தூய பக்தி

வழங்கியவர்:  தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இச்சொல் பரிச்சயமானதே. ஸ்ரீல பிரபுபாதராலும் இதர சிலராலும் இச்சொல் தற்போது மேற்கத்திய உலகிலும் பிரபலமடைந்து வருகிறது.

பக்தியின் அடிப்படைக் கருத்து

பக்தி என்பதன் அடிப்படைக் கருத்து என்ன? அன்பு அல்லது பற்றுதல் என்று கூறலாம், அல்லது துல்லியமாகக் கூற வேண்டுமாயின் ஆன்மீக அன்பு அல்லது ஆன்மீகப் பற்றுதல் என்று கூறலாம். ஒரு நாயிடம் நீங்கள் செலுத்தும் அன்பினை யாரும் பக்தி என்று கருதுவதில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் சில சமயங்களில் பக்தி என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது-தந்தை பக்தி, தாய் பக்தி. வேத கலாசாரத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அறநெறியில் வழிநடத்த வேண்டியவர்கள் என்பதால், இச்சொற்கள் சமய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்திய அரசியல்வாதிகள் சமீபத்தில் தேச பக்தி” என்னும் சொல்லை அறிமுகம் செய்துள்ளனர். தேசியவாதக் கொள்கை என்பது மேலை நாடுகளைச் சார்ந்தது, அந்த எண்ணம் தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புராதன இந்தியாவில் தேசியம் என்னும் கருத்திற்கு இடமில்லை. உண்மையாகப் பார்த்தால், பக்தி என்பது சமயம் அல்லது ஆன்மீகம் சார்ந்த ஒன்றாகும். இவ்வாறாக, நாம் கிருஷ்ண பக்தி, பிள்ளையார் பக்தி, அம்மன் பக்தி என்று கேள்விப்படுகிறோம். ஆனால் உண்மையில் பக்தி என்பது விஷ்ணு அல்லது கிருஷ்ணருக்கானதுஶீவிஷ்ணு பக்தி அல்லது கிருஷ்ண பக்தி.

மாயாவாதிகளின் பக்தி

இந்து சமயத்தில் பல்வேறு பண்பாடுகள் உள்ளன. இந்து சமயம் இந்தியாவின் பல்வேறு ஆன்மீக குருமார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் தாக்கத்தினால் நிரம்பியுள்ளது. இவர்களில் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் மிகவும் செல்வாக்கு உடையவராகத் திகழ்பவர் ஸ்ரீ சங்கராசாரியர். அவர் இறுதியில் அனைத்தும் ஒன்றே என்பதை எடுத்துரைக்கும் அத்வைதவாதம் அல்லது மாயாவாதத்தை பிரச்சாரம் செய்தார். ப்ரஹ்ம ஸத்யம் ஜகத் மித்யா,  அதாவது, ஆன்மீகமான வஸ்து மட்டுமே உண்மை, இவ்வுலகம் போலியானது; உண்மையில், உலகம் என்று எதுவுமே இல்லை என்று அவர் உரைத்தார்.

சங்கராசாரியர் மட்டுமின்றி தத்துவ ரீதியாக அவரை எதிர்த்த பக்தி ஆச்சாரியர்களும் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தான் ஆன்மீகமானவன், பிரம்மனிலிருந்து வேறுபடாதவன் என்பதை உணர்வதே வாழ்வின் குறிக்கோள் என்று சங்கராசாரியர் பிரச்சாரம் செய்தார். ஆனால் உலகின் பிரபலமான வைஷ்ணவ ஆச்சாரியர்களான இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், விஷ்ணு ஸ்வாமி, நிம்பார்க ஸ்வாமி, வல்லபாசாரியர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முதலியோர், வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவநிலை பகவான் விஷ்ணுவிற்குத் தொண்டு புரிவது அல்லது பக்தி செலுத்துவது என்று பிரச்சாரம் செய்தனர். நவீன இந்து சமுதாயத்தில் இந்த மாயாவாதமும் விஷ்ணு பக்தியும் கலந்து காணப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் ஊதுபத்தி, தீபம், மலர் முதலியவற்றை சமர்பித்து பாடல்களைப் பாடி ஏதேனும் ஒரு விக்ரஹத்தை வழிபடுகின்றனர். மக்கள் இவ்வாறு ஓரளவு பக்தியில் ஈடுபட்டிருப்பினும், இறுதியில் அனைத்தும் வேற்றுமையின்றி ஒன்றாகிவிடுகின்றது என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

எல்லா இந்துக்களும் இறுதியில் அனைத்தும் ஒன்று என்று நம்புவதாக மேற்கத்தியர்களும் கருதுகின்றனர். ஆனால் அஃது உண்மையில்லை. ஏனெனில், மத்வாசாரியர், இராமானுஜாசாரியர் உட்பட பலரும் இத்தகு முடிவுகளைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். மக்கள் இங்கே குழம்பிய நிலையில் இருப்பதற்கு சங்கராசாரியரும் பக்தியைப் பற்றி மேலோட்டமாக பிரச்சாரம் செய்துள்ளதே காரணமாகும். ஆரம்ப நிலையிலுள்ள மக்கள் பக்தி செய்தல் நல்லது என்பதும், இதன் மூலம் அவர்கள் பற்பல பிறவிகளில் படிப்படியாக வளர்ச்சி பெற்று ஞானத்தின் தளத்திற்கு வருவர் என்பதும், அதன் பின்னர் பிரம்மனில் ஐக்கியமாகும் நிலையை நோக்கி முன்னேறுவர் என்பதும் சங்கரரின் அபிப்பிராயமாகும்.

எனவே, சங்கராசாரியர் மேலோட்டமாக பக்தியை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அதே வேளையில் பக்தியைப் பற்றிய அவரது கருத்து வைஷ்ணவ ஆச்சாரியர்களின் கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பக்தி என்பது ஏதோ ஓர் உயர்ந்த தளத்தை அடைவதற்கான ஆரம்ப கால வழிமுறை அல்ல, பக்தியே அனைத்து வழிமுறைகளிலும் மிகவுயர்ந்த வழிமுறை. ஞானத்தை அடைவதற்கு பக்தி ஒரு படியாக இருக்கிறது என்றோ, பக்தியானது வழிபடப்படும் இறைவனுடன் ஐக்கியமாவதில் முற்றுப் பெறுகிறது என்றோ கூறுதல் முற்றிலும் தவறானதாகும். ஒருவன் கிருஷ்ணரை வழிபட்டாலும் பிள்ளையாரை வழிபட்டாலும், இறுதியில் அவன் இறைவனுடன் ஒன்றாகி விடுகிறான் என்னும் எண்ணம் வைஷ்ணவ ஆச்சாரியர்களால் கண்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மிக விரிவான தத்துவ விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆச்சாரியர்கள் பலர் விஷ்ணுவிற்கு பக்தி செலுத்துவதை பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

எல்லாரிடமும் அன்பு செலுத்த முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதரும் அருவவாதத்தைக் கண்டிக் கின்றார். சேவை செய்பவருக்கும் சேவையைப் பெறுப வருக்கும் இடையிலான உறவுமுறையை இந்த மாயாவாதம் அழிக்கின்றது. மாயாவாதம் பக்திக்கு முற்றிலும் நேர் எதிரானதாகும். இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்றால், அங்கே இறைவனிடம் அன்பு இல்லை என்றே அர்த்தம். ஏனெனில், அன்பு என்பது தனித்தன்மை கொண்ட இரண்டு நபர்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்படுவதாகும். தங்களை ஆன்மீகவாதி என்று பறைசாற்றிக் கொள்ளும் பெரும்பாலான மக்கள் ஆன்மீக அன்பானது எந்தப் பாகுபாடுமின்றி அனைவரிடமும் செலுத்தப்படக் கூடியது என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் ஆன்மீக அன்பு அப்படிப்பட்டதல்ல. அன்பு என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கானது. நான் அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன்,” என்று நீங்கள் கூறலாம், அது நல்லதே. ஆனால் நாம் யாரிடம் அன்பு செலுத்துகிறோமோ, அந்த நபரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தாலன்றி, உங்களால் அவரிடம் ஆழ்ந்த அன்பைச் செலுத்த இயலாது. உண்மையான அன்பு அனைவரிடமும் பொதுவான முறையில் இருக்கவியலாது, அது தனிநபர் சார்ந்ததாகும். அனைவரிடமும் அன்பு காட்டுகிறோம் என்று கூறுவது தெளிவற்றது, சாரமற்றது.

அன்பு என்பது ஒரு தெளிவற்ற உணர்ச்சியோ அனைவருடன் நல்லமுறையில் பழகுவதோ அல்ல, மாறாக குறிப்பிட்ட நபருடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட உறவாகும். உங்களால் ஆகாயத்தை நேசிக்க இயலாது. இயற்கைக் காட்சியை நான் நேசிக்கின்றேன்,” என்று நீங்கள் கூறலாம்,\ஆனால் அந்த அன்பு இரு நபர்களுக்கு இடையிலான அன்பைப் போன்றதல்ல. ஆகவே வைஷ்ணவ ஆச்சாரியர்கள், அன்பு அல்லது பக்தி என்பதை ஒருவரிடம் தன்னை அர்ப்பணித்தல் என்ற பொருளில் விவரித்துள்ளனர். அன்பு என்றால் தன்னை அர்ப்பணித்தல். இன்றைய மனிதர்கள், தன்னை மற்றவர்களுக்கு அர்ப்பணிப்பதைக் காட்டிலும், தனக்கு என்ன கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலும் வாழ்கின்றனர், அதனால் நவீன உலக மக்கள் சற்றும் மகிழ்ச்சியின்றி வாழ்கின்றனர்.

அர்ப்பணிக்கப்பட்ட அன்பு

அன்பைப் பற்றி மக்கள் பலவிதங்களில் பேசினாலும் எதையும் எதிர்பாராது தன்னை மற்றவரிடம் அர்ப்பணிக்காத வரை உண்மையான அன்பிற்கு இடமில்லை. ஆனால் நம்மால் நம்மை அனைவருக்கும் அர்ப்பணித்துக்கொள்ள இயலாது; ஒருவருக்கோ அல்லது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே நம்மால் நம்மை அர்ப்பணிக்க இயலும். ஆகவே, அனைவரிடமும் அன்பு செலுத்துதல் எனும் எண்ணமானது, நமக்கு அன்பு செலுத்துவதற்கு குறிப்பிட்ட நபர் இல்லை என்பதையும், அந்த அன்பு கற்பனையானது என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவே, பக்தி என்பது தெளிவற்ற அன்போ அனைவருக்கும் உரிய பொதுவான அன்போ அனைவரிடமும் நன்றாக பழகுவதோ அல்ல.

பக்தி எனும் தூய வழிமுறையில் அன்பானது குறிப்பிட்ட ஒரு நபருக்கு உரித்தானதாகும். இது மிகவும் விரிவான தத்துவ முறையில் விளக்கப்பட்டுள்ளது. நாம் யார் என்பதையும், நாம் அன்பு செலுத்துபவருக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதையும் குறித்த முறையான ஆன்மீகப் புரிந்துணர்வு இல்லாதபட்சத்தில், அங்கே முறையான அன்பு சாத்தியமல்ல. நம்முடன் அன்பான முறையில் பழகுபவரிடம் சில பிரச்சனை வந்தால், நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை,” என்று நாம் அவரிடம் கூறுவோம். அதாவது, முறையான புரிதல் இல்லாவிடில், அன்பு என்பது சாத்தியமில்லை என்பதே அர்த்தம். உலகிலுள்ள அனைவரையும் நம்மால் ஆழமாக (அல்லது முறையாக) புரிந்துகொள்ள முடியுமா? உண்மையில் அன்பு செலுத்துவதே நமது உண்மையான நிலையாகும், அனைத்தும் அன்பிற்காகவே உள்ளது. ஆயினும், அன்பைப் பற்றிய தெளிவு நம்மிடம் இல்லாத வரை, அன்பு செலுத்த நாம் முயற்சித்தாலும் அதில் நாம் வெற்றியடைய மாட்டோம்.

யாரிடம் அன்பு செலுத்துவது?

பக்தி என்பது புராதன சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான தத்துவ வழிமுறைகளுடன் மேற்கொள்ளப்படுவதாகும். பக்தி எவ்வித அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லாத வெறும் மன எழுச்சி அல்ல, மாறாக, இது மிகவும் ஆழமானதொரு விஷயமாகும். அன்பு என்பது நிச்சயம் மகிழ்ச்சிகரமானது, விளையாட்டுத்தனம் கொண்டது, மற்றவர்களுடன் பழகும் பாங்கினைக் கொண்டது. ஆனால் அவை மட்டுமே உண்மையான அன்பு அல்ல. அன்பு மிகவும் ஆழமான அறிவுபூர்வமான ஒன்றாகும். அன்பு என்பது ஒருவன் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாகும்.

நாம் பிறரின் மீது ஆட்சி செலுத்த விரும்பலாம், அல்லது பணத்தை விரும்பலாம், கௌரவத்தையோ அங்கீகாரத்தையோ விரும்பலாம். ஆனால் அனைவரும் எதைத் தேடுகின்றனர், எதை விரும்புகின்றனர் என்று ஆராய்ந்தால், அந்தத் தேடல், அன்பு ஒன்றே. ஏனெனில், அன்பு செலுத்துதல் என்பது எல்லா உயிர்வாழிகளின் இயற்கையான தன்மையாகும். நமது இதயம் பூரணமான அன்பிற்காக ஏங்குகிறது, ஆனால் அந்த அன்பு இப்பௌதிக உலகில் சாத்தியமில்லை. பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் அல்லது இசைக் கலைஞர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதை நாம் காண்கின்றோம். 1920இல் பிரபலமாக இருந்த ஹாலிவுட் காதல் நாயகன் ஒருவர் இறந்தபோது, பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இன்று அவரது பெயரைக்கூட யாரும் அறியார். இதுவும் பௌதிக அன்பிலுள்ள மற்றொரு பிரச்சனைஶீஅன்பிற்குரியவர் அல்லது அன்புசெலுத்துபவர் இறந்தால், அந்த அன்பு முடிவிற்கு வந்துவிடுகிறது. ஆகவே, இத்தகு அன்பு நித்தியமானதல்ல. நம்மை நாம் முழுமையாக அர்ப்பணித்து ஒருவரிடம் அன்பு செலுத்தினாலும், அதற்கேற்ற அன்பு நமக்கு திரும்பக் கிடைப்பதில்லை.

அனைவரையும் கவரக்கூடிய அன்பு என்பது பரம்பொருளிடம் உள்ளது என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன. பரம்பொருளுடனான அந்த பூரண உறவை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவ்வுலகில் நாம் யாரிடமெல்லாம் விசேஷ தன்மைகளைக் காண்கிறோமோ, அந்த நபர்களை நேசிப்பதற்கு நாம் ஈர்க்கப்படுகிறோம்; அதாவது, செல்வந்தர்கள், பலம் வாய்ந்தவர்கள், அரசியல் சக்தி கொண்டவர்கள், புகழ் பெற்றவர்கள், அழகுடையவர்கள், மற்றவர்களிடம் அன்பாகப் பழகும் நல்லவர்கள், கற்றறிந்த அறிஞர்கள்,  சுயநலனைப் பார்க்காமல் உலகைத் துறந்து தன்னில் திருப்தியுற்று இருப்பவர்கள் முதலியோர் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்களாக, வசீகரிப்பவர்களாக உள்ளனர்.

கடவுளிடம் அர்ப்பணிப்பதே உண்மையான அன்பு

அனைவரையும் கவரும் கிருஷ்ணர்

அத்தகு சிறப்பான தன்மைகள் அனைத்தையும் பூரணமாகக் கொண்டவரை பகவான்” என்று வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட குணங் களை பகவான் பூரணமாகக் கொண்டுள்ளதால், அவர் அனைவரையும் கவரக்கூடியவராவார். ஆகவே, பக்தி என்பது பகவானிற்கு மாத்திரமே உரித்தானதாகும். பகவானால் ஒவ்வொருவரிடமும் முழுமையான உறவை பரிமாறிக்கொள்ள இயலும். அவர் ஒருவராகவே இருப்பினும், அவர் பரம புருஷர் என்பதால், அனைவரது இதயங்களிலும் நுழைகிறார். அவர் பூரணமானவர் என்பதால், அனைவரிடமும் அன்பை முழுமையாக பரிமாறிக்கொள்கிறார். ஆகவே கடவுள், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு பகவான் என்று பெயர். அவரது சிறப்பு பெயர், அனைவரையும் கவருபவர் என்னும் பொருள் கொண்ட, கிருஷ்ணர்” எனும் திருநாமமாகும். உண்மையில் பக்தி என்பது பகவான் கிருஷ்ணருக்கு மட்டுமே உரித்தானது. தூய பக்தி என்பது நம்மை முழுமையாக அர்ப்பணித்து முழுமையாக அன்பு செலுத்துவதாகும். இவை பகவான் கிருஷ்ணரது உறவில் மட்டுமே நிலைபெற்று இருக்கக்கூடியவை. கிருஷ்ணர் அனைவராலும் நித்தியமாக நேசிக்கப்பட வேண்டியவர். அனைத்து உயிர்வாழிகளும் கிருஷ்ணரை நேசிப்பதற்கான இயற்கையான மனப்பான்மை உடையவை. இதுவே பக்தியாகும்.

விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட அன்பு

இவை சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்கள் பல்வேறு விதமான உபதேசங்களையும் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்தி வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை எவ்வாறு படிப்படியாக அடைவது என்பதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளன. இருப்பவை அனைத்திற்கும் கிருஷ்ணரே மையம், அவரே நமது அன்பிற்குரியவர். எல்லையற்ற அந்த பகவானிடம் நாம் செலுத்தும் அன்பும் எல்லையற்று வளரக்கூடியதாகும். அதைவிடுத்து நம்மைப் போன்ற எல்லைக்கு உட்பட்டவர்களிடம் நாம் அன்பு செலுத்தினால், அது மேன்மேலும் வளர்ச்சியடையாது.

நம் அன்பிற்குப் பாத்திரமானவர் கிருஷ்ணர் என்பதை அறியாது, நாம் நமது அன்பை இவ்வுலகிலுள்ள நபர்களிடம் செலுத்தினால், அது நமக்கு விரக்தியையே ஏற்படுத்தும். இதுவே உலக வரலாறு. நாம் ஒருவரிடமோ பலரிடமோ அன்பு செலுத்தினால், அது விருப்புவெறுப்பு போன்ற இருமைகளைத் தோற்றுவிக்கும். நான் இந்நாட்டை உளமாற நேசிக்கிறேன்,” என்று ஒருவன் கூறினால், அப்போது இந்நாட்டை விரும்பாதவர்களை நான் வெறுக்கிறேன்.” என்பதையும் உள்ளூர கூறுகிறார்கள். மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அங்குள்ள விளையாட்டுக் குழுக்களை நேசிக்கின்றனர். ஒரு விளையாட்டுக் குழுவை ஆதரிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியில் சரி பாதியானது அதன் எதிரணியினரை வெறுப்பதிலேயே உள்ளது. இதை நான் எனது குழந்தைப் பருவத்தில் கண்டுள்ளேன். நீங்கள் ஓர் அணியை விரும்பினால் மற்றோர் அணியை வெறுக்கத்தான் வேண்டும். இவ்வுலகிலுள்ள அன்பானது, விருப்புவெறுப்பு என்னும் இருமைகளின் கலவையைக் கொண்டது.

இருப்பவை அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழும் கிருஷ்ணரிடம் நாம் அன்பு செலுத்தினால், அப்போது மற்ற அனைவரையும் நம்மால் நேசிக்க இயலும். அவரிடம் அன்பு செலுத்தும்போது வாழ்வானது ஒழுங்காகவும் இணக்கமானதாகவும் இருக்கும்.

(அடுத்த இதழில் தொடரும்.)

கிருஷ்ணரின் சிறப்பான தன்மைஶீஅனைவரையும் கவரக்கூடியவராகத் திகழ்கிறார்.

2017-10-12T17:59:10+00:00October, 2017|தத்துவம்|Comments Off on தூய பக்தி

About the Author:

mm
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.