தூய பக்தித் தொண்டும் படைப்பின் வழிமுறையும்

வழங்கியவர்: வனமாலிகோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம், நான்காம் அத்தியாயங்கள்

சென்ற இதழில் பரமாத்மா மீதான தியானத்தையும் ஆத்மாவின் பயணத்தையும் பற்றி பார்த்தோம். இந்த இதழில் தூய பக்தித் தொண்டைப் பற்றி விரிவாகக் காணலாம்.

அனைவராலும் வழிபடப்படும் பகவான் ஹரி

மரணத்தின் வாயிலில் உள்ள மதிநுட்பமுள்ள மனிதனின் கடமையைப் பற்றிய பரீக்ஷித்தின் விசாரணைக்கு ஏற்றவாறு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி விடையளித்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு மனிதர்களின் பலவித ஆசைகளுக்கேற்ப பல்வேறு குண வழிபாடுகள் உள்ளன என்று கூறியபடி, அந்த ஆசைகளையும் ஆசையுள்ளவர்கள் வழிபடக்கூடிய தேவர்களையும் அவர் பட்டியலிட்டார். உதாரணமாக, காம சுகத்தை விரும்புவோர் இந்திரனையும், நன்மக்கட்பேறினை விரும்புவோர் பிரஜாபதிகளையும், மிகுந்த சக்திகளை விரும்புவோர் அக்னியையும் புலனின்பத்தை விரும்புவோர் சந்திரனையும் வழிபடுவர் என்று குறிப்பிட்டார். இருப்பினும், ஆன்மீக முன்னேற்றத்தை விரும்புவோர் பகவான் விஷ்ணுவையும் அவரது பக்தர்களையும் வணங்குவர் என்றும் தெரிவித்தார்.

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பலவித ஆசைகள் நிரம்பியவனாக அல்லது ஆசைகளே இல்லாதவனாக அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், அவன் முழுமுதற் கடவுளை தன் முழு சக்தியைப் பயன்படுத்தி தீவிரமாக வழிபாடு செய்ய வேண்டும். பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதியின்றி தேவர்களால் எந்த பலனையும் அளிக்க முடியாது என்பதால், புத்திசாலியான ஒருவன் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே வழிபடுகிறான்.

பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கவர்ச்சி உண்டாக, தூய பகவத் பக்தர்களின் சங்கம் அவசியம். சக்தி வாய்ந்த பௌதிக குணங்கள் எனும் அலைகளை கிருஷ்ண விஞ்ஞானத்தினால் நிறுத்த முடியும். அதனால் சுயதிருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். இவ்வாறு சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜரிடம் கூறியதை சூத கோஸ்வாமியிடமிருந்து சௌனகரைத் தலைமையாகக் கொண்ட நைமிஷாரண்ய முனிவர்கள் கவனத்துடன் கேட்டனர்.

கிருஷ்ண கதாம்ருதம்

அதன்பின் சௌனகர் சூத கோஸ்வாமியிடம் கூறினார்: “கற்றறிந்த முனிவராகவும் கவியாகவும் இருந்த ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பரீக்ஷித் மஹாராஜர் மறுபடியும் என்ன விசாரித்தார்? அவரின் விசாரணை பகவான் கிருஷ்ணருடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைக் கேட்க நாங்கள் மிகவும் ஆவலுடன் உள்ளோம். அவர் தன் குழந்தைப் பருவத்திலேயே சிறந்த பக்தராக இருந்தார். அவரின் சிறுவயது விளையாட்டிலும்கூட ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹத்தை வழிபடுவது வழக்கம்.

“வியாஸதேவரின் மகனான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியும் உன்னத அறிவில் முழுமைபெற்றவராக இருந்ததுடன் கிருஷ்ணரின் சிறந்த பக்தராகவும் இருந்தார். ஆதலால் அவ்விரு சிறந்த பக்தர்களின் உரையாடலைத் தவிர மற்றவை சூரியனின் உதயத்தாலும் அஸ்தமிப்பாலும் ஒருவரின் ஆயுட்காலத்தைக் குறைத்து விடுகிறது.

“ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளாமல் மரங்களைப் போல நீண்ட காலம் வாழ்வதும், கொல்லனின் துருத்தியைப் போல சுவாசிப்பதும், மிருகங்களைப் போல உண்டு உடலுறவு கொள்வதும் வீணான வாழ்வாகும். பரம புருஷ பகவானின் உன்னத லீலைகளைக் கேட்பதில் ஆர்வம் இல்லாதவர்களைப் போற்றும் மனித சமூகம் நாய், பன்றி, ஒட்டகம், கழுதை போன்ற மிருக சமூகத்திற்கு ஒப்பானதாகும்.”

தூய பக்தித் தொண்டு

சௌனகர் தொடர்ந்து கூறினார்: “முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆற்றல்மிக்க அற்புதச் செயல்களைப் பற்றிக் கேட்காதவனின் காதுகள் பாம்புக்குழிகள் போன்றவை. அவற்றை உரக்கப் பாடாதவனின் நாக்கு, தவளையின் நாக்கைப் போன்றதாகும்.

“பகவானின் முன் வணங்காத தலை பெரும் சுமை மட்டுமே. பகவானுக்கு சேவை செய்யாத கரங்கள், பிணத்தின் கரங்களைப் போன்றவை. பகவான் கிருஷ்ணரின் திருவுருவத்தைக் காணாத கண்கள் (காணும் திறனற்ற) மயிலிறகிலுள்ள கண்களைப் போன்றவை. புனித ஸ்தலங்களுக்குச் செல்லாத கால்கள் அசைவற்ற அடிமரங்களைப் போன்றவை.

“தூய பக்தர்களின் பாத தூசியைத் தலையில் ஒருபோதும் ஏற்காதவன் உயிரற்ற உடலே. பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட துளசி இலைகளின் நறுமணத்தை முகராதவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் சவமே ஆவான். பகவானின் நாமத்தைப் பாடும்போது உருகாத இதயம் இரும்பைப் போன்றதாகும்.

“ஆதலால் சூத கோஸ்வாமியே, உன்னத அறிவில் சிறந்த தூய பக்தர்களான சுகதேவருக்கும் பரீக்ஷித் மஹாராஜருக்கும் இடையிலான உரையாடலை எங்களுக்கு தயவுசெய்து விளக்குவீராக”

குறிப்பு: தூய பக்தித் தொண்டு என்பது பகவானின் அற்புத திருவிளையாடல்களை உரக்கப் பாடுவது, கேட்பது, அவர்முன் தலை வணங்குவது, கரங்களைத் திருத்தொண்டில் ஈடுபடுத்துவது, புனித ஸ்தலங்களுக்குச் செல்வது, பகவானின் திருவுருவத்தைக் காண்பது, அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட துளசிகளை முகர்வது, அவரது தூய பக்தரின் பாததூளியைத் தலைமீது ஏற்பது, புனித நாமத்தால் பரவசநிலை அடைவது ஆகியவையே என்பதை சௌனகரின் கூற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

சௌனகரின் வேண்டுதல்களுடன் மூன்றாம் அத்தியாயம் முடிவுற நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் சூத கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்கினார்.

 

பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகள்

சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து ஆத்ம இரகசியங்களைக் கேட்ட பரீக்ஷித் மஹாராஜர் தன் கவனத்தை பகவான் கிருஷ்ணரின் மீது ஒருமுகப்படுத்தினார். அதன் விளைவாக தன் உடல், மனைவி, மக்கள், செல்வம், எதிர்ப்பற்ற இராஜ்ஜியம் ஆகியவற்றின் மீதிருந்த தன் பற்றை அவரால் கைவிட முடிந்தது.

பரீக்ஷித் மஹாராஜர் தனக்கு உடனடியாக நிகழப்போகும் மரணத்தை நன்கறிந்து, தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம் ஆகிய பலன்நோக்குச் செயல்களைத் துறந்து, தன் இயல்பான கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்து சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.

“கற்றறிந்த பிராமணரே, எந்தவித ஜடக் களங்கமும் தங்களிடம் இல்லாததால் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்கள். பகவானைப் பற்றி தாங்கள் விவரிக்கும் விஷயங்கள் எனது அறியாமையைப் போக்குகின்றன.

“பெரும் தேவர்களையே வியக்க வைக்கின்ற இப்பிரபஞ் சங்கள் பகவானால் எவ்வாறு படைக்கப்படுகின்றன என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். இந்த அதிசய உலகைப் பராமரிப்பதிலும் அழிப்பதிலும் பகவான் தமது விரிவங்கங் களையும் சக்திகளையும் எவ்வாறு ஈடுபடுத்துகிறார்?

“இவ்விஷயங்களைப் பெரும் பண்டிதர்களாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தனது நிலை மாறாமல் ஒரே சமயத்தில் பல விரிவுகளாக அவரால் எவ்வாறு விரிவடைய முடிகிறது?

“தாங்கள் வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவரும் தன்னுணர்வு பெற்றவரும் பகவானின் சிறந்த பக்தரும் ஆவீர். எனவே, பரம புருஷரின் பிரதிநிதியான தாங்கள் என் சந்தேகங்களைப் போக்கியருளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.”

சுகதேவ கோஸ்வாமியின் பணிவான வணக்கங்கள்

மன்னரின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமுகமாக பேசத் தொடங்கிய ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி முதலில் பகவானிடம் பின்வருமாறு பிரார்த்தித்தார்:

“ஜடவுலகைப் படைத்து, காத்து, அழிப்பதற்காக குண அவதாரங்களாக (பிரம்மா, விஷ்ணு, சிவன் என) தம்மை விரித்துக்கொள்ளும் பகவானை நான் வணங்குகிறேன். கர்போதகஷாயி விஷ்ணுவாக ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உட்பிரவேசிப்பவரும் க்ஷீரோதகஷாயி விஷ்ணுவாக ஒவ்வோர் உடலுக்குள்ளும் உறைபவரும் காரணோதகஷாயி விஷ்ணு போன்ற எல்லா புருஷ அவதாரங்களுக்கும் மூலமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

“பக்தர்களின் துன்பங்களை வேரறுப்பவரும் நாஸ்திக எண்ணங்களைக் களைபவரும் ஆன்மீகிகளின் நோக்கங்களை நிறைவேற்றுபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மீண்டும்மீண்டும் வணங்குகிறேன். யதுக்களின் நண்பரும் பக்தரல்லாதோருக்குப் புரியாத புதிராக விளங்குபவரும் ஒப்பில்லாதவரும் ஜட ஆன்மீக உலகங்களின் பரம அனுபவிப்பாளராக இருந்தாலும் தம் சொந்த ஆன்மீக உலகில் அனுபவித்து மகிழ்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

“சாதகர்களின் பாவ விளைவுகளைத் தூய்மை செய்யும் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களில் என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சரணடைவதன் வாயிலாக புத்தி கூர்மையுடையவர்கள் நிகழ், எதிர்கால வாழ்வுகளின் எல்லா பற்றுகளிலிருந்தும் விடுபட்டு சிரமமின்றி ஆன்மீக வாழ்வில் முன்னேறுகின்றனர். அப்பாத கமலங்களை நான் மீண்டும் வணங்குகிறேன்.

“தபஸ்விகள், கொடை வள்ளல்கள், தத்துவவாதிகள், யோகிகள், மந்திர உச்சாடனம் செய்வோர், வேத பண்டிதர்கள் ஆகிய அனைவரும் தங்களது செயல்களை பகவானின் பக்தித் தொண்டிற்காக பயன்படுத்தவில்லையெனில், எவ்வித நற்பயனையும் அடைய முடியாது. எனவே, என் தவம், செயல், வேத அறிவு என அனைத்தையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சமர்ப்பித்து அவரை வணங்குகிறேன்.

“எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களிடம் தஞ்சமடைவதன் மூலம் தூய்மையடைய முடியும். அத்தகைய கிருஷ்ண பக்தர்களின் பக்தனாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

“சிவபெருமான், பிரம்மதேவர், முக்தி பெற்ற ஆத்மாக்கள், மற்றும் எவ்வித போலித்தனமும் இல்லாதோரால் உள்ளன்புடன் துதிக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் தயவை நான் எப்போதும் நாடுகின்றேன்.”

பல்வேறு விஷ்ணு ரூபங்களுக்கு மூலமாக விளங்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

ஆசீர்வதிக்க வேண்டுதல்

பகவானிடம் பல்வேறு பிரார்த்தனைகளை முன்வைத்த பின்னர், அவரது ஆசிகளை சுகதேவர் பின்வருமாறு வேண்டினார்:

“யது வம்சத்தின் பாதுகாவலரும் ஆயிரக்கணக்கான லக்ஷ்மிதேவிகளின் அன்புக் கணவரும் யாகங்களின் அனுபவிப்பாளரும் உயிர்வாழிகளின் வழிகாட்டியும் எல்லா ஜட ஆன்மீக கிரகங்களின் உரிமையாளரும் எல்லா அவதாரங்களுக்கும் மூல காரணமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்மீது கருணை கொள்வாராக.

“முக்தியளிப்பவரும் மனக்கற்பனையாளரின் இலக்கும் பக்தர்களிடம் தம் திவ்ய சொரூபத்தை வெளிப்படுத்துபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்மீது கருணை கொள்வாராக. படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மாவின் இதயத்திலிருந்தபடி அவருக்கு வேத அறிவை புகட்டிய ஸ்ரீ கிருஷ்ணர், படைப்பின் உண்மைகளை நான் சரியாக புரிந்து கொண்டு பேச எனக்கு ஊக்கமளிப்பாராக.

“புருஷ அவதாரங்களின் மூலமும் 16 ஜட குணங்களை படைக்கும் கருவிகளாகப் பயன்படுத்துபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என் வார்த்தைகளை அலங்கரிப்பராக.”

பகவானின் அருளை வேண்டிய பின்னர், சுகதேவர் வேத நூல்களைத் தொகுத்தவரும் கிருஷ்ணரின் இலக்கிய அவதாரமுமான ஸ்ரீல வியாஸதேவரையும் வணங்கினார். அதன் பின்னர், தூய பக்தர்களால் சுவைக்கப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதத்தின் உன்னத அறிவை விளக்கத் தொடங்கினார்.

பிரம்மாவிற்கும் நாரதருக்கும் இடையிலான ஓர் உரையாடலின் மூலமாக அந்த உன்னத அறிவை சுகதேவர் விளக்குவதை அடுத்த இதழில் காண்போம்.

2017-01-19T12:51:54+00:00March, 2014|தத்துவம்|0 Comments

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment