ரகுநாத தாஸரின் சரணாகதியும் நாய்க்குக் கிடைத்த முக்தியும்

Must read

சென்ற இதழில், மஹாபிரபுவின் வட இந்தியப் பயணத்தையும் அச்சமயத்தில் நிகழ்ந்த லீலைகளையும் கண்டோம். இந்த இதழில் புரிக்குத் திரும்பிய மஹாபிரபுவிடம் ரகுநாத தாஸர் எவ்வாறு சரணடைந்தார் என்பதையும் நாய் ஒன்றிற்கு மஹாபிரபு வழங்கிய கருணையையும் காணலாம்.

ஸநாதனருக்கு உபதேசம்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ நடத்தையைப் பற்றி ஒரு நூலினை எழுதும்படியும், விருந்தாவனப் பகுதிகளில் கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற இடங்களைக் கண்டுபிடித்துப் புதுப்பிக்கும்படியும், கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு வாழ்வை அர்ப்பணிக்கும்படியும், விருந்தாவனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் மஹாபிரபு அறிவுறுத்தினார்.

ரகுநாதரின் முயற்சி

செல்வச் செழிப்புடைய ஜமீன்தார்களின் குடும்பத்தைச் சார்ந்த ரகுநாத தாஸர் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கான சுவையையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்வதில் ஆழ்ந்த விருப்பத்தையும் வளர்த்திருந்தார். அவரது பெற்றோர்கள் நல்லவர்களாகவும் மஹாபிரபுவிடம் சரணடைந்தவர்களாகவும் இருந்தனர்; இருப்பினும், ரகுநாதர் வீட்டை விட்டுச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை, அழகிய இளம் பெண்ணை மணமுடித்து அவரை பௌதிக வாழ்வில் கட்டி விடலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் உதவவில்லை.

கௌராங்கர் சாந்திபுருக்குச் சென்றிருந்தபோது, ரகுநாத தாஸர் குடும்ப வாழ்வைத் துறப்பதற்கான தமது விருப்பத்தினை அவரிடம் தெரிவித்தார். பகவானோ, பைத்தியக்காரனாக இருக்காதே. இப்போதைக்கு இல்லத்திலேயே இருந்து சாதாரண இல்லறத்தானாக நடந்துகொள். அதே சமயத்தில் உள்மனதில் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிரு. காலப்போக்கில் கிருஷ்ணருக்கு முழுமையாகத் தொண்டு செய்யும் வாய்ப்பை அடைவாய்,” என்று பதிலளித்தார்.

வீடு திரும்பிய ரகுநாதர் ஒரு வருடத்திற்கு முதல்தர வியாபாரியைப் போல நடித்தார். மறுவருடம் புரிக்குக் கிளம்ப முடிவு செய்தார். இருப்பினும் கூடியமான தூரம் தப்பியோடிய பின்னர், அவரது தந்தையின் ஆட்கள் அவரைக் கைப்பற்றி மீண்டும் இழுத்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் வழக்கமான ஒன்றாக மாறியது, மீண்டும்மீண்டும் ரகுநாதர் தப்பி ஓட, மீண்டும்மீண்டும் அவரது தந்தை ஆட்களை அனுப்பி அவரைப் பிடித்து விடுவார்.

நித்யானந்தரின் கருணை

ஒருநாள் பானிஹாட்டி என்னும் கிராமத்தில் ரகுநாத தாஸர் நித்யானந்த பிரபுவைச் சந்திக்க, அவர் உடனடியாக மாபெரும் விழாவிற்கு ஏற்பாடு செய்ய கட்டளையிட்டார். அவல், தயிர், மற்றும் பல்வேறு சுவையான உணவைக் கொண்டு ரகுநாத தாஸர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவளித்தார். அதன் பின்னர் நித்யானந்த பிரபுவிடம் ரகுநாத தாஸர் வேண்டினார்: தங்களின் கருணையின்றி எவராலும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் தஞ்சமடைய இயலாது, நீங்கள் கருணை கொண்டால் மனிதரில் கீழ்நிலையில் உள்ளவர்களும் அவரது தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைய முடியும்.”

பகவான் நித்யானந்தர் பதிலளித்தார்: அன்புள்ள ரகுநாதரே, மஹாபிரபு உம்மை விரைவில் ஏற்று தமது காரியதரிசியான ஸ்வரூப தாமோதரரின் பொறுப்பில் வைப்பார். நீங்கள் பகவானின் அந்தரங்க சேவகர்களில் ஒருவராவீர்.” பகவான் நித்யானந்தரின் கருணையை முதலில் பெறாமல், பகவான் சைதன்யரிடம் யாராலும் தஞ்சமடைய முடியாது என்பதை இச்சந்திப்பிலிருந்து அறியலாம்.

பானிஹாட்டியில் ரகுநாதர்ஸ்ரீ நித்யானந்த பிரபுவிடம் சரணடைதல்

ரகுநாதரின் சரணாகதி

வீடு திரும்பிய குறுகிய காலத்திற்குள் ரகுநாத தாஸருக்கு தப்பிப்பதற்கான மற்றொரு வாய்ப்பு கிட்டியது. தினமும் ஐம்பது கிலோமீட்டர் வீதம் நடந்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பாதையின் வழியாக, பன்னிரண்டு நாளில் அவர் புரியை வந்தடைந்தார். ரகுநாத தாஸருக்கு பின்வரும் உபதேசங்களை அளித்த பின்பு மஹாபிரபு அவரை ஸ்வரூப தாமோதரரின் பொறுப்பில் ஒப்படைத்தார்: பௌதிக விஷயங்களைப் பேச வேண்டாம், பௌதிகவாதிகளின் வீண் பேச்சுகளைக் கேட்க வேண்டாம், நாவிற்கினிய உணவுகளை உண்ண வேண்டாம், ஆடம்பரமாக ஆடை அணிய வேண்டாம். எவ்வித மரியாதையையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் மரியாதையளிக்க வேண்டும். எப்பொழுதும் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்து, மனதிற்குள் விருந்தாவனத்தில் ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்.”

ரகுநாதரின் துறவு

ரகுநாத தாஸர் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தபோதிலும், புரியில் அவரது வாழ்வு துறவின் எல்லைக்கு இலக்கணமாக இருந்தது. முதல் ஐந்து நாளில் அவர் பகவான் சைதன்யரால் தமது அந்தரங்க சேவகரான கோவிந்தரின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பிரசாதத்தினை ஏற்றார். ஆனால் ஆறாவது நாளிலிருந்து, ஏழ்மையான வைஷ்ணவர்களின் பழக்கத்தினைப் பின்பற்றி, தினசரி மாலை வேளையில் கோயிலின் வாயிலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தார். சில நாள் அவ்வாறு கழித்த பிறகு, மற்றவர்களிடமிருந்து வரும் தானத்தை எதிர்பார்த்து வாழ்வது நல்லதல்ல எனக் கருதிய அவர், தினமும் ஒருமுறை அன்னதான கூடத்தில் என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டார்.

மேலும் சில நாளில், அங்கே உணவருந்துவதையும் நிறுத்திவிட்டு, பசுக்கள்கூட புறக்கணிக்கக்கூடிய அழுகிய பிரசாதத்தினைச் சேகரித்து, துர்நாற்றம் வீசும் தானியங்களை போதுமான நீரைக் கொண்டு முழுமையாகக் கழுவி, அதன் கடினமான உட்பகுதிகளை உப்பைக் கொண்டு உண்ணத் தொடங்கினார். ரகுநாத தாஸரின் தவ வாழ்வினால் மகிழ்ச்சியுற்ற மஹாபிரபு அவரிடம் வினவினார், நீங்கள் உண்ணும் உணவு மிகவும் சுவையானது என்று நினைக்கிறேன், எனக்கும் கொஞ்சம் ஏன் கொடுக்கக் கூடாது?” அதனைத் தொடர்ந்து, கையளவு சாதத்தினை பிடுங்கி உண்ட மஹாபிரபு, ஒருபோதும் இதுபோன்ற அருமையான பிரசாதத்தினை நான் சுவைத்ததில்லை,” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ரகுநாத தாஸர் தமது வாழ்நாளில் ஒருபோதும் புலனுகர்ச்சிக்கு இணங்கவில்லை. அவர் ஒரு கிழிந்த கோவணத்தையும் ஒட்டுப்போடப்பட்ட சால்வையையும் மட்டுமே அணிந்திருந்தார். கல்லில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைப்போல ஒப்பிடுமளவிற்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அவர் ஸ்திரமாகப் பின்பற்றினார். ரகுநாத தாஸரிடம் மிகவும் திருப்தியுற்ற பகவான் சைதன்யர், கோவர்தன மலையிலிருந்து ஒரு சிலாவையும் (கல்லையும்), சிறிய குஞ்ஜா மாலையையும் (விருந்தாவனத்தில் வளரக்கூடிய சதைப்பற்றுள்ள சிறிய பழத்தின் சிவப்பும் கருப்பும் கொண்ட கொட்டையினாலான மாலையையும்) அவருக்கு அளித்தார். அக்கல்லினை வழிபடும்படி ரகுநாத தாஸருக்கு பகவான் வழிகாட்ட, அதனை கிருஷ்ணரிடமிருந்து வேறுபாடற்றதாக ரகுநாத தாஸர் கண்டார். கோவர்தன சிலாவை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கரங்களிலிருந்து நேரடியாகப் பெற்றதை எண்ணி, ரகுநாத தாஸர் எப்பொழுதும் பரவச அன்பில் மூழ்கியிருந்தார்.

துர்நாற்றம் வீசும் பழைய சாதத்தினைக் கழுவி அதனை உண்டு வந்த ரகுநாதரிடம் தமக்கும் அந்த உணவு வேண்டும் என்று சைதன்யர் கூறுதல்

யாத்திரையில் கலந்து கொண்ட நாய்

வங்காள பக்தர்களின் குழு ஒடிசாவிற்குப் பயணம் செய்யும்போது, சிவானந்த சேனர் அக்குழுவிற்குத் தலைமை தாங்குவது வழக்கம். செல்லும் வழியில், பிரசாதம், தங்குமிடம் முதலியவற்றை அவர் ஏற்பாடு செய்வார். நதிகளை படகில் கடப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வார், வழியெங்கும் சுங்கச் சாவடிகளில் வரி செலுத்துவார். ஒருமுறை, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து பாடியபடி புரியை நோக்கி பக்தர்கள் நடந்து கொண்டிருந்தபொழுது, நாய் ஒன்று அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தது. வைஷ்ணவர்களின் குழுவில் இணைந்து விட்டதால், அந்த நாயும் ஒரு வைஷ்ணவராகவே இருக்க வேண்டும் என்று கருதிய சிவானந்த சேனர், அதற்கான தினசரி உணவிற்கும் ஏற்பாடு செய்தார்.

காணாமல் போன நாய்

சுங்கச் சாவடி ஒன்றில் வரிவசூலிப்பவர் ஒருவர் சிவானந்த சேனரை அலைக்கழிக்க, சிவானந்தர் எனது குழுவினர் களைப்புடன் பசியாக உள்ளனர், அவர்கள் முன்நோக்கிச் செல்ல அனுமதி கொடுங்கள். நான் உங்களுடன் இருந்து விஷயங்களைச் சரி செய்கிறேன்” என்று முறையிட்டார். வரிவசூலிப்பவரும் அதை ஏற்றுக்கொள்ள சிவானந்தரைத் தவிர அனைவரும் முன்நோக்கிச் சென்றனர். இறுதியில் சிவானந்தர் மாலை வேளையில் மீண்டும் அவர்களை அடைந்தபோது, அனைவரும் பிரசாதம் எடுத்துக் கொண்டனரா என்று வினவ, பக்தர்களும் எடுத்துக் கொண்டதாக பதிலுரைத்தனர். பின்னர், நாயைப் பற்றி சிவானந்தர் விசாரித்தார். நாய்க்கு பிரசாதம் அளிக்கப்படாதது மட்டுமின்றி, யாராலும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரையும் கவனித்துக் கொள்வது சிவானந்தரின் கடமை; ஆனால் நாயை கவனிக்கத் தவறிய காரணத்தினால், தான் அபராதம் இழைத்துவிட்டதாக எண்ணிய சிவானந்தர், பட்டினியுடன் இருக்க முடிவு செய்தார்.

நாய்க்குக் கிடைத்த முக்தி

அனைவரும் புரிக்கு வந்தவுடன் சிவானந்தர் சைதன்ய மஹாபிரபுவைக் காணச் சென்றார். அங்கே அதே நாய்க்கு மஹாபிரபு பிரசாதம் வீசுவதையும் அதனை அந்த நாய் கவ்வுவதையும் சிவானந்தர் கண்டார். ஹரே கிருஷ்ண!” என்று சொல்லும்படி கௌராங்கர் நாயிடம் உரைக்க, உடனடியாக அதுவும் உச்சரிக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட சிவானந்தர் நாயை நமஸ்கரித்தார். மறுநாள் யாராலும் நாயைக் காண இயலவில்லை, சைதன்ய மஹாபிரபுவின் ஆசியால் அவ்வுடலினுள் குடியிருந்த ஆத்மா இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிவிட்டது. நாய் என்னும் நீச்சமான உடலினுள் இருந்த உயிர்வாழி, எப்படியோ சிவானந்த சேனர் என்ற சிறந்த வைஷ்ணவரின் இனிய கவனத்தைப் பெற்ற காரணத்தினால், கௌராங்கரால் அது விடுவிக்கப்பட்டது.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

அடுத்த இதழில்: சோட்டா ஹரிதாஸருக்கான தண்டனை

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நாய்க்கு பிரசாதம் வழங்குவதைக் கண்ட சிவானந்தர், உடனடியாக அந்த நாய்க்கு நமஸ்காரம் செலுத்துதல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives