மதுராவில் வசித்தல்

Must read

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, மதுராவில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்

தாமம் என்னும் சமஸ்கிருத வார்த்தையை புனித ஸ்தலம், அதாவது முழுமுதற் கடவுளின் வசிப்பிடம் என்று கூறலாம். பகவானின் வசிப்பிடமானது, அவரது நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளிலிருந்து வேறுபட்டதல்ல. பகவான் எவ்வாறு வழிபடத்தக்கவரோ, அவ்வாறே அவரது வசிப்பிடமும் வழிபடத்தக்கதாகும். பல்வேறு ரூபங்களில் வீற்றுள்ள பகவானுக்கு பல தரப்பட்ட வசிப்பிடங்கள் உள்ளன. அவையனைத்தும் திவ்யமானவை, அவரைப் போன்றே தெய்வீகத் தன்மைகளைக் கொண்டவை.

ஆன்மீக உலகின் தன்மைகள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” அத்தகு சிறப்புமிக்க கோலோக விருந்தாவனத்தை, பிரம்ம சம்ஹிதையில் (5.29) பிரம்மதேவர் பின்வருமாறு விவரிக்கின்றார்: “விலை மதிப்பற்ற சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்தில், விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள் நிறைந்துள்ளன. சுரபிப் பசுக்களை பராமரிக்கும் ஆதி புருஷரான கோவிந்தர் அங்கு இலட்சக்கணக்கான கோபியர்களால் தொண்டு செய்யப் படுகிறார்.”

கோவர்தன மலையில் வலம் வரும் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கிருந்தபடி ஸ்ரீமதி ராதாராணியிடம் ராதா குண்டத்தை காட்டுதல்

ஜடவுலகினுள் ஆன்மீக உலகம்

இந்த பௌதிக உலகில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வசிப்பிடமாகத் திகழும் மதுரா, விருந்தாவன், துவாரகை போன்ற புனித ஸ்தலங்கள், மேலே விவரிக்கப்பட்ட ஆன்மீக உலகின் மாதிரிகளாக (நகல்களாக) இருப்பதால், பௌதிக சக்தியின் தாக்கம் இங்கு இருப்பதில்லை. இப்புனித ஸ்தலங்களில், பகவான் என்றும் வீற்றுள்ளார்; ஆன்மீக உணர்வில் முன்னேற்றமடைந்த பக்தர்கள், இன்றும் பகவானின் லீலைகளை இங்கே காணவும் அனுபவிக்கவும் முடியும். அவ்வாறு முன்னேற்றமடையாத நிலையில் இருப்பவர்கள், அந்நிலையை நோக்கி விரைவில் உயர்வு பெற இப்புனித ஸ்தலங்களில் வசித்தல் பேருதவியாக அமையும். இப்புனித ஸ்தலங்களில் பகவானின் பலதரப்பட்ட லீலைகள் நிகழ்ந்த காரணத்தினால், பகவானை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இத்தகு இடங்களில் எளிதானதாகும்.

புனித ஸ்தலங்களின் உயர்நிலை

எவ்வாறு தனது இனிமையான தன்மையின் காரணத்தினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்ற எல்லா விஷ்ணு ரூபங்களைக் காட்டிலும் சிறந்தவராகக் கருதப்படுகின்றாரோ, அதுபோலவே, எல்லா புனித ஸ்தலங்களிலும், வைகுண்டத்தைக்காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுரா மண்டலம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. மதுரா மண்டலத்தினுள் உள்ள விருந்தாவனம், கிருஷ்ணரின் ராஸ லீலை நடைபெற்ற காரணத்தினால், மதுரா நகரத்தைக் காட்டிலும் உயர்ந்தது. அந்த விருந்தாவனத்தில்தான், பகவான் தன்னுடைய நண்பர்கள், தாய் தந்தையர், மற்றும் தோழியருடன் லீலை புரிகின்றார். விருந்தாவனக் காட்டில் அமைந்துள்ள கோவர்தன மலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உயர்த்தப்பட்ட காரணத்தினாலும் பல்வேறு லீலைகள் நிகழ்ந்த காரணத்தினாலும், விருந்தா வனத்தை விட உயர்ந்ததாகும். இவை யனைத்திற்கும் மேலாக, கோவர்தன மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள, கிருஷ்ண பிரேமை பொங்கி வழியும் ஸ்ரீ ஸ்ரீ ராதா குண்டம் மிகமிக உயர்ந்ததாகும். (மேலும் விபரங்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதர் அருளிய “உபதேசாமிருதம்” என்னும் புத்தகத்தைப் படிக்கவும்.)

விருந்தாவனமும் நவத்வீபமும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்போதைய கலி யுகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வடிவில் வங்காளத்திலுள்ள நவத்வீபத்தில் அவதரித்தார். (சைதன்ய மஹாபிரபு குறித்த விவரங்களுக்கு நான்காம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்) எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஸ்ரீ சைதன்யருக்கும் வேறுபாடு இல்லையோ, அவ்வாறே கிருஷ்ண லீலைகள் நடைபெற்ற விருந்தாவனத்திற்கும் சைதன்ய லீலைகள் நடைபெற்ற நவத்வீபத்திற்கும் வேறுபாடு கிடையாது. கௌடிய வைஷ்ணவர்களுக்கு விருந்தாவனமும் நவத்வீபமும் ஒன்றே. அதே சமயத்தில், பகவான் ஸ்ரீ சைதன்யர் எல்லா அவதாரங்களிலும் மிகமிக கருணை வாய்ந்தவர் என்பதால், அவரது புனித ஸ்தலமும் அவரைப் போன்றே கருணையின் இடமாகத் திகழ்கின்றது.

 

கோவர்தன மலையின் தற்போதைய தோற்றம்

மறைக்கப்பட்டுள்ள விருந்தாவனம்

பௌதிக கண்ணோட்டமுள்ளவர்கள் விருந்தாவனத்தை பொருளாதார வளர்ச்சி ஏற்படாத இடமாகவும், அசுத்தமான இடமாகவும் காண்கின்றனர். அவர்களுக்கு விருந்தாவனத்தின் ஆன்மீகத் தன்மை வெளிப்படாது. அத்தகு பௌதிக வாதிகள் விருந்தாவனத்தில் நடமாடும் பட்சத்தில், அவர்கள் மாயாதேவியால் விரிக்கப்பட்டுள்ள வலையின் மீதே நடமாடுகின்றனர் என்று ஸ்ரீல பக்திவினோதர் கூறுகின்றார். அவர்களால் விருந்தாவனத்தின் உட்புறத்திற்கு ஒருபோதும் செல்ல இயலாது என்றும் உரைக்கின்றார். தூய பக்திப் பாதையில் இருப்பவர்கள் மட்டுமே விருந்தாவனத்தின் மகிமையை உணர முடியும்.

 

விருந்தாவனத்தில் வசித்தல்

முன்னரே கூறப்பட்டதுபோல, புனித ஸ்தலத்தில் வசிப்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக அமையும் என்பதால், விருந்தாவனத்தில் வசிப்பதை இறையன்பை கொடுக்கும் ஐந்து சக்தி வாய்ந்த அங்கங்களில் ஒன்றாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி குறிப்பிடுகிறார். அவ்வாறு விருந்தாவனத்திற்குச் சென்று உடல் ரீதியாக அங்கு வசிப்பது என்பது நடைமுறையில் எல்லாருக்கும் சாத்தியமானதல்ல என்பதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் விருந்தாவனத்திலும், பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நவத்வீபத்தின் மாயாப்பூரிலும் மாபெரும் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்திற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஸ்ரீ ராதா குண்டம்

எங்கும் விருந்தாவனம்

நமது ஜடவுடலை விருந்தாவனத்திற்குக் கொண்டு சென்றால் மட்டுமே விருந்தாவனத்தில் வசிப்பதன் பலனை அடைய முடியும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது, ஸ்ரீல நரோத்தம தாஸ் தனது பாடல் ஒன்றில், தோமாரா ஹ்ருதயே சதா கோவிந்த விஸ்ராம், அதாவது, தூய வைஷ்ணவர்களின் இதயத்தில் எப்பொழுதும் கோவிந்தர் வீற்றுள்ளார் என்று கூறுகிறார். எனவே, தூய பக்தர்கள் எங்கெல்லாம் செல்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் தங்களது இதயத்தில் விருந்தாவனத்தை சுமந்து செல்கின்றனர்; மேலும், தாங்கள் செல்லுமிடங்கள் அனைத்தையும் விருந்தாவனமாக மாற்றுகின்றனர். இதையே நமது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் செய்தார். தான் சென்ற எல்லா இடங்களிலும் கிருஷ்ணருக்காக ஒரு இடத்தை ஏற்பாடு செய்து, அவ்விடத்தை விருந்தாவனமாக்கினார். அங்கே எப்பொழுதும் கிருஷ்ணரின் புகழ்ச்சியை சொல்வதற்கும் கேட்பதற்கும் வழிவகுத்தார். இதனால், ஒரு விதத்தில் பார்த்தால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அனைத்து மையங்களும் விருந்தாவனமே.

 

விருந்தாவனத்திலுள்ள இஸ்கான் கோவிலின் பிரம்மாண்டத் தோற்றம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives