நூல் அறிமுகம்2018-07-26T13:35:05+05:30

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் – ஒரு பார்வை

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

துன்பமயமான உலக வாழ்வில், அதிலும் கலி யுக வாழ்வில் மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. இருப்பினும், கலி யுக மக்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவித்து வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் சிறப்பு வாய்ந்தது ஹரி நாம ஸங்கீர்த்தனம். இதுவே இந்த யுகத்திற்கான தர்மம் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த தர்மத்தை மக்களிடையே போதிப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு பக்தரின் ரூபத்தில் அவதரித்து வேறு எந்த அவதாரங்களும் வழங்காத மிகவுயர்ந்த இறையன்பினை எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் தாராளமாக வழங்கினார். அவரே பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் நூலே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்.

உருவான கதை

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், வங்காளத்தில் பிறந்து தமது இறுதிக் காலத்தை விருந்தாவனத்தில் கழித்த மாபெரும் பக்தரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால், வங்காள மொழியில் இயற்றப்பட்டது. (கிருஷ்ணதாஸரின் வாழ்க்கை வரலாற்றினை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம்.)

ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளை வெளிப்படுத்திய காலத்தில் அவரது உற்ற தோழராகவும் அந்தரங்க காரியதரிசியாகவும் செயல்பட்டவர் ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி ஆவார். ஸ்வரூப தாமோதரர் ஸ்ரீ சைதன்யரின் உள்ளக்கிடக்கையை முற்றிலும் உணர்ந்தவர். மஹாபிரபு எத்தகைய மனோபாவத்தில் உள்ளாரோ அதற்குத் தகுந்தாற்போல அவருக்கு உதவி புரிந்தார். ஸ்வரூபருக்கு உதவியாளராகச் செயல்பட்ட ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி மஹாபிரபுவின் அந்த லீலைகள் அனைத்தையும் நேரில் காண்பதற்கும் முதலில் கேட்பதற்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஸ்வரூபரும் மஹாபிரபுவின் அந்த லீலைகளைக் குறிப்பெடுத்து வைத்தார்.

கிருஷ்ணதாஸர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் வழிகாட்டுதலின்படி விருந்தாவனத்திற்குச் சென்றபோது, அங்கே அவர் ஸ்ரீல ரகுநாத தாஸரைச் சந்தித்தார். ரகுநாதரிடம் சரணடைந்து அவரது திருவடிகளை தமது உயிர்மூச்சாக ஏற்ற கிருஷ்ணதாஸர், மஹாபிரபுவின் லீலைகளை அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டறிந்தார். அவ்வாறு உருவானதே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்.

அனைத்திலும் முக்கியமானது

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் பல்வேறு நூல்களில் கிருஷ்ணதாஸரின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதமும் விருந்தாவன தாஸரின் ஸ்ரீ சைதன்ய பாகவதமும் முதன்மையானவை. ஸ்ரீ சைதன்ய பாகவதம் மஹா பிரபுவின் ஆரம்ப கால லீலைகளை விரிவாகவும் இதர லீலைகளை சுருக்கமாகவும் வழங்குகின்றது. ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மஹாபிரபுவின் ஆரம்ப கால லீலைகளை சுருக்கமாகவும் பிற்கால லீலைகளை விரிவாகவும் வழங்குகின்றது.

மஹாபிரபுவின் எல்லா வரலாற்று நூல்களிலும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் அதன் ஆழ்ந்த தத்துவத்திற்காகவும் ஆழ்ந்த சுவைக்காகவும் அதிகாரத் தன்மைக்காகவும் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

இஸ்லாமிய மன்னனான சந்த் காஜியிடம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வாதம் புரிதல்.

லீலைகளின் பிரிவுகள்

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மஹாபிரபுவின் லீலைகளை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கின்றது. மஹாபிரபு இவ்வுலகில் தமது லீலைகளை 48 ஆண்டுகள் வெளிப்படுத்தினார். அதில் அவர் முதல் 24 ஆண்டுகளை வங்காளத்திலுள்ள நவத்வீபத்தில் கழித்தார். அந்த ஆரம்ப கால லீலைகளை கிருஷ்ணதாஸர் ஆதி லீலை” என்று பெயரிட்டு வழங்குகின்றார். தமது 24ஆம் வயதில் சந்நியாசம் ஏற்ற மஹாபிரபு வாழ்வின் பிற்பகுதியான 24 ஆண்டுகளை ஒடிஸாவின் ஜகந்நாத புரியில் கழித்தார். அந்தப் பிற்கால லீலைகளை கிருஷ்ணதாஸர் சேஷ லீலை” என்று குறிப்பிடுகிறார்.

அந்த சேஷ லீலையின் முதல் ஆறு ஆண்டுகளில், மஹாபிரபு தென்னிந்தியா, வங்காளம், விருந்தாவனம் என அவ்வப்போது பயணங்களை மேற்கொண்டார். மீதமிருந்த 18 ஆண்டுகளில் அவர் புரியிலேயே தங்கியிருந்தார், வேறு எங்கும் செல்லவில்லை. எனவே, கிருஷ்ணதாஸர் மஹாபிரபுவின் சேஷ லீலையினை இரண்டாகப் பிரிக்கின்றார். முதல் ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த லீலைகளை மத்திய லீலை என்றும், இறுதி பதினெட்டு ஆண்டுகளில் நிகழ்ந்த லீலைகளை அந்திய லீலை என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறாக, ஆதி லீலை, மத்திய லீலை, அந்திய லீலை என்று மூன்று பகுதிகளாக ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதி லீலை: ஸ்ரீல விருந்தாவன தாஸர் சைதன்ய பாகவதத்தில் ஆரம்ப கால லீலைகளை விரிவாக விளக்கியுள்ளதால், கிருஷ்ணதாஸர் அவரது தாமரைத் திருவடிகளை வணங்கி அந்த லீலைகளை மிகவும் சுருக்கமாக வழங்கியுள்ளார். விருந்தாவன தாஸர் குறிப்பிடாத சில லீலைகளை மட்டும் விரிவாக வழங்கியுள்ளார். எனவே, ஆதி லீலை மற்ற பகுதிகளைக் காட்டிலும் சிறியது என்று கூறலாம். இருப்பினும், கிருஷ்ண பக்தித் தொண்டின் எல்லா சித்தாந்தங்களையும் கிருஷ்ணதாஸர் ஆதி லீலையின் முதல் ஏழு அத்தியாயங்களில் தெளிவுபடக் கூறியுள்ளதால், ஆதி லீலை தத்துவபூர்வமாக மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மத்திய லீலை: மூன்று பகுதிகளில் மிகவும் விரிவான தான மத்திய லீலை மஹாபிரபுவின் பல்வேறு பயணங்களையும் அங்கே அவர் எதிர்கொண்ட பக்தர்களையும் மக்களையும் பற்றி விளக்குகின்றது. மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது ஸ்ரீல இராமானந்த ராயருடன் நிகழ்த்திய உரையாடல், விருந்தாவனப் பயணத்தின்போது பிரயாகையில் ஸ்ரீல ரூப கோஸ்வாமிக்கு வழங்கிய உபதேசங்கள், காசியில் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமிக்கு வழங்கிய உபதேசங்கள் முதலியவை மத்திய லீலையின் முக்கியமான தத்துவப் பிரிவுகளாகும்.

அந்திய லீலை: எங்கும் செல்லாமல் புரியில் தங்கியிருந்த காலத்தில், மஹாபிரபு வெளிப்படுத்திய ஒப்பிடவியலா பிரேமையின் தன்மைகள் அந்திய லீலையின் முக்கிய பகுதியாகத் திகழ்கின்றன. கிருஷ்ண பிரேமையினால் அவரது திருமேனியில் தோன்றிய பரவச உணர்ச்சிகளும் விகாரங்களும் வரலாற்றில் வேறு எங்கும் காணப்படாதவை. மஹாபிரபு அவரது அந்தரங்க பக்தர்களுடன் வெளிப்படுத்திய நெஞ்சை உருக்கும் அன்புப் பரிமாற்றங்களும் அந்திய லீலையின் முக்கிய பகுதியாகும்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது சகாக்களுடன் புரியிலுள்ள குண்டிசா கோயிலை சுத்தம் செய்தல்.

மஹாபிரபுவின் உபதேசங்கள்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளின்போது ஒப்பிடவியலாத பாண்டித்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் தமது சிறு வயதிலேயே எல்லா திசைகளையும் வென்ற பண்டிதர் என்று புகழ் பெற்றிருந்த கேசவ காஷ்மீரியை தமது புலமையினால் வாதத்தில் தோற்கடித்தார். ஸங்கீர்த்தன இயக்கத்தை முன்நின்று நடத்தியபோது இஸ்லாமிய மன்னரான சந்த் காஜியை வாதத்தால் வென்றார். சந்நியாசம் ஏற்று புரியை அடைந்த சமயத்தில் மாபெரும் வேதாந்தியான ஸார்வபௌம பட்டாசாரியரைத் தோற்கடித்தார். தென்னிந்திய பயணத்தின்போது பௌத்தர்கள் உட்பட பல்வேறு அறிஞர்களைத் தோற்கடித்தார். அன்பு பரிமாற்றத்தின் மூலமாக கிருஷ்ண பக்திச் சுவையின் உயர்தன்மையினை ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் வேங்கட பட்டருக்கு ஸ்ரீரங்கத்தில் எடுத்துரைத்தார். உடுப்பியில் மாத்வ ஸம்பிரதாய ஆச்சாரியரான ரகு வீர்ய தீர்த்தருடன் வாதம் புரிந்து தமது தத்துவத்தினை நிலைநாட்டினார். பிரயாகையில் புஷ்டி மார்க்க ஸம்பிரதாயத்தின் ஆச்சாரியரான வல்லபாசாரியருக்கு கிருஷ்ண தத்துவங்களை விளக்கி மகிழ்ச்சியளித்தார். காசியில் சங்கர ஸம்பிரதாயத்தின் தலைவரான பிரகாசானந்த சரஸ்வதியுடன் வாதம் புரிந்து அவரைத் தோற்கடித்து வைஷ்ணவராக்கினார்.

இவ்வாறு, பல்வேறு விதங்களில் தமது பாண்டியத்துவத்தை மஹாபிரபு வெளிப்படுத்திய போதிலும், அவர் தாமாக எந்த நூலையும் இயற்றவில்லை. சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு பாடல்கள் மட்டுமே அவரால் நேரடியாக இயற்றப்பட்டவை. கௌடீய ஸம்பிரதாயத்திற்கான எழுத்துப் பணியினை அவர் தமது முக்கிய சீடர்களான விருந்தாவன கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதன்படி விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளால் இயற்றப்பட்ட பல்வேறு நூல்கள் கௌடீய ஸம்பிரதாயத்தின் அடித்தளமாக அமைகின்றன.

அவ்வெல்லா நூல்களின் ஒரு சுருக்கமாக ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் திகழ்கிறது. ஏனெனில், கோஸ்வாமிகளுக்கு மஹாபிரபு வழங்கிய அறிவுரைகள் யாவும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூபருக்கான உபதேசங்கள் ரஸ தத்துவத்தினை எடுத்துரைக்கின்றன, ஸநாதனருக்கான உபதேசங்கள் கிருஷ்ண தத்துவத்தையும் பக்தி தத்துவத்தையும்  எடுத்துரைக் கின்றன, இராமானந்தருடனான உரையாடல் பிரேம தத்துவத்தினை எடுத்துரைக் கின்றது, ஸார்வபௌமருடனும் பிரகாசானந்தருடனும் நிகழ்ந்த வாதங்கள் வேதாந்த தத்துவத்தினை எடுத்துரைக்கின்றன. இவ்வாறாக, ரஸ தத்துவம், கிருஷ்ண தத்துவம், பக்தி தத்துவம், பிரேம தத்துவம், வேதாந்த தத்துவம் என எல்லா தத்துவங்களின் சாரமாக ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் விளங்குகின்றது.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியில் நாம ஸங்கீர்த்தனத்தில் ஆடிப் பாடுதல்.

எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தத்துவங்களின் சாரமாயிற்றே, நமக்கெல்லாம் புரியுமா என்று சிலர் நினைக்கலாம். பல்வேறு முக்கியமான தத்துவங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் வழங்கியிருப்பது ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பல்வேறு பெருமைகளில் ஒன்றாகும். இதன் தத்துவப் பகுதிகள் ஸ்ரீமத் பாகவதத்திற்கான ஓர் உரையைப் போல திகழ்வதால், பாகவதத்தைக் காட்டிலும் எளிமையாக உணர முடியும். ஆதி லீலையின் முதல் ஏழு அத்தியாயங்கள் மட்டும் புதியவர்களுக்குச் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் கவனமாகப் படித்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் சமஸ்கிருதத்தில் இல்லாமல் வங்காள மொழியில் இருப்பது படிப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாகும். ஏனெனில், வங்காளம் மிகவும் எளிமையான மொழிகளில் ஒன்றாகும். நூலில் வார்த்தைக்கு வார்த்தை கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளைப் படித்தால், ஏறக்குறைய பாதி நூலைப் படித்தவுடன் வங்காள வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்.

சுவை மிகுந்தது

இந்நூல் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சரிதங்களை எடுத்துரைக்கும் அமிர்தமாகும். இந்த அமிர்தத்தின் சுவையினை, சுவைத்தால் மட்டுமே உணர முடியும், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மஹாபிரபுவின் ஒவ்வொரு லீலைகளும் பக்தர்களுடனான அவரது அன்புப் பரிமாற்றங்களும் படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும், கண்களில் கண்ணீரை வரவழைக்கும். படிப்பவர்களால் நூலை நிச்சயம் மூடி வைக்க இயலாது. படித்து முடித்தவர்கள் மீண்டும்மீண்டும் படிக்க விரும்புவர். இது நிச்சயம். அமிர்தத்தைச் சுவைத்தவர்கள் சுவைப்பதை நிறுத்துவாரோ!

வங்காள மூலத்துடன் இணைத்து படிப்பது இதன் சுவையை உணர்வதற்கு மேலும் உதவும். எவ்வளவுதான் மொழிபெயர்ப்பில் சுவையைக் கொடுத்தாலும், மூலத்தில் உள்ள சுவையினை எவராலும் மொழிபெயர்ப்பில் வழங்க இயலாது. எனவே, கவனமுடன் முன்னரே கூறியபடி பத விளக்கத்துடன் படிப்பவர்கள் இதன் சுவையினை மேன்மேலும் உணர முடியும். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தைச் சுவைப்பதற்காக வங்காளம் கற்றுக்கொள்வர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளார்.

மஹாபிரபு பிரேமையின் பரவசத்தில் மணல் மேட்டை கோவர்தன மலை என்று நினைத்து ஓடுதல்.

அமிர்தம்போன்ற லீலைகள்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கருணையின் கடலாவார். கிருஷ்ண பிரேமை (இறையன்பு) என்னும் வெள்ளத்தினால் அவர் முழு உலகையும் மூழ்கடித்தார். அவரால் வெளிப்படுத்தப்பட்ட பிரேமையின் அறிகுறிகள் உலகின் எந்தப் பகுதியிலும் வேறு எவராலும் வெளிப்படுத்தப்படாதவை. பகவான் கிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான பிரேமை ஒரு கிடங்கிற்கு ஒப்பிடப்படுகிறது. ஆனால் அக்கிடங்கினை கிருஷ்ணர் பூட்டி வைத்திருந்தார். ஆயினும், அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது, அதனைத் திறந்து அந்த வெள்ளத்தில் அனைவரையும் மூழ்கடித்தார்.

அவரது லீலைகள் நீள அகலத்தில் மட்டுமின்றி ஆழத்திலும் எல்லையற்றதாகத் திகழும் அமிர்தக் கடலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அக்கடலினுள் சிலர் மிதக்கலாம், சிலர் மூழ்கலாம், சிலர் ஒரு துளியைச் சுவைக்கலாம். அந்த ஒரு துளியைச் சுவைத்தாலும் அஃது அவ்வாறு சுவைப்பவரை பிரேமையில் முற்றிலுமாக மூழ்கடித்துவிடும். அந்த அமிர்தம்போன்ற ஸ்ரீ சைதன்ய லீலைகளின் ஒரு துளியே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்.

ஒரு துளி என்பதால் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அளவற்ற பெருங்கடலின் துளி என்பதால், இந்த ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதமும் ஓர் அளவற்ற கடலாகும். இந்த ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஒரு துளியைச் சுவைத்தால்கூட, அது சுவைப்பவர்களை இறையன்பின் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்.

எனவே, இந்த ஒரு துளி போதும், இந்த உலகினைக் காக்க!!!

கருணையால் அறியலாம்

தத்துவங்களின் சாரமாகவும் சுவை கொண்ட அமிர்தமாகவும் அறிவதற்கு எளிமையானதாகவும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் திகழ்கின்றது. அதே சமயத்தில், ஒரு விதத்தில் பார்த்தால், இதனை உணர்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், இந்த அமிர்தம் அளவற்ற கடலைப் போன்றது. யாரால் எவ்வளவு

மூழ்க முடியுமோ, எவ்வளவு மிதக்க முடியுமோ, அவ்வளவு மூழ்கவும் மிதக்கவும் முடியும். ஆனால் நிச்சயமாக யாராலும் இதன் எல்லையை அறிய முடியாது. இதில் நாம் எவ்வளவு மூழ்குகிறோம் என்பது முழுக்கமுழுக்க கருணையை அடிப்படையாகக் கொண்டதாகும். யாரெல்லாம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு, அத்வைத பிரபு, கதாதர பிரபு, மற்றும் ஸ்ரீவாஸ தாகூரின் தலைமையிலான பக்தர்களுடைய கருணையை (பஞ்ச-தத்துவங்களின் கருணையை) பெற்றுள்ளார்களோ, அவர்களால் மட்டுமே இதனைப் புரிந்துகொள்ளவும் சுவைக்கவும் முடியும்.

இதில் சிறப்பு என்னவெனில், அவர்களுடைய கருணையைப் பெறுவது மிகவும் எளிமையான செயலாகும். நாம் திறந்த மனதுடன் பகவத் பக்தியில் உண்மையாக ஈடுபட்டால், அவர்களுடைய கருணையை நிச்சயம் பெறலாம். ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜர் ஒவ்வோர் அத்தியாயத்தையும் மேற்கூறிய பஞ்ச-தத்துவங்களை வழிபட்டு தொடங்குகிறார்; ஒவ்வோர் அத்தியாயத்தையும் தமது ஆன்மீக குருமார்களின் தாமரைத் திருவடிகளை நினைத்து நிறைவு செய்கிறார். நாமும் அதே மனப்பான்மையுடன் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை அணுக வேண்டும். அப்போது நம்மால் இந்த அமிர்தத்தைச் சுவைக்க முடியும்.

SUBSCRIBE NOW
close-link