பவில்லை. மக்கள் அனைவரும் நாத்திகர்களாகி விட்டனர். தேவாலயத்திற்குச் செல்வதே வீண், நான் எனது கணவனுக்காக எவ்வளவோ வேண்டிக் கொண்டேன், ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதில் எந்த பிரயோஜனமும் இல்லை!”

இதுவே, கடவுளைப் பற்றிய அவர்களின் புரிதலாகும். போர் அறிவிப்பின்போது அவர்கள் கடவுளிடம் கேட்கவில்லை. ஆனால் கணவன் போருக்குச் சென்று மடிய இருக்கிறான் எனும்போது கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்கின்றனர். எனது கணவன் நல்லபடியாக திரும்பி வர வேண்டும்.” என்று கடவுளுக்கு ஆணையிடுகின்றனர். கடவுள் எனது கணவனை வீட்டிற்குத் திருப்பி அனுப்பவில்லை, கடவுள் எனது ஆணையை நிறைவேற்றவில்லை. எனவே, கடவுள் அநியாயம் புரிபவர். அவரிடம் எங்களுக்கு ஆர்வமில்லை,” என்று கூறுகின்றனர்.

இந்த மனப்பான்மையே இங்கு நிலவுகிறது. மக்கள் பாவம் செய்யும்போது கடவுளைக் கேட்பதில்லை, ஆனால் துன்புறும்போது கடவுளிடம் அழுகின்றனர். கடவுள் அவர்களது ஆணையை நிறைவேற்றாவிடில், அவர்கள் நாத்திகர்களாகின்றனர். கடவுள் நியாயமற்றவர்”என்று கூறுகிறார்கள். இஃது அயோக்கியத்தனமாகும்.

(தமிழாக்கம்: வேங்கடேஷ்)