துர்வாசரின் திருப்தி

Must read

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச முனிவரை அவன் அனுப்பி வைத்ததும் அவர் கிருஷ்ணருடைய கருணையினால் எவ்வாறு திருப்தியுற்றார் என்பதும் தெரியாத துணுக்கு.

துர்வாச முனிவர் கடும் தவங்களை அனுஷ்டிப்பதில் உறுதி கொண்டவர், பல்வேறு யோக சக்திகளைப் பெற்றவர். இவர் சிவபெருமானைப் போல் சுலபமாக திருப்தி அடைபவர், அதே போல சுலபமாக கோபமும் அடைபவர். திருப்தியடையும்போது மிகப்பெரிய நன்மை செய்பவராகவும், அதிருப்தி அடையும்போது பெருந் துன்பம் விளைவிப்பவராகவும் அவர் திகழ்ந்தார். அவருக்கு ஒரு சமயத்தில் பத்தாயிரம் சீடர்கள் இருந்தனர். பெரும் சத்திரிய அரசர்களைக் காணச் சென்று, அவர்களது விருந்தினராக அவர் இருந்தபோதெல்லாம், அந்த சீடர்களும் அவரைப் பின்தொடர்வது வழக்கம்.

ஒருமுறை பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலக்கட்டத்தில், அவர் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று அங்கே துரியோதனனின் இல்லத்தில் விருந்தினராக இருந்தார். துரியோதனன் புத்திசாலித்தனமாக அவரை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தினான். அந்த ரிஷியும் அவனுக்கு வரம் கொடுக்க விரும்பினார். அவரது யோக சக்திகளையும், அதிருப்தியடைந்தால் பெரும் நாசம் விளைவிப்பார் என்பதையும் துரியோதனன் நன்கு அறிந்திருந்தான். எனவே, அவரை எப்படியாவது பாண்டவர்களின் மீது கோபமடையச் செய்ய வேண்டும் என்று அவன் சதித் திட்டம் தீட்டினான்.

அதன்படி, முனிவர் துரியோதனனுக்கு வரம் கொடுக்க விரும்பியபோது, துரியோதனன் அவரை யுதிஷ்டிர மஹாராஜரின் வீட்டிற்கும் அவர் சென்று வர வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். யுதிஷ்டிரர் காட்டில் வாழ்ந்தபோதிலும், அவரது இராணியான திரௌபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது. அதன்படி, அவள் உணவருந்தும்வரை அந்த பாத்திரத்தைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அவளால் உணவளிக்க முடியும். இதுவும் துரியோதனனுக்குத் தெரியும். எனவே, அவன் திட்டமிட்டு துர்வாசரை யுதிஷ்டிரரின் இடத்திற்கு திரௌபதி உணவருந்திய பிறகு அனுப்பி வைத்தான். முனிவரையும் அவரது 10,000 சீடர்களையும் யுதிஷ்டிரால் உபசரிக்க இயலாது என்பதும், அதனால் முனிவர் கோபமடைந்து யுதிஷ்டிரரை சபித்துவிடுவார் என்பதும் துரியோதனின் திட்டம்.

துர்வாசர் பாண்டவர்களைக் காண வனத்திற்குச் சென்றார். யுதிஷ்டிரரும் வீட்டிற்கு வந்த முனிவரை நன்கு வரவேற்றார். முனிவருக்கு உணவளிப்பதற்கு முன்பாக, அவர்கள் அனைவரையும் நதிக்குச் சென்று நீராடி, சமயச் சடங்குகளை முடித்துக் கொண்டு திரும்பும்படி யுதிஷ்டிரர் கேட்டுக் கொண்டார். அச்சமயத்தில் திரௌபதியும் தனது உணவினை முடித்திருந்த காரணத்தினால், பாண்டவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். திரௌபதியும் பாண்டவர்களும் கிருஷ்ணரிடம் பிரார்த்தித்து முறையிட்டனர்.

அவர்களது பிரார்த்தனைக்கு இசைந்த கிருஷ்ணர் உடனடியாக அங்கே தோன்றினார். வந்தவுடன் அவரும், திரௌபதியிடம், பசியாக இருக்கிறது, ஏதேனும் கொடு,” என்று கேட்டார். வீட்டில் ஏதுமில்லை என்றபோது, கழுவப்படாத சமையல் பாத்திரத்தைக் கொண்டு வரும்படி பகவான் கூறினார், திரொளபதியும் அவ்வாறே செய்தாள். அப்போது அந்த பாத்திரத்தில், சிறிய கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது, அதைக் கண்ட பகவான் உடனே அதை எடுத்துச் சாப்பிட்டார்.

பகவான் கிருஷ்ணர் எப்போது அந்த ஒரு துளி கீரையை உண்டாரோ, அப்போது நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசரும் அவரது 10,000 சீடர்களும் வயிராற விருந்து சாப்பிட்டதைப் போல உணர்ந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல்

மூவுலகிலுள்ள அனைவரின் வயிரும் நிரம்பியது. பீமன் அவர்களை இல்லத்திற்கு அழைத்து வரச் சென்றார். ஆனால், பசியில்லாமல் தங்களால் சாப்பிட முடியாது என்றும், உண்ணாவிடில் அரசர் வருத்தப்படுவார் என்றும், அதனால், அங்கு செல்லாமல் இருப்பதே நல்லது என்றும் கூறி விட்டு துர்வாசர் தமது சீடர்களுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

கருத்து: கிருஷ்ணரை திருப்தி செய்தால் அனைவரையும் திருப்தி செய்ய முடியும். கிருஷ்ணரை அணுகியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள். எல்லா அபாயத்திலும் நாம் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும்.

ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் 1.15.11

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives