சைதன்ய மஹாபிரபுவை அறிவோம்

ஜய ஜய மஹாபிரபு ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய

தாஹார சரணாஷ்ரித சேய் பட தன்ய

பரம புருஷ பகவானான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு நான் என் பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்எவரொருவர் அவரின் பாதங்களை சரணடைகின்றாரோ அவர் போற்றுதலுக்குரியவராகிறார். (சைதன்ய சரிதாம்ருதம்ஆதி லீலை 7.2)

சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரே.

நமோ மஹாவதான்யாயக்ருஷ்ணப்ரேமப்ரதாய தே

க்ருஷ்ணாயக்ருஷ்ணசைதன்யநாம்னே கௌர த்விஸே நம:

“மிகவும் கருணை வாய்ந்த அவதாரமே! நீர் சாக்ஷாத் கிருஷ்ணரே. இப்பொழுது சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளீர். ஸ்ரீமதி ராதையின் பொன்னிற மேனியை ஏற்று, கிருஷ்ணரின் மீதான பூரண அன்பினை வெகுவாகப் பரப்பியுள்ளீர்கள். எங்களின் பணிவான வணக்கங்களை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்,” என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறியுள்ளார்.

பகவான் சைதன்யர் கிருஷ்ணரே, இக்கலி யுகத்தில் கிருஷ்ணரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக நேரடி அவதாரமாகத் தோன்றினார். இவ்வுண்மையினை வேத இலக்கியங்களான மஹாபாரதம், புராணங்கள் மற்றும் உபநிஷத்கள் உறுதி செய்கின்றன. வேத இலக்கியங்களின் சாரமான ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என ஏற்றுக்கொண்டுள்ளது.

கலி யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரமாக வருபவர் அக்ருஷ்ண, அதாவது கிருஷ்ணரின் நிறத்தினை ஏற்று வருவதில்லை என ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகின்றது. சமஸ்கிருதத்தில் க்ருஷ்ண என்றால் “கறுமை” என்று பொருள்படும். கிருஷ்ணர் நான்கு யுகங்களிலும் நான்கு வேறுபட்ட நிறத்துடன் தோன்றுகிறார் என்று சாஸ்திரங்களில் (ஸ்ரீமத் பாகவதம், 10.8.13) கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் பெயர் சூட்டு விழாவில் கற்றறிந்த பிராமணரான கர்கமுனி, வெண்மை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் முன்பு தோன்றிய உங்களது குழந்தை (கிருஷ்ணர்) தற்பொழுது கருமை நிறத்தில் தோன்றியுள்ளான் என்று கூறினார்.

வேத நாகரிகத்தில் குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணித்து அக்குழந்தையின் முந்தைய பிறவி மற்றும் எதிர்காலத்தினைக் கணக்கிடுவர். ஆனால், இன்று வறுமை மற்றும் வேறு பல காரணங்களால் இப்பழக்கம் இல்லையெனினும், மனித வாழ்வின் புனிதப்படுத்தும் காரியங்களில் (சம்ஸ்காரங்களில்) இதுவும் ஒன்று. மனித உடல் பத்து விதமான சம்ஸ்காரங்களால் தூய்மைப்படுத்தப்படுகின்றது.

பிரபுமஹாபிரபு

நித்யானந்த பிரபு, அத்வைத பிரபு என பகவானின் பக்தர்கள் அனைவரும் பிரபு என்று அழைக்கப்படுவர். ஆனால் பகவான் சைதன்யர், “மஹாபிரபு” எனப்படுகிறார். அனைவரிலும் உயர்ந்த பிரபுவாக, தலைமைப் பிரபுவாக அவர் அறியப்படுகிறார்; மற்ற அனைவரும் சேவக பிரபு ஆவார்கள். உதாரணமாக, நீங்கள் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்தால், உங்களின் மேற்பார்வையாளரை உயர் எஜமானராக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அவர் எஜமானர் அல்ல, மேலாண் இயக்குநரோ உரிமையாளரோ தான் அலுவலகத்தின் தலைவர் ஆவார். இருப்பினும், எவரெல்லாம் அவரின் கீழ் பணிபுரிகிறார்களோ அவர்களும் பிரபு என்று அழைக்கப்படுவர். அனைத்து வைஷ்ணவர்களும் பிரபு என்று அழைக்கப்பட வேண்டும். அதுதான் பண்பு, ஆனால் சைதன்ய மஹாபிரபு, மஹாபிரபு எனப்படுகிறார்; ஏனெனில், அவர் அனைவரிலும் சிறந்த பிரபுவாவார்.

ஏகலே ஈஸ்வர க்ருஷ்ணஆர ஸப ப்ருத்ய

யாரே யைசே நாசாயஸே தைசே கரே ந்ருத்ய

கிருஷ்ணரே பரம ஆளுநர், மற்ற அனைவரும் அவரின் சேவகர்கள். அவர் சொன்ன வண்ணமே இவர்கள் செயல்புரிகின்றனர். ஜடவுலகின் ஆளுநராகும் எண்ணத்துடன் நாம் செயல்புரிகின்றோம். ஜட சக்திகளைப் பயன்படுத்தி அவற்றின் ஆளுநராக நாம் அனைவரும் எண்ணுகின்றோம். இதுவே வாழ்வின் போராட்டமாகும். ஜடவுலகின் ஆளுநராக நானும் எண்ணுகிறேன், நீங்களும் எண்ணுகின்றீர்கள், எனவே, போராட்டம் ஏற்படுகின்றது. நீ ஏன் எஜமானராக இருக்கின்றாய் என நானும், நான் ஏன் எஜமானராக இருக்கின்றேன் என நீங்களும் சவால் விடுகிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் ஜடவுலகின் இயற்கை. நாம் எஜமானர்கள் அல்ல என்றும், கிருஷ்ணர் அல்லது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவே எஜமானர் என்றும் நாம் எப்போது உணர்கின்றோமோ, அப்போது நமது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

ஜீவ் க்ருஷ்ண தாஸ்  விஸ்வாஸ் கோர்லே தோ ஆர் து: நாய், “எப்பொழுது ஆன்மீக ஆத்மாவானது கிருஷ்ணரின் நித்திய தாஸன் என்பதை நீ புரிந்து கொள்கின்றாயோ, அதன் பின்னர் உனக்கு எவ்வித துன்பமும் கிடையாது,” என பக்திவினோத தாகூர் பாடுகின்றார். இதுவே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்.

மஹாபிரபுவிடம் தஞ்சமடைதல்

அனைவருமே பிரபு என்றபோதிலும், எவரொருவர் மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் சரணடைகின்றாரோ, ஸேய் பட தன்ய, அவர் போற்றுதலுக்குரியவர். வெறுமனே மனைவி, மக்கள், நாடு, போன்றவற்றிற்கு எஜமானர்களாக இருப்பதைவிட மஹாபிரபுவின் சேவகனாக இருப்பதில் திருப்தியடையுங்கள். நீங்கள் பரம பிரபுவான, ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவிடம் சரணடையும்போது உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாகும். நீங்கள் புனிதமடைவீர்கள்.

கடவுள் அல்லது மஹாபிரபுவின் சேவகனாவதென்பது மிகவும் கௌரவமான செயல், இச்செயல் எளிதானதல்ல. எனவே, எவனொருவன் பரம பிரபுவின் சேவகனாக ஆவதற்கு ஒப்புக்கொள்கின்றானோ, அவனது வாழ்வு புனிதமடையும்; மேலும் அது போற்றுதலுக்குரியதாகும்.

நித்தியமாக தொண்டு செய்யும் தளத்திற்கு வருவதே வைஷ்ணவர்களின் கொள்கையாகும். எஜமானராவது அல்ல. எஜமானராவதைவிட எஜமானரின் சேவகனாவதே வைஷ்ணவ தத்துவமாகும். கோபீபர்துபதகமலயோர் தாஸதாஸானுதாஸ:. பிராமணர்கள் தங்களை சத்திரியர்கள், வைசியர்கள், அல்லது சூத்திரர்களின் எஜமானர்கள் என நினைக்கின்றனர். சந்நியாசிகள் தங்களை வானபிரஸ்தர்கள் (குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்கள்), கிருஹஸ்தர்கள், அல்லது பிரம்மசாரிகளின் எஜமானர்கள் என நினைக்கின்றனர். அதுபோன்றே, குடும்பத் தலைவர்கள், சத்திரிய அரசர்கள் என அனைவரும் தங்களை எஜமானர்களாக நினைக்கின்றனர். நீங்கள் ஓரளவிற்கு எஜமானரே, ஆனால் நீங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அல்லது கிருஷ்ணரை எஜமானராக ஏற்கும் பட்சத்தில் உங்கள் வாழ்வு வெற்றி பெறும். இதுவே வாழ்வின் வெற்றிக்கான வழி என ஸ்ரீமத் பாகவதம்(1.2.13) பரிந்துரைக்கின்றது.

அவர் (சைதன்ய மஹாபிரபு) கிருஷ்ணரை மட்டும் தரவில்லை, கிருஷ்ண பிரேமையினையும் அளித்துள்ளார். நீங்கள் ஓர் உயர்ந்த நபரைக் காணலாம், ஆனால் அந்த உயர்ந்த நபரோடு அன்பான உறவினை ஏற்படுத்திக் கொள்வது எளிதல்ல. ஆனால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவோ, கிருஷ்ணரை மட்டுமின்றி கிருஷ்ணருடனான அன்பான உறவையும் அனைவருக்கும் அளித்துள்ளார். இதுவே மனித குலத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு வழங்கிய வரப்பிரசாதமாகும். நீங்கள் சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளின் கீழ் தஞ்சமடையும்போது, கிருஷ்ண பக்தி எளிதில் அடையப் பெறுகின்றது. சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளின் கீழ் நீங்கள் வந்துவிட்டால், கிருஷ்ணரைப் பெற்றுவிட்டீர்கள் என்று பொருள். இதுவே சைதன்ய சரிதாம்ருதத்தின் கூற்றாகும். சைதன்ய மஹாபிரபு வேறெதையும் வழங்கவில்லை, கிருஷ்ணர் மீதான அன்பினை மட்டுமே வழங்கியுள்ளர்.