வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக.

திருக்கச்சி நம்பிகள் புரிந்த வைஷ்ணவ சேவை

காஞ்சிபுரத்தில் இராமானுஜர் வாழ்ந்த சமயத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் (காஞ்சிபூர்ணர்) என்ற மாபெரும் பக்தர் தினந்தோறும் சாமரம் வீசும் சேவையை ஏற்றிருந்தார். வரதராஜ பெருமாளுடன் அவர் சகஜமாக பேசக்கூடியவர், அதனால் அவர் பகவானுக்கு மிக நெருக்கமான பக்தர் என்பதை ஊர் மக்கள் அறிந்திருந்தனர். அதனால் மக்கள் அவ்வப்போது அவரிடம் தாங்கள் எப்போது வைகுண்டம் சென்றடைவோம் என்பதை பெருமாளிடம் கேட்டு சொல்லுமாறு வற்புறுத்துவர். பெருமாள் சொல்கிற செய்தியையும் அவர் உடனடியாக மக்களிடம் தெரிவிப்பார்.

ஒருநாள் திருக்கச்சி நம்பிகள் தான் எப்போது வைகுண்டம் அடைவேன் என பெருமாளிடம் வினவினார். அதற்கு வரதராஜ பெருமாள், நீர் எனக்கு பிரியமான பக்தன் என்றபோதிலும், தூய பக்தர்களுக்கு நீங்கள் சேவை செய்யாத காரணத்தினால், இப்பிறவியில் என் லோகத்தை அடைய முடியாது,” என்றார். அதைக் கேட்ட நம்பிகள் உடனடியாக திருவரங்கம் சென்று அங்கே திருகோஷ்டியூர் நம்பியின் மாட்டுக் கொட்டகையில் தம்மை பணிவான சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அதன் மூலமாக பகவானின் லோகத்தை அடைவதற்கு முழு தகுதியையும் பெற்றார். இந்த சம்பவத்தின் மூலமாக வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதால் கிடைக்கக்கூடிய உயர்ந்த நிலையை ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

பரம புருஷ பகவானை நேரடியாக வழிபடுவதை விட அவரது தூய பக்தர்களின் மூலமாக வழிபடுவது சிறந்ததாகும். வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதன் மூலமே ஒருவர் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட முடியும். ஆச்சாரியர்களை நம்மைப் போன்ற சராசரி மனிதராக ஒருபோதும் எண்ணக் கூடாது. நமது துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஆச்சாரியர்களின் திருவடிகளை உறுதியுடன் பற்றிக்கொள்ள வேண்டும்.

வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் விசிறி வீசுவதும் இராமானுஜர் நீர் கொண்டு வருதலும்.

வைஷ்ணவ உச்சிஷ்டம்

வைஷ்ணவரின் உச்சிஷ்டத்தை (சாப்பிட்ட உணவின் மீதியை) ஏற்றல், வைஷ்ணவரின் பாதத் தூசியை ஏற்றல், வைஷ்ணவர்களின் கால்களைக் கழுவி நீரைப் பருகுதல் என்னும் மூன்று செயல்களும் வைஷ்ணவ சேவையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை உண்பதற்கு இராமானுஜர் எவ்வளவு பிரயத்தனம் செய்தார் என்பதை அவரது வாழ்வை அறிந்தோர் அனைவரும் அறிவர்.

திருக்கச்சி நம்பிகளின் அறிவுரைப்படி வரதராஜ பெருமாளின் சேவைக்காக தினந்தோறும் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்த இராமானுஜர், என்றேனும் ஒருநாள் நம்பிகள் சாப்பிட்ட உணவின் உச்சிஷ்டத்தை உட்கொள்ள ஏங்கினார். அதற்காக அவர் திருக்கச்சி நம்பிகளை தம் இல்லத்தில் உணவருந்துவதற்கு அழைப்பு விடுத்தார். இராமானுஜரின் மனைவியான தஞ்சமாம்பாளும் பலவித உணவுகளைத் தயாரித்தாள். நம்பிகள் தாம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இராமானுஜரின் இல்லத்திற்கு வந்து விட்டார். அந்த நேரத்தில் இராமானுஜர் அவரை அழைத்து வருவதற்காக வேறு வழியில் மடத்திற்குச் சென்றிருந்தார். வரதராஜ பெருமாளுக்கு சேவை செய்யும் நேரம் நெருங்கி வந்த காரணத்தினால், திருக்கச்சி நம்பிகள் தனக்கு உடனடியாக உணவளிக்கும்படி தஞ்சமாம்பாளிடம் கேட்டுக் கொண்டார்.

இராமானுஜர் இல்லம் திரும்புவதற்குள் திருக்கச்சி நம்பிகள் உணவருந்தி விட்டு புறப்பட்டு விட்டார். இல்லம் திரும்பிய இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தைக் கேட்டார். அவரது மனைவியோ திருக்கச்சி நம்பிகள் ஒரு பிராமணர் அல்ல என்பதால், அவர் சாப்பிட்ட இலையை ஒரு கொம்பால் எடுத்து எறிந்து விட்டு நீராடி புதிதாக மீண்டும் தளிகை செய்வதாகக் கூறினாள். இதைக் கேட்ட இராமானுஜர் மிகப்பெரிய மன வருத்தத்தை அடைந்தார்.

வைஷ்ணவர்களை குலம், ஜாதி மூலம் பேதம் பார்த்தல் நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஒரு தூய வைஷ்ணவரின் திருப்பாதத்தைக் கழுவிய நீர், அவரது பாதம்பட்ட தூசி, அவர் சாப்பிட்ட உணவின் மீதிஶீஇவையே ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்கு சிறந்த பொக்கிஷங்களாகும். ஆச்சாரியர்களும் தூய பக்தர்களும் நம்மை கடைத்தேற்றுவதற்காக பகவான் நாராயணரால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். கல்வி, செல்வம், குலம், வயது முதலியவற்றைப் பாராமல் வைஷ்ணவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இஃது உள்நாட்டு வைஷ்ணவ பக்தர்களுக்கும் வெளிநாட்டு வைஷ்ணவ பக்தர்களுக்கும் பொருந்தும்.

திருப்பதி ஸ்தல சேவை

ஆயிரம் வருடம் முன்பு, மலை வாழ்வு கடினம், தொற்றுநோய், காட்டு விலங்குகள் பயத்தால், திருப்பதி மலையில் வசித்தவர்கள் மிகக் குறைவு. ஒருநாள் இராமானுஜர் தமது சீடர்களை அழைத்து அவர்களில் யாரால் தினந்தோறும் திருப்பதி பெருமாளுக்கு சேவை செய்ய அந்த ஊருக்குச் செல்ல முடியும் எனக் கேட்டார். அப்போது அனந்த ஆச்சாரியர் எழுந்து, இந்த அடியேன் திருப்பதி பெருமாளுக்கு தினந்தோறும் சேவை செய்வதற்கு அருள் புரியுங்கள். உங்கள் கருணையினால் நான் இந்த சேவையை இன்முகத்துடன் ஏற்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

குருவின் கட்டளையை ஏற்ற உண்மையான ஆண்பிள்ளை என இராமானுஜர் அங்கு கூடியிருந்த வைஷ்ணவ பக்தர்களிடம் அனந்த ஆச்சாரியரின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். அனந்த ஆச்சாரியரும் திருப்பதி மலைக்குச் சென்று, நந்தவனம், குளம் போன்றவற்றை உருவாக்கி பொதுமக்களின் தரிசனத்திற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தார். பக்தித் தொண்டின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று, யாரொருவர் பெருமாளுக்கு சேவை செய்யும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறாரோ, அந்த சேவை சிறந்த வைஷ்ணவ சேவையாகும்.”

திருப்பதி மலையின் அழகியத் தோற்றம்

சேவை மனப்பான்மை

வைஷ்ணவர்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு இராமானுஜர் பல உபதேசங்களை வழங்கியுள்ளார்: வைஷ்ணவர்கள் மத்தியில் நமது பெருமைகளை நாம் பறைசாற்றக் கூடாது. நம்மை மற்ற வைஷ்ணவர்களுடன் ஒப்பாக எண்ணக் கூடாது. எப்போதும் மற்ற வைஷ்ணவர்களை விட தாழ்வாகவே நம்மை எண்ண வேண்டும். வைஷ்ணவர்கள் நம்மை அவமதித்தாலும் நாம் அவர்களிடம் பகையுணர்வு கொள்ளக் கூடாது. பெருமாள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமைகளை எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். பெருமாளை பக்தர்கள் மூலமாகவே அணுக வேண்டும். வைஷ்ணவர்கள் நமது இருப்பிடம் தேடி வந்தால் அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். ஒருவர் எவ்வளவு உயர்ந்த செல்வந்தராக இருந்தாலும் கற்றறிந்தவராக இருந்தாலும், அடியேன்” என்றுதான் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வைஷ்ணவர்கள் பிறரின் துன்பத்தைக் கண்டு மனமிரங்க வேண்டும். வைஷ்ணவர்களின் முதன்மை குணமே இரக்கம். வைஷ்ணவர்களின் பிறப்பை ஒருபோதும் ஆராயக் கூடாது, அது கொடிய பாவமாகும். வைஷ்ணவர்கள் அசௌகரியத்தை நன்றியுணர்வுடனும் இன்முகத்துடனும் இதயபூர்வமாக ஏற்க வேண்டும்.

வைஷ்ணவர்கள் தங்களுக்கு தீங்கு நினைப்பவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். உண்மையாக பெருமாளிடத்தில் சரணடைந்தவர்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. அது பெருமாளின் கையில் உள்ளது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். சேவை செய்வதில் மட்டும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட முடியும்.

இராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை

இராமானுஜர் தமது இறுதி காலத்தில் கொடுத்த உபதேசங்களில் பெரும்பாலான உபதேசங்கள் வைஷ்ணவ சேவையை மையம் கொண்டே இருந்தன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் குருவான பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இராமானுஜரின் பல உபதேசங்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். சைதன்ய மஹாபிரபுவும் தமது உபதேசத்தில் இராமானுஜரின் வைஷ்ணவ சேவைக்கான கோட்பாடுகளைப் பிணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவ சேவையில் மிக முக்கியமானது பணிவு. வைஷ்ணவர்கள் தங்களைத் தாழ்மையாகக் கருதிக்கொள்வதற்கு தங்களை மின்விளக்கிற்கு சமமாகவும் ஆச்சாரியர்களை மின்சாரமாகவும் எண்ண வேண்டும். குரு சீடப் பரம்பரையிலுள்ள ஆச்சாரியர்களின் தொடர்பினால் மட்டுமே தம்மால் பிரகாசமான ஒளியுடன் ஜொலிக்க முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். சுருக்கமாகக் கூறினால், குரு சீடப் பரம்பரையின் ஆச்சாரியர்கள் நமக்கு சக்தியளித்தால் மட்டுமே செயற்கரிய செயல்களைச் செய்வதற்கு நாம் கருவிகளாகப் பயன்பட முடியும்.

பக்தித் தொண்டில் பகவானைப் புகழ்ந்து நம்மை தாழ்த்திக்கொள்ளும்போது சிறந்த முறையில் சேவை மனப்பான்மையை நம்மால் வெளிப்படுத்த முடியும். இராமானுஜரின் வைஷ்ணவ சேவை கோட்பாடுகளை ஒருவர் தினந்தோறும் தியானித்து நடைமுறை வாழ்க்கையில் படிப்படியாக நடைமுறைப்படுத்தினால் பரம புருஷ பகவானை எளிதாக அடைய முடியும். வைஷ்ணவர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதன் மூலமே ஆன்மீக பயிற்சியாளர்கள் மிக விரைவாக பெருமாளின் நித்திய சேவையில் ஈடுபட முடியும்.