ரைவதக மலை

வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ்

பகவான் கிருஷ்ணர் துவாரகையில் வாழ்ந்தபோது தம்முடைய குடும்பத்துடனும் நகரவாசிகளுடனும் இந்த ரைவதக மலைக்குச் சென்று மகிழ்வதுண்டு. பலராமர் த்விவிதா என்ற கொரில்லா அசுரனைக் கொன்றதும், அர்ஜுனன் சுபத்ராவைக் கடத்தியதும், மற்றும் பாகவதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள இதர சில நிகழ்ச்சிகளும் இந்த ரைவதக மலையைச் சுற்றி நடந்த நிகழ்வுகளாகும். முன்னொரு காலத்தில் நாரத முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி 84,000 பிராமணர்கள் இங்கேயே தங்கியதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.

1,117 மீட்டர் (3,666 அடி) உயரமுள்ள கிர்னார் மலை இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள மிகவுயர்ந்த சிகரமாகும். முற்காலத்தில் இது ரைவதக மலை என்று அழைக்கப்பட்டது. இதற்கு மஹாபாரதமும் இதர பல புராணங்களும் சான்றாகும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பு, இதன் மனங்கவரும் மலைக் குகைகளும் தோப்புகளும் துவாரகாவாசிகளான யாதவர்களுக்கு ஸ்வர்க பூமியாகத் திகழ்ந்தது. இங்குள்ள அழகான வனங்களையும் பூங்காக்களையும் அவர்கள் தங்களுடைய திருவிழாக்களுக்கும் கேளிக்கைகளுக்கும் உகந்த இடமாகக் கருதினர்.

ஜுனகத் நகரின் வெளிப்புறத்தில் இந்த ரைவதக மலை அமைந்துள்ளது. என்னுடைய குஜராத் பயணத்தின் போது, வதோதரா (பரோடா) இஸ்கான் மையத்தின் பக்த குழுவுடன் பிரபுபாதரின் புத்தகத்தை விநியோகம் செய்து கொண்டிருந்தேன், அச்சமயத்தில் நாங்கள், ராஜ்கோட் நகரத்திலிருந்து ரைவதக மலையை வட திசையில் அணுகினோம். குஜராத் பள்ளத்தாக்குகளுக்கு மேலே பயணித்தபோது அந்த சுற்றுபுறக் காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது. அடர்ந்த காடுகளும் அமைதியான சுற்றுப்புறச் சூழலும் ஜுனகத்திற்கு மிக அருகே எங்களை இழுத்துச் சென்றது. தியானத்திற்கும் புத்தக விநியோகத்திற்கும் படிப்பதற்கும் அந்த இடம் மிகவும் உகந்ததாகத் தோன்றியது.

 

ரைவதக மலையின் அடிவாரத்திலுள்ள ராதா-தாமோதரர் கோயில் மற்றும் ஸ்வர்ணரேகா நதி

ராதா-தாமோதரர் கோயில்

எங்களுடைய குழுவினைச் சார்ந்த பக்தர் ஷோதன் பக்ஷி ஜுனகத் நகரத்தைச் சார்ந்தவர். அவர் கல்வ நதியின் மேற்புறச் சாலையைப் பின்பற்றி ஜுனகத்தை தாண்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். புராணங்களில் இந்த நதி ஸ்வர்ணரேகா என்று அழைக்கப்படுகிறது. அவருடைய ஆலோசனையின்படி, ரைவதக மலையின் அடிவாரத்தில் உள்ள ராதா-தாமோதர கோயிலின் அருகில் உள்ள ஆசிரமத்தில் தங்கினோம். அங்கிருந்தபடி ராதா தாமோதரரின் விக்ரஹங்களை தினமும் பார்க்க முடிந்தது, மனதை மயக்கும் மலையின் அழகையும் ரசிக்க முடிந்தது.

ராதா-தாமோதர கோயிலுக்கு காலை தரிசனத்திற்குச் செல்லும்போது, நாங்கள் தங்கியிருந்த அந்த ஆசிரமத்தில் உள்ள சர்ஜீ என்னும் பழுப்பு நிறப் பசுவைப் பார்த்து ஆனந்தமடைவோம். சர்ஜீ ஒவ்வொரு நாளும் காலை வேளையில், நாங்கள் செல்வதற்கு முன்னரே கோயிலை அடைந்து, அங்கு வருபவர்களிடமிருந்து புல்லை வாங்கி உண்ணும். அங்கிருந்த கடையிலிருந்து நாங்கள் விக்ரஹங்களுக்கு அணிவிப்பதற்காக மலர்மாலைகளை வாங்கினோம்.

கோயிலுக்குப் போகும் வழியில் ஸ்வர்ணரேகா நதியின்மேல் அமைந்துள்ள மேம்பாலத்தைக் கடந்தபோது, பாறையின் மேல்விழும் நீரின் சலசலப்பு சப்தத்தை எங்களால் கேட்க முடிந்தது. மேம்பாலத்தின் இடது பக்கத்தில் நதியின் ஒரு கிளைப் பகுதியில் தாமோதர குண்டம் (குளம்) உள்ளது. ஒவ்வொரு முறையும் தாமோதர குண்டத்தைக் கடக்கும்போது, நிறைய யாத்திரிகர்கள் நீராடுவதையும் தலையில் நீரைத் தெளித்து கொள்வதையும் காண முடிந்தது.

சில படிகளைக் கடந்து மேலேறிய பிறகு, ராதா-தாமோதர விக்ரஹங்கள் அமைந்துள்ள கோயிலின் பிரதான மேடையை அடைந்தோம். இந்த விக்ரஹங்கள் 12,000 வருடங்களுக்கு முன்பாக சுயம்புவாகத் தோன்றியவர்கள் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பழுப்பு மற்றும் கறுப்பு நிறம் கலந்த கல்லால் ஆனவர்கள். இவர்கள் ராதா-தாமோதரர் என்று அழைக்கப்பட்டாலும், இலக்ஷ்மி நாராயணராக நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கின்றனர். மூன்று கரங்களில் கதை, சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கீழ்கரம் ஆசிர்வதிப்பது போலவும் அமைந்திருக்கிறது.

இந்த கோயிலுக்கு அருகில் பகவான் பலராமர் மற்றும் அவருடைய துணைவியான ரேவதி தேவியின் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விக்ரஹங்கள் பார்ப்பதற்கு ராதா-தாமோதரரை ஒத்திருப்பார்கள். நாங்கள் அவர்களை முதலில் தரிசித்தபோது, சிவப்பு வண்ண ஆடையாலும் வெள்ளை அங்கியாலும் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

எண்பத்திநான்கு தூண்களைக் கொண்ட அந்த மூன்று மாடி கோயிலைச் சுற்றி வலம் வந்தோம். சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கோயில் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் அழகாக வடிவமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் கோயிலின் பின்புறத்தில் இன்னமும் பழைய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சுவரை எங்களால் கவனிக்க முடிந்தது. பகவான் கிருஷ்ணரின் பேரனான வஜ்ரநாபன் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலைக் கட்டியதாக கூறப்படுகிறது.

ராதா-தாமோதரர் கோயிலுக்கு அருகில் பதினாறாவது நூற்றாண்டில் வாழ்ந்த வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீ வல்லபாசாரியர் வாழ்ந்த இடம் உள்ளது. இதன் பின்புறம் ரேவதி குண்டம் இருக்கிறது. இப்பகுதியில்தான் அரசர் ரேவதர் தனது மகளான ரேவதியுடன் வாழ்ந்து வந்தார், ரேவதி பிற்காலத்தில் பகவான் பலராமரின் மனைவியானாள். ரேவதியும் பலராமரும் அடிக்கடி இந்த இடத்திற்கு வருகை தருவதுண்டு. இங்கிருந்து சுமார் இருபது மீட்டர் தொலைவில் முசுகுந்தனின் குகை உள்ளது. இங்கு இயற்கையான குகை ஏதுமில்லை, ஆனால் சிறிய சிவன் கோயில் ஒன்றில், முசுகுந்தனின் குகை என்று தனியாக ஒரு சிறு ஸ்தலம் உள்ளது. முசுகுந்தனின் பார்வையால் எரிக்கப்பட்ட அசுரனான காலயவனனிடமிருந்து, பகவான் கிருஷ்ணர் தப்பித்து ஓடி வந்த இடம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இக்கதை ஸ்ரீமத் பாகவதம் மற்றும் இதர புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் தங்கியிருந்த ஆசிரமத்தில், அங்குள்ள சிறிய கோயிலில், சீதா, இராமர், இலக்ஷ்மணர், மற்றும் ஹனுமான் விக்ரஹங்களை வழிபட்டு வந்தனர். அவர்கள் எங்கள் மீது மிகுந்த அன்புடன் இருந்தனர், எங்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருந்தனர். மேலும், அந்தக் கோயிலின் சுற்றுப்புற சூழ்நிலை மிகவும் தெய்வீகமாக இருந்தது.

இந்த ஆசிரமத்திற்கு அருகில் பாயும் ஸ்வர்ணரேகா நதியில் ஒரு சிறிய குளம் உள்ளது. காட்டில் வசிக்கும் சிறுத்தைகள் இரவு நேரத்தில் இந்த குளத்திற்குதான் நீர் அருந்த வருகின்றன, இந்த சிறுத்தைகளால் மக்கள் கொல்லப்படுவது சர்வ சாதாரணமான விஷயமாகும். எங்கள் குழுவைச் சார்ந்த பக்தர் ஒருவர், ஒருநாள் இரவு நேரத்தில் ஆசிரமத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறுத்தையைப் பார்த்ததாகக் கூறினார். இதை நாங்கள் அங்கிருந்தவர்களிடம் கூறியபோது, அச்சத்தினால் எங்களுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, அவர்கள் அனைவரும் பயங்கரமாக சிரித்தனர். நாங்கள் மிகவும் பயந்த விஷயம் அவர்களிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை; ஏனென்றால், அஃது அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாகும். மேலும், அந்த ஆசிரமம் காட்டின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், சிலசமயம் நல்லபாம்புகூட சமையலறைக்குள் வருவதுண்டு.

ராதா-தாமோதரர் கோயிலில் உள்ள பலராமர் மற்றும் ரேவதியின் விக்ரஹங்கள்

ரேவதி குண்டம்

ரைவதக மலையின் அடிவாரத்தில்  அமைந்துள்ள பிரபலமான  பவநாதர் எனப்படும் சிவன் கோயில்.

தேவர்களால் சூழப்பட்ட மலை

அங்கிருந்து நாங்கள் ரைவதக மலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அமைந்த ஆசிரமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தில் அமைந்துள்ள பவநாதர் என்று அழைக்கப்படும் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் ஸ்தல வரலாறு ஸ்கந்த புராணத்தில் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது. ஒருமுறை சிவபெருமான் தவம் செய்வதற்குச் சிறந்த ஸ்தலத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக கயிலாயத்திலிருந்து இங்கு வந்தார். அவரைக் காணாமல் தவித்த பார்வதி தேவி, பகவான் விஷ்ணு மற்றும் இதர சில தேவர்களின் உதவியுடன் ரைவதக மலையின் அடிவாரத்தில் சிவபெருமானைக் கண்டாள். சிவபெருமான் பவநாதர் என்ற பெயரில் இங்கேயே தங்கப் போவதாகக் கூறினார், தேவர்களையும் இங்கேயே இருக்குமாறு அறிவுருத்தினார். அதன்படி, பகவான் விஷ்ணு ராதா-தாமோதரராக ரேவத மலையிலும், பிரம்மா முசுகுந்த மலையிலும், பார்வதி தேவி ரைவதக மலையிலும், இந்திரன் இந்திராசல மலையிலும் தங்கினர். மற்ற தேவர்கள் அனைவரும் ரைவதக மலையைச் சுற்றியுள்ள பல பகுதிகளைத் தேர்ந்தெடுத்தனர். ரைவதக மலைக்குப் போகும் வழியில், பவநாதர் கோயிலுக்குப் பின்புறம் மிருகி குண்டம் உள்ளது. இங்கு ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் சிவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் கிரிவலம் செய்கிறார்கள். மிகப்பெரிய கிரிவலம் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ஆரம்பிக்கிறது. இந்த ஸ்தலம் பற்பல தேவர்களுக்குப் பிரியமான இடம் என்பதால், இதனை புனித ஸ்தலங்களிலேயே மிகவும் புனிதமான ஸ்தலம் என்று சிவபெருமான் அறிவித்துள்ளார்.

மலை ஏறும் நாள்

ரைவதக மலையின் அடிவாரத்தில் நாங்கள் தங்கியிருந்த அந்த மூன்று வாரங்களிலும் காலநிலை சீராக இல்லை. வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இடி ஓசையும் பளீரென்று அடிக்கும் மின்னலும் அந்த மலை அடிவாரத்தை அலங்கரிக்க, நாங்கள் மலை ஏறுவதற்கு உகந்த நாளுக்காக காத்திருந்தோம்.

மலை உச்சி நீல மேகத்தைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தைப் போல காட்சி அளித்தது. கடைசியாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. நிறைய யாத்திரிகர்கள் தினமும் மலை உச்சியில் இருக்கும் கோயில்களுக்கு செல்வார்கள், இம்முறை அவர்களுடன் நாங்களும் இணைந்தோம்.

மலை உச்சியை அடைய மொத்தம் பத்தாயிரம் படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளின் ஆரம்பத்திலிருந்து மலை உச்சி வரை உள்ள வழியெங்கும் உள்ளூர்வாசிகள் நிறைய கடைகளை வைத்துள்ளனர். பூஜைக்குத் தேவையான பொருட்கள், குளிர்பானங்களை விற்கும் கடைகள் போன்றவையும் அதில் அடங்கும். படிக்கட்டுகள் உயரே செல்லசெல்ல பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு கடையிலிருந்து மூங்கில் குச்சிகளை வாங்கினோம், மலையேற ஏதுவாக இருக்கும் பொருட்டு மக்கள் அதனை உபயோகிப்பார்கள். ஆனால் நாங்களோ அடர்ந்த காட்டிலிருந்து எங்களைத் தாக்க வரும் காட்டு மிருகங்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவற்றை வாங்கினோம். கறுத்த முகத்துடனும் வெள்ளை நிற முடியுடனும் மரத்துக்கு மரம் கிளைகளில் தாவும் பல குரங்குகளை வழியில் பார்க்க நேர்ந்தது.

ஒரு மணி நேரக் கடினமான மலை ஏற்றத்திற்குப் பிறகு, நாங்கள் காட்டிலிருந்து வெளியே வந்தோம். பிறகு, கரடுமுரடான பாறைகளுக்கும் வழுக்கும் பாறைகளுக்கும் இடையே எங்களது பயணம் தொடர்ந்தது. வழக்கத்துக்கு மாறாக, அந்த பாறைகளின் தோற்றம் வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. மூச்சிரைக்க மலை ஏறி, ஒருவழியாக கம்பீரமான ஒரு வாயிலை அடைந்தோம். இந்த வாயிலின் பின்புறத்தில் உள்ள சிறிய பள்ளத்தாக்கில் நிறைய ஜெயின் கோயில்கள் இருந்தன. அங்கிருந்து கௌமுகி கங்கா என்ற கோயிலை அடைந்தோம். அங்கே கங்கையின் நீர்ஊற்று ஒரு பசுவின் வாயிலிருந்து கொட்டுவதுபோல் காட்சியளிக்கிறது. அதற்கு அருகில் மிகவும் பழமையான அம்பாதேவியின் ஆலயம் உள்ளது. இங்கு சிவபெருமானுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, பார்வதி தேவி, அம்பா தேவியாக இங்கேயே இருந்து காட்சி தருகிறாள். தற்போது இருக்கும் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திற்குப் படிக்கட்டுகள் கீழ்நோக்கிச் சென்றன, பிறகு மறுபடியும் மிகவுயர்ந்த சிகரமான ரைவதக மலையை நோக்கி உயரே சென்றது. அதன் பிறகு, நாங்கள் பிரமிக்கத்தக்க வெள்ளை சலவைக் கற்களால் ஆன மேடைமேல் அமைந்திருந்த கோரக்ஷநாத் கோயிலை அடைந்தோம். அங்கு வசிக்கும் சந்நியாசி அன்புடன் அளித்த ஒரு குவளைத் தண்ணீரை அருந்திவிட்டு, தத்தாத்ரேயரின் ஆசிரமத்தை அடைந்தோம். தத்தாத்ரேயர் இவ்விடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்துள்ளார்.

இந்த ஆசிரமத்திலிருந்து இருநூறு படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு பெரிய கற்பாறை அமைந்துள்ளது, அதற்கு மேல் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பகவான் தத்தாத்ரேயரின் கோயிலுக்கு வந்தோம். இவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் இணைந்த அவதாரமாவார். நான்கு நாய்களால் சூழப்பட்டு மூன்று தலைகளுடன் அமைந்த இந்த விக்ரஹம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அப்போது இருள் சூழ ஆரம்பித்தது, கார்மேகக் கூட்டங்கள் மலையைச் சூழ்ந்து சிறிது சிறிதாகத் தூறல் விழ ஆரம்பித்தது. நாங்கள் பூஜாரியிடமிருந்து அவசரஅவசரமாகத் தேங்காய் மற்றும் பூ தட்டுக்களை வாங்கிக் கொண்டு விரைவாக இறங்கி ஆசிரமத்துக்குத் திரும்பினோம்.

பக்தர் ஒருவர் மலை உச்சியில் அமைந்துள்ள தத்தாத்ரேயரின் கோயிலை அணுகுகிறார்.

ரைவதக மலையின் உச்சியில் ஜபம் செய்யும் பக்தர்.

ராதா-தாமோதரரின் கருணை

ராதா-தாமோதர கோயிலின் பூஜாரிகளில் ஒருவர் மதிய உணவிற்காக எங்களை அழைத்திருந்தார், அன்று பல விதமான பிரசாதங்கள் எங்களுக்கு பரிமாறப்பட்டன. இங்கே பகவானுக்கு அறுசுவையான உணவுகளும் திரட்டுப் பாலினால் செய்யப்படும் இனிப்பும் ஒவ்வொரு நாளும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. மேலும், சுர்ம லட்டு எனப்படும் இனிப்புப் பண்டமும் அரிசி புட்டுப் போன்ற பதார்த்தமும் பலராமருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த விருந்திற்குப் பிறகு, அவர்கள் எங்கள் அனைவருக்கும் விக்ரஹங்கள் அணிந்திருந்த காவி நிற மேல் துண்டும் சிறிது நன்கொடையும் தந்தார்கள்.

பல விதமான தொல்லைகளால் தாக்கப்பட்டாலும் ஒரு பக்தன் முழுமுதற் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்து எப்போதும் அமைதியாக இருப்பதுபோல், மழையை சுமக்கும் மேகக் கூட்டங்களின் தொடர்ந்த தாக்குதலுக்கு மத்தியிலும் ரைவதக மலை சற்றும் நிலைகுலையாது திகழ்கிறது. மலையை விட்டு இறங்கி அடுத்தநாள் எங்களுடைய புத்தக விநியோகத்தைத் தொடர்ந்தோம்.

About the Author:

அத்புத ஹாி தாஸ் அவா்கள் குரோஷிய நாட்டைச் சாா்ந்தவா். தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறாா்.

Leave A Comment