அமைதிக்கான உண்மையான வழி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர்

ஒவ்வோர் உயிரினமும் அமைதியை நாடுகிறது. எறும்பு முதல் பிரபஞ்சத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட பிரம்மா வரை அனைவரும் அமைதியைத் தேடுகிறார்கள். அதுவே முக்கியமான நோக்கம். பூரண கிருஷ்ண உணர்வில் இருப்பவன் மட்டுமே அமைதியானவனாக இருக்க முடியும் என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்; ஏனெனில், அவனுக்கென்று எந்த தேவைகளும் இல்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் இருப்பவனின் விசேஷ தகுதியாகும். அவன் அகாம எனப்படுகிறான். அகாம என்னும் வார்த்தை தன்னில் திருப்தியடைந்த, ஆசைகள் அற்ற, முழு அமைதி பெற்ற ஒருவனைக் குறிப்பதாகும். யார் அப்படி இருக்கிறார்கள்? கிருஷ்ண உணர்வில் நிலைபெற்ற பக்தர்களே அவர்கள் ஆவார்கள்.

மூன்று வகையான மக்கள்

மற்றவர்கள் அனைவரும் மூன்று பிரிவுகளில் அடங்குவார்கள். முதல் வகுப்பினர் புக்தி எனப்படு கிறார்கள். இவர்கள் பௌதிக இன்பத்தை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். இத்தகைய மனிதர்கள் சாப்பிட, குடிக்க, மற்றும் திருமணம் செய்து வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார்கள். வெவ்வேறு உடலுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான இன்பம் உள்ளது. மக்கள் அனைத்து இடங்களிலும் புலனின்பங்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களது முக்கிய நோக்கம் புலன்களை திருப்திபடுத்துவதாகும். இது புக்தி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த வகை மக்கள், புலனுகர்வால் வெறுப்படைந்து பௌதிக பிடியிலிருந்து விடுதலை யடைய விரும்புகிறார்கள். ஆய்வறி வில் இருக்கும் இவர்கள் பூரண  உண்மை எது என்பதைப் பற்றி சொந்தமாகக் கற்பனை செய்கிறார்கள். விடுதலையை விரும்பும் இவர்கள்கூட ஆசையுடையவர்களே. இவர்களின் ஆசை பௌதிகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதாகும்.

மூன்றாவதாக யோகிகள் உள்ளார்கள், இவர்கள் யோக சித்திகளை நாடுகிறார்கள். எட்டு வகையான யோக சித்திகள் உள்ளன: மிகச்சிறியதாக மாறுதல், மிகப்பெரியதாக மாறுதல், விரும்புபவற்றை எல்லாம் பெறுதல் போன்றவை. இவர்கள் அனைவருமே ஏதேனும் சில தேவைகளை எதிர்பார்க்கிறார்கள்.

பக்தனுக்குத் தேவைகள் கிடையாது

ஆனால் பக்தனைப் பொறுத்தவரையில், அவனுக்கு எவ்விதத் தேவைகளும் கிடையாது. ஏனென்றால், பக்தன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புகிறான். அவன் கிருஷ்ணரின் உத்தரவிற்காகக் காத்திருக்கிறான், அதுவே அவனுக்கு திருப்தியளிக்கிறது. கிருஷ்ணர் பக்தர்களை நரகத்திற்கு அனுப்ப விரும்பினால், அவர்கள் அங்கு செல்லவும் தயாராக இருக்கிறார்கள். “என்னிடத்தில் வா” என்று கிருஷ்ணர் அழைத்தால், பக்தன் செல்லத் தயாராக இருக்கிறான். பக்தனுக்கென்று எவ்விதத் தேவைகளும் கிடையாது. இதுவே பக்குவமான நிலையாகும்.

“எனது அன்பான பிரபுவே, நான் உம் நினைவிலேயே இருக்க வேண்டும்” என்று பக்தன் வேண்டுகிறான். கிருஷ்ண உணர்வு அனைத்து மனத் தேவைகளிலிருந்தும் விடுதலையளிக்கிறது. உண்மையில் நாம் பௌதிகப் பிணைப்பில் இருப்பதால் நமக்கு அநேக தேவைகள் உள்ளன. சிலர் புலன் இன்பத்தையும், சிறிது முன்னேறியவர்கள் மனத் திருப்தியையும், மேலும் அறிவுத்திறன் படைத்த சிலர் மாயாஜாலத்தைக் காட்டவும் விரும்புகிறார்கள். வெவ்வேறு வகையான தளத்தில் இவர்கள் அனைவரும் பௌதிகப் பிணைப்பில் உள்ளனர். ஆகவே கிருஷ்ண பக்தன் வேண்டுகிறான், “எனது அன்பான கிருஷ்ணரே, எப்போது நான் தங்களது நினைவில், தங்களது சேவையில் முழுமையாக லயித்திருப்பேன்?”

 

பிரகலாத மஹாராஜா ஐந்தே வயதான குழந்தை, ஆனால் அவர் கிருஷ்ண பக்தராக இருந்ததால் அவரது தந்தை அவருக்கு விரோதியானார்.

பக்தன் அமைதியடைகிறான்

நாம் மனக் கற்பனையிலேயே சுற்றிக் கொண்டுள்ளோம். மனமானது நம்மை, “இங்கே வா, அங்கே போ” என்று அலைக்கழிக்கிறது. இத்தகைய மடத்தனத்தை நிறுத்த வேண்டும். “கிருஷ்ணரே, நான் உமது நிரந்தர சேவகன், உம்மைப் பற்றிய நினைவினால் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,” என்று பக்தன் எண்ணுகிறான். கிருஷ்ண உணர்வில் இல்லாதவர்கள் வழிகாட்டியற்ற நபர்களாவர், அவர்களுக்கு அவர்களே வழிகாட்டி. ஆனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவனோ மிகவுயர்ந்த வழிகாட்டியைப் பெற்றிருக்கிறான். ஆகவே, அவன் அச்சமற்றவன். உதாரணமாக, குழந்தை தனது பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கும்வரை அதற்கு பயம் எதுவுமில்லை. ஆனால் அவன் சுயேச்சையானவனாக மாறும்போது அநேக இடையூறுகளைச் சந்திக்க நேரிடுகிறது. ஒருவன் அனைத்து மனக் கற்பனைகளிலிருந்தும் விடுபட்டு, இருபத்துநான்கு மணி நேரமும் முழு கிருஷ்ண உணர்வில் நூறு சதவீதம் செயலாற்றும்போது, அவன் அமைதியை அடைகிறான். இதுவே அமைதி.

ஆகையால்தான், கிருஷ்ண உணர்வில் உள்ளவர்களுக்குத் தேவைகள் இல்லாததால், அவர்கள் உண்மையான அமைதியை அடைகிறார்கள் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். புலனுகர்வை விரும்புவோர் அனைவரும் எப்பொழுதும் துயரத்தில் உள்ளார்கள். மிக உன்னத ஆளுநரான, முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை அறியாததால்தான் இத்தகைய பயங்கர துன்பங்கள் தொடர்கிறது. பிரகலாத மஹாராஜா ஐந்தே வயதான குழந்தை, ஆனால் அவர் கிருஷ்ண பக்தராக இருந்ததால், அவரது தந்தை அவருக்கு விரோதியானார். இதுதான் உலக முறை. ஒருவர் கிருஷ்ண பக்தராக மாறியவுடன் அநேகத் தடைகளைச் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இத்தகைய தடைகள் பக்திப் பாதையில் இடையூறுகளை விளைவிக்க முடியாது. கிருஷ்ண உணர்வினனாக மாறுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் மாயையின் ராஜ்ஜியம்தான். மாயை எப்போதும் நம்மைத் தோற்கடிக்கவே முயற்சி செய்யும், “ஓ, என்னுடைய பிடியிலிருந்து ஓர் ஆத்மா ஓடுகிறதே.” இவ்வாறாக, மாயை நம்மைத் தொடர்கிறது. ஒருவன் கிருஷ்ண உணர்வினனாக மாறி, முழுமுதற் கடவுளிடம் முழுமையாக சரணடைந்தவுடன் இந்த மாயையைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவன் பக்குவமான அமைதியை அடைகிறான்.

கடவுளே உரிமையாளர்

உலகத்தில் உள்ள அனைவரும் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனால் அதை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். கேந்தர்பியூரியில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் கூறினார், “கடவுள் இல்லாத கடவுள் ராஜ்ஜியத்தைத் மக்கள் தேடுகிறார்கள்.” இதுவே நமது குறை. நீங்கள் அமைதியை விரும்பினால், அமைதியின் இருப்பிடமான கடவுளை ஏற்றுக்கொள்ளுங்கள். இது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் தொடர்பில்லாமல் அமைதியை அடையவே முடியாது. ஆகையால்தான், நாங்கள் ஒரு மாறுபட்ட அமைதி முறையைப் பெற்றுள்ளோம். இந்த அகிலம் அனைத்திற்கும் கடவுளே உரிமையாளர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே உண்மையான அமைதிக்கு வழி. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா என  அனைத்திற்கும் கடவுளே உரிமையாளர். ஆனால் இவற்றிற்கு நாம் உரிமை கொண்டாடும் காரணத்தினால்தான், சண்டை, வேற்றுமை, மனஸ்தாபம் என அனைத்தும் உண்டாகின்றன.

கடவுளே அனைத்திற்கும் உரிமையாளர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் வெறும் ஐம்பது, அல்லது நூறு வருடங்கள் வாழப்போகும் விருந்தாளியே. நாம் பிறக்கின்றோம், இறக்கின்றோம். “இஃது என்னுடைய குடும்பம், இஃது என்னுடைய உடல், இஃது எனது சொத்து,” என்ற நினைவுகளிலேயே ஒருவன் ஊறிப்போய் விடுகிறான். ஆனால் முழுமுதற் கடவுளிடமிருந்து கட்டளை வந்தவுடன், அவன் தனது வீடு, சொத்து, உடல், குடும்பம், பணம், வங்கியிருப்பு என அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கிறது. அவன் மற்றோர் இடத்தை அடைகிறான். பௌதிக இயற்கை நமக்கு விதவிதமான உடல்களைத் தருகிறது. “எனதருமை ஐயா, இதோ இந்த உடலை ஏற்றுக்கொள்ளுங்கள்.” இவ்வாறாக, அமெரிக்கன் உடல், இந்தியன் உடல், சீன உடல், பூனை உடல், நாய் உடல் என ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இந்த உடலுக்குக்கூட உரிமையாளன் கிடையாது. இருந்தாலும், நான் இந்த உடல் என்று கூறிக் கொள்கிறோம். சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது எப்படி ஒருவன் அமைதியை அடைய முடியும்? கடவுளே அனைத்திற்கும் உரிமையாளர் என்பதை ஒருவர் உணரும்போதுதான் அமைதியைப் பெற முடியும்.

 

கடவுளே உற்ற நண்பன்

ஒருவனுடைய நண்பன், தாய், தந்தை. தந்தையின் தந்தை, மற்றும் ஜனாதிபதி வரை அனைவரும் குறிப்பிட்ட கால விருந்தாளிகளே. இந்த அறிவு ஏற்றுக்கொள்ளப்படும்போது அமைதி தானாக வந்து சேர்கிறது. அமைதிக்காக நாம் ஒரு நண்பனை தேடிக்கொண்டு இருக்கிறோம். அந்த நண்பன் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே. அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டால் ஒவ்வொருவரும் உங்களுடைய நண்பனாக இருப்பதைக் காண்பீர்கள். ஏனென்றால், கடவுள் அனைவருடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார். கடவுளுடன் நட்புறவை ஏற்படுத்திக்  கொண்டால், அவர் உள்ளிருந்து உத்தரவிடுவார். அதன்படி நீங்கள் நட்புமுறையில் நடத்தப்படுவீர்கள். காவல் துறை அதிகாரியுடன் நட்பு கொண்டிருந்தால் சில நன்மை அடையலாம், அதே நேரத்தில் ஜனாதிபதியுடன் நட்பு கொண்டிருந்தால் அனைவரும் உங்களின் நண்பர்களாக இருப்பார்கள். ஏனென்றால், எல்லோரும் ஜனாதிபதிக்குக் கீழ்ப்பட்டவர்களே. எந்தவோர் அதிகாரியி டமிருந்து ஏதாவது நீங்கள் விரும்பினால், உடனே ஜனாதிபதியைச் சந்திக்கலாம். அவர் கூறுவார், “சரி இவரை கவனித்து அனுப்பு.” எல்லாம் அவராலேயே நிறைவேற்றப்பட்டு விடும்.

கடவுளோடு நட்புறவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்போது ஒவ்வொருவரும் உங்கள் நண்பர்களாக இருப்பார்கள். இந்த அருமையான உண்மையை, அதாவது, கடவுள் அனைவருடைய நண்பர், அவரே மிக உன்னத உரிமையாளர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால், அமைதியைப் பெறலாம். பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம், பிற வேத இலக்கியங்கள், ஏன் இதர மத இலக்கியங்களில்கூட, கடவுளே அனைத்திற்கும் உரிமையாளர், கடவுள் மட்டுமே நண்பன் என்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் புரிந்து கொண்டால் அமைதியடைய முடியும். இதுவே அமைதிக்கான வழிமுறை.

இறையன்பு இலவசம்

கிருஷ்ண உணர்வில் நாம் பக்குவமடைய வேண்டும், அதுவே நமது வேலை. வேறு எதுவும் இல்லை. இதிலிருந்து விலகி, இந்த நியமங்களை ஏற்காமல் அதிகம் அனுபவிக்க விரும்பினால், அப்போது துன்பத்தைத்தான் அடைவோம். கிருஷ்ண உணர்வில் உள்ளவர்களுக்கு கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. உண்மையில் கிருஷ்ண உணர்வில் உள்ளவர்கள் மட்டுமே பயமில்லாதவர்களும், அமைதியை உடையவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் மோட்சத்திலோ, நரகத்திலோ அல்லது வேறு எங்கும் இருப்பதில்லை. அவர்கள் கிருஷ்ணருடனேயே இருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கு எல்லாமே வைகுண்டம்தான். அதேபோல பரமாத்மாவான கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் ஒரு பன்றியின் இதயத்திலும் வசிக்கிறார். பன்றி மலத்தை உண்கிறது. இருப்பினும், முழுமுதற் கடவுள் பன்றியின் இதயத்திலும் இருப்பதால் அவரும் அத்தகைய தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார் என்று பொருள் அல்ல. கடவுளும் அவரின் பக்தர்களும் எப்போதும் உன்னதமானவர்கள். பூரண கிருஷ்ண உணர்வில் உள்ளவர்கள் அரிதானவர்களும் அமைதியுடையவர் களும் ஆவார்கள். ஆயிரமாயிரம் மனிதர்களிடையே உண்மையில் கிருஷ்ண உணர்வில் உள்ளவர்களைக் காண்பது கடினமாகும். இந்த கிருஷ்ண உணர்வு நிலை மிக அபூர்வமானதாகும். ஆனால் தற்போதைய பரிதாப நிலையைக் கண்டு, கிருஷ்ணரே சைதன்ய மஹாபிரபுவாக தோன்றி கடவுளின் அன்பை நேரடியாக இலவசமாக வழங்குகிறார்.

கடவுளின் அன்பு இலவசமாகக் கொடுக்கப்படுவதால், அது மிக சுலபமானதாகும். ஆனால் மக்கள் இதைக் கண்டுகொள்வது இல்லை. என்னுடைய குரு மஹாராஜர், லங்கேரா மாம்பழத்தைப் பற்றிக் கூறுவது வழக்கம். இந்தியாவில் மிகவும் தரம் வாய்ந்ததும், மிகவும் சுவையானதும், அதிகமானதுமான “லங்கேரா” மாம்பழத்தை வாங்கி, வீடுவீடாகச் சென்று இலவசமாக விநியோகம் செய்தால், “ஏன் இவன் இதை இலவச மாகக் கொடுக்கிறான்? இதற்குப் பின்னால் ஏதாவது குறிக்கோள் இருக்க வேண்டும்,” என்று மக்கள் சந்தேகப் படுவார்களாம். அதேபோல, சைதன்ய மஹாபிரபு. லங்கேரா மாம்பழமாகிய கிருஷ்ண உணர் வினை மிக மலிவாக விநியோகிக்கிறார். ஆனால் மக்கள் கடைந் தெடுத்த முட்டாள்களாக இருப்பதால், “இவர்கள் வெறும் ஹரே கிருஷ்ண என்று சொல்லச் சொல்கிறார்கள், இதில் என்ன இருக்கிறது? உயர்ந்த அறிவு இல்லாத முட்டாள் களுக்குத்தான் இது,” என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இஃது அவ்வாறு அல்ல. “ஆயிரமாயிரம் மனிதர்களில் மிகக் குறைவானவர்களே கிருஷ்ண உணர்விற்கு வர முடியும்,” என்று கூறப்பட்டுள்ளது.(பகவத் கீதை 7.3)

இதனை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. இது மிக அபூர்வமானதாகும். மேலும், கிருஷ்ண உணர்வை நாம் பின்பற்றும்போது நமது வாழ்க்கை வெற்றியடையும். நமது மனித வாழ்வின் குறிக்கோளும் நிறைவேறும்.

பரமாத்மாவான கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

கிருஷ்ண உணர்வு அரிதானது

கிருஷ்ண உணர்வு என்னும் விதை மிக அபூர்வமானதும், மதிப்புள்ளதும் ஆகும். 84 இலட்சம் உயிரின வகைகளில், எண்ணிலடங்கா உயிர்வாழிகள் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிமாறி அலைந்து திரிந்துகொண்டு இருக்கின்றன. அதில் ஆன்மீக அதிர்ஷ்டம் உள்ள ஒருவனே கிருஷ்ண உணர்விற்கு வருகிறான் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். சில நேரங்களில் கிருஷ்ண பக்தர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். பிச்சைக்காரர்கள் போல செல்வதே அவர்களது கொள்கை. ஆகையால், இந்தியாவில் பிச்சைக்காரர்கள், குறிப்பாக சந்நியாசிகளுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. ஒரு சந்நியாசி ஏதேனும் வீட்டிற்குச் சென்றால், “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று மிகுந்த மரியாதையோடு உபசரிக்கப்படுகிறார்.

பக்தர்கள் எதையும் கேட்பதில்லை, ஆனால் ஒருவன் சிறிதளவு உணவை அவருக்குக் கொடுத்தாலும், அஃது அவனை ஆன்மீக உயர்விற்கு தயார் செய்கிறது. தனது வீட்டிற்கு வந்த தூய பக்தருக்கு உணவளிக்கும் மனிதர் ஆன்மீக உணர்வில் முன்னேற்றம் காண்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் முன்னேற்றம் அடையும்போது, முடிந்தவரை பக்தர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நமது விரோதி நமது வீட்டிற்கு வந்தால்கூட, அவன் விரோதி என்பதை மறந்து, அவனை வரவேற்க வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. கடவுளுக்காக அனைத்தையும் துறந்த ஒரு தூய பக்தரை உபசரிப்பதைப் பற்றிக் கூற வேண்டியதே இல்லை.

குடும்பஸ்தர்கள் மதிய வேளையில், வெளியே வந்து, “பசியுடன் இருப்பவர்கள் யாராவது இருந்தால், சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட வேண்டும். இது குடும்பஸ்தர்களுக்கான கட்டளை. இப்படி கூப்பிட்டு யாரும் வராத பட்சத்தில் மட்டுமே குடும்பத் தலைவர் சாப்பிட வேண்டும். ஒரு மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்த அநேக நியமங்கள் வேதங்களில் உள்ளன. அவை மூட நம்பிக்கை அல்ல. தெய்வீக நிலைக்கு பயிற்சி பெற மனிதனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. என்றாவது ஒருநாள் அவன் கிருஷ்ண உணர்விற்கு வருவான் என்பதால், இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இத்தகையப் பயிற்சி காலத்தில், கடவுளின் தூய பக்தரை அவன் தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அத்தகைய தொடர்பினால் அவன் புனிதமடைகிறான். ஆகையால்தான், கடந்த வாழ்க்கையில் ஆன்மீக அறிவைப் பெற்ற அதிர்ஷ்டக்காரன் தூய பக்தரின் உறவை நாடுகிறான் என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். ஆன்மீக குருவின் கருணையினால் கிருஷ்ண உணர்வு பெறப்படுகிறது, கிருஷ்ணரின் கருணையும் இதில் அடங்கும். ஒருவன் கிருஷ்ண உணர்வைப் பெற வேண்டும் என்று ஆன்மீக குருவும் கிருஷ்ணரும் விரும்பும்போது, கிருஷ்ண உணர்விற்கான விதை பலன் கொடுக்கிறது.

குருவின் கருணையாலும் கிருஷ்ணரின் கருணையாலும் பெறப்படும் பக்தி விதை, நாம ஸங்கீர்த்தனம் எனும் நீரை ஊற்றுவதால் கொடியாக வளர்கிறது.

பக்தியை வளர்த்தல்

கிருஷ்ணர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். ஆன்மீகத்தில் நாம் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும்போது, உண்மையான குருவை அவரே அனுப்புகிறார். கிருஷ்ணரும் ஆன்மீக குருவும் இணைந்து, ஒருவன் கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கு காரணமாக  இருக்கிறார்கள். ரோஜா செடியின் விதை நம்மிடம் இருந்தால், அதனை பத்திரமாக பெட்டியில் வைத்து பூட்டி விடாமல், நிலத்தில் விதைக்க வேண்டும். அதுவே நமது கடமை. அதுபோல, கிருஷ்ண உணர்வின் தகவலை நீங்கள் பெற்றிருந்தால், அதனை உங்கள் இதயத்தில் விதைக்க வேண்டும். விதையை நிலத்தில் விதைத்தவுடன் அதன்மேல் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோலவே, கடவுளின் நாமத்தை உச்சரிப்பதும் கேட்பதும், பக்தியை வளர்ப்பதற்கு நீராக அமைகிறது. இதயத்தில் விதைக்கப்பட்ட கிருஷ்ண உணர்வு என்னும் விதை நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாக வளர்கிறது.

தீக்ஷை பெற்றுவிட்டால், கடவுளின் நாமத்தைக் கேட்பதும் பாடுவதும் தேவையல்ல என்று நினைக்கக் கூடாது. ஹரி நாம ஸங்கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற வேண்டும். தாவரத்திற்கு நீரூற்றுவதை நிறுத்தினால், அது வாடிப் போய்விடும், எவ்வித பயனையும் நமக்கு தராது. அதேபோல, கிருஷ்ண உணர்வில் மிகவுயர்ந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், கடவுளின் நாமங்களைக் கேட்பது, உச்சரிப்பது என்னும் வழிமுறையை நிறுத்தக் கூடாது. ஏனென்றால், மாயை மிகவும் சக்தி வாய்ந்தது. “ஆகா, இதோ ஓர் சந்தர்ப்பம்,” என்று மாயை நம்மீது கண்வைத்தவுடன் நாம் துவண்டுவிடுவோம். நாம ஸங்கீர்த்தனம் என்னும் நீரை ஊற்றுவதன் மூலமாக, கிருஷ்ண உணர்வு என்னும் கொடி வளர்கிறது.

கிருஷ்ண உணர்வின் எல்லை

பக்திக் கொடி எவ்வாறு வளர்கிறது? வளர்ச்சி பெறும் தாவரங்களின் வளர்ச்சி பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் நின்றுவிடுகிறது. ஆனால் கிருஷ்ண உணர்வு என்னும் தாவரத்தின் வளர்ச்சி அவ்வாறு அல்ல, இந்த பௌதிக பிரபஞ்சத்தில் எந்தப் பகுதியிலும் அஃது ஓய்வு எடுப்பதில்லை; ஏனென்றால், கிருஷ்ண உணர்வுள்ளவன் பௌதிக பிரபஞ்சத்தின் எந்தவொரு கிரகத்திற்குச் செல்லவும் ஆசைப்பட மாட்டான். விமானம் இல்லாமல் வானத்தில் பறக்கும் சக்தி படைத்த சித்தர்கள் வாழும் சித்தலோகத்தை அவனுக்குக் கொடுத்தால்கூட, அவன் திருப்தியடைய மாட்டான்.

சித்த லோகத்திற்கும் மேலே அநேக கிரகங்கள் உள்ளன. ஒரே தன்மையுடைய வெவ்வேறு எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் வெளியேயுள்ள ஆகாயமே பிரபஞ்சத்தின் எல்லை. தற்கால விஞ்ஞானிகள் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன் என்று கூறுகிறார்கள். ஆனால் வேதங்கள் அவ்வாறு கூறவில்லை. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒரு சூரியன் மட்டுமே உள்ளது. இருப்பினும், எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் உள்ளன என்றும், எண்ணிலடங்காத சூரியன்கள், சந்திரன்கள் உள்ளன என்றும் வேத இலக்கியம் நமக்குத் தகவல் தருகின்றது. பிரபஞ்சத்திலேயே மிகவுயர்ந்த கிரகம், பிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது. “மிக உயர்ந்த கிரகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றால்கூட மறுபடியும் திரும்பி வர வேண்டும்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். (பகவத் கீதை 8.16)

இதனால் கிருஷ்ண உணர்வில் உள்ளவர்கள் அதைக்கூட நிராகரித்து விடுகிறார்கள். அருவமான பிரம்மஜோதியையும் அவர்கள் சட்டை செய்வதில்லை. அவன் காரணக் கடலையும் தாண்டி ஆன்மீக ஆகாயத்திற்குச் செல்கிறான். அங்குள்ள வைகுண்ட கிரகங்களில் மிகவுயர்ந்த கிரகம் கிருஷ்ண லோகமாகும். அங்கே கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைக் கண்டு திருப்தியடைகிறான். படரும் தாவரமானது வளர்ந்து வளர்ந்து, கடைசியில் ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்ட பிறகு விஸ்தாரமடைகிறது. அதுபோல, பக்தித் தொண்டு என்னும் கொடியானது கிருஷ்ணரின் தாமரை பாதங்களைப் பிடித்தவுடன் அவரிடம் தஞ்சமடைகிறது. “இப்போது நான் எனது பயணத்தை முடித்துவிட்டேன், இனி இங்கே விஸ்தாரமடைவேன்.” விஸ்தாரமடைதல் என்றால் கிருஷ்ணருடனான உறவினை அனுபவிப்பதாகும். அங்கே பக்தர்கள் திருப்தியடைகின்றனர்.

பகவானின் நாமத்தைக் கேட்பது, உச்சரிப்பது என்னும் வழிமுறையை நாம் தொடர்வோமானால், நாம் படிப்படியாக வளர்ச்சி பெற்று கிருஷ்ணரின் தாமரை பாதங்களை அடைந்து, அங்கே கிருஷ்ணரின் சங்கத்தினை அனுபவிக்கலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives