எல்லா பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர்

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷுகஷ்சித் யததி ஸித்தயே

யததாம் அபி ஸித்தானாம்கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:

“ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில்கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.” (பகவத் கீதை 7.3)

மதங்களைக் கடந்த இறையுணர்வு

இறைவனை உணர்தல் என்பது விலங்குகளுக்கோ மனித ரூபத்தில் உள்ள விலங்குகளுக்கோ சாத்தியமானதல்ல. தற்காலிக நாகரிகமானது ஏறக்குறைய முற்றிலும் விலங்குகளின் கூட்டமாக உள்ளது; ஏனெனில், அது மிருக குணங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. பறவைகளும் விலங்குகளும் விடியற்காலையில் எழுகின்றன, பிறகு தன்னுடைய அன்றாட உணவை தேடுவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. இரவு வந்தவுடன் மீண்டும் கனிகளையும் விதைகளையும் தேடி மரங்களுக்குச் செல்கின்றன. இதைப் போன்றே நகரத்திலுள்ள மக்கள், தங்களது உணவிற்காக, பெருங்கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணிபுரியச் செல்கிறார்கள்.

உண்மையான நாகரிகமானது மனிதனின் மிருகத்தனமான தேவைகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது மனிதனுக்கும் இறைவனாகிய அந்த மிகவுயர்ந்த தந்தைக்குமிடையே உள்ள உறவை அறிந்துகொள்வதற்கானது. அந்த உறவினை ஒருவன் எந்த முறையில் வேண்டுமானாலும் கற்கலாம்: கிருஸ்துவம், வேத இலக்கியங்கள், அல்லது குரான் என ஏதேனும் ஒரு முறையிலிருந்து அது கற்கப்பட வேண்டும். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் கிருஸ்துவரை இந்துவாக்குவதோ, இந்துவை கிருஸ்துவராக்குவதோ அல்ல; மாறாக, மனித இனத்தின் கடமை இறைவனுடனான உறவை புரிந்துகொள்வதற்கானது என்பதை தெரிவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இறைவனுடனான உறவை அறிந்துகொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும்; இல்லையெனில், ஒருவன் மிருகத்தனமான குணங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து விடுகிறான். நாம் அனைவரும் கிருஷ்ணர் அல்லது பகவான் என்று அழைக்கப்படுபவரின் மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். இதற்காக ஒருவன் தன்னுடைய மதத்தினைப் பயிற்சி செய்ய வேண்டும், அல்லது நாங்கள் கற்றுத் தரும் முறையினைக் கற்க வேண்டும். ஒரு வழிமுறையினை விடுத்து மற்றொரு வழிமுறையினை தேர்ந்தெடுப்பதில் ஒருவன் அதிருப்தி கொள்ளக் கூடாது.

விஷாத் அபி அம்ருதம் க்ரா ஹ்யம்

அமிதயாத் அபி காஞ்சனம்

நீ சாத் அபி உத்தமாம் வித்யாம்

ஸ்ருதி ரத்னம் துஷ்குலாத் அபி

(நீதி தர்பன 1.16)

சரியான விஷயத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கோப்பையில் நஞ்சும் அமுதமும் சேர்ந்து இருந்தால், நஞ்சை விட்டுவிட்டு அமுதை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறுகிறார். மேலும், தங்கத்தை அசுத்தமான இடத்தில் கண்டால்கூட அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாக, கல்வி கற்பதற்கு புத்திக் கூர்மை வாய்ந்த பிராமணனை அணுக வேண்டும் என்பது வேத வழக்கமாக உள்ளபோதிலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையை அறிந்திருந்தராக இருந்தால், அவரை ஒருவன் குருவாக ஏற்று அவரிடமிருந்து கற்க வேண்டும். அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்ற காரணத்திற்காக, அவரை குருவாக ஏற்பதற்கு மறுத்தல் தவறு.

அதுபோலவே, ஒருவன் இறைவனை அறிந்துகொள்வதில் தீவிரமாக இருப்பானேயானால், அவன் தன்னை, “நான் ஒரு கிருஸ்தவன்,” “நான் ஓர் இந்து,” அல்லது “நான் ஓர் இஸ்லாமியன்” என்றெல்லாம் நினைக்கக் கூடாது. பிரயோஜனமான முறை எது என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டும். “நான் ஏன் இந்து மதத்தை அல்லது வேத இலக்கியங்களை பின்பற்ற வேண்டும்?” என்று ஒருவர் நினைக்கக் கூடாது. வேத இலக்கியங்களை பின்பற்றுவது இறைவனிடம் அன்பை வளர்த்துக் கொள்வதற்கானதே. மாணவர்கள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும்பொழுது, அங்குள்ள ஆசிரியர்கள், அமெரிக்கராக, ஜெர்மானியராக, அல்லது இதர நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒருவருக்கு மேற்படிப்பு தேவைப்பட்டால் அவர் ஆசிரியரின் நாட்டினைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அங்கு சென்று படிக்கிறார்கள். இறைவனை அறிந்துகொள்வதும் அதுபோன்றதாகும்; கிருஷ்ண உணர்வைப் போன்ற சரியான ஒரு வழிமுறை கிடைத்தால், அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உணவிற்கு பஞ்சமில்லை

பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். விடியற் காலையிலிருந்து இரவு நெடு நேரம் வரை அவர்கள் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேவலயா பக்தி, அதாவது தூய்மையான பக்தி என்று அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு வேறு வேலை என்பது கிடையாது, இந்த வழிமுறை எல்லாருக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. இதுவே அனைத்து மதங்களின் பூரணத்துவமாகும் ( வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே).

பௌதிக மதத்தை பின்பற்றுவதற்காகவும் பௌதிக இலாபத்திற்காகவும், மக்கள் தெய்வ நம்பிக்கையை மேற்கொண்டு தேவாலயம் அல்லது கோயிலுக்குச் சென்று, “இறைவனே, எனது இன்றைய ரொட்டியைத் தாரும்” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் இது கேட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ரொட்டியானது அவர்கள் கேட்காமலே அளிக்கப்படுகிறது. தேவாலயத்திற்குச் சென்று இறைவனிடம் கேட்காமலேயே பறவைகளும் விலங்குகளும் தத்தமது உணவைப் பெறுகின்றன. அதுபோலவே, தேவாலயங்களுக்குச் செல்பவர்கள், செல்லாதவர்கள் என அனைவருக்கும் அன்றாட உணவு அளிக்கப்படுகிறது. அன்றாட உணவு ஒரு பிரச்சனையே இல்லை. தெருவில் யாரும் பசியால் இறப்பதில்லை, எந்தவொரு பறவை, விலங்கு அல்லது எறும்பு பசியால் இறப்பதை நாம் பார்ப்பதில்லை. எல்லாருக்கும் தேவையான உணவு உள்ளது, அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களிடம் கிருஷ்ண பக்தி அல்லது இறையுணர்வு என்பது இல்லை என்பதற்காக மட்டுமே நாம் வருத்தப்பட வேண்டும். இறைவனுடைய சாம்ராஜ்ஜியத்தில் உணவுக்கு பஞ்சம் என்பதே இல்லை.

எறும்பு முதல் யானை வரை அனைவருக்கும் தேவையான உணவினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே வழங்குகிறார்.

கடவுளிடம் நாம் கேட்க வேண்டியது?

அப்படியெனில், கடவுளிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்? தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதா லப்யதே யத் ப்ரமதாம் உபர்யத:, இந்த அகிலம் முழுவதும் பயணம் செய்தாலும் கிடைக்காத ஒன்றை அடைய முயற்சி செய் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அஃது என்ன? கேவலயா பக்தயா, தூய்மையான பக்தி. இறைவனின் ஏற்பாட்டின்படி, இந்த பூமியில், தேவையான அளவு இடமும் உணவும், எதிர்காலத்திற்கு தேவையான அளவு உணவும் உள்ளது. ஆனால் நாம்தான் மடத்தனமாக அந்த ஏற்பாட்டை மாற்றி, உலகத்தின் ஒரு பகுதியில் உள்ளவர் பசியால் வருந்துமாறும் மறுபகுதியில் உள்ளவர் தானியத்தை கடலில் எறியுமாறும் செய்துள்ளோம். வேதங்கள் கூறுகிறது, ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். மிகவுயர்ந்த புருஷரான கடவுள் எல்லா உயிர்வாழிகளுக்கும் உணவளிக்கிறார். பிரச்சனை என்னவெனில், நாம் நம்முடைய தேவையைவிட அதிகமாக எடுத்துக் கொண்டு, நாமே பிரச்சினையை உருவாக்கிக் கொள்கிறோம். பிரச்சனைகளெல்லாம் அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படும் இந்த மனிதர்களாலே உருவாக்கப்படுகின்றன. இயற்கை அல்லது கடவுளின் முறைப்படி எல்லாமே முழுமையானது, ஸ்ரீ ஈஷோபானிஷத் கூறுகிறது:

ஓம் பூர்ணம் அத: பூர்ணம் இதம்பூர்ணாத் பூர்ணம் உச்யதே

பூர்ணஸ்ய பூர்ணம் அதாயபூர்ணம் ஏவாவசிஸ்யதே 

“பரமபுருஷ பகவான் பூரணமானவர் ஆவார். இதனால் அவரிடமிருந்து வெளிப்பட்ட இந்த சிறப்பான உலகமும் அவரைப் போன்று முழுமையானதாகும். அவரிடமிருந்து வரும் அனைத்தும் அவரைப் போன்றே பூரணமானதாகும். அவரிடமிருந்து பல முழுமைகள் வெளிப்பட்டபோதிலும், அவர் முழுமையாகவே இருக்கிறார்.” இறைவன் முழுமையானவர், அவருடைய படைப்பு முழுமையானது, அவருடைய ஏற்பாடுகளும் முழுமையானவை. ஆனால் நாமோ குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களை கிருஷ்ண உணர்வுடையவராக மாற்றும் கல்வியே உண்மையான கல்வியாகும். அந்தக் கல்வியால் மட்டுமே மக்களை பூமியின் ஆதாரங்களைச் சரியான முறையில் உபயோகிக்கச் செய்து, குழப்பங்கள் உருவாகுவதை தடுக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியாது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சரியான முறையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கான தீர்வு

வாழ்க்கையின் பிரச்சனைகளை பக்தித் தொண்டினால் எளிமையாக தீர்க்கலாம் என்று சுகதேவ கோஸ்வாமி கூறுகிறார். யாரால் அதைச் செய்ய முடியும்? அது சாதாரணமானவர்களுக்கு சாத்தியமானதல்ல. ஆனால், யாரொருவர், வாஸுதேவ பராயண:, அதாவது பகவான் கிருஷ்ணரின் (வாஸுதேவரின்) பக்தராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.

முன்பே விளக்கியபடி, பிரச்சனைகளெல்லாம் பாவச் செயல்களாலேயே உருவாக்கப்படுகின்றன. போதிய அளவு உணவு இருந்தாலும் இலாபம் ஈட்டுவதற்காக தேவைக்கு மேலாக சேமித்து வைக்கிறார்கள், பதுக்கவும் செய்கிறார்கள். இந்தியாவில் 1942ஆம் ஆண்டில் தேவையில்லாமல் பதுக்கி வைத்த மக்களால் ஒரு செயற்கையான பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. பணக்கார மனிதர்கள் ஒரு பௌண்ட் ஆறு ரூபாய் என்று விற்கப்படும் அரிசியை கணக்கில்லாமல் வாங்க ஆரம்பித்தார்கள். பிறகு, திடீரென்று ஒரு வாரத்திற்குள் ஒரு பௌண்ட் அரிசி ஐம்பது ரூபாயாக விலை உயர்ந்தது. இதன் காரணமாக சந்தையில் அரிசியே இல்லாமல் போய்விட்டது. மக்கள் பசியால் தவித்தனர். அச்சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவர் குறிப்பிட்டார்: “இதைப் போன்று பட்டினியாக இருக்கும் நிலைமை எங்கள் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்குமாயின், நிச்சயமாக ஒரு புரட்சியே உருவாகியிருக்கும்.” ஆனால் இந்திய மக்களோ நற்பண்போடு வளர்ந்திருந்த காரணத்தினால், இந்த செயற்கை பஞ்சத்திற்காக புரட்சி செய்வதைவிட அமைதியாக இறப்பதையே மேன்மையாக கருதினார்கள்.

சொல்லப்போனால், இஃது ஓர் உதாரணம்தான். ஆனால் இஃது ஒன்றே, “பிரச்சனைகள் கடவுளால் அன்றி மக்களாலேயே உருவாக்கப்படுகிறது” என்பதை தெளிவாகக் காட்டுகிறது. முதல் உலகப் போரின்பொழுது ஜெர்மனியில் பெண்கள் தேவாலயத்திற்குச் சென்று, தங்களுடைய கணவன்கள், மகன்கள், மற்றும் உடன்பிறப்புகள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் யாரும் வீடு திரும்பவில்லை. இதனால், எல்லா பெண்களும் உடனே நாத்திகர்களாகி விட்டனர். போரையோ அதன் விளைவுகளையோ இறைவன் ஆதரிக்கவில்லை என்பதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை, போரை ஏற்படுத்திவிட்டு இறைவனிடம் தீர்வுக்காக சென்றனர். பிரச்சனைகளை நாமே உருவாக்கிக் கொள்வதால், விளைவுகளையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும்.

வாஸுதேவரிடம் சரணடைந்தல்

இருந்தாலும், இறைவனான கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்களின் துன்பங்கள் தீர்க்கப்படுகின்றன. இஃது உண்மை. இந்த காரணத்திற்காகவாவது அந்த பரம புருஷ பகவானான வாஸுதேவரிடம் பக்தித் தொண்டை செலுத்த வேண்டும். வாஸுதேவ பகவதி பக்தியோக: ப்ரயோஜித:, ஒருவன் வாஸுதேவருக்கான பக்தித் தொண்டில் ஈடுபடுவானாயின், அவன் உயர்ந்த அறிவை தாமதமின்றி பெறுவான். ஜனயத்யாஷு வைராக்யம். ஜ்ஞான, வைராக்ய என்னும் சொற்கள், எந்த அறிவால் ஒருவன் பௌதிகத்தில் பற்றற்றவனாகிறானோ அந்த அறிவையே குறிக்கும். ஜ்ஞான என்றால் அறிவு, வைராக்ய என்றால் பற்றின்மை. மனித வாழ்க்கையில் அறிவு, பற்றின்மை ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. “நான் ஓர் ஆன்மீக ஆத்மா. இந்த பௌதிக உலகோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆயினும், இந்த உலகத்தை பல வழிகளில் அனுபவிக்க நினைக்கும் எனது மனதின் காரணத்தினால், நான் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு மாறிக் கொண்டிருக்கிறேன். இஃது எப்பொழுது தொடங்கியது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அஃது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.” இதை ஒருவன் அறிய வேண்டும், அதுவே உண்மையான அறிவு. அறிவோடு இருப்பதற்கு ஒருவன் தன்னுடைய உண்மையான நிலையை அறிந்து, தான் எவ்வாறு இந்த பௌதிக உலகில் துன்பப்படுகிறேன் என்பதை உணர வேண்டும். அந்த பூரண அறிவை ஒருவன் வாஸுதேவ பராயணா, அதாவது வாஸுதேவரின் பக்தனாகும் பொழுதே எய்தலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்:

பஹூனாம் ஜன்மனாம் அந்தேஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே

வாஸுதேவ: ஸர்வம் இதிஸ மஹாத்மா ஸுதுர்லப:

“பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத் கீதை 7.19)

இறைவனிடம் சென்று தினசரி உணவைக் கேட்பதற்கு பதிலாக, பக்தியைக் கேட்க வேண்டும்.

நாம் கடவுள் அல்ல

எல்லாவற்றின் மூலமும் வாஸுதேவரே என்பதை பூரணமாக உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. பெரிய மீசையையும் தாடியையும் வளர்த்துக் கொண்டு, மக்களிடம், “நீங்கள் கடவுளுக்குச் சமமானவர்கள், இறந்தவுடன் விழித்தெழுந்து கடவுளாகிவிடுவீர்கள்,” என்று கூறிக் கொண்டிருக்கும் போலி மஹாத்மாக்களை நாம் காண்கிறோம். அவர்களெல்லாம் மஹாத்மாக்களல்ல, உண்மையாகச் சொல்லப் போனால் துராத்மாக்கள். அவர்கள் கிருஷ்ணரின் நிலையினை ஆக்கிரமித்து, அவருடன் ஐக்கியமாக நினைக்கும் அளவிற்கு, கடுமையான இதயம் படைத்தவர்கள். அலுவலகத்தில் உள்ள பணியாளன் தனது எஜமானரின் பதவியைப் பிடிக்க நினைத்தால், அதை எஜமானர் விரும்புவாரா? அதைப் போலவே, கடவுளாக மாற நினைக்கும் உயிர்வாழிகள் அவரால் விரும்பபப்படுவதில்லை. உண்மையில், கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கடவுளாக முடியாது. இருப்பினும், கடவுளாக மாறுவதற்கான சிலரது வீண் முயற்சிகளை அவர் விரும்புவதில்லை. இதுபோன்று முயற்சி செய்பவர்கள், பகவத் கீதையில், த்வேஷ்ட, அதாவது பொறாமையுள்ளவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

தான் அஹம் த்விஷத: க்ரூரான்ஸம்ஸாரேஷு நராதமான்

க்ஷிபாம்யஜஸ்ரம் அஷுபான்ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு

“பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை, ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகிறேன்.” (பகவத் கீதை 16.19)

கடவுளின் நிலைமீது பொறாமை கொண்டவர்கள் நரகத்தனமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். முதலில் அவர்கள் பௌதிக உலகில் உயர்நிலையை அடைய நினைக்கின்றனர். ஆனால் அந்த முயற்சியில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டவுடன், “நான் கடவுளின் நிலையை அடைய வேண்டும்” என்று நினைக்கின்றனர். உண்மையில் இந்த ஆசையும் குழப்பத்திலேயே முடிகிறது. ஏனென்றால், யாராலும் கடவுளாக முடியாது. கடவுள் கடவுள்தான், உயிர்வாழி உயிர்வாழிதான். கடவுள் உயர்ந்தவர், எல்லையற்றவர்; நாமெல்லாம் மிகச் சிறியவர்களே. நம்முடைய நிலை கடவுளுக்குச் சேவை செய்வதாகும். அந்த நிலைக்கு ஏற்றவாறு செயல்படும்பொழுது மட்டுமே நம்மால் இன்பமடைய முடியும். கடவுளைப் போன்று நடிப்பதால் இன்பத்தைப் பெற முடியாது.

சரணடைவதால் பாவ விளைவுகளை முறியடிக்கலாம்

யஸ்யைக நிஸ்வஸித காலம் அதாவலம்பய ஜீவந்தி லோம விலாஜா ஜகத் அண்ட நாதா: (பிரம்ம சம்ஹிதை 5.48). கணக்கிலடங்காத பிரபஞ்சங்கள் பல உள்ளன. அவையெல்லாம் மஹாவிஷ்ணுவின் ஒரு மூச்சில் உள்ளிழுக்கப்பட்டு அவரது உடலில் கரைக்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் உயிர்வாழிகளால் எவ்வாறு கடவுளாக முடியும்? கடவுள் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானவர் அல்ல. எனவே, நாம் அறிவில் முன்னேறி வாஸுதேவராகிய கிருஷ்ணரை மிகவுயர்ந்தவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணர் சாதாரண மனிதரா என்பதற்கான கேள்விக்கு இடமேயில்லை. அவர் இந்த பூமியில் எந்த நிலையில் அவதரித்தாலும் சாதாரணமான உயிர்வாழியாக அவதரிப்பதில்லை. கிருஷ்ணரிடம் சரணடையும் பொழுது பரம புருஷ பகவானிடம் சரணடைகிறோமே தவிர, சாதாரண மனிதரிடம் அல்ல என்பதை உணர வேண்டும். உண்மையில், இஃது அனைத்து வேத இலக்கியங்களாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் கிருஷ்ணரிடம் சரணடையும்பொழுது, அவருடைய பாவச் செயல்களின் விளைவுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணரே அவரிடம் தனிப்பட்ட முறையில் சரணடைவதை அறிவுறுத்துகிறார்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்யமாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோமோக்ஷயிஷ்யாமி மா ஷுச:

“எல்லா விதமான தர்மங்களையும் துறந்து, என் ஒருவனிடம் மட்டும் சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.” (பகவத் கீதை 18.66)

எனவே, பக்தித் தொண்டில் ஈடுபடும் பக்தர் (வாஸுதேவ பராயணா:), எல்லா விதமான பாவச் செயல்களிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். கிருஷ்ண பக்தித் தொண்டு அல்லது கிருஷ்ண உணர்வு என்பதை எந்தளவு கற்பனையாலும் அடைய முடியாது. ஆனால் அதே சமயத்தில் ஒரு புனிதமான பக்தரின் காரணமற்ற கருணையால் கிருஷ்ண உணர்வை அடையலாம். வீழ்ந்த ஆத்மாக்களின் மேல் உள்ள கருணையால் மஹாத்மா அல்லது பெரிய ஆத்மாவால் அளிக்கப்பட்ட ஈடுஇணையற்ற பரிசே கிருஷ்ண உணர்வாகும். ஒருவர் கிருஷ்ணரின் கருணையாலே ஆன்மீக குருவைப் பெறுகிறார். பிறகு, அவர் ஆன்மீக குருவின் கருணையால் கிருஷ்ணரைப் பெறுகிறார். இது சூரிய உதயத்தினை போன்றது. இரவில் இருள் உள்ளது, ஆனால் காலையில் சூரியன் உதயமானதும் பல மைல்கள் தூரம் பரவியுள்ள இருள் உடனடியாக நீக்கப்படுகிறது. இதைப் போன்றே நம்முடைய இதயத்திற்குள் சூரியனாகிய கிருஷ்ணரை உதயமாக்க முயற்சிப்போமேயானால் நம்முடைய எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிடும்.

உண்மையான அறிவுடையவன் பற்பல பிறவிகளுக்கு பிறகு கிருஷ்ணரை சரணடைகிறான்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives