உயர்ந்த உணர்வை அடைதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர்

கீழ்காணும்உரையில், பக்தியோகத்தின்மூலமாக மிகவுயர்ந்த உணர்வுநிலையை அடைவது குறித்தும், மற்ற யோக வழிமுறைகளின்சிரமங்கள்குறித்தும்ஸ்ரீல பிரபுபாதர்தெளிவுபடுத்துகிறார்.

யோக வழிமுறை

கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால் பரிந்துரைக்கப்பட்டதுமான யோக முறை இன்றைய மக்கள் பயிலக்கூடிய ஹட யோக முறையிலிருந்து வேறுபட்டதாகும்.

உண்மையான யோகப் பயிற்சியில் புலன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. புலன்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நாராயண வடிவத்தில் மனம் நிலைநிறுத்தப்படுகின்றது. பகவான் கிருஷ்ணரே மூலமான பூரண சத்தியம், முழுமுதற் கடவுள். நான்கு கைகளுடன் சங்கு, தாமரை, கதை, சக்கரம் ஆகியவற்றை உடைய இதர விஷ்ணு வடிவங்களெல்லாம் கிருஷ்ணரின் முழுமையான விரிவுகள்.

நாம் பகவானின் ரூபத்தை தியானம் செய்ய வேண்டும் என்று பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனதை ஒருமுகப்படுத்துவதற்குப் பயிற்சி செய்ய, ஒரு யோகியானவர் புனிதமான சூழ்நிலையிலுள்ள தனியிடத்தில் அமர்ந்து, பிரம்மசரியத்தின் எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்; அதாவது, சுய கட்டுப்பாட்டையும் உடலுறவில்லாமையையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நெருக்கடி மிகுந்த நேரத்தில் நகரத்தில் வசித்துக் கொண்டு, ஆடம்பர வாழ்விலும் கட்டுப்பாடற்ற உடலுறவிலும் நாவின் சுவையைப் பேணுவதிலும் ஈடுபட்டிருப்பவர்கள் யோகம் பயில இயலாது.

கட்டுப்பாடுகள் அவசியம்

யோகம் பயில்வதென்றால் புலன்களைக் கட்டுப்படுத்துதல் என்று ஏற்கனவே குறிப்பிட்டோம். புலன் கட்டுப்பாடு நாவைக் கட்டுப்படுத்துவதோடு துவங்குகிறது. தடை செய்யப்பட்டிருக்கும் எல்லா உணவுகளையும் பானங்களையும் அருந்த நாவை அனுமதித்துவிட்டு யோகத்தில் முன்னேற்றம் காண்பது சாத்தியமல்ல. தம்மை யோகிகளென்று சொல்லிக் கொண்டு திரியும் அதிகாரமற்ற பலர் தற்போது மக்களிடையே யோகத்திலுள்ள ஈடுபாட்டைத் தங்களது சுயநலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க உண்மை. இந்த அதிகாரப்பூர்வமில்லாத யோகிகள், தியானம் பயில்பவர்கள் மது அருந்தலாம் என்று பொதுமக்களிடையே தைரியமாக அறிவிக்கிறார்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகவத் கீதையில் தம் உரையாடலில் பகவான் கிருஷ்ணர் தன் சீடனான அர்ஜுனனுக்கு யோகம் கற்கும் படி பரிந்துரைத்தார். ஆனால் அர்ஜுனன் யோக முறையின் கண்டிப்பான விதிமுறைகளைக் கடைபிடிப்பது தன்னால் இயலாத காரியமென்று மறுத்துவிட்டான். ஒவ்வொரு செயலிலும் நடைமுறை சாத்தியக்கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். யோகம் என்ற பெயரில் உடற்பயிற்சி ஜால வித்தைகளைப் பயில்வதில் நேரத்தை வீணாக்குவதில் பயனில்லை.

தியானத்தின் மூலம் இதயத்தில் நான்கு கைகளையுடைய பரமாத்மாவைத் தேடிக் காண்பது உண்மையான யோகம். இவ்வாறு தொடர்ந்து தியானத்திலிருப்பது சமாதி எனப்படும். அருவமான ஒன்றை அல்லது சூன்யத்தை தியானிக்க விரும்பினால், அதற்கு நீண்ட காலம்பிடிக்கும். சூன்யமான அல்லது அருவமான ஒன்றில் மனதை நிலைநிறுத்த முடியாது. ஒவ்வொருவரின் இதயத்திலும் உறையும் நான்கு கைகளையுடைய நாராயணரிடம் மனத்தை நிலைபெறச் செய்வதே உண்மையான யோகப் பயிற்சியாகும்.

தியான யோக முறையை தன்னால் பயிற்சி செடீநுய இயலாது என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறுதல்.

பரமாத்மாவின் தன்மைகள்

கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எப்போதும் வீற்றிருக்கிறார் என்பதை அறியாதவரும் கூட தியானம் செய்வதன் மூலம் இதை அறிவார்களென்று சில சமயங்களில் சொல்லப்படுகின்றது. கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார். அவர் மனித இதயங்களில் மட்டுமின்றி பூனை, நாய் போன்ற மிருகங்களின் இதயங்களிலும் உள்ளார். உலகின் உன்னத ஆளுநராகிய அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார் என்ற கூற்றின் மூலம் பகவத் கீதை இதனை உறுதி செய்கிறது. ஒவ்வொருவரின் இதயங்களில் மட்டுமல்லாமல் அவர் அணுவினுள்ளும் இருக்கிறார். எந்த இடமும் காலியாக இல்லை. பகவான் இல்லாத இடமே இல்லை.

கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எப்போதும் வீற்றிருக்கிறார் என்பதை அறியாதவரும் கூட தியானம் செய்வதன் மூலம் இதை அறிவார்களென்று சில சமயங்களில் சொல்லப்படுகின்றது. கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார். அவர் மனித இதயங்களில் மட்டுமின்றி பூனை, நாய் போன்ற மிருகங்களின் இதயங்களிலும் உள்ளார். உலகின் உன்னத ஆளுநராகிய அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார் என்ற கூற்றின் மூலம் பகவத் கீதை இதனை உறுதி செய்கிறது. ஒவ்வொருவரின் இதயங்களில் மட்டுமல்லாமல் அவர் அணுவினுள்ளும் இருக்கிறார். எந்த இடமும் காலியாக இல்லை. பகவான் இல்லாத இடமே இல்லை.

பகவானின் எங்கும் வியாபித்திருக்கும் அம்சம் பரமாத்மா எனப்படும். ஆத்மா என்றால் தனியான ஆத்மா. பரமாத்மா என்றால் உன்னதமான தனி ஆத்மா. ஆத்மா, பரமாத்மா இருவருமே தனித்தனியான வியக்திகள். இருப்பினும், அவர்களிடையேயான வித்தியாசம் என்னவெனில், ஆத்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கிறது, ஆனால் பரமாத்மா எங்குமுள்ளார்.

இதற்கு சூரியன் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தனி மனிதன், சூரியன் தனது தலைக்கு மேல் இருப்பதாக உணர்கிறான்; மேலும், ஒவ்வொருவரும் சூரியன் தனது தலைக்கு மேல் இருப்பதாக உணர்கின்றனர். இது பகவத் கீதையில் மிக நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. எனவே, பகவான் உள்ளிட்ட அனைத்து உயிர்வாழிகளின் தன்மை ஒன்றேயானாலும், அளவில் பரமாத்மா தனிப்பட்ட ஆத்மாவிலிருந்து வேறுபடுகிறார். பகவான் அல்லது பரமாத்மாவினால் கோடிக்கணக்கான வடிவங்களில் தன்னை விரிவுபடுத்த இயலும், ஆனால் தனிப்பட்ட ஆத்மாவால் அவ்வாறு செய்ய இயலாது.

ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மா அவரவரின் கடந்த, நிகழ், மற்றும் வருங்காலச் செயல்களுக்கு சாட்சியாக விளங்குகிறார். பரமாத்மா தனியாத்மாவுடன் நண்பனாகவும் சாட்சியாகவும் வீற்றிருக்கிறாரென்று உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளது. நண்பனென்ற முறையில் தனியாத்மாவை மீண்டும் ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்ல பரமாத்மா எக்காலமும் ஆவலாயிருக்கிறார்; சாட்சியென்ற முறையில் தனி நபரின் செயல்களால் நேரிடும் பலன்களை அவர் வழங்குகிறார். தனியாத்மா தன் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் பரமாத்மா தருகிறார். ஆனால், தன் நண்பன் இறுதியில் மற்ற அனைத்து செயல்களையும் விட்டு விட்டுக் கடவுளிடம் சரணடைந்து, அறிவு நிறைந்த நித்தியமான ஆனந்த வாழ்வை பெற வேண்டுமென்று அவனுக்கு அறிவுரை வழங்குகிறார். உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் படிக்கப்படக்கூடிய, மிகவும் அதிகாரப்பூர்வமான யோக முறை நூலான பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள இறுதி போதனை இதுவே.

 

ஆத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்தல்

பகவத் கீதையின் இந்த இறுதிச் சொல், யோக முறையில் பக்குவம் பெறுவதற்கான இறுதி வாசகமாகும். மேலும், கிருஷ்ண உணர்வில் எப்போதும் லயித்திருப்பவனே மிகவுயர்ந்த யோகி என்றும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வு என்றால் என்ன?

தனிப்பட்ட ஆத்மா தன் உணர்வின் மூலம் உடல் முழுவதும் வியாபித்திருப்பதுபோல் உயர்ந்த ஆத்மாவான பரமாத்மாவும் தன் உன்னத உணர்வின் மூலமாக படைப்பு முழுவதும் வியாபித்திருக்கிறார். இத்தகைய உன்னத உணர்வை தனிப்பட்ட ஆத்மாவால் நகல் செய்ய முடியாது. ஏனெனில், அதன் உணர்வு வரம்பிற்குட்பட்டது. “வரம்பிற்குட்பட்ட என் உடலில் நடப்பதை நான் அறிய முடியும். ஆனால், மற்றொருவரின் உடலில் நடப்பதை நான் உணர முடியாது. என் உணர்வின் மூலம் நான் என் உடல் முழுவதிலும் இருக்கிறேன். ஆனால் என் உணர்வின் மூலம் மற்றொருவரின் உடலில் என்னால் இருக்க முடியாது.” இருப்பினும், ஒவ்வொருவரிலும் இருக்கும் பரமாத்மா எங்கும் வியாபித்திருப்பதால் ஒவ்வொரு இருப்பையும் உணர்ந்திருக்கிறார். ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற வாதத்தை ஒப்புக்கொள்வதற்கில்லை; ஏனெனில், தனிப்பட்ட ஆத்மாவின் உணர்வு உன்னத உணர்வில் செயல்பட முடியாது. அந்த உன்னத உணர்வை பெறுவதற்கு தனிப்பட்ட உணர்வை உன்னத உணர்வோடு இணைக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதற்கான வழிமுறையே சரணடைதல், அல்லது கிருஷ்ண உணர்வு எனப்படும்.

கிருஷ்ணர் உதவுகிறார்

ஆரம்பத்தில் அர்ஜுனன் தன் உறவினர்களோடு போரிட விரும்பவில்லை. ஆனால் பகவத் கீதையைப் புரிந்துகொண்ட பின் அவன் தன் உணர்வைக் கிருஷ்ணரின் உன்னத உணர்வோடு இணைத்த போது அவனின் உணர்வு கிருஷ்ண உணர்வாகியது. இதை நாம் பகவத் கீதையிலிருந்து தெளிவாக அறிகிறோம். கிருஷ்ண உணர்வில் முழுமையாக இருப்பவன் கிருஷ்ணரின் கட்டளைப்படி நடக்கிறான். அதன்படி அர்ஜுனன் குருக்ஷேத்திரப் போரில் போரிட சம்மதித்தான்.

கிருஷ்ண உணர்வின் ஆரம்பத்தில் கடவுளின் கட்டளைகள் கண்ணாடி போன்று செயல்படக் கூடிய ஆன்மீக குருவின் மூலமாக பெறப்படுகின்றன. அதிகாரப்பூர்வமான ஆன்மீக குருவின் வழிகாட்டலின் படி, கிருஷ்ணரின் மீது பணிவான நம்பிக்கையுடனும் அன்புடனும் செயல்படக்கூடிய போதிய பயிற்சி பெற்ற ஒருவனுக்கு, இந்த இணைப்பு முறை ஸ்திரமானதாகவும் துல்லியமானதாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணர் உள்ளிருந்து கட்டளையிடுகிறார். வெளியில், கிருஷ்ணரின் அதிகாரம் பெற்ற பிரதிநிதியான ஆன்மீக குரு பக்தனுக்கு உதவுகிறார். எல்லோரின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பிரபுவான இறைவன் சைத்ய-குருவாக பக்தனுக்கு உள்ளிருந்து உதவுகிறார்.

பக்தன் இதர யோகிகளைக் காட்டிலும் சிறந்தவன்

கடவுள் எல்லோரின் இதயங்களிலும் வீற்றிருக்கிறாரென்று தெரிந்திருப்பது மட்டுமே பக்குவம் பெற்று விட்டதாகாது. உள்ளும் புறமும் வீற்றிருக்கும் கடவுளை அறிந்து கிருஷ்ண உணர்வில் செயல்பட வேண்டும். இது மனிதப் பிறவியின் மிகவுயர்ந்த பக்குவநிலை. இதுவே யோக முறைகளிலெல்லாம் மிகவும் உயர்ந்ததாகும்.

பக்குவ நிலையை அடைந்த யோகி அஷ்ட சித்திகளைப் பெறுகிறான். அவையாவன;

  1. அணுவை விடச் சிறிய உருவைப் பெறுவது.
  2. மலையை விடப் பெரிய உருவைப் பெறுவது.
  3. காற்றை விட இலேசாக ஆவது.
  4. எந்த உலோகத்தையும் விடக் கனமாக ஆவது.
  5. விரும்பும் எத்தகு பௌதிக விளைவையும் ஏற்படுத்துவது (உதாரணமாக, ஒரு கிரகத்தை உண்டாக்குவது).
  6. கடவுளைப் போல் பிறரைக் கட்டுப்படுத்துவது.
  7. பிரபஞ்சத்தினுள்ளும் அப்பாலும் விருப்பம் போல் சஞ்சரிப்பது.
  8. தன் மரணத்தின் நேரத்தையும் இடத்தையும் தானே தேர்ந்தெடுத்து விரும்பிய இடத்தில் மறுபிறவி எடுப்பது.

ஆனால் கடவுளிடமிருந்து கட்டளைகளைப் பெறும் பக்குவநிலையை அடைந்த பின், ஒருவர் மேற்கண்ட சித்திகளுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த நிலையை அடைந்தவராகிறார்.

பொதுவாகப் பயிலப்படும் மூச்சுப் பயிற்சி யோக முறையின் ஆரம்பம் மட்டுமே. பரமாத்மாவை தியானித்தல் முன்னேற்றப் பாதையில் ஓர் அடி மட்டுமே. வியக்கத்தக்க சித்திகளைப் பெறுவதும் முன்னேற்றப் பாதையில் ஓர் அடி மட்டுமே. ஆனால் பரமாத்மாவோடு நேரடி தொடர்பு கொண்டு அவரிடமிருந்து கட்டளைகளைக் பெறுவது மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.

கலி யுகத்திற்கு ஏற்ற யோகப் பயிற்சி

இந்த யுகத்தில் மூச்சுப் பயிற்சிகளும் தியானப் பயிற்சிகளும் மிகக் கடினமான காரியங்கள். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே அவை கடினமாக கருதப்பட்டன. இல்லாவிடில் கிருஷ்ணரின் கட்டளையை அர்ஜுனன் நிராகரித்திருக்க மாட்டான். இந்த கலி யுகத்தை இழிந்த யுகம் என்பர். தற்போது மக்களின் ஆயுள் பொதுவாகக் குறுகியுள்ளது, ஆன்மீக தன்னுணர்வு அல்லது ஆன்மீக வாழ்க்கையைப் புரிந்துகொள்வதில் அவர்கள் மிகவும் மந்தமாக உள்ளனர். அவர்கள் மிகவும் துரதிஷ்டமானவர்கள். மேலும், இச்சூழ்நிலையில் யாராவது ஆத்ம ஞானம் பெறுவதில் சிறிது அவா கொண்டிருந்தாலும், அவரை தவறான வழியில் இட்டுச் செல்ல எத்தனையோ எத்தர்கள் தயாராகவுள்ளனர். யோகத்தின் பக்குவநிலையை அறிவதற்கான ஒரே வழி பகவத் கீதையில் கூறப்பட்டு, பகவான் சைதன்ய மஹாபிரபுவால் விளக்கப்பட்ட கோட்பாடுகளைப் பின்பற்றுவதேயாகும். இதுவே யோகப் பயிற்சியின் மிக எளிமையான மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.

வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் முக்கியமான பல புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி, கிருஷ்ணரின் புனித நாமங்களைக் கீர்த்தனம் செய்து கிருஷ்ண உணர்வின் யோகத்தை பெறலாமென்பதை சைதன்ய மஹாபிரபு நடைமுறையில் செய்து காட்டினார். இந்தியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த யோகமுறையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும்கூட இது பல நகரங்களில் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த யுகத்திற்கு, குறிப்பாக யோகத்தில் வெற்றி காண்பதில் அக்கறையுள்ளவர்களுக்கு இது எளியமுறையும், நடைமுறைக்கு சாத்தியமானதுமாகும்.

ஸத்ய யுகமான பொற்காலத்தில் முறையான தியான முறை சாத்தியமாக இருந்தது. ஏனெனில், அக்காலத்தில் மக்கள் சராசரியாக ஒரு இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர். இப்போதைய யுகத்தில் நடைமுறை யோகத்தில் வெற்றி பெற வேண்டுமானால், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று கீர்த்தனம் செய்யுங்கள். நீங்கள் முன்னேறுவதை நீங்களே உணரலாம். யோக முறையில் ஒருவரது சுய முன்னேற்றம் அவரவரால் உணரப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

கிருஷ்ண உணர்வுப் பயிற்சி பகவத் கீதையில் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது: ராஜ வித்யா, “அனைத்து அறிவுகளின் அரசன்,” ராஜ குஹ்யம், “மிக இரகசியமான ஆன்மீக முறை,” பவித்ரம், “புனிதமானவற்றிலெல்லாம் புனிதமானது,” ஸுஸுகம், “மிக்க மகிழ்ச்சிகரமானது,” அவ்யயம், “எடுக்க எடுக்க குறையாதது.”

கிருஷ்ணரின் மீதான திவ்யமான அன்புடன் பக்திக் தொண்டை பயிற்சி செய்யும் இந்த மிகவுயர்ந்த பக்தி யோக முறையை மேற்கொண்டிருப்பவர்கள், தாங்கள் எவ்வளவு எளிதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இத்தொண்டில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை அறியலாம். யோகம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது, பக்தி யோகமென்றால் புலன்களைப் புனிதப்படுத்துவது. புலன்கள் புனிதமடையும்போது அவை தாமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கையான முறைகளால் புலன்களை கட்டுப்படுத்த இயலாது. புலன்களைப் புனிதப்படுத்தினால், அவற்றை அபத்தமான செயல்களிலிருந்து தடுப்பது மட்டுமின்றி, பகவானின் பரமான சேவையில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்தவும் முடிகிறது.

கிருஷ்ண உணர்வை நாங்கள் மனக் கற்பனையினால் உற்பத்தி செய்யவில்லை. இது பகவத் கீதை நமக்கு அளித்துள்ள வரப் பிரசாதம். நாம் கிருஷ்ணரில் சிந்திக்கும்போது, கிருஷ்ணரில் கீர்த்தனம் செய்யும்போது, கிருஷ்ணரில் வாழும்போது, கிருஷ்ணரில் உண்ணும்போது, கிருஷ்ணரில் பேசும்போது, கிருஷ்ணரில் நம்பும்போது, கிருஷ்ணரில் உயிர்விடும்போது, சந்தேகமின்றி மீண்டும் கிருஷ்ணரைச் சென்றடைகிறோம். இந்த உறுதியைக் பகவத் கீதை நமக்கு அளிக்கிறது. இதுவே கிருஷ்ண உணர்வின் சாராம்சம்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் விளக்கப்பட்ட கோட்பாடுகளுடன் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்வதே கலி யுத்திற்கு உகந்த வழிமுறையாகும்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment