கலி யுக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆறு கேள்விகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு இந்த இதழில் தொடங்கி, இனிவரும் இதழ்களில் தொடர்ந்து வழங்க உள்ளோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: முன்னுரை, முதல் காண்டத்தின் முதல் அத்தியாயம்

முன்னுரை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டுவதற் காகவும் தமது ஆன்மீக உலகின் அன்பான லீலைகளை நமக்கு வெளிப் படுத்துவதற்காகவும், சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு இப்பூமியில் அவதரித்தார். அவர் தமது லீலைகளை முடித்து திருநாட்டிற்கு திரும்பிச் சென்ற பின்னர், இவ்வுலகம் அறியாமை மற்றும் அதர்மத்தின் இருளில் மூழ்கியது. அச்சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் சப்த அவதாரமாகத் தோன்றிய ஸ்ரீமத் பாகவதம், கலி யுகம் என்னும் பயங்கரமான கடலைக் கடந்து கரை சேர விரும்பும் மக்களின் இதயங்களில் சூரியனைப் போல் ஒளியூட்டுகின்றது.

ஸ்ரீமத் பாகவதத்தின் ஒவ்வொரு காண்டமும் பகவானின் திவ்ய அங்கங்களோடு ஒப்பிடப்படுகின்றன. முதல் இரு காண்டங்கள் அவரது தாமரைப் பாதங்கள் என்றும், மூன்றாம் நான்காம் காண்டங்கள் திருக்கால்கள் என்றும், ஐந்தாம் காண்டம் திருநாபி என்றும், ஆறாவது காண்டம் திருமார்பு என்றும், ஏழாம் எட்டாம் காண்டங்கள் திருக்கரங்கள் என்றும், ஒன்பதாம் காண்டம் திருக்கழுத்து என்றும், பத்தாம் காண்டம் புன்னகை தவழும் திருமுகம் என்றும், பதினொன்றாம் காண்டம் நெற்றி என்றும், பன்னிரண்டாம் காண்டம் சிரம் என்றும் அறியப்படுகிறது.

பன்னிரண்டு காண்டங்களில் முக்கிய மானதான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புன்னகை தவழும் திருமுகமாகத் திகழும் பத்தாம் காண்டத்தை முதல் ஒன்பது காண்டங்களின் தத்துவ விளக்கங்களைப் புரிந்து கொண்ட பின்னரே ஒருவரால் அணுக முடியும். ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாடு அவரது தாமரை பாதங்களிலிருந்து தொடங்குகிறது. அதுபோல் ஸ்ரீமத் பாகவதமும் முதல் காண்டத்திலிருந்து படிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளை நேரடியாக வர்ணிப்பதால் பத்தாம் காண்டம், முதல் ஒன்பது காண்டங்களிலிருந்து மாறுபட்டதாகும். முதல் ஒன்பது காண்டங்களை முறையாக கற்காமல் பத்தாம் காண்டத்தின் உட்பொருளை கிரகிக்க முடியாது. ஸ்ரீமத் பாகவதம் பன்னிரண்டு தனித்தனி காண்டங்களாக உள்ளபோதிலும், இதனை ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக படிப்பது மிகுந்த நன்மையைப் பயக்கும்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு தோன்றிய பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீமத் பாகவதத்தை தமது வாழ்வில் நடைமுறைப்படுத்தி அதனை போதித்துள்ளார். மேலும், பாரத மண்ணில் பிறக்க நேர்ந்த அனைவரும் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

 

பகவத் கீதைக்கும் ஸ்ரீமத் பாகவதத்திற்கும் உள்ள தொடர்பு

பகவத் கீதையின் நான்காம் அத்தியாயம் ஒன்பதாம் ஸ்லோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது பிறவி மற்றும் செயல்கள் தெய்வீகமானவை என்றும், அவற்றின் தெய்வீகத் தன்மையை அறியும் பேரதிர்ஷ்டம் உடையவர் முக்தி பெற்று பகவானின் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்ல தகுதியுடையவர் ஆகின்றார் என்றும் கூறுகிறார். எனவே, ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகமான தன்மை, மற்றும் லீலைகளின் அறிவு ஒன்று மட்டுமே முக்தியடையப் போதுமானதாகும். ஸ்ரீமத் பாகவதத்தைத் தொடர்ந்து படிப்பதால் இதனை உணர முடியும்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளையும் அவர் தமது பக்தர்களுடன் மேற்கொள்ளும் அன்புப் பரிமாற்றங்களையும் விளக்கும் நூலாகும். மனித குலத்திற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள அறிவுரையான பகவத் கீதையைக் கற்ற பின்னர், ஆன்மீகத் தன்னுணர்வில் மேலும் முன்னேற்றம் பெற, ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்கும் திருப்பணியை மேற்கொள்ளலாம்.

நைமிஷாரண்யத்தில் கூடிய முனிவர்கள் சூத கோஸ்வாமியை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி மிகவுயர்ந்த நன்மையை வழங்கும் கேள்விகளை எழுப்பினர்.

அறிமுக ஸ்லோகங்கள்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் மூல காரணமாக இருப்பவரும், எல்லாவற்றையும் பூரணமாக அறிந்தவரும், முற்றிலும் சுதந்திரமானவரும், பிரம்மாவிற்கு ஆதியில் வேத ஞானத்தை அளித்தவரும், தற்காலிகத் தோற்றத்தை உண்மையாகத் தோன்றச் செய்யும் மாயைக்கு காரணமானவரும், பூரண உண்மையும், தேவகியின் மைந்தனுமான வாஸுதேவரை தாம் வணங்குவதாக ஸ்ரீல வியாஸதேவர் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் தெரிவிக்கின்றார். ஸ்ரீமத் பாகவதத்தின் கருப்பொருளாக விளங்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை காயத்ரி மந்திரத்திற்கு இணையானதாகக் கருதப்படும் முதல் ஸ்லோகத்தில் வணங்கிய பின்னர், ஸ்ரீமத் பாகவதத்தின் புகழை அவர் பேசுகிறார்.

ஸ்ரீமத் பாகவதமானது, பௌதிக நோக்கமுடைய செயல்களை முற்றிலுமாக நிராகரித்து மிகவுயர்ந்த உண்மையை வழங்குகின்றது, இது தூய்மையான இதயம் கொண்டவர்களால் புரிந்துகொள்ளப்படக் கூடியது, மூவகைத் துன்பங்களை வேரோடு அறுக்கக் கூடியது, மேலும் பணிவுடன் கேட்பவர்களின் இதயத்தில் முழுமுதற் கடவுள் அடையப் படுகிறார்.

வேத ஞானத்தின் கனிந்த பழமான ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளிலிருந்து வெளிவந்துள்ள காரணத்தினால் மேலும் அமிர்தமாக உள்ளது என்றும், முக்தி பெற்ற ஜீவன்களாலும் அனுபவிக்கப்படக்கூடியதாக உள்ளது என்றும் அவர் போற்றுகிறார்.

கலி யுகத்திலிருந்து காப்பதற்கான யாகம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது திருத்தலத்திற்குத் திரும்பிச் சென்ற பின்னர், சௌனக ரிஷியைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நீண்டதொரு யாகத்தை நிறைவேற்றுவதற்காக நைமிஷாரண்யத்தில் கூடினர். (நைமிஷாரண்யத்தின் முக்கியத்துவத்தை வாயவீய தந்திரம் மற்றும் வராஹ புராணத்தில் காணலாம். இப்பிரபஞ்சத்தைப் படைத்தவரான பிரம்மதேவர் பிரபஞ்சத்தை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சக்கரத்தைப் பற்றி நினைத்தார், அச்சக்கரத்தின் அச்சு நைமிஷாரண்யத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதால், இது மகா புண்ணிய ஸ்தலமாகும்.) விரைவில் தொடங்கவிருந்த கலி யுகத்தில் பிறவியெடுக்கும் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, அம்முனிவர்கள் நைமிஷாரண்யத்தை யாகம் புரிவதற்காகத் தேர்ந்தெடுத்தனர். அவ்விடத்தில் செய்யப்படும் வேள்விகளால் அசுர சக்திகள் பலமிழந்துவிடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும், முழுமுதற் கடவுளின் திருநாமம், லீலை, புகழ் ஆகியவற்றைக் கேட்டல் மற்றும் பாடுதல் என்னும் ஸங்கீர்த்தன யாகமே இக்கலி யுகத்திற்கான நடைமுறை யாகம் என்பதை அம்முனிவர்கள் அறிந்திருந்தனர். எனவே, வீழ்ச்சியுற்ற இந்த யுக மக்களுக்கு ஓர் உதாரணமாக அமையும் பொருட்டு ஓராயிரம் வருடங்கள் கிருஷ்ண கதையைக் கேட்கத் தயாராயினர்.

 

சூத கோஸ்வாமிக்கு மரியாதை செலுத்துதல்

ஒரு நாள், அக்னி ஹோத்ர யாகம் உட்பட தங்கள் காலைக் கடமைகளை முடித்துக் கொண்ட பின், ஸ்ரீல சூத கோஸ்வாமியை நைமிஷாரண்யத்தில் இருந்த ரிஷிகள் அனைவரும் மிக்க மரியாதையுடன் வியாஸாசனத்தில் அமர்த்தினர். சூத கோஸ்வாமியினை அடக்கமான பண்புடையவர் என்றும், பாவங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் என்றும், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், மற்றும் இதிகாசங்களை நன்கு அறிந்தவர் என்றும், வியாஸதேவரின் சீடராக ஞானத்தை கிரகித்தவர் என்றும், குருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அவர்களது கருணையால் முழுமையான ஞானத்தை பெற்றுள்ளீர்கள் என்றும் புகழ்ந்த பின்னர், தங்களது கேள்விகளை முன்வைத்தனர்.

முனிவர்களின் ஆறு கேள்விகள்

மனித குலத்திற்கு மிகுந்த நன்மையளிப்பது என்ன: “மக்களுக்கு பூரண நன்மையைத் தருவது எது என்பதை எங்களுக்கு விளக்கி அருளுங்கள். கலி யுகத்தின் மனிதர்கள் அற்ப ஆயுள் படைத்தவர்களாக, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாக, சோம்பேறிகளாக, தவறாக வழிநடத்தப்பட்டவர்களாக, அதிர்ஷ்டமற்றவர்களாக, அனைத் திற்கும் மேலாக எப்போதும் அமைதியற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உன்னத நன்மையை வழங்குவது என்ன?”

எல்லா சாஸ்திரங்களின் சாராம்சம் என்ன: “பற்பல சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள எண்ணற்ற வகையான கடமைகளை கலி யுக மக்களால் அறிய இயலாது. எனவே, புனிதமான அந்த எல்லா சாஸ்திரங்களின் சாரத்தினையும் அனைவரின் நன்மைக்காக எங்களுக்கு விளக்குங்கள். சாஸ்திர சாரத்தைக் கேட்பதால் கலி யுக மக்களின் இதயங்கள் முழுமையாகத் திருப்தி அடையும்.”

கிருஷ்ணர் தோன்ற காரணம் என்ன: “மாமுனிவரே, முழுமுதற் கடவுள் எக்காரணத்திற்காக தேவகியின் கர்ப்பத்தில் தோன்றி ஒரு மனிதராக லீலை செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரைப் பற்றியும் அவரது அவதாரங்களைப்  பற்றியும் அறிய நாங்கள் மிகவும் ஆவலாக இருப்பதால், அந்த அற்புதமான உன்னத லீலைகளை எங்களுக்கு எடுத்துரையுங்கள். முந்தைய ஆச்சாரியர்கள் இதுகுறித்து அளித்துள்ள உபதேசங்களைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம்.

“பகவானின் திருநாமத்தை உச்சரிப்போர் (அதனை கவனமின்றி செய்தால்கூட) பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து உடனடியாக விடுபட முடியும். இத்தகைய தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்பவர்கள் உடனடியாகத் தூய்மையடைகின்றனர். கங்கையில் குளிப்பதுகூட ஒருவரைப் படிப்படியாகவே தூய்மைப்படுத்தும்.

“கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதும் புகழ் பாடுவதும் எப்போதும் உயர்வைத் தரக் கூடியது. சண்டை சச்சரவுகள் மிகுந்த மோசமான இந்த யுகத்தின் கேடுகளிலிருந்து விடுபட விரும்பும் எவர்தான் முழுமுதற் கடவுளின் புகழைக் கேட்க விரும்பாமல் இருப்பர்?”

புருஷ அவதாரங்களை விளக்குக: “நாரதரைப் போன்ற பெரும் பக்தர்கள் எப்போதும் அவரது திருநாமத்தை உச்சரித்தபடி அவரது புகழைப் பாடிக் கொண்டே உள்ளனர். அந்த முழுமுதற் கடவுள் இந்த உலகைப் படைப்பதற்காக மேற்கொண்டுள்ள பல்வேறு அவதாரங்களையும் (புருஷ அவதாரங்களையும்) நிகழ்த்திய லீலைகளையும் விளக்குங்கள்.”

இதர அவதாரங்களை விளக்குக: “சாகசங்கள் நிறைந்த பகவானின் பல்வேறு இதர அவதாரங்களின் லீலைகளை விளக்குங்கள்.

“கிருஷ்ண கதையைக் கேட்பதில் நாங்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை. பகவானுடனான உன்னத உறவை வளர்த்துக் கொண்டவர்கள் ஒவ்வொரு கணமும் அவரது லீலைகளைக் கேட்டு சுவைக்கின்றனர்.”

தர்மம் யாரிடம் அடைக்கலம் புகுந்தது: “மனிதனின் எல்லா நற்குணங்களையும் அழிக்கக்கூடிய கலி யுகம் என்னும் கடினமான கடலைக் கடப்பதற்கு விரும்பும் நாங்கள், அதற்கான கப்பலின் தலைவராக தங்களை ஏற்கின்றோம். எல்லா யோக சக்திகளுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்போது தமது சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், தர்மத்தின் உண்மையான கொள்கைகள் யாரிடம் அடைக்கலம் புகுந்துள்ளன?”

மாமுனிவர்களின் கேள்விகளைக் கவனத்துடன் கேட்ட சூத கோஸ்வாமி, அவர்களுக்கு வழங்கிய பதிலை (இரண்டாம் அத்தியாயத்தினை) அடுத்த இதழில் காண்போம்.

 

முதல் காண்டம் முதல் அத்தியாயத்தின் பகுதிகள்

(1) மங்களாசரணம் (1.1-3)

வசுதேவரின் புதல்வரான ஸ்ரீ கிருஷ்ணரே பரம்பொருள்

எல்லா போலி தர்மங்களும் இங்கு நிராகரிக்கப்படுகிறது

அமிர்தம் போன்றது

பொறாமையற்ற பணிவான மனோநிலையில் அறியப்படுவது

(2) சூத கோஸ்வாமிக்கு மரியாதை செய்தல் (1.4-8)

ஆசிர்வதிக்கப்பட்டவர், பணிவானவர், வியாசரின் பிரதிநிதி

(3) முனிவர்களின் ஆறு கேள்விகள் (1.9-23)

மனித குலத்திற்கு உயர்ந்த நன்மையளிப்பது என்ன?

எல்லா சாஸ்திரங்களின் சாராம்சம் என்ன?

வசுதேவரின் மகனாக பகவான் தோன்ற காரணம் என்ன?

புருஷ அவதாரங்களை விளக்குக.

பகவானின் பல்வேறு அவதாரங்களையும் லீலைகளையும் விளக்குக.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருநாடு திரும்பியதும் தர்மம் யாரிடம் அடைக்கலம் புகுந்தது?

பாகவதம் கேட்டல்: சில அடிப்படை தகவல்கள்

ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்து வியாஸதேவரைப் பிரதிநிதிப்பவரின் தகுதிகள்

  1. ஸ்ரீல வியாஸதேவரின் கருத்தை மாற்றாமல் உள்ளது உள்ளபடி உரைத்தல்
  2. ஸ்ரீமத் பாகவதத்தை குரு சீடப் பரம்பரையில் கேட்டவராக, தனது குருவினால் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருத்தல்.
  3. முந்தைய ஆச்சாரியர்களின் பாதையில் உறுதியாக இருந்து, தன்னிச்சையான கற்பனைகளில் செல்லாதிருத்தல்
  4. மாசற்ற நடத்தை
  5. அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் புலமை

பாகவதத்தைக் கேட்பவரின் தகுதிகள்

  1. அடக்கத்துடன் கேட்டல்
  2. பாகவதம் உரைப்பவரிடமும் பாகவதத்தின் மீதும் பெரும் நம்பிக்கை, மரியாதை
  3. பணிவுடன் கேள்விகள் கேட்டல்
  4. குருவைத் திருப்தி செய்தல்

யாரிடமிருந்து கேட்கக் கூடாது?

  1. வைஷ்ணவர் அல்லாதவர்
  2. வயிற்றுப் பிழைப்பிற்காக பாகவதம் சொல்பவர்
  3. மாயாவாதிகள்
  4. பெயர், புகழுக்காக புலமையைக் காட்டும் நோக்கத்துடன் பேசுபவர்

ஏன் இவர்களிடமிருந்து கேட்கக்கூடாது?

கிருஷ்ணரைப் பற்றிய செய்திகள் சந்தேகமின்றி தெய்வீகமானவை; இருப்பினும், பாம்பினால் தீண்டப்பட்ட பால் அதன் விஷத்தன்மையினால் பாதிக்கப்படுவதைப் போல, சுயநல நோக்கம் கொண்டவர்களின் பாகவத உரையைத் தவிர்த்துவிட வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives