பாண்டவர்களின் துறவு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால் தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பதினைந்தாம் அத்தியாயம்

சென்ற இதழில், துவாரகையிலிருந்து திரும்பிய அர்ஜுனனின் கவலைக்குரிய காரணத்தை அறிய யுதிஷ்டிர மஹாராஜர் பல்வேறு கேள்விகள் கேட்டதைப் பார்த்தோம். அதற்கு அர்ஜுனன் வழங்கிய பதிலையும் பாண்டவர்களின் துறவையும் இவ்விதழில் காணலாம்.

கிருஷ்ணரின் நினைவு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிந்ததால் பெருந் துக்கத்திற்கு உள்ளான அர்ஜுனனின் தாமரை போன்ற இதயமும் வாயும் உலர்ந்து விட்டன. அதனால் அவனது உடல் ஒளியிழந்து இருந்தது. கிருஷ்ணரின் பிரிவுத் துயரத்தினால், யுதிஷ்டிரரின் கேள்விகளுக்கு அவனால் ஒரு சொல்லைக் கூட பதிலாக உச்சரிக்க இயலவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நல்லாசிகளையும் சினேகத்தையும் நெருங்கிய குடும்ப உறவுகளையும் தனக்கு அவர் தேரோட்டியதையும் நினைவுகூர்ந்த அர்ஜுனன் சோகத்தில் மூழ்கி பெருமூச்சுடன் பேசத் துவங்கினான்.

 

வெற்றியின் இரகசியம்

அர்ஜுனனின் பேச்சு அவன் தனது வெற்றியின் இரகசியம் பகவானே என்பதை நன்கு அறிந்திருந்தான் என்பதைக் காட்டியது.

“அரசே, என்னை ஓர் ஆத்ம நண்பனாக பாவித்த பரம புருஷ பகவான் ஹரி என்னை விட்டுச் சென்றுவிட்டார். இதனால் தேவர்களையும் வியப்பில் ஆழ்த்திய எனது அற்புத சக்தி என்னை விட்டுச் சென்றுவிட்டது. அவரது பிரிவினால் எல்லா பிரபஞ்சங்களையும் நான் சூன்யமாக உணர்கிறேன்.

“துருபத ராஜனின் அரண்மனையில், சுயம்வர சடங்கில் பங்கேற்கக் கூடியிருந்த காமம் மிகுந்த இளவரசர்களை அவரது கருணையினால் என்னால் வெல்ல முடிந்தது. மேலும், என் அம்பினால் மீன்குறியைத் துளைத்து திரௌபதியையும் அடைய முடிந்தது.

“அவர் என்னருகில் இருந்ததால் சக்தி வாய்ந்த ஸ்வர்க ராஜனான இந்திரனையும் அவரது தேவ கணங்களையும் மிகவும் சாமர்த்தியமாக வென்று அவரது காண்டவ வனத்தை அழிக்க அக்னி தேவனுக்கு என்னால் உதவ முடிந்தது. அதிலிருந்து மயன் என்ற அரக்கனை காப்பாற்றியதால் அவன் நமக்கு அற்புதமான ராஜசபையை அமைத்துக் கொடுத்தான். இதற்கு காரணம் பகவானின் கருணையே.

“மகாபைரவ யாகத்தில் பலியிடுவதற்காக ஜராசந்தனால் சிறைபடுத்தப்பட்டிருந்த அரசர்களை விடுவிக்க பகவானின் திட்டப்படி அண்ணன் பீமன் ஜராசந்தனைக் கொன்றார். அதற்கு நன்றிக்கடனாக எல்லா அரசர்களும் உங்களுக்குக் கப்பம் கட்டினர்.

“தம் பாத கமலங்களில் சரணடைந்த திரௌபதியை அவமானத்திலிருந்து பகவான் பாதுகாத்தார். ஒரே ஒரு பருக்கையை உண்டு, பத்தாயிரம் சீடர்களுடன் கூடிய துர்வாஸரையும் மூவுலகையும் திருப்தியடையச் செய்தார். இதனால் துர்வாஸரின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகாமல் நாம் காப்பாற்றப்பட்டோம்.

“சிவபெருமானை என் போர்த்திறனால் வியக்கவைத்ததும், ஸ்வர்கத்திற்குச் சென்று நிவாதகவசன் என்ற அசுரனைக் கொன்று தேவர்களைக் காத்ததும் அவர் தந்த சக்தியினால் மட்டுமே.

“குருக்ஷேத்திர போர்க்களத்தில் சக்திவாய்ந்த வீரர்களான பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் போன்றவர்கள் பிரயோகித்த தடுக்க முடியாத ஆயுதங்கள் நம்மைத் தீண்டாமல் அவர் பாதுகாத்தார்.

“அரசே, கபடமற்ற அவரது விளையாட்டு பேச்சுகளும் புன்னகை தவழும் முகத்தையும், நண்பனே, பிருதாவின் மகனே, குருவம்சத்தின் மகனே என்றெல்லாம் பேசிய அன்பான வார்த்தைகளையும் இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் இதயத்தைப் பிளக்கின்றது.

“பொதுவாக நாங்கள் இருவரும் ஒன்றாக உறங்குவதும் அமர்ந்திருப்பதும் சுற்றித் திரிவதும் வழக்கம். அச்சமயத்தில் உரிமையாக நான் கடிந்து கூறும் வார்த்தைகளை ஒரு தந்தையைப் போல் பொறுத்துக் கொண்டார்.”

கிருஷ்ணரின் உதவியால் ஜராசந்தனை பீமன் கொன்றது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை அர்ஜுனன் எண்ணிப் பார்த்தான்.

அர்ஜுனனின் செயலிழப்பு

அர்ஜுனன் தொடர்ந்தான்: “என் நண்பரான பரம புருஷ பகவானை பிரிந்ததால் என் இதயமே வெறுமையாக உள்ளது. தேவர்களையும் சக்தி மிக்க வீரர்களையும் எளிதில் வென்ற நான், சில இடையர்களிடம் தோற்றுபோய் பகவானின் மனைவிகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. எனது காண்டீப வில்லும் அம்புகளும் குதிரைகளும் ரதமும் கிருஷ்ணர் இல்லாததால் செயலிழந்து போய்விட்டன.

“அரசே, இப்போது துவாரகையில் உள்ள உறவினர்களைப் பற்றி கூறுகிறேன். அவர்கள் பிராமணர்களின் சாபத்தினால், புளிக்க வைத்த சாதத்தால் ஆன மதுபானத்தைப் பருகி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மடிந்து போயினர். இது பூமியின் பாரத்தைக் குறைக்க வந்த பகவானின் ஏற்பாடாகும். பகவானால் எனக்கு அளிக்கப்பட்ட பகவத் கீதையானது இதுபோன்ற எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் ஆறுதலை அளிக்கும் ஒரே அருமருந்து.”

பகவத் கீதையை நினைவு கூர்ந்த அர்ஜுனன் அந்த போதனைகளால் எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் துக்கத்திலிருந்தும் விடுபட்டு அமைதியடைந்தான். பகவானின் பாத கமலங்களை இடையறாது நினைவு கூர்ந்ததால் அவனது பக்தி பெருகியது. அதனால் அவன் மீண்டும் தன் புலன்களுக்கு எஜமானனானான், ஆத்ம ஞானத்தைப் பெற்றதால் இருமையைப் பற்றிய  சந்தேகங்கள் முற்றிலும் களையப்பட்டன. ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுபட்டு ஆன்மீக நிலைக்குச் சென்று பிறப்பு இறப்பின் சிக்கலிலிருந்து விடுபட்டான்.

யுதிஷ்டிரரின் துறவு

பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு செய்தார். அதைக் கேட்ட குந்திதேவியும் பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அந்த நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி முழுமையாக வெளிப்பட்டது. அதனால் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் பலவிதமான அமங்களமான சூழ்நிலைகள் உருவாயின. புத்திசாலியான யுதிஷ்டிர மஹாராஜர், பேராசை, பொய்மை, நேர்மையின்மை, மூர்க்கத்தனம் போன்றவை கலி யுகத்தின் ஆதிக்கத்தால் மேலோங்குவதைப் புரிந்து கொண்டார். அவர் தனக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த பேரன் பரீக்ஷித்தை அரியாசனத்தில் அமர்த்தினார். பின்னர், அநிருத்தனின் மகனான வஜ்ரனை சூரசேன நாட்டின் அரசனாக அமர்த்தினார்.

அவர் ஒரு பிராஜாபத்ய யாகத்தை செய்து, குடும்ப வாழ்வை முறையாகக் கைவிட்டு அரசருக்குரிய ஆடைகள், கச்சை மற்றும் ஆபரணங்களைத் துறந்தார். கிழிந்த ஆடைகளை அணிந்து, கெட்டியான உணவு வகைகளை கைவிட்டு, தலைவிரி கோலத்தை ஏற்று, பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு பித்தனைப் போல காட்சியளித்த அவர் தன் சகோதரர்களின் தயவை நம்பியிருக்கவில்லை, செவிடனைப் போல் எதையும் கேட்கவும் இல்லை. பரம புருஷ பகவானின் சிந்தனையில் முழுமையாக ஈடுபடுவதற்காக மகான்களின் வழியைப் பின்பற்றி வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.

கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையில் முழுமையாக ஈடுபடுவதற்காக மாமன்னர் யுதிஷ்டிரர் வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.

பாண்டவர்கள் மற்றும் இராணியரின் துறவு

கலி யுகம் பரவுவதைக் கண்ட மற்ற பாண்டவர்களும் தங்களின் மூத்த சகோதரரின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி கிருஷ்ணரின் பாத கமலங்களை இடைவிடாது தியானித்தனர். இவ்வாறாக, இடையறாத பக்தி பூர்வமான சிந்தனையால் விளைந்த தூய உணர்வின் மூலமாக, பாண்டவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஆளப்படும் கோலோக விருந்தாவனத்தை அடைந்தனர்.

தீர்த்த யாத்திரை சென்றிருந்த விதுரர், பிரபாஸம் என்னுமிடத்தில் கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவாறு தம் உடலை நீத்தார். உடனே பித்ருலோக வாசிகளால் வரவேற்கப்பட்டு தம் மூல பதவியான எமராஜ பதவியை மீண்டும் ஏற்றார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நன்கறிந்திருந்த திரௌபதியும் சுபத்ரையும், பாண்டவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைப் பார்த்தனர். ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டிருந்ததால், உடனே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்து, தம் கணவர்கள் அடைந்த அதே பலனை அவர்களும் அடைந்தனர்.

பாண்டவர்கள் அடைந்த அதே பலனை நாமும் அடைய நமது வாழ்நாளிலேயே ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் பக்தித் தொண்டைப் பயிற்சி செய்து கிருஷ்ணரை எப்பொழுதும் நினைவிற்கொள்ள கற்க வேண்டும்.

பாண்டுபுத்திரர்கள் வாழ்வின் இறுதி நோக்கமான பரமபதத்தை நோக்கிப் புறப்பட்ட விஷயம் சர்வமங்களகரமானதும் பரிசுத்தமானதும் ஆகும். இதனை பக்தி சிரத்தையுடன் கேட்பவர் யாராயினும் வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவமான பகவானின் பக்தித் தொண்டை அடைவது நிச்சயம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives