இன்பத்தைத் தேடி…

Must read

வழங்கியவர்: ஜெயகோபிநாத தாஸ்

இவ்வுலகிலுள்ள அனைவரும் இன்பத்தைத் தேடி அலைகின்றனர். இன்பமாக இருப்பதற்காக சிலர் மது அருந்துகின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் பார்க்கின்றனர், வேறு சிலர் பாடல்களைக் கேட்கின்றனர். ஆனால் எவராலும் நிரந்தர இன்பத்தை அடைய முடிவதில்லை. எந்த ஒரு செயல் (அல்லது பொருள்) நமக்குத் தொடர்ந்து இன்பத்தைத் தரக்கூடியதாக இருக்கின்றதோ அதுவே உண்மையான இன்பம். உதாரணத்திற்கு, நமக்கு மிகவும் இன்பம் தரக்கூடிய குலாப் ஜாமூனை எடுத்துக் கொள்வோம். யாரேனும் நமக்கு குலாப்ஜாமூன் கொடுத்தால், இரண்டு அல்லது மூன்றினை இன்பத்துடன் ஏற்றுக்கொள்வோம்; நான்கு, ஐந்து என்று கொடுத்தால் சற்று சிரமத்துடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால் பத்து, பதினைந்து குலாப்ஜாமூன் கொடுத்தால், அவ்வளவு வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்துவிடுவோம். ஏனென்றால், நம்முடைய வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுவிடும். எனவே, அத்தகைய இன்பம் உண்மையான இன்பம் கிடையாது. உண்மையான நிரந்தரமான இன்பத்தை அடைவதற்கான வழியை நாம் ஆராய்வோம்.

அரிதான மனிதப் பிறவி

நிரந்தர இன்பத்தை அடைவது மனிதப் பிறவியில் மட்டுமே சாத்தியம் என்பதால், மனித வாழ்வு மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது. ஔவையார் கூறுகிறார்: “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது.” இந்த மானிடப் பிறவி அரிதானது என்பதை நாம் யாரும் யோசிக்காதது ஏன்? மற்ற மிருகங்கள், பறவைகளைக் காட்டிலும் மனிதர்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் மனிதர்கள் எவ்வாறு சிறந்தவர்கள்? மனிதப் பிறவியின் சிறப்பு என்ன?

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒற்றுமை

முதலில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான ஒற்றுமையைப் பார்ப்போம். விலங்குகள் சாப்பிடுகின்றன, நாமும் சாப்பிடுகிறோம்; விலங்குகள் உறங்குகின்றன, நாமும் உறங்குகிறோம்; விலங்குகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன, நாமும் நம்மைப் பாதுகாத்துக் கொள்கிறோம்; மேலும், விலங்குகள் இனப்பெருக்கம் செய்கின்றன, நாமும் இனப்பெருக்கம் செய்கின்றோம். இப்படி விலங்குகள் செய்யக்கூடிய செயல்களையே நாமும் செய்து கொண்டிருந்தால், நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனிடத்தில் ஆறாவது அறிவு இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அந்த ஆறாவது அறிவை மிருகங்களின் செயல்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தினால், மனிதன் விலங்கினைக் காட்டிலும் உயர்ந்தவனல்ல.

அலெக்ஸாண்டரும் திருடனும்

ஒருமுறை, மாமன்னன் அலெக் ஸாண்டர் இந்தியாவில் முகாமிட்டிருந்த பொழுது, அந்த முகாமினுள் நுழைந்த ஒரு திருடன் தனது கையில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு தப்பிக்க முயன்றபோது மாட்டிக் கொண்டான். பின்னர், மாமன்னன் அலெக்ஸாண்டரின் முன்பு அவன் நிறுத்தப்பட்டான். அப்போது, “எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தி யாசம்?” என்று அந்த திருடன் அலெக்ஸாண்டரிடம் கேட்க, வியந்து போன அவர், “ஏன் அப்படி கேட்கிறாய்?” என்று வினவினார். அதற்கு அந்த திருடன் கூறினான், “நீங்கள் பட்டப்பகலில் நாட்டிற்குள் புகுந்து அங்குள்ளவை எல்லா வற்றையும் சூறையாடிச் செல்கிறீர்கள். நான் இரவில் வீட்டிற்குள் புகுந்து கையில் அகப்பட்டதைச் சூறையாடிச் செல்கிறேன். எனக்குத் திருடன் என்று பெயர், ஆனால் உங்களுக்கோ மாமன்னன் அலெக்ஸாண்டர் என்று பெயர்.”

இரண்டு கால் விலங்குகள்

ஹிதோபதேஷத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது:

ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச

ஸாமான்யம் ஏதத் பஷுபிர் நராணாம்

தர்மோ ஹி தேஷாம் அதிகோ விஷேஷோ

தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

“உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், பாதுகாத்தல் ஆகியவை மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவானவை, மனிதனை மிருகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது தர்மமே, அந்த தர்மம் இல்லையெனில், மனிதன் மிருகத்திற்கு சமமானவன்.”

மனிதப் பிறவியின் சிறப்பு என்னவெனில், மனிதர்கள் மட்டுமே தமது அறிவை உபயோகப்படுத்தி தர்மம் சார்ந்த கேள்விகளை எழுப்ப முடியும். நமது வாழ்வின் குறிக்கோள் என்ன? நமது துயரத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்குண்டான விடையை மனிதப் பிறவியில் மட்டுமே அறிய முடியும்.

அவ்வாறு செய்யாமல், உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், பாதுகாத்தல் என்னும் செயல்களில் மட்டுமே நமது வாழ்வை ஈடுபடுத்தினால், நாம் இரண்டு கால் விலங்கு அல்லது நாகரிக விலங்கு என்றே கருதப்பட வேண்டியவர்கள்.

எது பிரச்சனை?

மனிதர்கள் தங்களது வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்த்து நிரந்தர இன்பத்தை அடைய வேண்டும் என்றால். அவர்கள் முதலில் வாழ்வில் உண்மையான பிரச்சனைகள் என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டும், அப்பிரச்சனைகள் உண்மையில் யாருக்கும் தெரிவதில்லை. ஒரு பிரச்சனை உண்மையான பிரச்சனையாக இருக்க வேண்டுமென்றால் அது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த பிரச்சனையானது,

* எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்,

* யாராலும் விரும்பப்படாததாக இருக்க வேண்டும்,

* யாராலும் தவிர்க்க இயலாததாகவும் இருக்க வேண்டும்.

இம்மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பிரச்சனைகள் உண்மையான பிரச்சனைகளாகக் கருதப்படும். அதன்படி, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்கும், எல்லோருக்கும் பொதுவானது, யாரும் விரும்பாதது, மேலும், யாராலும் தவிர்க்க இயலாதது. இவையே வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனைகள், இவை தவிர, உடலினால் எழும் பிரச்சனைகள் (அத்யாத்மிக க்லேஷ), மற்ற உயிரினங்களால் ஏற்படும் பிரச்சனைகள் (அதிபௌதிக க்லேஷ), இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் (அதிதைவிக க்லேஷ) ஆகிய மூன்று பிரச்சனைகளும் கூட உண்மையான பிரச்சனைகளாகும். இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை அறிவது மனித வாழ்வில் மட்டுமே சாத்தியம். பிரச்சனைகள் தீர்ந்தால் மட்டுமே நாம் உண்மையான ஆனந்தத்தை அடைய முடியும்.

புலனின்பம் திருப்தியளிக்காது

உண்மையான ஆனந்தம் (அல்லது வெற்றி) என்பது புலன்களால் கிடைக்கும் இன்பமல்ல. தற்காலத்தில் வாழ்க்கையின் வெற்றியானது நாம் எவ்வளவு பொருள் (பணம்) ஈட்டியிருக்கிறோம் என்பதை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. பணத்தின் மூலமாக புலனின்பம், புலனின்பத்தின் மூலம் சந்தோஷம் அடையலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் புலனின்பத்தினால் நமக்கு துன்பம்தான் வரும், இன்பம் வராது. புலன்களைத் திருப்தி செய்வதன் மூலம் இன்பமடையலாம் என்பது வெறும் போலியான வாக்குறுதியே.

சில உதாரணங்கள்

இதனை நிரூபிக்கும் வண்ணம் சாஸ்திரங்களில் அருமையான உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு புலனின்ப பொருளினால் கவரப்பட்ட உயிரினங்கள் தங்கள் வாழ்வையோ உயிரையோ இழப்பதை பின்வரும் உதாரணங்களில் காணலாம்.

* கண்களால் (பார்வையால்)தூண்டப்பட்டு நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சி, அந்த நெருப்பில் தனது உயிரை இழந்துவிடுகிறது.

* நாக்கினால் (ருசியினால்) தூண்டப்பட்டு தூண்டிலில் இருக்கும் புழுவை சாப்பிட முயலும் மீன், அத்தூண்டிலில் மாட்டி தனது உயிரை இழந்துவிடுகிறது.

* காதினால் (ஒலியினால்) தூண்டப்பட்டு வேடனின் இசையில் மயங்கும் மான், அவனது அம்பினால் தனது உயிரை இழந்து விடுகிறது. (மான்களைப் பிடிக்க விரும்பும் வேடர்கள் அற்புதமான இசையினை வாசிப்பார்கள்; நவீன காலத்தில் இசைத்தட்டு அல்லது ஒலிநாடாவை இசைக்கவிடுவர். இந்த இசையில் மயங்கிய மான்கள் அசையாமல் ஸ்தம்பித்து நிற்கும். அப்பொழுது வேடர்கள் மானை வேட்டையாடிவிடுவர்.)

* தோலினால் (தொடு உணர்ச்சியினால்) தூண்டப்பட்டு பெண் யானையைப் பின்தொடரும் பலம் மிக்க ஆண் யானை, குழியில் விழுந்து சாதாரண மனிதர்களிடம் அடிமையாகிறது. (யானை பிடிப்பவர்கள் அதற்கென்று ஒரு பெண் யானையைப் பயிற்சி செய்து வைத்திருப்பர். பெண் யானையின் மீது மோகம் கொண்ட ஆண் யானை பெண் யானையைப் பார்த்தபடி பின்தொடர்ந்து ஓடும். ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்ட பெண் யானை இலைகளால் மூடப் பட்ட குழியைத் தவிர்த்து வளைந்து ஓடும். ஆனால் மோகம் கொண்ட ஆண் யானையோ அதையறியாமல் இலையால் மூடப்பட்ட குழியில் விழுந்து சிக்கிக் கொள்ளும்.)

* மூக்கினால் (நறுமணத்தினால்) கவரப்படும் வண்டுகள், தாமரையின் மணத்தில் மயங்கி, அங்கேயே இருக்க, இரவில் தாமரை இதழ்கள் மூடிக் கொண்ட பின்பு மூச்சுத் திணறி இறந்துவிடுகின்றன.

சுவையினால் உயிரிழக்கும் மீன்; இசையினால் உயிரிழக்கும் மான்; தொடு உணர்ச்சியால் அடிமையாகும் யானை; மற்றும் நறுமணத்தினால் உயிரிழக்கும் வண்டு.

உண்மையான இன்பம்

அதுபோல, புலன்களுக்குத் திருப்தியளிப்பதற்காக புலனின்பத்தில் நாம் ஈடுபட்டால், அவை மேன்மேலும் புலனுகர்ச்சியைக் கேட்குமேயொழிய என்றுமே திருப்தியடையாது. திருப்தியில்லாத மனம் துயரப்படுமே ஒழிய சந்தோஷமடையாது. ஆகையால் இன்பத்தைத் தேடுவோர் கவனிக்க வேண்டியது என்னவெனில், உண்மையான இன்பம் புலனுகர்ச்சியால் கிடைக்காது; மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி தன்னுணர்வு பெறும்போதுதான் நம்மால் உண்மையான இன்பத்தை அடைய முடியும். தன்னுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளை அடுத்துவரும் இதழ்களில் காணலாம். ஓம்

தத் சத்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives