வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 24

சென்ற இதழில், பிருது மஹாராஜர் பகவானின் திருநாட்டிற்கு எழுந்தருளியதைக் கண்டோம். இந்த இதழில், அவரது வம்சத்தினரைப் பற்றியும் சிவபெருமானின் கருணையை பிரசேதர்கள் பெற்றதைப் பற்றியும் காணலாம்.

பிருது மஹாராஜரின் வம்சம்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.

விஜிதாஸ்வன் மிகுந்த பெருந்தன்மை வாய்ந்தவர் என்பதால் தமக்கு குற்றம் இழைத்த இந்திரனை மன்னித்தார். மிகவும் இளகிய மனம் படைத்தவர் என்பதால், அவர் தண்டிப்பதிலோ கண்டிப்பதிலோ நாட்டம் அற்றவராக இருந்தார், கடமைக்காக மட்டுமே இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார், மக்களின் நலனுக்காக பலவித வேள்விகளில் ஈடுபட்டிருந்தார், தன்னுணர்வு பெற்றவராக இருந்ததால் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரவச நிலையை அடைந்திருந்தார்.

இவர் சிகண்டினி என்பவளை மணந்து, அக்னிதேவனைப் போன்ற சக்தி பெற்ற மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். மேலும், நபஸ்வதி என்பவளை மணந்து ஹவிர்தானன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். ஹவிர்தானன் ஹவிர்தானீ என்பவளை மணந்து பர்ஹிஷதன், கயன், ஸீக்லன், கிருஷ்ணன், சத்யன், ஜிதவிரதன் ஆகிய ஆறு புத்திரர்களைப் பெற்றார்.

பிரசேதர்களின் தவம்

ஹவிர்தானனின் ஆற்றல்மிக்க மகனான பர்ஹிஷதன் ஏராளமான வேள்விகளைச் செய்தார். அவர் மிகவுயர்ந்த தகுதிகளைப் பெற்று பிரஜாபதி நிலையை அடைந்தார். மன்னர் பர்ஹிஷதன் பிராசீனபர்ஹிஸ் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் சமுத்திரராஜனின் மகளான ஸதத்ருதியை பிரம்மதேவனின் ஆணைப்படி மணந்தார். அப்பெண் அனைத்து லோகவாசிகளையும் கவரும் வகையில் வனப்பு மிக்கவளாக இருந்தாள். ஸதத்ருதி மற்றும் பர்ஹிஷதனுக்கு பத்துப் புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பிரசேதர்கள் எனப்பட்டனர்.

மணமுடித்து பிள்ளைகளைப் பெற வேண்டும் என தந்தையினால் கட்டளையிடப்பட்டபோது, இவர்கள் பத்தாயிரம் ஆண்டுகள் நீருக்கு அடியில் தவம் செய்ய தீர்மானித்து வீட்டைவிட்டு புறப்பட்டனர்.

இன்னிசை வாத்தியங்களுடன் சிவபெருமான் பிரசேதர்களுக்கு காட்சி தருதல்

சிவபெருமானின் தரிசனம்

பிரசேதர்கள் மிகப் புனிதமானவர்கள் என்பதால் தங்கள் தந்தையின் கட்டளையை உளபூர்வமாக ஏற்று மேற்குத் திசையை நோக்கிப் பயணித்தனர். (குறிப்பு: தந்தை, மன்னர், ஆன்மீக குரு ஆகியோர் முழுமுதற் கடவுளின் பிரதிநிதிகளாவர். எனவே, அவர்கள் பகவானுக்குரிய மரியாதையுடன் வணங்கதக்கவர்கள். அவர்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும். தங்களைச் சார்ந்தோரை பகவானின் தூய பக்தர்களாக்குவதே அவர்களின் கடமையாகும்.)

வழியில் அவர்கள் கடல்போன்று பெரியதோர் ஏரியைக் கண்டனர். அந்த ஏரியும் அதில் வாழ்ந்த உயிரினங்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தன. ஏரியில் நீலத்தாமரை, செந்தாமரை முதலிய பல்வேறு வகை மலர்கள் பூத்துக் குலுங்கின. அன்னம், சக்கரவாகம் போன்ற எழிலான நீர்ப்பறவைகளும் காணப்பட்டன. மதுவுண்ட வண்டுகள் ரீங்காரமிட, மரங்கள், கொடிகள் எல்லாம் தென்றலில் அசைந்தாடின. இத்தகைய காட்சி காண்பதற்கு மிக இனிமையானதாக இருந்தது.

மேலும், அங்கே மத்தளம் மற்றும் வாத்தியங்களின் இன்னிசையைக் கேட்டு, அவர்கள் மிகவும் வியப்புற்றனர். அப்பொழுது சிவபெருமான் தமது பரிவாரங்கள் சூழ நீர் தேக்கத்திலிருந்து வெளிவருவதைக் கண்டனர். அவரை தரிசித்து ஆனந்தமடைந்தனர். அவரது உடல் உருக்கிவார்த்த பொன்னிறமாகவும் கழுத்து நீல நிறமாகவும் இருந்தது. திடீரென்று அவரது தரிசனத்தை பெற்ற பிரசேதர்கள் மிகுந்த குதூகலத்துடன் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

சிவபெருமானின் வாழ்த்து

பிரசேதர்கள் சிறந்த பக்தர்கள் என்பதால், பக்தர்களைக் காக்கும் தன்மை கொண்ட சிவபெருமான் அவர்களிடம் மிக்க மகிழ்ச்சியடைந்து பின்வருமாறு பேசலானார்:

உங்களுக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாகட்டும். உங்கள் விருப்பத்தை நான் அறிவேன். உங்களுக்கு அருள்புரிவதற்காகவே நான்  காட்சியளிக்கிறேன். அனைவரையும் ஆட்டுவிக்கும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை சரணடையும் ஒருவர் உண்மையில் எனது அன்பிற்கும் உரியவராகிறார்.

நூறு பிறவிகளில் தனது ஸ்வதர்மத்தை ஒழுங்காக நிறைவேற்றுபவன் பிரம்மதேவனின் பதவியை அடைகிறான். அதிலிருந்து மேலும் முன்னேறுபவன் என்னை அடைகிறான். ஆனால் பகவான் கிருஷ்ணரையோ விஷ்ணுவையோ சரணடைந்து பக்தித் தொண்டு செய்பவர் உடனடியாக தெய்வீக உலகை அடைகிறார்கள். தேவர்களும் இப்பௌதிக உலகின் அழிவிற்குப் பின்னரே இதுபோன்று தெய்வீக உலகை அடைகின்றனர். பகவானின் பக்தர்களான நீங்கள் அவரைப் போன்றே மதிக்கதக்கவர்கள், எனது அன்பு என்றென்றும் பகவானின் பக்தர்களுக்கு உண்டு. அதுபோலவே, பக்தர்களும் எனக்கு மரியாதை செய்கின்றனர்.

இப்பொழுது உங்களுக்கு உன்னதமானதும் தூய்மையானதும் மங்கலகரமானதுமான மந்திரத்தை வழங்க இருக்கிறேன். இது வாழ்வின் இறுதி இலட்சியத்தை அடைய விரும்புபவருக்குரிய உயர்ந்த பிரார்த்தனையாகும். எனவே, கவனமுடனும் முழு ஈடுபாட்டுடனும் கேட்பீராக.”

இவ்வாறு கூறிய சிவபெருமான் முழுமுதற் கடவுளை பிரார்த்திக்கலானார்:

நம: பங்கஜநாபாய பூதஸூக்ஷ்மேந்த்ரியாத்மனே

வாஸுதேவாய ஸாந்தாய கூடஸ்தாய ஸ்வரோசிஷே

ஸங்கர்ஷணாய ஸூக்ஷ்மாய துரந்தாயாந்தகாய ச….

படைப்பிற்கு மூலாதாரமும் எங்கும் வியாபித்திருப்பவரும் அமைதியானவரும், சுயப்பிரகாசம் உடையவரும் ஆறுவித பௌதிக மாற்றங்களுக்கு உட்படாதவருமான வாசுதேவன் தாங்களே. நீரே சூட்சும பொருட்களுக்கு

மூலகாரணமாக விளங்குபவர், ஸங்கர்ஷணரும், பிரத்யும்னரும் நீரே, எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு செலுத்துகிறேன். மனம் மற்றும் புலன்களின் நாயகராக இருக்கிறீர். ஆகையால், எனது வணக்கங்களை உங்களுக்கு மீண்டும்மீண்டும் சமர்ப்பிக்கிறேன்.”

சிவபெருமான் பிரசேதர்களிடம் பகவான் கிருஷ்ணரைப் பற்றிப் புகழுதல்

சிவபெருமான் தொடர்ந்து பிரார்த்தித்தல்

சிவபெருமான் தொடர்ந்தார்: கருணைமிகு புன்னகை, பக்தர்களை இரட்சிக்கும் ஓரவிழிப் பார்வை, சுருளான கார்குழல், ஒளிரும் குண்டலங்கள், தகதகக்கும் கிரீடம், பற்பல பொருத்தமான அணிகலன்கள், சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மற்றும் கௌஸ்துப மணிமாலை, தங்கத் தோடுகள் போன்ற ஸ்ரீவத்ஸம், ஆலிலை போன்ற அடிவயிறு, தாமரையின் மகரந்தம் போன்ற அழகிய மஞ்சள் ஆடை, விரிந்து மலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகள் என விசேஷ அழகுகள் நிறைந்த கட்டழகுத் திருமேனியை உடையவரே, உமது திருவடித் தாமரையின் விரல் நகங்களின் பிரகாசம், கட்டுண்ட ஆத்மாக்களின் மன இருளை விரட்டுகின்றது,  பிரபுவே, அனைவரின் குருவே! பக்தர்களின் மனதிலுள்ள எல்லா வித இருளையும் எப்போதும் விரட்டும் உமது திவ்ய ரூபத்தை எனக்குக் காட்டியருள்வீராக. அறியாமையின் இருளால் மூடப்பட்டிருக்கும் கட்டுண்ட ஆத்மாக்களின் இதயங்களில் ஞான ஒளியை ஏற்றி அருள்வீராக.”

தூய பக்தர்களின் புகழ்

போற்றுதலுக்குரிய பகவானே, தமது வாழ்வைத் தூய்மை செய்ய விரும்புவோர், விதிக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற விரும்புவோர், அச்சத்திலிருந்து விடுதலை பெற விரும்புவோர், ஸ்வர்கத்தை ஆளும் மன்னர், உமது பிரம்மஜோதியில் கலக்க விரும்புவோர், வாழ்வில் முழு நிறைவு பெற விரும்புவோர் ஆகிய அனைவரும் உமது தூய பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டியவராவர்.

வெல்வதற்கரிய காலனும், உமது திருவடித் தாமரைகளில் சரணடைந்துள்ள பக்தர்களை அணுகுவதற்கு அஞ்சுகிறான். ஒரு தூய பக்தருடன் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் சங்கம் கொண்டால்கூட, அவன் கர்மம், ஞானம், தேவர்களின் வரங்கள் போன்றவற்றின் மீது விருப்பம் அற்றவனாகிறான். பக்தர்கள் உமது தாமரைத் திருவடிகளைத் தொடர்ந்து வழிபடுவதால் முற்றிலும் தூய்மையடைந்தவர்கள், கட்டுண்ட ஆத்மாக்களின் மீது அவர்கள் மிகுந்த கருணை கொண்டுள்ளனர். இதுபோன்ற சிறந்த பக்தர்களின் தொடர்பு எனக்கு எப்போதும் கிடைத்திருக்க நீர் அனுமதிப்பீராக! அதுவே, நீர் எனக்கருளும் மிகச்சிறந்த வரமாகும்.

பக்தித்தொண்டின் வலிமையால் இதயம் முற்றிலும் தூய்மை அடைந்துள்ள பக்தர்கள் எந்நிலையிலும் குழப்பமடையாமல், உமது நாமம், ரூபம், புகழ், லீலை முதலியவற்றை அறிகின்றனர், இத்தகைய பக்தர்களின் சங்கத்தை தவிர நான் வேறு எதையும் விரும்பவில்லை.”

பகவானின் பல்வேறு அம்சங்கள்

உயிர்வாழிகளின் புலனின்ப திட்டங்கள் அனைத்தையும் உமது கால ரூபம் தவிடு பொடியாக்குகிறது. எங்கும் வியாபித்திருக்கும் அருவபிரம்மன் நீரே, உங்களிடமிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியானது, சூரியனிடமிருந்து வெளிப்படும் சூரிய ஒளியைப் போன்றதாகும். இறைவா, உமது பலவகைப்பட்ட சக்திகளை பல வடிவங்களில் வெளிப்படுத்தி இவ்வுலகைப் படைத்து, காத்து, அழிக்கின்றீர். எதனாலும் பாதிக்கப்படாத, சர்வ சுதந்திரம் வாய்ந்தவரான உம்மை நான் பணிவுடன் வணங்குகிறேன்.

உயிர்வாழிகளிள் இதயங்களில் வீற்றுள்ள பரமாத்மாவின் ஆதிமூலம் நீரே. உயிர்வாழிகளை நீர் முழுமையாக அறிந்துள்ளதோடு, அவர்கள் தங்களது புலன்களால் எவ்வாறு மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர் என்பதையும் நன்கு அறிவீர். முக்குணங்கள், தேவர்கள், முனிவர்கள் என அனைத்தையும் படைக்கும் நீரே பரம புருஷ பகவான். தங்களின் அழிக்கும் சக்தியைக் கண்டு உலகமே அஞ்சினாலும், உமது பக்தர்கள் அஞ்சாமல் அடையும் புகலிடமாக இருப்பவர் நீரே.”