மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியிலான நோய்கள் வருமா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: உடல் என்பது நோய்களுக்கு உட்பட்டதாகும். என்னால் அதனை எவ்வாறு தவிர்க்க இயலும்? ஆனால் நான் என்னை இந்த உடலுடன் அடையாளப்படுத்தாவிடில், நோயானது என்னை பாதிப்பதில்லை. உதாரணமாக, ஓர் அருமையான காரில் இரண்டு நபர்கள் பயணம் செய்வதாக எடுத்துக்கொள்வோம். ஏதோ காரணத்தினால் அந்த காரானது சற்று சேதமடைந்துவிடுகிறது. காருக்கு உரிமையாளராக இருக்கும் மனிதன் அதனால் பாதிக்கப்படுகிறான்; ஆனால் மற்றவன் அதே காரில் அமர்ந்துள்ளபோதிலும், அதனால் பாதிக்கப்படுவதில்லை. இஃது ஏன்? இதனை மனோவியல் ரீதியாக தங்களால் விளக்கவியலுமா? உரிமையாளர் பாதிக்கப்படுகிறார், அவர் கவலை கொள்கிறார், ஆனால் அவருடைய நண்பர் கவலைப்படுவதில்லை. உரிமையாளரின் கவலைக்கு என்ன காரணம்?

 

டாக்டர் ஃப்ரேஜர்: அவருடைய உரிமை உணர்வு.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இது தனது சொத்து என்பதில் உரிமையாளர் மூழ்கியுள்ளார்: “ஐயோ, என்னுடைய கார் சேதமடைந்துவிட்டது!” ஆனால் அவருடைய நண்பரிடம் உரிமை உணர்வு இல்லையென்பதால், அவர் பாதிக்கப்படுவதில்லை. அதுபோலவே, உடலானது ஆத்மாவிலிருந்து வேறுபட்டதாகும். உடலின் உரிமையாளர் என்னும் உணர்விலிருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

 

டாக்டர் ஃப்ரேஜர்: அப்படியெனில், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கும் உடல் ரீதியிலான பிரச்சனைகள் வரலாம், ஆனால் அவர்கள் ஆன்மீக உணர்வில் இருப்பதால் பாதிக்கப்படாமல் இருப்பார்களா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. தன்னுடைய காரிலிருந்து முற்றிலுமாக பற்றற்று இருக்கும் நபரைப் போன்றவர் அவர், “சரி, கார் சேதமடைந்துவிட்டது. நான் சற்று பணம் செலவழிக்க வேண்டியிருக்கும், ஆனால் பரவாயில்லை.” ஆனால் கார் தன்னுடைய சொத்து என்பதில் முற்றிலுமாக மூழ்கியிருக்கும் நபர் நினைக்கிறான், “ஐயோ, என்னுடைய கார் சேதமடைந்துவிட்டது!” அதுபோலவே, உடலின் அடையாளத்தில் மூழ்கியிருப்பவன் அதனால் பாதிக்கப்படுகிறான்; ஆனால் அதில் மூழ்காதிருப்பவன்–தான் இந்த உடல் அல்ல என்பதை அறிந்துள்ளவன்–பாதிக்கப்படுவதில்லை. இங்கு ஒருவரின் உணர்வுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. கிருஷ்ண உணர்வுடையவனும் நோயுறலாம், ஆனால் அவன் நினைக்கிறான், “இது வரும் போகும். இஃது ஒரு பொருட்டல்ல. நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன். ஹரே கிருஷ்ண.” இதுவே வேற்றுமை. இஃது ஒருவருடைய உணர்வின் முன்னேற்றத்தைப் பொறுத்ததாகும்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: கெட்ட எண்ணங்களுடன் இருப்பவர்கள் தங்களிடம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவன் கிருஷ்ணருடைய எண்ணத்தில் மூழ்கினால், அங்கு கெட்ட எண்ணங்களுக்கு வாய்ப்பு இல்லை. உங்களால் ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி மட்டுமே யோசிக்க முடியும். நீங்கள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ணரைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருப்பீர்களானால், அங்கு கெட்ட எண்ணங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.

 

டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதன்படி, கிருஷ்ண உணர்வுடைய மக்கள் தங்களுடைய தீய எண்ணங்களிலிருந்து தானாக விலகி விடுகிறார்கள், அந்த எண்ணங்களை மற்றவர்களிடம் எடுத்துரைத்து அதன் மூலமாக விடுபடுவதில்லை. அப்படித்தானே?

 

ஸ்ரீல பிரபுபாதர்: எங்களுடைய வழிமுறை இது போன்றதாகும்: ஒருவன் எங்களுடைய இயக்கத்திற்கு கெட்ட எண்ணங்களுடன் வரலாம், ஆனால் அவன் தொடர்ந்து கீர்த்தனம், கீர்த்தனம், கீர்த்தனம் என ஈடுபடும்போது, அந்த கெட்ட எண்ணங்களிலிருந்து அவன் விடுபடுகிறான்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: அவன் தன்னுடைய கெட்ட எண்ணங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லையா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அவன் பேசலாம், பேசாமல் இருக்கலாம், அது பொருட்டல்ல. ஆனால் கெட்ட எண்ணங்கள் அவனைவிட்டு அகன்றுவிடும்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: என்னால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்களும் உங்களுடைய மக்களும் முன்பின் தெரியாத நபர்களை அணுகி அவர்களிடம் உங்களுடைய விஷயத்தை எடுத்துரைக்கிறீர்கள். ஏன் நீங்கள் அவ்வாறு செய்து அவர்களை மாற்றுகிறீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்களும் மக்களைச் சந்திக்கிறீர்கள். பைத்தியக்காரன் ஒருவன் தங்களிடம் வரும்போது, நீங்கள் அவனை நல்ல மனிதனாக மாற்றுகிறீர்கள். அது மற்றவர்களை மாற்றுவதில்லையா?

 

டாக்டர் ஃப்ரேஜர்: ஆம், ஆனால் அவன் என்னிடம் வருகிறான். உங்களுடைய மக்களோ வெளியில் சென்று மற்றவர்களைச் சந்திக்கிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நாங்கள் துன்பப்படுபவர்களுக்கு உங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த நண்பர்களாக உள்ளோம். நீங்கள் கட்டணம் வசூலிக்கிறீர்கள், ஆனால் நாங்கள் எந்த சுயநல நோக்கமும் இன்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, நாங்கள் உங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த நண்பர்கள்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: முடியாது என்று யாரேனும் உங்களிடம் கூறினால் என்ன செய்வீர்கள்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: அப்போது அது முடியாது. உதாரணமாக, ஒரு பழ வியாபாரி கூறுகிறான், “இங்கு அருமையான மாம்பழம் உள்ளது.” அதற்காக அவனிடம் அனைவரும் வாங்குவார்கள் என்பது அர்த்தமில்லை. மாம்பழம் நல்லதாக இருக்கலாம். ஒருவன் அதனை வாங்கவில்லை என்பதால், மாம்பழம் கெட்டதாகிவிட்டது என்பது பொருளல்ல. அருமையான மாம்பழத்தை வாங்காமல் செல்வது அவனுடைய துரதிர்ஷ்டமே.

 

டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கட்டணம் வசூலிப்பது பற்றி கூறினீர்கள். கட்டணம் வசூலிக்காவிடில் இந்தப் பணியை செய்பவர்கள் எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும்?

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் இதனைத் தொழிலாக செய்கிறீர்கள், ஆனால் நாங்கள் இதனைத் தொழிலாக செய்வதில்லை. நாங்கள் எந்தவொரு சம்பளத்தையும் எதிர்பார்க்காமல் எங்களுடைய அறிவினை விநியோகம் செய்கிறோம். எங்களுடைய சொந்த இலாபத்தைப் பற்றிய விருப்பம் ஏதுமின்றி, மிகவுயர்ந்த விஷயமான கிருஷ்ண உணர்வினை விநியோகம் செய்கிறோம்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: இருந்தாலும், உங்களிடம் இணைபவர்கள் தங்களுடைய நேரம், சக்தி என அனைத்தையும் தங்களிடம் வழங்குவதாக நான் காண்கிறேன்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர்கள் அனைத்தையும் வழங்குகிறார்கள். உதாரணமாக, இந்த பக்தர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அனைத்தையும் கைவிட்டுள்ளனர். அவர்கள் ஏன் அனைத்தையும் கைவிட்டுள்ளனர்? நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. அனைத்தையும் கிருஷ்ணருக்காக கைவிடும் இவர்களை முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுடைய கருத்து என்ன?

 

டாக்டர் ஃப்ரேஜர்: அஃது அவர்களின் சொந்த விருப்பம். அவர்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு வழங்க விரும்புகிறார்கள்.

 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அனைத்தையும் கிருஷ்ணருக்கு வழங்குவது இயற்கையானது, புத்திசாலித்தனமானது. கிருஷ்ணரிடமிருந்து எதையும் தக்கவைத்துக்கொள்ளுதல் அறிவற்ற நிலையாகும். இஃது இந்த கோயிலிலிருந்து ஏதோ ஒரு பொருளைத் திருடுவதைப் போன்றதாகும். உதாரணமாக, ஒருவர் இந்த பெட்டியை எனக்கு தெரியாமல் எடுப்பதாக எடுத்துக்கொள்வோம். அவன் மிகுந்த யோசனையில் இருப்பான்: “நான் இதனை சுவாமிஜிக்குத் தெரியாமல் எடுத்துவிட்டேன்! அவர் என்ன நினைப்பார்?” ஆனால் இந்த பெட்டியை திருப்பி கொடுக்கும்போது அவன் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுகிறான்.

 

அதுபோலவே, அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை, அனைத்தும் கடவுளுக்குச் சொந்த மானவை. எதுவும் எனக்குச் சொந்தமானதல்ல, இந்த உடல்கூட எனக்குச் சொந்தமானதல்ல. எனவே, அனைத்தையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையின் பக்குவமான நிலையாகும். எனவே, ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு வரும்போது, அவன் கிருஷ்ணரிடமிருந்து பெற்ற அனைத்தையும் அவரிடம் திருப்பித் தருகிறான். இதுவே சீரான வாழ்க்கையாகும். மற்றவர்கள் அனைவரும் யாரோ ஒருவரின் சொத்தினை தன்னுடையது என்று கூறிக்கொண்டிருக்கக்கூடிய திருடர்களாவர்.

 

உதாரணமாக, அமெரிக்க என்னும் உங்களுடைய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இஃது உங்களுடைய நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக் கிறீர்களா? 200 வருடங்களுக்கு முன்பு இஃது உங்களுக்கு சொந்தமுடையதாக இருக்கவில்லை: இது சிவப்பு இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் இதை உங்களுடைய நாடாக உரிமை கொண்டாடுகிறீர்கள். ஏன்? இன்னும் 200 வருடங்களுக்குப் பின்னர் இது வேறு யாருக்காவது சொந்தமாக இருக்கலாம். அப்படியெனில், இஃது ஏன் இப்போது உங்களுடைய நாடாக இருக்கிறது? அதுபோலவே, கடவுள் நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்துள்ளார், கடவுள் நமக்கு உடலைக் கொடுத்துள்ளார். கடவுள் நமக்கு மனதைக் கொடுத்துள்ளார், கடவுள் நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளார். எனவே, அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது, இதைப் புரிந்துகொள்வது கிருஷ்ண உணர்வு என்று அழைக்கப்படுகிறது.

 

டாக்டர் ஃப்ரேஜர்: தத்துவங்களைப் படிப்பது பற்றி…

 

ஸ்ரீல பிரபுபாதர்: தத்துவங்களைப் படிப்பதன் மூல மாக அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே உண்மையான தத்துவமாகும்: ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், “அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது.” நீங்கள், நான், மற்றும் ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால், கடவுளின் சொத்தினை முறையாக உபயோகிப்பதற்கான உரிமை நமக்கு உள்ளது, ஆனால் நம்முடைய தேவைக்கு அதிகமாக உபயோகிக்க இயலாது. நீங்கள் கடவுளின் மகன், நானும் கடவுளின் மகன், ஒவ்வொன்றும் கடவுளின் சொத்து. நீங்கள் உங்களுடைய தந்தையின் சொத்தினை அனுபவிக்கலாம், நானும் அதனை அனுபவிக்கலாம், ஆனால் நீங்கள் என்னுடைய பாகத்தினை எடுத்துக்கொள்ளும்போது நான் துன்பமடைகிறேன், அது சட்ட விரோதமாகிறது. நாம் அனைவரும் கடவுளின் மகன்கள் என்பதையும், அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டால்–மிருகங்கள், பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள் என அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்பதையும் கடவுளின் சொத்தினை முறையாக நாம் உபயோகிக்க வேண்டும் என்பதையும், புரிந்து கொண்டால்–அதன்பின் எந்த பிரச்சனையும் இருக்காது. இதுவே இறையுணர்வாகும்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: நிச்சயமாக நீங்கள் கூறுபவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில் கிருஷ்ண உணர்வு மட்டுமே ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உணர்வு என்று நீங்கள் கூறுகிறீர்களா?

 

ஸ்ரீல பிரபுபாதர்: இதர உணர்வுகள் முழுமையானவை அல்ல. கிருஷ்ண உணர்வே முழுமையானதாகும். உதாரணமாக, அமெரிக்கன் என்னும் தேசிய உணர்வானது முழுமையான உணர்வல்ல. கிருஷ்ண உணர்வு என்பதைப் பற்றி நாம் பேசும்போது, அது முழுமையானதாகும்.

 

டாக்டர் ஃப்ரேஜர்: இஃது இந்து மதத்தைக் காட்டிலும் முழுமையானதா?

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி பேசுகிறோம், இந்து மதம் அல்லது கிறிஸ்துவ மதம் என்று பேசுவதில்லை. கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர். கடவுள் இந்துவோ கிறிஸ்துவனோ அல்ல; அவர் அனைவருக்குமானவர். கடவுளின் மீது எளிமையான முறையில் அன்பு செலுத்துங்கள். நீங்கள் இந்து, கிறிஸ்துவன், அல்லது முஸ்லிம் என்பது ஒரு பொருட்டல்ல.

 

டாக்டர் ஃப்ரேஜர்: என்னைச் சந்தித்ததற்கும் என்னுடன் பேசியதற்கும் மிக்க நன்றி.

 

ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment