புஷ்கரம்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

பிரம்மதேவரின் ஸ்தலம்

பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட முதல் உயிர்வாழியான பிரம்மதேவரால் தனது கோயிலுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இத்திருத்தலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதுக்களையும் துறவிகளையும் கவர்ந்து வருகிறது.

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

ஒருமுறை பிரபஞ்சத்தின் படைப்பிற்கான சக்தி பெற்றிருக்கும் பிரம்மதேவர், பூமியில் தனக்கென ஒரு வழிபாட்டு ஸ்தலத்தை அமைத்துக்கொள்ள விரும்பி, பூமியை நோக்கி மூன்று தாமரை இதழ்களை வீசினார். அந்த இதழ்கள் பூமியில் விழுந்ததும் புனிதமான மூன்று ஏரிகள் ஊற்றெடுத்துத் தோன்றின. பிரம்மாவின் கரங்களிலிருந்து வீசப்பட்ட புஷ்பத் திலிருந்து இந்த ஏரிகள் தோன்றியதால் இந்த இடம் “புஷ்கரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று ஏரிகளும் “ஜ்யேஷ்ட புஷ்கரம்” (முதல் புஷ்கரம்), “மத்ய புஷ்கரம்”  (நடு புஷ்கரம்), மற்றும் “கனிஷ்ட புஷ்கரம்”  (இளைய புஷ்கரம்) அல்லது “புத்த புஷ்கரம்”  (பழைய புஷ்கரம்) என்று இன்று அறியப்படுகிறது.

 

புஷ்கரத்தின் ஆசீர்வாதம்

மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில் உபவாசமிருந்து, மனதைக் கட்டுபடுத்தி இந்த இலக்கியங்களை ஆராய்ந்தறிபவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (12.12.61) கூறுகிறது.

மஹாபாரதத்தில் பாண்டவர்களின் பாட்டனார் பீஷ்மரிடம், பல தீர்த்தங்கள் அல்லது புனித ஸ்தலங்களின் பெருமைகளை விவரிக்கும்போது புலஸ்திய முனிவர் முதலில் புஷ்கரத்தைத்தான் குறிப்பிடுகிறார். இந்த பிரபஞ்சத்திலேயே புஷ்கரம்தான் சிறந்தது என்றும், யார் அங்கு சென்றாலும் பிரம்மதேவரைப் போன்ற மேன்மையை அடைவர் என்றும் அவர் கூறுகிறார். “புஷ்கரை நினைத்தவுடனேயே ஒருவனது பாவங்கள் களையப்படுகின்றன” என்று புலஸ்தியர் கூறுகிறார். புஷ்கரில் நீராடுவதால் பல்வேறு ஆசிகளை பெறுவதோடு, ஸ்வர்க லோகங்களுக்கு உயர்வு பெறவும் மேலும் பிரம்மலோகத்தைக்கூட அடையவும் முடியும்.

இதுபோன்ற விசேஷமான ஆசி வழங்கும் அதிகாரத்தை பிரம்மதேவர் புஷ்கரத்திற்கு வழங்கிய குறுகிய காலத்தில், மக்கள் ஸ்வர்க லோகத்தை அடைவது மிகவும் சுலபமாகி விட்டதாக தேவர்கள் சிலர் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். மக்கள் மதக் கடமைகளை உதாசீனப்படுத்தினால், அதர்மம் எனும் கொடிய நோய் பரவி அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர்கள் பயந்தனர். அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்ட பிரம்மதேவர், சமஸ்கிருத மாதங்களில் ஒன்றான கார்த்திகா (அக்டோபர்-நவம்பர்) மாதத்தின் இறுதி ஐந்து நாள்களில் நீராடுபவர்களுக்கு மட்டும் ஸ்வர்க லோகம் அடையும் வரம் கிடைக்கும் என்று பிரகடனம் செய்தார். இன்று ஆயிரக்கணக்கானோர் அந்த குறிப்பிட்ட நாள்களில் புஷ்கரத்திற்கு விஜயம் செய்கின்றனர், அந்நாள்களில் பெரும் திருவிழா நடைபெறுகிறது.

பிரம்மதேவருடைய கோயிலின் முன்புறத் தோற்றம்.

பிரம்ம தேவரின் பதவி

பகவான் கிருஷ்ணரின் வியாபகமான கர்போதகஷாயி விஷ்ணுவின் நாபி கமலத்திலிருந்து பிரம்மதேவர் பிறந்ததாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரம்மா வழக்கமான முறையில் பிறக்கவில்லை என்பதால், அவர் ஆத்மபூ, சுயமாக பிறந்தவர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மதேவர் பிரபஞ்சத்தைப் படைப்பவர் என்று அழைக்கப்பட்டாலும், பகவான் விஷ்ணுவினால் தனக்கு அளிக்கப்பட்ட சக்தியைக் கொண்டே அவர் படைக்கிறார். உண்மையில், படைப்புத் தொழிலை மேற்கொண்டுள்ள பிரம்மாவின் நிலை, உயர்ந்த குணங்களைப் பெற்றுள்ள ஓர் உயிர்வாழிக்கு விஷ்ணுவால் தரப்பட்ட பதவியாகும். பரம புருஷரிலிருந்து வெளிவரும் எண்ணிலடங்காத மிகச்சிறிய உயிர்களில் மிகவும் தகுதிவாய்ந்த நபரான பிரம்மா நம்மைப் போன்றதொரு ஜீவனே, பகவான் விஷ்ணுவோ பரம புருஷராவார்.

சிவபெருமான் மற்றும் விஷ்ணுவைத் தவிர, பிரம்மா மற்ற தேவர்களைக் காட்டிலும் உயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இருந்தும், அவர்தான் பரம புருஷ பகவானின் நிரந்தர சேவகன் என்பதை அறிந்துள்ளார்–இதுவே அவரது முக்கிய தகுதியாகும். புஷ்கரத்திற்கு வரும்  யாத்திரிகர்கள், பிரம்மதேவரின் சிறப்பை அறிந்திருப்பதால், பொதுவாக ஸ்வர்கத்தை அடைவது போன்ற பௌதிகமான பலன்களை பிரம்மாவிடம் கோருகின்றனர். ஆனால் உயர் விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கும் மக்கள், அதாவது இதுபோன்ற பௌதிக பலன்கள் பரம புருஷ பகவான் மீதான தூய பக்திக்கு ஈடாகாது என்பதை புரிந்து கொண்டிருப்போர், பிரம்மதேவரிடமிருந்து தூய பக்தியினையும் பெறவியலும்.

பரம புருஷர் பிரம்மாவின் இதயத்தில் திவ்ய ஞானத்தை விழிப்படையச் செய்தார் என்று பாகவதத்திலுள்ள முதல் ஸ்லோகம் கூறுகிறது. பரம புருஷ பகவான் கிருஷ்ணரே பூரண உண்மை, பிரம்மா உட்பட அனைத்து உயிர்வாழிகளும் அவரது நிரந்தர சேவகர்கள் என்பதை கடுந்தவத்திற்குப் பிறகு பிரம்மா உணர்ந்தார். பிரம்மதேவர் நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் (அதாவது, பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணு பக்தர்களின் சீடப் பரம்பரைகளில்) ஒரு சம்பிரதாயத்திற்கு தலைமை வகிப்பவராக உள்ளார். சாக்ஷாத் கிருஷ்ணரேயான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தன்னை பிரம்ம சம்பிரதாயத்தில் இணைத்துக் கொண்டார். ஆகவே, பகவான் சைதன்யரிலிருந்து தொடங்கிய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், பிரம்ம சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாகும். இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பகவான் கிருஷ்ணரிடம் தூய பக்தி செலுத்துவதற்கு பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்யலாம்.

சூரிய அஸ்தமனத்தின்போது புஷ்கரத்திற்கு ஆரத்தி காட்டப்படுகிறது.

அருகிலுள்ள குன்றின் மேலிருந்து, அதாவது பழமை வாய்ந்த சரஸ்வதி தேவியின் கோயிலிலிருந்து பார்க்கும்போது, ஜ்யேஷ்ட புஷ்கரமும் அதன் சுற்றுப் பகுதிகளும் இவ்வாறு காணப்படுகின்றன.

பிரம்மதேவர் நடத்திய யாகம்

இந்த வரலாறு பத்ம புராணம், ஸ்ருஷ்டி காண்டம் அத்தியாயம் 17இல் காணப்படுகிறது.

ஒருமுறை பிராமணர்களுடனும் மற்ற தேவர்களுடனும் பிரம்மதேவர் புஷ்கரத்திற்கு ஒரு யாகம் நடத்துவதற்காக வந்தார். சில குறிப்பிட்ட யாகங்களைச் செய்பவர் தனது மனைவியுடன் சேர்ந்துதான் அவற்றைச் செய்ய வேண்டும். எனவே, யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டவுடன், பிரம்மதேவர் தமது மனைவியான சரஸ்வதி தேவியை அழைத்துவர தேவரிஷியான நாரத முனிவரை அனுப்பி வைத்தார். ஆனால் புஷ்கரத்திற்கு வருவதற்கு சரஸ்வதி தயாராக இருக்கவில்லை என்பதால், நாரதர் தனியாக புஷ்கரத்திற்குத் திரும்பினார்.

ஜோதிட கணிப்பின்படி, யாகம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே, யாகத்திற்கு உதவியாக இருக்க தனக்கு தகுந்ததொரு மனைவியை வழங்கும்படி ஸ்வர்க மன்னனான இந்திரனை பிரம்மா கேட்டுக் கொண்டார். இந்திரன் உடனடியாக ஓர் இடையர் குலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். ஆனால் யாகம் நடத்த ஒரு பிராமணப் பெண்தான் தேவை என்பதால், அந்த பெண்ணைத் தூய்மைப்படுத்துவதற்காக, அதாவது அவளை உயர் ஜாதிப் பெண்ணாக உயர்த்துவதற்காக, தேவர்கள் அவளை பசுவின் உள்ளே செலுத்தினார்கள். பசுவின் வாயில் செலுத்தி மறுபக்கம் வெளியே எடுத்தனர்; ஏனென்றால், வேத கலாசாரத்தில் பசுக்கள் தூய்மையானதாகவும் பிராமணருக்கு சமமானதாகவும் கருதப்படுகின்றன. அந்த பெண், அதன் பிறகு, “காயத்ரி,” “பசுவினுள் செலுத்தப்பட்டவள்” என்று அழைக்கப்பட்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்து சேர்ந்த சரஸ்வதி, தனது கணவரின் பக்கத்தில் மற்றொரு பெண் (காயத்ரி) அமர்ந்திருப்பதைக் கண்டு கோபம் கொண்டாள்; பிரம்மாவையும் அங்கிருந்த சில தேவர்களையும் சபித்தாள். ஆனால் காயத்ரி அந்த சாபத்தை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டாள். உதாரணமாக, கார்த்திகா மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் மட்டுமே பிரம்மா வழிபடப்படுவார் என்று சரஸ்வதியால் சபிக்கப்பட்டிருந்தாலும், பிரம்மாவை வழிபடுபவனுக்கு ஐஸ்வர்யமும் நல்ல குடும்பமும் அமையும் என்றும், அவன் பிரம்மாவுடன் சேர்த்து வைக்கப்படுவான் என்றும் காயத்ரி தெரிவித்தாள்.

சரஸ்வதி யாகசாலையிலிருந்து கோபத்துடன் வெளியேறி அருகிலுள்ள குன்றிற்கு தவம் செய்யச் சென்றாள். சரஸ்வதி தேவி, காயத்ரி தேவி ஆகிய இருவரின் கோயில்களையும் புஷ்கரத்திற்கு வரும் யாத்திரிகர்கள் இன்றும் காணலாம்.

இவ்வுலகில் சரஸ்வதி தேவி நதி வடிவில் இருக்கிறாள். இந்த நதியின் ஐந்து கிளை நதிகள்: சரஸ்வதி, சுபப்ரா, சந்திரா, கனகா, நந்தா, இவையாவும் புஷ்கரை ஒட்டிய பகுதிகளில் ஓடுகின்றன. ஆனால் அவை சாதாரண கண்களுக்கு தற்போது புலப்படுவதில்லை.

முனிவர்களின் ஸ்தலம்

பல்லாயிரம் ஆண்டுகளாக புஷ்கரம் ஒரு புனித ஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது. புஷ்கரைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தவம் புரிந்த அகஸ்தியர், புலஸ்தியர், மார்கண்டேயர் உட்பட பிரசித்தி பெற்ற வேத கால முனிவர்களை புஷ்கரம் இன்றும் பெருமைப்படுத்துகிறது. போர் வீரரான விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷியாக மாறுவதற்காக தியானம் செய்து வந்தபொழுது, ஸ்வர்க லோக மங்கையான மேனகை அவருடைய கவனத்தை திசை திருப்பினாள்; அதன் பிறகு, விஸ்வாமித்திரர் தனது குறிக்கோளை புஷ்கரத்தில்தான் அடைந்தார்.

விஸ்வாமித்திரரின் காலத்துக்கு பின்னரும், இன்றுவரை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாத்திரிகர்கள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள புஷ்கரத்திற்கு வருகின்றனர். உயர்ந்த விஷயங்களைப் புரிந்து கொண்டுள்ளோர் மட்டும் பகவான் கிருஷ்ணரிடம் தூய அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது ஒரே வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த புண்ணிய ஸ்தலத்தையும் இங்குள்ள பிரம்ம தேவரையும் வணங்குகின்றனர்.

ஒட்டகச் சந்தை

ஒவ்வொரு வருடமும் கார்த்திகா (அக்டோபர்-நவம்பர்) மாதத்தின் பௌர்ணமி தினத்தோடு முடியும் ஐந்து நாள்களுக்கு புஷ்கரில் ஒட்டகச் சந்தை நடத்தப்படுகிறது. அக்கால கட்டத்தில் புனித ஸ்தலத்தில் நீராடுவதற்காக பெரும்பாலான யாத்திரிகர்கள் அங்கு கூடுவதால், இந்த வாய்ப்பை வாணிபத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது இயற்கையே. எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி, சின்னஞ்சிறு பரிமாற்றங்களில் தொடங்கிய இந்த வாணிபம், இன்று உலகளவில் பெரும் ஒட்டகச் சந்தையாக வளர்ந்துவிட்டது.

புஷ்கர நகரின் மேற்கே உள்ள காலியிடத்தில், பெரும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, நகரத்தின் அளவு பெரிதாகி விடுகிறது, மாபெரும் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. ஒட்டக வியாபாரம், குதிரை வியாபாரம், பாம்பாட்டிகள், ஒட்டகப் பந்தயம், படகு ஓட்டுதல், குடை இராட்டினம், கைவினைப் பொருட்களின் அங்காடிகள், சாம்பல் பூசிக் கொண்ட சாமியார்கள், பளிச்சிடும் ஆடைகளை அணிந்த ராஜஸ்தானிகள் என இவ்விழா ராஜஸ்தானின் பண்பாடு நிறைந்த விழாவாக நடத்தப்படுகிறது. இந்த சந்தைக்கு சுமார் 2,00,000 மக்கள் தங்களது 50,000 பசுக்கள், ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் எருமைகளுடன் வருகின்றனர்.

 

கோயில்கள்

புஷ்கரில் சுமார் 400 கோயில்கள் உள்ளன. பல்வேறு தேவர்களின் கோயில்கள் அதிகஅளவில் இருப்பினும், பிரம்மதேவரின் கோயிலே இங்கு பிரதானமானதாகும்.

பிரம்மாவின் கோயில்

நகரின் மேற்கு திசையில் பிரம்மதேவரின் கோயில் அமைந்துள்ளது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவின் விக்ரஹத்திற்கு இடப்புறம் காயத்ரி தேவியும், வலப்புறம் சாவித்ரி (சரஸ்வதி) தேவியும் அமர்ந்துள்ளனர். கோயிலைச் சுற்றி பிரதக்ஷணம் வரும்போது, இந்திரன், குபேரன், சிவபெருமான், துர்கை போன்ற தேவர்களுக்கும், தத்தாத்ரேயர், நாரதர், ஷப்த-ரிஷிகளுக்கும் சந்நிதிகள் உள்ளன.

கோயிலிலுள்ள பிரம்மதேவரின் விக்ரஹம் எப்போது முதன் முதலாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தெரியவில்லை. புராதன விக்ரஹம் பதினேழாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் என்பவரால் அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயில் 1809இல் கட்டப்பட்டதாகும்.

 

பிரம்மாவின் கோயிலில் கூடும் யாத்திரிகர்கள்.

இடது: பிரம்மதேவரின் விக்ரஹம், நடுவே: கரும்பு விற்கும் பெண், வலது: ராஜஸ்தானியர்களுக்கே உரிய பிரகாசமான உடையுடன் புஷ்கரத்தின் சந்தையில் கடையை விரித்திருக்கும் கிராமத்துப் பெண்.

சாவித்ரி கோயில்

பிரம்மதேவரின் முதல் மனைவி சாவித்ரி அல்லது சரஸ்வதியின் கோயில் பிரம்மதேவரின் கோயிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குன்றின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. சாவித்ரி கோபமடைந்து பிரம்மாவையும் இதர தேவர்களையும் சபித்துவிட்டு இந்த குன்றுக்குச் சென்றார். இந்த கோயிலுக்குச் செல்ல ஒரு மணி நேர கடினமான நடைப்பயணம் செய்ய வேண்டியுள்ளதால், பல யாத்திரிகர்கள் தொலைவிலிருந்தே தரிசனம் செய்கின்றனர். சாவித்ரி தேவி கிழக்கு நோக்கி, கண்களை அகல விரித்து மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கிறாள். இக்குன்றின் மேலிருந்து புஷ்கரத்தினை முழுமையாக தரிசிக்கலாம்.

புஷ்கரத்திலிருந்து பார்க்கும்போது மலை மேல் அமைந்திருக்கும் சாவித்ரி தேவியின் கோயில்.

தங்களது குதிரைகளை மணிகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்க விரும்புவோருக்காக, பல்வேறு பொருட்கள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இடப்புறம் சாவித்ரி தேவியின் விக்ரஹம், வலப்புறம் காயத்ரி தேவியின் விக்ரஹம்.

காயத்ரி கோயில்

இந்த கோயிலும் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது, சாவித்ரி கோயிலிலிருந்து நகரத்திற்கு எதிர்பக்கத்தில் உள்ளது.

வராஹர் கோயில்

ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ள இந்த கோயில் தெற்கு நோக்கி உள்ளது. அதில் பகவான் கிருஷ்ணரின் அவதாரமான வராஹர், பன்றி வடிவில் வெள்ளை பளிங்கு கல்லில் வடிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறார். பகவானின் இந்த விக்ரஹம் 1784இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலில் கட்டப்பட்ட கோயில் 150 அடி உயரம் கொண்டதாகும், பன்னிரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இக்கோயில் குறைந்தது மூன்று முறையாவது முகலாயர்களால் தாக்கப்பட்டது.

 

அரங்கநாதர் கோயில்

நகரின் மையப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் ஆறடி உயரமுள்ள அழகிய வேணுகோபாலரின் (குழலூதும் கிருஷ்ணரின்) விக்ரஹம் உள்ளது. இங்கு ராதாராணி (விருந்தாவனத்தில் கிருஷ்ணரின் துணைவி), ருக்மிணி (துவாரகையில் கிருஷ்ணரின் துணைவி), லக்ஷ்மி தேவி உட்பட, நரசிம்ம தேவரின் விக்ரஹமும் உள்ளது.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரங்கநாதரின் அழகிய திருக்கோயில்.

ரமா வைகுண்ட கோயில்

லக்ஷ்மி நாராயணருக்கான இக்கோயில் புதிய ரங்கநாதரின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது நகரின் கிழக்கு திசையில் உள்ளது.

 

கிருஷ்ணர் கோயில்

இது மத்திய புஷ்கரத்தில் உள்ள முக்கியமான கோயிலாகும். மத்திய பகுதியில் ஜ்யேஷ்ட புஷ்கரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives