நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

எனது சொந்த ஊர் திருச்சி என்பதால், சிறு வயதிலிருந்தே காவிரியுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. கோடை காலத்தில் சுமார் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு மட்டுமே காவிரியில் சகஜமாக நீராட முடியும், இதர தருணங்களில் நீர் கரைபுரண்டு ஓடும், ஓரமாக நின்று கவனமாக நீராடி வருவோம். என் தந்தையோ தமது சிறு வயதில் காவிரியில் ஒருபோதும் மணல் தென்பட்டதே கிடையாது என்று பலமுறை பெருமையுடன் கூறியிருந்தார். தற்போதைய நிலை முற்றிலும் மாறி விட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே நீரைப் பார்க்கவே முடிகிறது, பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது.

காவிரியின் நிலை பரவாயில்லை, வேறு சில நதிகளில் வெள்ளம் வந்தால் மட்டுமே சில நாள்களுக்கு கால்வாய்போன்று நீர் ஓடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பேணி வந்த நதிகளை சுமார் 50 வருடத்திற்குள் நாம் ஏறக்குறைய சாகடித்து விட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தின் ஆறுகள்

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும் எண்ணற்றவை, இன்று அவை வெறும் போக்கிடமாக இருக்கின்றன. காவிரி, பாலாறு, வைகை, நொய்யல், மோயாறு, பவானி, தாமிரபரணி ஆகிய ஏழு ஆறுகளும் நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய ஆறுகளாக இருந்துள்ளன. இந்த பெரிய ஆறுகளில் தாமிரபரணி தவிர மற்றவை அனைத்தும் வறண்டு விட்டன, இதர 95 ஆறுகளைப் பற்றி கூற வேண்டிய தேவையே இல்லை.

தமிழகத்தின் அரசியல் களம் பெரும்பாலும் காவிரியைச் சூழ்ந்தே உள்ளது, காவிரியே தமிழகத்தின் மிக முக்கிய ஆறு என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில், மற்ற ஆறுகளை மக்கள் ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை? காவிரி வறண்டதற்கு கர்நாடகம் காரணம் என்று கூறி சப்பைக் கட்டு கட்டி விடலாம், ஆனால் மற்ற ஆறுகள் வறண்டதற்கு யார் காரணம்?

யாரைச் சுட்டிக் காட்டலாம்?

மழை இல்லை, மணல் கொள்ளை, காலநிலை மாற்றம், அடுத்தவன் கொடுக்க மறுக்கிறான் முதலியவை காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன, மறுக்கவில்லை. இருப்பினும், இவை அனைத்தும் குற்றத்தை மற்றவர்களின் தலையில் சுமத்தி விட்டு தப்பித்து ஓடும் பதில்களே. ஆறுகள் இன்று வறண்டு கிடப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் காரணம் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை, கூறினால் ஏற்பதும் இல்லை. மற்றவர்களைக் குற்றம் சாட்டி தப்பிப்பதில் மட்டுமே இந்நாட்டின் தலைவர்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

ஆறுகள் வறண்டதற்கு நான் எவ்வாறு காரணமாவேன் என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, கரை முழுவதும் மரங்கள் சூழ கம்பீரமாகத் தோற்றமளிக்கும் காவிரி நதி

நவ நாகரிக வாழ்வின் தொல்லைகள்

வீணாகும் நீர்: முந்தைய காலத்தில் மக்கள் ஆறுகளுக்குச் சென்று நீராடுவர், துணி துவைப்பர், வீட்டு உபயோகத்திற்காக சில குடம் நீரை இல்லத்திற்குக் கொண்டு வருவர். குளிக்கும் நீர் வீணாகவில்லை, துவைக்கும் நீர் வீணாகவில்லை, பாத்திரம் துலக்கும் நீர் வீணாகவில்லை, எந்த நீரும் வீணாகவில்லை; தற்போதைய நாளில், மனிதனின் அனைத்து தேவைகளும் அடுக்குமாடி கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்டு, சிறுநீர் கழித்ததற்காக ஊற்றப்பட்ட 10 லிட்டர் நீர் உட்பட அனைத்தும் வீணாகிறது.

உணவுப் பழக்கம்: கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய குறைவான நீருடன் வளர்க்கப்படும் உணவுகளை மக்கள் பெரும்பாலும் மறந்துவிட்டனர், அனைவரும் அரிசியை நாடுகின்றனர். விளைவு, நெல் விளைச்சலுக்குத் தேவையான நீரின் அளவு மற்றவற்றை விட பன்மடங்கு அதிகம் என்பதால், அதை நம்பி விவசாயம் செய்பவர்களுக்கு நதி நீர் கிடைக்காமல் போகும்போது, பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

கான்கிரீட் கட்டிடங்கள்: இதைப் பற்றி பெரும்பாலும் யாரும் பேச மாட்டார்கள், ஆனால் பெரிய உண்மை இங்கே புதைந்துள்ளது. இன்றைய கான்கிரீட் கட்டிடங்களை பெரும்பாலும் ஆற்று மணலை வைத்தே கட்டுகின்றனர். நதி நீர் பிரச்சனை என்றால், மணல் கொள்ளை” என்று பலரும் கருத்து கூறுவர்; ஆனால் கட்டிடம் கட்டுதல் என்றால் ஆற்று மணல் எங்கே கிடைக்கும்” என்று தேடுவர். முந்தைய காலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆற்று மணலைச் சார்ந்து அமையவில்லை, உள்ளூரில் கிடைத்த மண்ணைச் சார்ந்து அமைந்திருந்தன, கட்டிடம் இடிந்தால் மண்ணை மீண்டும் உபயோகிக்கவும் முடிந்தது; ஆனால் இன்று ஆற்றிலிருந்து மணல் எடுத்து கட்டப்படும் கட்டிடங்கள் குறுகிய காலத்தில் தரம் இழந்து இடிந்து விடுகின்றன, மணலை அவற்றிலிருந்து எடுக்க முடியுமா?

நதியில் கலக்கும் கழிவுகள்: மனிதக் கழிவுகள் நதியில் கலப்பதைப் பற்றி மட்டுமே பெரும்பாலும் பேசுகின்றனர். அஃது ஒருபுறம் இருந்தாலும், உண்மையில் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளே நதியின் நீராதாரத்தை பெருமளவு பாதித்துள்ளன. நதியின் மேல்படுகை மட்டுமின்றி, கீழ்ப்படுகைகளையும் சீரழிப்பவை இந்த தொழிற்சாலையின் விஷக் கழிவுகளே. தொழிற்சாலையின் பொருட்களைக் கைவிட எவ்வளவு பேர் தயாராக உள்ளனர். பிளாஸ்டிக்கை நிறுத்துங்கள் என்றால் யார் கேட்கின்றனர்? நதிகளில் மாசுக்களைக் கலந்து விட்டு, அடியிலிருந்து நீர் எடுத்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முட்டாள்கள் நினைக்கின்றனர்.

இப்போது கூறுங்கள், நதி நீர் சீர்கேட்டிற்கு நாமும்தானே காரணம்? நகரத்தில் வாழ்ந்து தொழிற்சாலையிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களைப் பயன்படுத்தும் நாம் ஒவ்வொருவருமே இந்த ஆறுகள் அழிவதற்கு காரணமாக அமைகிறோம்.

நவீன நாகரிகம் செல்லும் வேகத்தில், எல்லா நதிகளும் விரைவில் பாறைகளாக (பாலைவனமாக அல்ல, மணல்தான் இல்லையே) மாறிவிடும் என்பது வேதனைக்குரிய எச்சரிக்கை மணி. நகரமயமாக்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும் மக்களிடம் தூண்டப்பட வேண்டும். மக்களிடையே பெரும் மாற்றம் வேண்டும், வெறும் மாநாடுகள் போதாது.

ஆறுகள் வெறும் நீர்நிலைகள் அல்ல

ஆனால் நவீன கால மக்களோ நகரமயமாக்கத்தை முழு மூச்சில் செயல்படுத்துகின்றனர், தங்களை விஞ்ஞானத்தில் முன்னேறியவர்களாக எண்ணி ஆறுகளை வெறும் நீர்நிலைகளாகக் காண்கின்றனர். ஆனால் உண்மையில் ஒவ்வொரு நதியும் ஒரு நபர். நதிகள் (நீர்நிலைகள்) அந்த நபர்களின் உடல். மனிதனின் உடலில் ஊறும் எறும்பானது அதனை ஒரு தேசிய நெடுஞ்சாலையாக நினைக்கலாம், அஃது ஒரு நபருக்குச் சொந்தமான உடல் என்பதை அந்த எறும்பு அறியாமல் இருக்கலாம். அதுபோலவே, உலகின் இயற்கையை அறியாதவர்கள் இந்த நதிகளை வெறும் நீர்நிலையாகக் கருதலாம். உண்மையை அறிந்தவர்கள் இந்த நதிகளை நபர்களாகவும், நதியைச் சார்ந்த படுகை, மணல், நீர் முதலியவற்றை அந்த நபருடைய உடலின் பாகங்கள் என்றும் அறிவர்.

காவிரி ஒரு நபர் என்பதால்தான், காவிரித் தாய்” என்று நாம் கூறுகிறோம், இது வெறும் அடைமொழிக்காகவோ உணர்ச்சிக்காகவோ அல்ல. காவிரி ஒரு நபர்; ஒரு தாய் எவ்வாறு பிள்ளைகளின் தவறுகளை கவனிக்காமல் அவர்களின் நன்மைக்காக தன்னை தியாகம் செய்கிறாளோ, அதுபோல காவிரித் தாயும் நம்மை இன்றும் பாதுகாத்து பராமரிக்கிறாள்.

பொறுப்பற்ற, பக்குவமற்ற பிள்ளைகளாக இருப்பவர்கள் என்றென்றும் தாய்க்கு சிரமத்தைக் கொடுப்பர். ஆனால் முதிர்ச்சி பெற்ற பிள்ளைகள் அவளை எவ்வாறு வசதியாகப் பார்த்துக்கொள்வது என்பதைச் சற்று யோசிப்பர். நாம் எத்தகைய பிள்ளைகளாக இருக்க வேண்டும்?

தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் விஷத்தைப் பாய்ச்சுகின்றன, ஆற்றின் ஆதாரமான மணலும் சுரண்டப்படுகின்றது. விளைவு: ஆறுகள் முற்றிலும் வற்றி விடுகின்றன.

ஆறுகளை வாழ வைப்போம்

ஒரு நபரின் உடலில் எல்லா பகுதிகளும் முறையாகச் செயல்படும்போது மட்டுமே அந்த நபர் ஆரோக்கியமாக இருப்பார். ஏதேனும் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லாவிடில், அந்த நபர் கொஞ்சம்கொஞ்சமாக மடிந்து விடுவார். நதியும் அதுபோலவே. கடலுக்குச் செல்லும் நதி நீர் வீணாகிறது என்னும் எண்ணம், இன்றைய மக்களின் மிகப்பெரிய தவறான எண்ணங்களில் ஒன்றாகும். உண்மையில், மலையில் உற்பத்தியாகும் ஆறு, கடலில் சென்று கலக்கும்போது மட்டுமே அதன் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பன்நெடுங்காலமாக இருந்து வந்த அந்த நிலையினை நாம் நமது அதி புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, பல்வேறு அணைகளைக் கட்டி கடலுக்கு நீர் சேருவதைத் தடுத்தால், அதன் விளைவு: ஆறு படிப்படியாக மடிந்து விடும்.

கல்லணையிலிருந்து காவிரிக்கு நீரை வழங்கினால் அது வீணாகி விடும் என்று எண்ணி, அதி புத்திசாலித்தனமாக எல்லா நீரையும் கால்வாய்களுக்கு அனுப்பினர்; வெள்ளம் வரும்போது மட்டுமே காவிரி நீரைப் பெற்றது. விளைவு: அவ்வப்போது உணவு கிடைக்கும் உடல் எவ்வாறு நோயுடன் சிரமப்படுமோ அதுபோல காவிரியும் சிரமப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை ஆற்றில் நீரை வழங்கினால் அது வீணாகி விடும் என்று எண்ணி, அத்தனை நீரையும் அங்கேயே நிறுத்தி வைக்கின்றனர். விளைவு: வைகைக்கு உணவே கிடைக்காமல், இன்று ஏறக்குறைய மடிந்தே விட்டது.

கால்வாய் முதலிய விவசாய தேவைகளை நாங்கள் மறுப்பதில்லை, ஆனால் ஒரு நதியானது கடைசி வரை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையே எடுத்துரைக்கின்றோம். கல்லணை கட்டி சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன; ஆனால் அக்காலத்தில் நீர் முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்பதையே நாம் சுட்டிக்காட்டுகிறோம். எந்த ஆற்றில் நீர் இறுதி வரை செல்கிறதோ, அந்த ஆறு இன்றும் ஜீவித்துக் கொண்டிருப்பதை யார் வேண்டுமானாலும் உணரலாம்.

வணங்குதல் மூட நம்பிக்கையா?

ஒரு நபர் மகிழ்ச்சியாக இருந்தால், அவரது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல காவிரித் தாய் மகிழ்ச்சியாக இருந்தால், காவிரியும் செழிப்பாக இருக்கும். குழந்தை தனக்கு ஊட்டி விடும்போது, ஒரு தாய் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறாளோ, அவ்வாறே காவிரியை வழிபடுதல் என்பது அவளை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும். ஆனால் நமது ஊரிலோ அத்தகு வழிபாடுகளை மூட நம்பிக்கை என்று சில மூடர்கள் கூறியதால், இன்றைய மக்கள் அவை அனைத்தையும் நிறுத்தி விட்டனர், அல்லது வெகுவாகக் குறைத்து விட்டனர். விளைவு: நீர் ஆதாரம் குறைந்து விட்டது.

ஆற்றிலிருந்து நீர் எடுத்து பல்வேறு கோயில்களில் அபிஷேகம் செய்வர், ஆற்றங்கரையில் எண்ணற்ற சடங்குகள் செய்யப்பட்டன, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன, சிறிய சன்னதிகள் இருந்தன, பூஜைகள் செய்யப்பட்டன-இன்றோ நின்று விட்டன. இவையெல்லாம் நீர்நிலைகளின் புண்ணியத் தன்மைகளைக் குறைத்து அவற்றின் ஆரோக்கியத்தைக் கெடுத்து விட்டன.

இந்த பூஜைகள் வெளிநாடுகளில் இல்லையே, அங்கு நதிகள் செழிப்பாக இல்லையா என்று சிலர் வினவலாம். பாவ புண்ணியத்தை அறிந்த தமிழக மக்களுக்கு அவற்றை அறியாத மேலை நாட்டு மக்களைக் காட்டிலும் இயற்கை நிச்சயம் அதிக தண்டனையை வழங்கும்.

தர்மத்தைக் கடைபிடிப்போம்

மக்கள் தங்கள் தர்மத்தைக் கடைப்பிடிக்கும்போது, பகவானுடைய ஏற்பாட்டின்படி இயற்கை எல்லா நலன்களையும் மக்களுக்கு வழங்கி அவர்களை செழிப்பாக வைக்கும். மக்கள் பாவிகளாக இருக்கும் பட்சத்தில், அதனை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நல்லோர் சிலர் உள்ளோர் பொருட்டு எல்லாருக்கும் மழை பொழிவதாக வள்ளுவர் கூறியுள்ளார். அறநெறிகள் மீறப்படும் உலகில், நதிகள் தங்களது வளங்களை மக்களிடமிருந்து மறைத்துக்கொள்கின்றன. இதனை உணர மறுக்கும் மனிதனோ இதர வழிகளைக் காணலாம் என நினைக்கின்றான்.

கடல் நீரை நன்னீராக மாற்றலாம், வேறு நதிகளிலிருந்து நீர் கொண்டு வரலாம், புதிதாக அணைகளைக் கட்டலாம், பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடலாம் முதலிய திட்டங்களைத் தான் மக்கள் தீட்டுகின்றனர். தான் என்ன செய்யலாம் என்பதை ஏன் ஒவ்வொருவரும் யோசிப்பதில்லை?

பசுக்கள் வதைக்கப்பட்டு அக்கழிவுகள்கூட ஆற்றில் கலக்கப்படுகின்றன, இதை எவ்வாறு ஆறு சகித்துக்கொள்ளும்? எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நாளில் மாமிசம் உண்ட மக்கள், இப்போது அடிக்கடி மாமிசம் உண்கின்றனரே! மாமிசம் உண்ணும் பழக்கமில்லாதிருந்த உயர் வகுப்பினரும் இப்போது அவ்வப்போது அசைவத்தைப் புசிக்கின்றனரே! தெருவிற்குத் தெரு மதுபான கடைகள் வந்து விட்டனவே! புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவரைக் காணல் அரிதாகி விட்டதே! ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிரச்சாரம் நின்றுபோய், பாதுகாப்பான பாலுறவை (அதாவது. தவறான பாலுறவை) ஆமோதித்து வளர்க்கும் சமுதாயமாக மாறிவிட்டதே நமது சமுதாயம்! இவ்வளவு பாவங்கள் நிகழும் ஊரில் எவ்வாறு நதிகள் செழிப்பாக இருக்க முடியும்?

யானை கட்டி போர் அடித்த தஞ்சாவூரில் இன்று நிலத்தடி நீர்கூட இல்லாமல் மாறிவிட்டதே! அதற்கு பொறுப்பேற்க ஏன் தயக்கம்?

உலக நீதியை மீற வேண்டாம்

பாவங்களுக்கும் ஆறுகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு மாட்டை வெட்டுவதால் நதி நீர் வற்றி விடுகிறதா? ஏற்க முடியாத தகவல்களைக் கூறுகிறீர்களே? என்று நீங்கள் எண்ணலாம். மேலோட்டமாகப் பார்த்தால், சம்பந்தம் இல்லை என்று தோன்றலாம், ஆனால் இவையே பகவானால் வழங்கப்பட்டுள்ள இயற்கையின் நியதிகள். இவை நிச்சயம் வேலை செய்யும், எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை நாம் உணர முடியாமல் இருக்கலாம்.

இருப்பினும், இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். நாம் அனைவருமே காசோலையை (cheque) பயன்படுத்துகிறோம். அதில் இலட்சம் ரூபாய்” என்று எழுதுவதால், அதற்கு ஓர் இலட்சம் மதிப்பு எவ்வாறு வருகிறது? அஃது ஒரு சிறிய தாள் தானே! இல்லை, அதற்கு மதிப்பு உண்டு; ஏனெனில், காசோலையில் அவ்வாறு எழுதினால், வங்கிகள் அதற்குரிய பணத்தைத் தர வேண்டும் என்பது நாட்டினுடைய அரசாங்கம் வகுத்துள்ள நியதி. அதுபோலவே, மக்கள் தர்மத்தைப் பின்பற்றினால், அவர்களுக்கு இயற்கையின் வளங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது உலகத்தினுடைய அரசாங்கத்தினால் (பகவானால்) வகுக்கப்பட்டுள்ள நியதி.

எனவே, நேரடியாகப் பார்த்தால், பாவத்திற்கும் நதி நீர் மேம்பாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று எண்ணலாம், ஆனால் நிச்சயம் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை சாஸ்திரபூர்வமாக அறிகிறோம்.

இன்று, நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டி விட்டு நிலத்தடி நீரைப் பயன்படுத்திக்கொள்ள மனிதன் முயல்கிறான்;

நாளை, நிலத்தடி நீரும் நின்றுபோய் காய்ந்து போவான்.

என்ன செய்யலாம்?

மக்கள் தர்மத்தைப் பின்பற்றினால், நதி நீர் மேம்படும் என்பது திண்ணம். தர்மத்தில் பல நெறிகள் உள்ளன. அவை எல்லாவற்றையும் அறிந்து, புரிந்து, உணர்ந்து செயல்படுதல் என்பது பெரும்பாலான மக்களுக்கு, அதிலும் குறிப்பாக கலி யுகத்தில், சிரமமாக இருக்கும். எனவே, கலி யுகத்திற்கான தர்மத்தினை பகவான் கிருஷ்ணரே மிகவும் எளிதாக அமைத்துள்ளார். அதுவே நாம ஸங்கீர்த்தனம்; அதாவது, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை ஸங்கீர்த்தனம் செய்வதாகும். இந்த நாம ஸங்கீர்த்தனமே கலி யுகத்திற்கான தர்மம்.

இந்த ஸங்கீர்த்தன யாகத்தின் மூலமாக நிச்சயம் எல்லா தேவர்களும் திருப்தியடைவர், மழைப் பொழிவிற்குப் பஞ்சம் இருக்காது; நதியும் திருப்தியடைவாள், வேண்டிய வளத்தை நமக்கு வழங்குவாள். இந்த யாகத்தின் மூலமாக மழையைப் பெற முடியும் என்பதை கிருஷ்ணர் கீதையில் (3.14) எடுத்துரைக்கிறார். ஓங்கி உலகளந்த உத்தமனின் திருப்பெயரைப் பாடினால், தீங்கின்றி மும்மாரி பொழியும் என்பதை ஆண்டாளின் திருப்பாவையும் (3) வலியுறுத்துகிறது.

இந்த நாம ஸங்கீர்த்தனத்தை நிறைவேற்றுதல் மிகவும் எளிது, இதற்கு முன்தகுதிகள் ஏதும் அவசியமில்லை. மக்கள் தங்களது பாவச் செயல்களைக் கைவிட்டு, எளிமையான முறையில் வாழ்ந்து, நாம ஸங்கீர்த்தனத்திலும் நாம ஜபத்திலும் கலந்து கொண்டால், நிச்சயம் நதி நீர் மேம்பாடு என்பது கைகூடும். இதில் துளியும் ஐயமில்லை.

நதி நீர் மேம்பாட்டில் கவனம் செலுத்தாவிடில், இந்த நிலை நிச்சயம் வரும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives