வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

பொறியியல் பட்டம் பெற்றவர்களால் கட்டப்படும் பாலத்தின் நிலை என்ன? இன்றைய வல்லுநர்களால் கட்டப்படும் கட்டிடங்களும் பாலங்களும் குறுகிய காலத்திலேயே சிதிலம் அடைகின்றன என்பதை அன்றாடம் காண்கிறோம். அதே சமயம் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட அணைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும், அகழிகளும் பல தலைமுறைகளைக் கடந்து அவர்களது கட்டிடக் கலையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் நிற்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இயந்திர சாதனங்கள் ஏதுமில்லாத அக்காலத்தில் இவற்றை எவ்வாறு கட்டியிருக்கக்கூடும் என நாம் தினமும் வியக்கின்றோம்.

யதார்த்தம் இவ்வாறு இருக்கையில், நாகரிக, நவீன அரசியல் தலைவர்களோ ஆன்மீக அறிவுசார் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகளை கற்பனைக் கதைகள் என்று கூறி, மக்களைக் குழப்பி நையாண்டி செய்து, நைந்துபோன நாத்திக வாதங்களை மக்களிடம் புகுத்த முயல்கின்றனர். “இராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?” என்ற வினாவும் அத்தகைய நையாண்டிகளில் ஒன்றே. ஆன்மீக அறிவிலிகளால் எழுப்பப்படும் இந்த வினாவிற்கான விடையை பெயரளவு ஆன்மீகவாதிகளிடமிருந்து எதிர்பாராமல், வால்மீகி இயற்றிய மூல இராமாயணத்தின் உதவியோடு ஆராய்வோம்.

விபீஷணரின் ஆலோசனை

பகவான் ஸ்ரீ இராமசந்திரரின் துணைவியாரான சீதையை இராவணன் தந்திரமாக இலங்கைக்குக் கடத்திச் சென்றான். சீதையை மீட்பதற்காக பகவான் இராமசந்திரர், இலக்ஷ்மணன், விபீஷணர், ஹனுமான், சுக்ரீவன் மற்றும் கோடிக்கணக்கான வானரங்கள் இலங்கையின் மீது போர் தொடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில், ஆழங்காண இயலாத கடலை எவ்வாறு கடப்பது என்பதுகுறித்து ஹனுமானும் சுக்ரீவனும் விபீஷணரிடம் ஆலோசித்தபோது, விபீஷணர் கூறினார், “எனது ஆலோசனை என்னவெனில், இராமர் சமுத்திர தேவனான வருணனை அழைக்கலாம். இராமரது மூதாதையர்களில் ஒருவரான சகர மன்னன் இப்பெருங்கடலை உருவாக்கினார் என்பதால், இந்த சமுத்திர தேவன் நிச்சயமாக இராமரது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு நன்றியோடு உதவுவார்.” (இராமாயணம், யுத்த காண்டம், ஸர்கம் 19)

சகர மன்னன் குறித்த இந்நிகழ்வு ஸ்ரீமத் பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆகையால், சமுத்திரத்தின் மீது பாலம் கட்ட இராமருக்கு நன்றியோடு உதவ வேண்டியவர் வருணன் என்பதை வேத இலக்கியங்களில் தேர்ச்சி பெற்ற விபீஷணன் நினைவுகூர்வது கவனிக்கத் தக்கதாகும்.

சமுத்திர தேவன் பகவான் இராமசந்திரருக்கு புகழாரம் சூட்டுதல்

இராமரின் கோபம்

சுக்ரீவன் விபீஷணரின் திட்டத்தை இராம இலக்ஷ்மணரிடம் தெரிவிக்க, அதனை நல்ல திட்டமாகக் கருதிய இராமர், தர்பைப் புல்லை விரித்து கடலை நோக்கி அமர்ந்தார். மூன்று பகல் மூன்று இரவு கழிந்தபோதும் சமுத்திர தேவனிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் மிகவும் கோபமுற்ற இராமர் சமுத்திர தேவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க விரும்பி, இலக்ஷ்மணரிடமிருந்து வில்லைப் பெற்று கர்ஜித்தார், “சமுத்திர தேவனே! கர்வத்தால் சேவை செய்ய மறுக்கிறாய்! வானரங்கள் சிரமமின்றி இலங்கைக்கு நடந்து செல்லும் வண்ணம், இதோ உன்னை வற்றச் செய்து பாலைவனமாக்குகிறேன்!” அவர் தமது சக்திவாய்ந்த உன்னத பிரம்மாஸ்திரத்தை அழைத்து சமுத்திர தேவனை அச்சுறுத்தினார்.

இதுகுறித்த விளக்கமும் இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரம புருஷ பகவான் ஸ்ரீ இராமசந்திரர் ஸர்வ வல்லமை படைத்தவர், அவரால் பௌதிக இடர்பாடுகள் சங்கடங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சமுத்திர தேவனின் சரணாகதி

இராமரின் கோபத்தினைக் கண்டு அஞ்சிய சமுத்திர தேவன் இராமரிடம் கூறினார், “பிரபுவே! நீங்கள் விரும்பியவாறு எனது நீரினை உபயோகிக்கலாம். உண்மையில் நீங்கள் இதனைக் கடந்து, மூவுலகங்களின் கதறலுக்கும் தொந்தரவிற்கும் மூல காரணமான இராவணனது இருப்பிடத்திற்குச் செல்லலாம். இராவணன் கண்டனத்திற்கு உரியவன் என்பதால், தயவுகூர்ந்து அவனைக் கொன்று உமது துணைவி சீதையை மீட்கவும். மாபெரும் வீரரே! நீங்கள் இலங்கைக்குச் செல்ல எனது நீர் எவ்விதத்திலும் தடையாக இருக்காது; இருப்பினும், உமது உன்னத புகழைப் பரவச் செய்வதற்காக அன்புடன் ஒரு பாலத்தை இங்கு அமைக்கவும். பிரபுவான தங்களது அதி அற்புத அசாதாரணமான செய்கையைக் கண்டு வருங்காலத்தில் பேரரசர்களும் வீரர்களும் உம்மைப் போற்றிப் புகழ்வர். நீங்கள் பாலத்தை அமைத்தால் அதன் பாரத்தை எனது சக்தியினால் தாங்கிக் கொண்டு மிதக்கச் செய்வேன். இவ்வாறாக உமது வானரப் படைகள் இலங்கையைத் தாக்கி சீதையை மீண்டும் தாங்கள் அடைய முடியும்.”

வருங்காலம் இராமரைப் புகழ வேண்டும் என்பதற்காகவே சமுத்திர தேவன் பாலம் அமைக்கக் கோரினார் என்பதையும், இராமர் விரும்பினால் பாலம் இல்லாமலேயே இராமரையும் அவரது சேனையையும் மறுகரைக்கு அழைத்துச் செல்ல சமுத்திர தேவன் தயாராக இருந்தார் என்பதையும் கவனித்தல் சிறந்தது.

பொறியியல் வல்லுநரான நளன்

சமுத்திர தேவன் தொடர்ந்தார், “அன்பிற்குரிய இராமரே, தேவலோக கட்டிடக்கலை நிபுணரும், பொறியியல் வல்லுநருமான விஸ்வகர்மாவின் மகன் நளன் எனும் சக்திவாய்ந்த வானரம் உமது மிகப்பெரிய பக்தர். உண்மையில் அவர் தம் தந்தையைப் போலவே மிகவும் புத்திசாதுர்யமானவர். அவர் இந்தப் பாலம் கட்டப்படுவதை மேற்பார்வையிடுவார். நான் அதனை எனது நீரில் மிதக்க அனுமதிப்பேன்.” இவ்வாறு கூறிய பின்னர், சமுத்திர தேவன்  மறைந்தார். (யுத்த காண்டம், ஸர்கம் 22)

அதன் பின்னர், நளன் இராமரின் முன்பாக வந்து தமது நமஸ்காரங்களை சமர்ப்பித்து கூறினார்: “பிரபுவே, வெகுகாலத்திற்கு முன்னர் எனது தந்தையான விஸ்வகர்மா எனது தாயிடம், ‘எல்லா விதத்திலும் எனக்கு இணையான ஒரு மகனைப் பெறுவாய்,’ என்று வரம் அளித்திருந்தார். அவர் அளித்த வரத்தினால் பிறந்த நான், அவருடைய கட்டிடக் கலை மற்றும் பொறியியல் திறனை அடையப் பெற்றுள்ளேன்.”

“இராமர் பாலம்  கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?” என வினவும் அறிவிலிகளுக்கு அறிவளிக்கும் வண்ணம், இராமர் பாலத்தின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்ட நளனின் ஆசிரியரும் தந்தையுமான விஸ்வகர்மாவின் தகுதியினை சற்று விளக்க வேண்டியது அவசியமாகிறது.

கடற்பாலம் கட்டுவது தொடர்பாக நளன் (வெள்ளை நிறம்) மற்றும் நீலன் (நீல நிறம்) இராமருடன் உரையாடுதல்

விஸ்வகர்மாவின் திறன்

தேவதச்சன் அல்லது தேவசிற்பி என்று அறியப்படும் விஸ்வகர்மா தேவலோகத்தின் பல்வேறு அற்புதமான கட்டிடங்களைக் கட்டியுள்ளார். கதன் எனும் அசுரனை பகவான் வதம் செய்தபோது, இவர் அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதத்தை உருவாக்கி பகவானுக்கு அளித்ததாக அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் திரிசூலம், பகவானின் சக்ராயுதம், சண்முகனின் வேல், குபேரனின் சிவிகை ஆகிய ஆயுதங்களையும் இவரே உருவாக்கி தந்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. மேலும், இந்திரனுக்காக அமராவதி நகரைப் புதுப்பித்தவர் இவரே என்று பிரம்ம புராணம் கூறுகிறது.

இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், பகவான் விஷ்ணுவிற்கு சார்ங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்து கொடுத்துள்ளார். பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக பதினான்கு லோகங்களை வடிவமைத்ததாகவும், சிவன்-பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், எமராஜருக்கான நகரத்தை அமைத்துக் கொடுத்தார் எனவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தின்பொழுது துவாரகையை வடிவமைத்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் இதுபோன்ற அற்புத அறிவுத் திறன் வாய்ந்த வல்லுநர்களோ கல்விக் கூடங்களோ இவ்வுலகில் எங்கும் இல்லை என்பது நிதர்சனம்.

தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குச் செல்ல நளன் தலைமையில் வானரங்கள் கடற்பாலம் அமைத்தல்

நளன் பாலம் அமைத்தல்

அப்பேர்பட்ட உயர்ந்த பொறியியல் கல்விக்கு அதிபதியான விஸ்வகர்மாவின் மாணவனும் மகனுமாகிய நளன் யுத்த காண்டத்தில் உத்வேகத்துடன் கூறுகிறார்: “இந்தப் பாலத்தைக் கட்ட நானே போதுமானவன். என்னிடம் இத்திறன்கள் உள்ளபோதிலும், இதற்கு முன் எவரும் இதை அறிந்திலர். எனது சுய திறமைகளைப் பேச நான் விரும்பவில்லை. வானரங்கள் கட்டுமானப் பொருட்களைச் சேகரிக்க துவங்கலாம், உடனடியாக பணியைத் தொடங்கலாம்.”

பிறகு, இராமரது வழிகாட்டுதலின் கீழ் இலட்சக்கணக்கான வானரங்கள் பாலம் கட்டும் பணியை ஆரம்பித்தனர். இவர்கள் அனைவரும் உண்மையில் தேவர்களின் அம்சங்களாவர், பகவான் விஷ்ணுவின் பூலோக அவதாரத்தில் அவருக்கு சேவை புரிய தோன்றியவர்கள்.

இராமாயணத்தின் பால காண்டத்தில் பிரம்மதேவர் தேவர்களுக்குக் கட்டளையிடுகிறார்: “விஷ்ணுவிற்கு சேவை செய்ய உங்களது அம்சங்களை வானர ரூபத்தில் பெற்றெடுங்கள். அப்ஸரஸ்கள், பெண் குரங்குகள், யக்ஷர்கள், நாகர்கள், வித்யாதரர்கள் மற்றும் கின்னரர்களுடன் இணைந்து, நீங்கள் ஒரு தெய்வீக வானர வம்சத்தை உருவாக்க வேண்டும். இந்த வானர வம்சங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த உருவையும் மேற்கொள்ளும் திறன் வாய்ந்தவையாகவும், பல மாய சக்திகளைப் பெற்றவைகளாகவும் விளங்க வேண்டும். மேலும், அவை அறிவார்ந்த ஆயுதங்களை உபயோகிப்பதில் மிகவும் கைதேர்ந்தவையாகவும், ஏறக்குறைய பகவானுக்கு இணையான சக்தி உடையவையாகவும், பூவுலகத்திற்கு அப்பாற்பட்ட சரீரத்தை பெற்றவையாகவும் விளங்க வேண்டும்.”

இப்பேர்பட்ட வானரங்கள், பெரும் பாறைகள், மரங்கள், முழு மலைகள் ஆகியவற்றை பிளந்து அவற்றை கரைக்குக் கொண்டு வந்தனர். அதை அவர்கள் சமுத்திரத்தில் வீசி எறிந்தபோது பாறையானது அதிசயிக்கத்தக்க வகையில் மிதந்து ஓர் அழகிய காட்சியை உருவாக்கியது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பாலம் நூறு யோஜனை நீளமும், பத்து யோஜனை அகலமும் கொண்டதாக இருந்தது. மேற்பரப்பில் அடிமரங்கள் ஒன்றோடொன்று வைக்கப்பட்டு சமமாக அமைக்கப்பட்டு, பின்னர் அதன்மேல் பூத்துக் குலுங்கும் மலர்கள் நிறைந்த கிளைகள் வைத்து மூடப்பட்டது என்று பாலம் அமைக்கப்பட்ட வரலாற்றை இராமாயணம் வர்ணிக்கின்றது.

பெரும் பாறைகள் , மரங்கள், முழு மலைகள் ஆகியவற்றைக் கொண்டு வானரங்கள் அழகிய பாலத்தை அமைத்தல்

இராமரின் சக்தி

பாலத்தை இராமர் அமைத்தாரா நளன் அமைத்தாரா என்றுகூட சிலர் சிந்திக்கலாம். இராமருடைய வழிகாட்டுதலையும் ஆசியையும் பெற்று, கைதேர்ந்த பொறியியல் வல்லுநரான நளனின் தலைமையில் வானரங்கள் பாலத்தை உருவாக்கினர் என்பதே வரலாறு. பரம புருஷ பகவான் ஸ்ரீ இராமசந்திரருக்கு சமுத்திர தேவன் வாக்களிக்கும்போது, “நளன் அமைக்கும் பாலத்தை உங்களுக்காக நான் தாங்குவேன்,” என்று கூறியதையும் இங்கே நினைவு

கூர்வோம். அந்தப் பாலம் இராமருக்காக என்று இருந்திராவிடில், சமுத்திர தேவன் அதனைத் தாங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்.

பகவான் என்பவர் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். அவர் தம்மை முழுமுதற் கடவுளாக வெளிப்படுத்தவே கடலின் மீது அற்புத பாலத்தை அமைத்தார், அதற்கான சேவையில் தமது பக்தர்களான வானர சேனைகளை ஈடுபடுத்தினார்.

ஆனால், தற்போதைய நவீன உலகிலோ எந்தவொரு அசாதாரணமான செயல்களையும்  செய்யாத சிலரை செயற்கையான முறையில் “கடவுள்” என்று விளம்பரப்படுத்தும் பழக்கம் உருவாகியுள்ளது. கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை மக்கள் அறிந்திலர் என்பதால், சிறு மாயாஜாலத்தை காட்டினாலே முட்டாள் மக்கள் அதில் மதிமயங்கி ஒரு போலியான நபரை கடவுளாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏதோ ஓர் அயோக்கியனை கடவுளாகவோ கடவுளது அவதாரமாகவோ நாம் ஒருபோதும் ஏற்கக் கூடாது.

பகவான் ஸ்ரீ இராமசந்திரர் நீரின் மீது கல்லினால் பாலம் அமைத்தும், அந்த பாலத்தை மிதக்கச் செய்ய சமுத்திர தேவனையே பணிய வைத்தும் அற்புதம் நிகழ்த்தினார். இது கடவுளின் அசாதாரணமான அதியற்புத சக்திக்கு ஒரு சான்றாகும். எந்தவொரு சாதாரண மனிதனாலும் செய்ய முடியாத அசாதாரணமான அற்புதச் செயல்களைச் செய்யாத நபரை நாம் ஏன் கடவுளாக ஏற்க வேண்டும்? பகவான் ஸ்ரீ இராமசந்திரர் கடலில் பாலம் அமைத்தார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு வயதில் கோவர்தன மலையை தனது இடதுகை சுண்டு விரலில் ஒரு வாரம் தூக்கினார். எனவே, நாம் இராமரையும் கிருஷ்ணரையும் முழுமுதற் கடவுளாக ஏற்கிறோம். சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகவானது இந்த லீலைகளை நாம் புரிந்து கொண்டால், உடனேயே பகவானை உள்ளவாறு உணர முடியும்.

எனவே, இனி யாரேனும் “இராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?” என்று கேட்டால் பாலம் கட்டியவரின் பெருமைகளை எடுத்துக் கூறலாமே!