கடவுளை நேருக்கு நேராக பார்த்தல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

தத்த்யானோத்ரிக்தயா பக்த்யா  விஷுத்ததிஷணா: பரே

தஸ்மின் நாராயணபதே  ஏகாந்தமதயோ கதிம்

அவாபுர் துரவாபாம் தே  அஸத்பிர் விஷயாத்மபி:

விதூதகல்மஷா ஸ்தானம்  விரஜேனாத்மனைவ ஹி

“இடைவிடாத பக்தியின் தூய உணர்வின் மூலம் உன்னத நாராயணரான பகவான் கிருஷ்ணரால் ஆளப்படும் ஆன்மீக உலகை அவர்கள் (பாண்டவர்கள்) அடைந்தனர். அந்த உலகம் முழுமுதற் கடவுளின் மீது ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் தியானிப்பவர்களால் அடையப்படுகிறது. கோலோக விருந்தாவனம் என்று அறியப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த வாசஸ்தலத்தினை பௌதிக வாழ்வில் மூழ்கியிருப்பவர்களால் அடைய முடியாது. ஆனால் எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் முற்றிலுமாகக் கழுவப்பட்ட பாண்டவர்கள், தங்களது அதே உடலுடன் அந்த லோகத்தை அடைந்தனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.15.47-48)

கிருஷ்ணருடன் நெருக்கமாகுதல்

தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும் நினைத்துக் கொண்டிருந்தனர். இதுவே கிருஷ்ண உணர்வு. அர்ஜுனன் போரிட்டபோது கிருஷ்ணர் அங்கு இருந்தார், பாண்டவர்கள் துரியோதனனுடன் அரசியலில் ஈடுபட்டபோதும் கிருஷ்ணர் அங்கு இருந்தார்.

தனது நண்பனான அர்ஜுனனுடன் கிருஷ்ணர் எப்போதும் பேசிக் கொண்டும் தங்கிக் கொண்டும் உறங்கிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். அர்ஜுனனும் இதர பாண்டவர்களும் வாழ்ந்ததைப் போல, நாமும் கிருஷ்ணருடன் வாழ்வதற்கு கிருஷ்ண உணர்வு நமக்கு உதவுகின்றது. கிருஷ்ண உணர்வு மிகவும் இன்பகரமானது, இதில் எந்த கஷ்டமும் இல்லை. நாம் நம்மைப் பழக்கப்படுத்த வேண்டும். கிருஷ்ணருடன் பாண்டவர்கள் இருந்ததைப் போல செயல்படுவது பக்தித் தொண்டால் மட்டுமே சாத்தியம். பாண்டவர்களின் பக்தியால் கிருஷ்ணர் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரிடம் நாரத முனிவர், “யோகிகளாலும் ஞானிகளாலும் தத்துவவாதிகளாலும் கிருஷ்ணரை அடைய முடியாது. ஆனால் உங்களுடைய பக்தியால் கிருஷ்ணர் உங்களுடன் நண்பரைப் போல, அல்லது சில சமயங்களில் உங்கள் கட்டளையை நிறைவேற்றுபவரைப் போலவும் வாழ்ந்து வருகிறார்,” எனப் புகழ்ந்தார். ஒருமுறை துரியோதனனுடனான சமரசப் பேச்சுவார்த்தையின்போது, “இந்த கடிதத்தைக் கொண்டு போய் துரியோதனனிடம் கொடுங்கள்,” என்று பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் கூறினர். கிருஷ்ணரும் “சரி, நான் செல்கிறேன்,” என ஒப்புக் கொண்டார். சாதாரண ஒரு தொண்டனைப் போல அவர் நடந்து கொண்டார். அர்ஜுனனுக்கு சாரதியாக, பார்த்தசாரதியாக, சாதாரண தேரோட்டி போலவும் நடந்து கொண்டார்.

 

கிருஷ்ணரை ஒவ்வொரு கணமும் காணுதல்

நீங்கள் கிருஷ்ண பக்தரானால், இந்த பிறவியிலேயே கிருஷ்ணருடன் வாழலாம். கிருஷ்ணர் சர்வ வல்லமையுடையவர். உண்மையான பக்தருடன் அவர் பேசுவார், நடனமாடுவார், உணவருந்துவார்–எல்லாம் செய்வார். ப்ரேமாஞ்ஜன சுரித பக்தி விலோசநேன ஸந்த: ஸதைவ. பக்தியின் மூலம் கிருஷ்ணரிடம் அன்பை வளர்த்துக் கொண்ட சாதுக்கள், ஒவ்வொரு நிமிடமும் கிருஷ்ணரைக் காண்பர் என்று பிரம்ம சம்ஹிதையில் (5.38) கூறப்பட்டுள்ளது. ஸதைவ என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள்; சாதுக்கள் கிருஷ்ணரைத் தவிர வேறெதையும் காண்பதில்லை.

“நீங்கள் கடவுளைப் பார்த்தது உண்டா?” என்று அறிவற்றோர் கேட்கின்றனர்.

“ஐயா, ’பார்த்தது என்பது கிடையாது. எப்போதும் ’பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை,” என்று நாம் பதில் கூறலாம். கடவுளை ஒரே ஒருமுறை பார்த்தது என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஸதைவ, சாதுக்கள் (பக்தர்கள்) அவரை ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கும் இருக்கும் கிருஷ்ணர்

ஒவ்வொரு கணமும் கிருஷ்ணரை எவ்வாறு காண முடியும்? கிருஷ்ணர் ஏற்கனவே நம்முள்ளேயே இருக்கின்றார். ஈஷ்வர: ஸர்வபூதானாம் ஹ்ருத்தேஷேர்ஜுன திஷ்டதி. கிருஷ்ணருடைய இருப்பிடம் பகவத் கீதையில் (18.61) கொடுக்கப்பட்டுள்ளது. அவர் உங்கள் இதயத்தில் இருக்கிறார். கடவுளைப் பார்ப்பதற்கு வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை, எங்கு இருக்கிறீர்களோ அங்கிருந்தே காணலாம். ஸர்வபூதானாம் என்றால், கடவுள் மனித இனத்தினரிடம் மட்டுமல்லாமல் விலங்குகளுக்குள்ளும் இருக்கின்றார் என்று பொருள். மரங்கள், செடிகள், நீர்வாழ்வன, பூச்சி இனங்கள் என எல்லாவற்றிலும் இருக்கின்றார். உயர்ந்த படைப்பாளியான பிரம்மா முதல் சிறிய எறும்பு வரை அனைவருக்குள்ளும் இருக்கின்றார்.

கடவுள் எங்கும் இருக்கிறார். அண்டாந்தரஸ்த பரமாணுசயாந்தரஸ்தம். (பிரம்ம சம்ஹிதை 5.35) இந்த பிரபஞ்சத்திற்குள்ளும் உங்கள் இதயத்திற்குள்ளும் ஒவ்வொரு அணுவிலும் அவர் இருக்கின்றார். அவரைப் பார்ப்பதில் என்ன கஷ்டம்? அவரைக் காண்பதற்கு உங்களை நீங்கள் தகுதியுடையவராக்கிக் கொள்ள வேண்டும்.

 

கிருஷ்ணர் எல்லா உயிர்வாழிகளிலும் பரமாத்மாவாக வீற்றுள்ளார்.

நம்மைத் தூய்மைப்படுத்துதல்

உண்மையில், நீங்கள் யாரிடமாவது அன்பு செலுத்தினால், அவரை நீங்கள் எப்பொழுதும் பார்க்கலாம்–அலுவலகத்தில் இருக்கும்போதும் உணவு உண்ணும்போதும் அவரைக் காணலாம். பௌதிகமாகவே இது சாத்தியம் என்றால், ஆன்மீகத்தில் சாத்தியமாகாதா என்ன? கடவுளின் மீதான அன்பினால் மட்டுமே, அதாவது பக்தியினால் மட்டுமே கடவுளைக் காண்பது சாத்தியம். பக்த்யா விஷுத்ததிஷணா: பரே. விஷுத்த என்றால் மிகவும் தூய்மையானது என்று பொருள். தற்சமயம் நமது உணர்வு தூய்மையாக இல்லை. அதனைத் தூய்மைப்படுத்துவதற்கு கிருஷ்ணருடன் நாம் உறவு கொள்ள வேண்டும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதன் மூலம் அந்த உறவை எளிதாக ஏற்படுத்திக்கொள்ளலாம். எங்களது மையங்களுக்கு வருபவர்கள் கிருஷ்ணரைப் பற்றி ஏதுமறியாமல் இருக்கலாம், ஆனால் கடவுள் அவர்களுக்கு காதுகளை அளித்திருப்பதால் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நாங்கள் கிருஷ்ணரைப் பற்றி நிறைய விஷயங்களை விவாதிக்கின்றோம். நிறைய புத்தகங்களையும் எழுதி இருக்கிறோம். பகவானைப் பற்றி 60 புத்தகங்கள் எழுத முடியும் என்று மக்களால் கற்பனைகூட செய்ய முடியாது, எந்த மதத்திலும் நீங்கள் கடவுளைப் பற்றி இவ்வளவு விஷயங்களைக் காண முடியாது.

நமது கவனத்தை கிருஷ்ண உணர்வில் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்று ஹரி நாம ஜபம் செய்யலாம். ஏராளமான நூல்கள் இருப்பதால், நம் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரைப் பற்றி படிக்கலாம். இருபத்து நான்கு மணி நேரம் படித்தாலும், முழுவதையும் படித்து முடிக்க வாழ்நாளையே ஒதுக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நொடியிலும் ஒரு பத்திரிகை

மாயாபூரில் எனது குரு மஹாராஜர் நதிய பிரகாஷ் என்ற தினசரி பத்திரிகையை வெளியிட்டு வந்தார். ஒருமுறை அரசியல்வாதி ஒருவர், “கடவுள் உணர்வைப் பற்றி நீங்கள் தினசரி பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அதில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என ஆச்சரியப்பட்டார். தேவையற்ற அரசியல் செய்திகளைக் கொண்டு மட்டுமே நாளிதழ்கள் நிரப்பப்படுகின்றன என அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். ஆன்மீக உலகின் செய்திகளைக் கொண்டு தினசரி பத்திரிகை கொண்டுவர முடியும் என்று நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள், அதைப் பற்றி அவர்களுக்கு எந்த எண்ணமும் கிடையாது. ஆன்மீக உலகைப் பற்றியும் தெரியாது.

எனது குரு மஹாராஜர் விளக்கினார்: “கடவுளின் சக்தியில் கால் பங்கு மட்டுமே இந்த பௌதிக உலகம்; மீதமுள்ள முக்கால் பங்கு ஆன்மீக உலகம். அந்த கால் பங்கில் எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன, ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் கோடிக்கணக்கான கிரகங்கள் உள்ளன. அந்தக் கோடிக்கணக்கான கிரகங்களில் இந்த பூமியானது ஒரு சிறு கிரகம். இந்த பூமியில் எத்தனையோ நகரங்கள் உள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான நாளிதழ்கள் வெளிவருகின்றன.

“இப்பொழுது ஆன்மீக உலகை எடுத்துக்கொள்வோம். அது பௌதிக உலகைவிட மும்மடங்கு பெரியது. ஏராளமான ஆன்மீக கிரகங்களும் பிரபஞ்சங்களும் ஏராளமான செயல்களுடன் அங்கு இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், கடவுளைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் தினசரி பத்திரிகை வர இயலாதா என்ன? கடவுளைப் பற்றி தினமும் ஒரு பத்திரிகை அல்ல; ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு பத்திரிகையை வெளியிட முடியும். துரதிர்ஷ்டவசமாக, ஆன்மீகச் செய்திகளுக்கு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்பது தான் பிரச்சனை. ஆனால் பௌதிகச் செய்திகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினம் ஒரு பத்திரிகை வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர், ஆனால் நொடிக்கு ஓர் ஆன்மீக இதழை எங்களால் வெளியிட முடியும்.”

 

திடமான உறுதி

ஆன்மீக உலகின் செய்திகளில் நாம் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இப்பிறவியிலேயே முழுமுதற் கடவுளின் திருநாட்டை அடைய யாரொருவர் உறுதியுடன் இருக்கிறாரோ, அவர்களால் கிருஷ்ண உணர்வை அடைய முடியும். அந்த திடமான நோக்கம் பகவத் கீதையில் (2.41) விளக்கப்படுகிறது.

வ்யவஸாயாத்மிகா புத்திர்  ஏகேஹ குருநந்தன

பஹுஷாகா ஹ்யனந்தாஷ்   புத்தயோவ்யவஸாயினாம்

இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே (அர்ஜுனா), உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது. 

மனிதப் பிறவியின் முக்கியத்துவம்

மனிதப் பிறவி பூனைகளையும் நாய்களையும் போன்ற சாதாரண பிறவி அல்ல. மனிதப் பிறவியில் உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் மீண்டும் முழுமுதற் கடவுளின் திருநாட்டை அடைய முடியும். அவ்வாறு இருக்கையில், ஏன் நாய்களையும் பூனைகளையும் போல கால விரயம் செய்ய வேண்டும்? என்று ஒருவர் எண்ணிப் பார்க்க வேண்டும், அது மிக அவசியம். உண்பதற்கும் உறங்குவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் நாய்களும் பூனைகளும் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன. ஒருநாள் அவை இறக்க நேரிடும். அதைச் செய்வதற்கு நாம் ஏன் நமது நேரத்தை விரயம் செய்ய வேண்டும்?

நம்மிடம் புத்தி உள்ளது, கிருஷ்ணர் நமக்கு உயர்ந்த வாழ்க்கையை அளித்திருக்கிறார். பூனைகளையும் நாய்களையும் போல வீதிகளில் இல்லாமல் நாம் உறங்குவதற்கு அறைகள் உள்ளன. நேர்த்தியான உணவுப் பொருட்களையும் அவர் அளித்திருக்கிறார். பால், பழங்கள், தானியங்கள் போன்றவை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்ய உகந்தவை. ஒவ்வோர் உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகை உணவினை கிருஷ்ணர் கொடுத்திருக்கிறார். பன்றிகளுக்குக் கழிவுப்பொருளையும் மனிதர்களுக்கு நேர்த்தியான பால், பழங்கள், தானியங்கள் போன்றவற்றையும் கொடுத்திருக்கிறார். எல்லா உணவுகளும் எல்லாருக்கும் ஏற்றதல்ல. ஒருவரின் உணவு மற்றவரின் விஷம். மலம்கூட ஒருவகையான உணவே. கல்லும்கூட ஒருவகை உணவு. புறாக்கள் கற்களை உண்டு அவற்றை ஜீரணிக்கும் திறன் பெற்றவை. இரும்பினாலான துப்பாக்கிக் குண்டுகளைவிட கடினமான பழங்களை ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் கொரில்லாக்கள் உண்கின்றன. துப்பாக்கிக் குண்டுகளைச் சுத்தியலால் அடித்து வளைக்கலாம், ஆனால் அந்த பழங்களை அவ்வாறு வளைக்க இயலாது. இருப்பினும், வேர்க்கடலையைத் தின்பதைப் போல அந்த கொரில்லாக்கள் அப்பழங்களை சாதாரணமாக மென்று தின்கின்றன.

மலமாக, சாம்பலாக, மண்ணாக மாறும் உடல்

மனித வர்க்கத்தினர் முழுமுதற் கடவுளின் திருநாட்டை அடைய தீர்மானித்து அதற்குத் தகுந்த உணவை ஏற்க வேண்டும். அவர்கள் மாமிசம் உண்ணக் கூடாது. (சாதம், ரசகுல்லா, பூரி போன்ற) ஸாத்விக உணவு வகைகள் அவர்களுக்கு உகந்தவை. உடலைப் பராமரிப்பதற்காக நாம் நினைத்ததை உண்ணக் கூடாது. இவ்வுடல் இறப்பிற்குப் பின், மலமாக, சாம்பலாக, அல்லது மண்ணாக மாறிவிடும். உடலைப் புதைத்தால் அது மண்ணோடு மண்ணாக மாறிவிடும். இந்துக்கள் செய்வதைப் போல உடலை எரித்தால் அது சாம்பலாகிவிடும். பார்சி மக்களைப் போல உடலை கழுகுகளுக்கு எறிந்துவிட்டால், அவை சாப்பிட்ட பின்னர் அது கழுகின் மலமாக மாறும். அவ்வளவுதான்.

நமது அழகிய உடல், மலம், மண், அல்லது சாம்பல் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றாக மாறும். அதற்காகவா நாம் இவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் உடலினுள் வசிப்பவரை மறந்துவிட்டோம். “நான் இவ்வுடல்” என்று மூன்றாம் தர முட்டாள்கள் நினைக்கிறார்கள். நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் வெள்ளையன், நான் கறுப்பன், நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிருஸ்துவன்–என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதால், தற்போதைய உலகம் மூன்றாம் தர முட்டாள்களால் நிரம்பி உள்ளது.

 

எனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?

“நான் இவ்வுடல்” என்னும் தவறான அபிப்பிராயத்தில் இருந்து ஒருவர் முழுவதுமாகத் தூய்மையடைய வேண்டும். விரஜேன ஆத்மனைவ. விரஜேன என்றால் முற்றிலும் தூய்மையடைதல் என்று பொருள். முற்றிலும் தூய்மையான நிலையை அடைதல் மிகவும் கடினம் என்பதால், அவாபுர் துரவாபாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பாண்டவர்கள் அந்த உயர்நிலையை அடைந்தனர். அப்படியெனில், யாருக்கு அது கடினம்? அஸத்பி:, யாரொருவர் தற்காலிக வஸ்துகளின் மேல் பற்றுதல் கொண்டுள்ளாரோ, அவருக்கு முற்றிலும் தூய்மையான நிலையை அடைதல் கடினமானதாகும். அஸத் என்றால் ‘தற்காலிகமான’ என்று பொருள். நிரந்தரமானவை, தற்காலிகமானவை என இரண்டு விதமான வஸ்துகள் உள்ளன. தற்காலிகமான வஸ்துகள் சில வருடங்களோ, சில மணி நேரமோ, சில நிமிடங்களோதான் இருக்கும். இந்த பௌதிக உலகமும், பௌதிக உடலும் அஸத்–தற்காலிகமானவை என அறியப்படுகிறது. இதை அனைவரும் அறிவர். ஒரு குறிப்பிட்ட நாளில் இவ்வுடல் பிறக்கும், சில வருடங்கள் இருக்கும், இனப்பெருக்கம் செய்யும், வேறு உருவத்திற்கு மாற்றமடையும், முதுமையடையும், அழியத் துவங்கும், ஒரு நாள் அழிந்துவிடும்.

இந்த ஆறு வித மாற்றங்களை ஸத்விகார என்பர். இது முன்னேற்றம் அல்ல. ஒருவர் வயதில் முன்னேறுகிறார் என்றால், அவர் இறப்பை நோக்கி முன்னேறுகிறார் என்று அர்த்தம். எனக்கு 78 வயது. நான் எழுபத்தெட்டு வருடங்கள் இறந்துள்ளேன்; இரண்டு அல்லது ஐந்து வருடங்கள் மீதமுள்ளது. உடல் நிலையாக இருக்காது, பிறந்த பொழுதிலிருந்தே அஃது இறக்கத் தொடங்கிவிடும். ஒரு தாயிடம், குழந்தையின் வயது என்ன என்று கேட்டால், “ஒரு மாதம்” என்பாள். அப்படியெனில், ஒரு மாதம் அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று பொருள்.

தற்காலிகமான பொருள்களிடம் பற்று கொண்டவர்களுக்கு ஆன்மீகத் தன்னுணர்வு என்பது கடினம். ஏன்? விஷயாத்மபி: அவர்கள் பௌதிக வாழ்வின் நான்கு கோட்பாடுகளில் பற்றுதல் கொண்டுள்ளனர். உண்ணுதல், உறங்குதல், ஆண் பெண் உறவு, பாதுகாத்தல் ஆகியவற்றில் மூழ்கியுள்ளவன், அவற்றைத் தாண்டி வருதல் அவசியம். இச்செயல்கள் விலங்குகளிடையேயும் உள்ளன என்று நிதான புத்தியுடன் சிந்திக்க வேண்டும். விலங்குகளின் விஷயத்தில் நானும் ஆர்வம் கொண்டால், எனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?

 

நாம் நம்மை உடலின் தளத்தில் வைத்துக் கொண்டால், நமக்கும் மிருகங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது.

உடலுக்கு அப்பாற்பட்ட உணர்வு

இவற்றிற்கு அப்பாற்பட்ட செய்திகளை பகவத் கீதை நமக்குக் கொடுக்கின்றது. அவிநாஷி து தத் வித்தி யேன ஸர்வம் இதம் ததம். (பகவத் கீதை 2.17) இவ்வுடல் அழியக்கூடியது, ஆனால் நிரந்தரமானது ஒன்று உள்ளது. அஃது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. கிள்ளினால் வலியை உணருகிறீர்கள்; ஏனென்றால், உணர்வு உடல் முழுவதும் பரவியுள்ளது. உணர்வு என்பது நிரந்தரமானது. ஒருவரின் உடலிலிருந்து உணர்வு வெளியே சென்றவுடன், அவரது கையை வெட்டினாலும் அவ்வுடலிலிருந்து எந்த எதிர்ப்பும் இருக்காது.

உணர்வைப் புரிந்துகொள்ள விரும்பாதவர்களும் உணர்வின் மூலத்தை அறிய விரும்பாதவர்களும் அஸத் எனப்படுவர். ஆன்மீக வாழ்க்கை அவர்களுக்குப் புரியாது. உணர்வைப் புரிந்துகொள்வதே ஆன்மீக வாழ்வின் முதல் படி என்று பகவத் கீதை கூறுகிறது. தேஹினோஸ்மின் யதா தேஹே: உடலின் உரிமையாளர் ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யார் இதைப் புரிந்துகொள்வார்கள்? விதுதாகல்மஷா. பாவ காரியங்களிலிருந்து விடுபட்டவர்கள் புரிந்துகொள்வர். அதனால்தான் பாவ காரியங்களில் ஈடுபட வேண்டாம் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பாவ காரியங்கள் என்றால் என்ன? புலால் உண்ணுதல், போதைப் பொருள்களை உட்கொள்ளுதல், சூதாடுதல், மற்றும் தகாத உடலுறவு ஆகிய நான்கும் மாபெரும் பாவ காரியங்களாகும். ஆன்மீக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இவற்றிலிருந்து ஒருவன் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். “நான் என்ன செய்ய விரும்புகின்றேனோ அதைச் செய்வேன்,” என்று நீங்கள் நினைத்தால், பிறவிதோறும் இந்த பௌதிக உலகிலேயே இருக்க வேண்டியதுதான். இதைப் புரிந்துகொள்ளுங்கள். மிக்க நன்றி!

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment