ஆண்டாள் எனும் அருமருந்து

வழங்கியவர்கள்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று கண்ணணின் கழலினையே நண்ணும்  மனமுடையவளின் தெய்வீகத்தையும், அவள் அருளிய பகவத் விஷய ஞானத்தையும், அவளின் பக்தியையும் தூக்கியெறிந்து விட்டு, அதிலுள்ள தமிழின் ஆட்சிமையையும் கவிதை நயத்தையும் மட்டும் பிரித்தெடுத்து கொண்டாட நினைக்கும் மக்களின் அணுகுமுறை உயிரைக் கொன்று விட்டு வெறும் எலும்புக்கூட்டைக் கொண்டாடுவதைப் போன்றதாகும். ஆண்டாளை பக்தியுடன் அணுகும் விதத்தை இக்கட்டுரையில் அறிய முயல்வோம்.

ஆண்டாளின் ஏற்றம்

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த நிலையை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் குழாமில், பெரியாழ்வார் மிக உயர்ந்தவராவார்; ஏனெனில், பாண்டிய மன்னனின் சபையில் புருஷோத்தமாரான முழுமுதற் கடவுள் யார்?” என்பதை நிர்ணயம் செய்த பின்னர், அவர் அந்த பர வாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு (கண்திருஷ்டி) கழித்தார். இருப்பினும், அவரையும் விஞ்சி அப்பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், கிருஷ்ண பக்தியின் சிகரமாக விளங்குகிறாள் என்றால் அது மிகையாகாது.

 

 

ஆண்டாளின் தோற்றம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

என்றார் வள்ளுவர் (திருக்குறள் 2). மறந்தும்கூட நற்றாளை (நல்ல பாதத்தை) தொழாதவர்கள், நற்றாளே கதி என இருந்த ஆண்டாளின் பிறப்பை சில நூற்றாண்டுகளுக்குள் நுனுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் பரம பக்தர்களோ அவளின் பிறப்பை பின்வருமாறு கூறுகின்றனர்:

கலி பிறந்து 97 ஆண்டுகளுக்குப் பிறகு, நள வருடத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரித்தபோது, வளர்பிறை சதுர்த்தியில், ஆடி மாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீ விஷ்ணு சித்தருடைய (பெரியாழ்வாருடைய) பெண்ணாக கோதை (ஆண்டாள்) அவதரித்தாள்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் காணப்படும் ஆண்டாள் பிறந்த இடம்

ஆண்டாள் பிறந்த ஊர்

உய்யக்கொண்டார் என்னும் ஆசார்யர் தாம் அருளிய அன்ன வயற்புதுவை ஆண்டாள்” என துவங்கும் தனியனில், அன்னப் பறவைகள் சூழ்ந்த செழிப்பான வயற்புரங்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பாமாலையாகவும் பூமாலையாகவும் அரங்கனுக்கு பாடியும் சூடியும் கொடுத்த ஆண்டாளை மனமே! – அனுதினமும் சொல்லு என்கிறார்.

மேலும் வேத பிரான் பட்டர் கூறுகிறார்:

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடம் தோன்றும் ஊர் – நீதிசால்

நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை

வையம் சுமப்பதும் வம்பு.

அதாவது, திருப்பாவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள் என இரண்டையும் அறியாத மக்களை இந்த உலகம் சுமப்பதே விண் என்று எடுத்துரைக்கிறார். வேறு விதமாகக் கூறினால், ஆண்டாள் பிறந்தமையால், ஸ்ரீவில்லிபுத்தூரின் மேன்மைகள் மேலும் சிறப்புற்றன எனலாம்.

ஆண்டாளின் பக்தி

பரம புருஷருடன் நாம் மேற்கொள்ளும் அன்புப் பரிமாற்றங்கள் (ரஸம் – சுவை) ஐந்து விதமாகக் கூறப்படுகின்றன. அந்த ஐந்து ரஸங்களில் உள்ள பக்தர்கள் தங்களுக்குள் வேறுபட்டவர்களாகத் தோன்றினாலும், அவர்கள் அனைவருமே மிகச்சிறந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை; இருப்பினும், தூய பகவத் பிரேமையானது, தாஸ்ய (சேவகன் என்னும்) நிலையில் துவங்கி, ஸக்யம், வாத்ஸல்யம், மாதுர்யம் ஆகிய நிலைகளுக்கு வளர்ச்சியடைகிறது. இவ்வடிப்படையில் ஆழ்ந்து நோக்குகையில் ஆண்டாளின் பக்தி உயர்ந்ததிலும் உயர்ந்தது எனலாம்.

அதையே ஸ்வாமி தேசிகன் தனது கோதாஸ்துதி ஸ்லோகத்தில் (8) பின்வருமாறு கூறுகிறார்:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!

பக்திம் நிஜாம் ப்ரணய-பாவனயா க்ருணந்த:

உச்சாவசைர் விரஹ-ஸங்கமஜைர் உதந்தை:

ஷ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:

கோதையே! நீ உனது பிரியமனான காதலனான கண்ணனின் மீதான பக்தியை உயிர்மூச்சாக கொண்டு, அவன் மீதான காதலில் கசிந்துருகினாய். கண்ணனின் மீதான பிரிவினால் ஏற்படும் உணர்ச்சிகளையும் அவனுடன் இணைவதால் ஏற்படும் உணர்ச்சிகளையும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி, நீ செய்த பக்தியைப் போல உயர்ந்தது வேறில்லை. எனவே, பிற (ஆண்) ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் தம்மை பெண்ணாகக் கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்.”

இவ்வாறாக, கோபியர்கள் எவ்வாறு கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டிருந்தனரோ, அவ்வாறே ஆண்டாளும் பரம்பொருளான பகவானைக் காதலித்து மணமுடித்தாள். இந்த வழிமுறை எல்லா பக்தி முறைகளிலும் சிறந்ததிலும் சிறந்ததென ஆச்சாரியர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் கோயிலின் முகப்புத் தோற்றம்

கோதையும் பூமி பிராட்டியும்

எல்லா உலகத்திற்கும் காரணமான பகவான் வராக அவதாரத்தை எடுத்தபோது, பூமாதேவி அவரிடம், ஜீவன்கள் உம்மை அடையும் வழியை எடுத்துரைக்க வேண்டுகிறேன்,” என வினவினாள். அதற்கு ஸ்ரீ வராஹர் பதிலளித்தார், ஒருவன் மனமும் உடலும் நல்ல நிலையில் இருக்கும்போது (இளமைக் காலத்தில்) பெரும் நம்பிக்கையுடன் என்னைச் சிந்திப்பானாகில், அவன் முதுமையில் உடல் தளர்ந்து நினைவிழந்து மரக்கட்டையைப் போல கிடக்கும்போது, நான் அவனைப் பற்றிச் சிந்திப்பேன்.” (வராஹ சரம ஸ்லோகம்)

இதை சிரமேற்கொண்ட பூமிதேவி, கலி யுக மக்களின் மீது கருணை கொண்டு ஆண்டாளாக அவதரித்து, இக்கருத்தை தனது திருப்பாவையின் வாயிலாக பரப்பினாள் என்பது பக்தர்களின் கருத்து.

கோபியர்கள், கண்ணனை அனுபவிப்பதற்காக காத்யாயனி விரதம் பூண்டதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது. அதில் தன்னையும் ஒருத்தியாக வரித்துக் கொண்ட ஆண்டாள், விரதத்திற்குத் தனது தோழிகளின் இல்லத்திற்கே சென்று, எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?” என்று எழுப்பி அழைத்துச் செல்வதாக அமைந்ததே திருப்பாவை பாசுரங்கள்.

ஜடம், ஆத்மா, மற்றும் இவற்றின் ஆளுனரை அறிவதுதான் அறிவு என்றறிந்த ஆண்டாள் இப்பாசுரங்களை ஏதோ சரித்திர நிகழ்வுகளாக மட்டும் நிறுத்திவிடாமல், ஒவ்வொரு சொல்லிலும் வேதாந்த சாரத்தையே அளித்திருக்கிறாள்.

பக்தியினால் அணுகப்பட வேண்டும்

ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் அருளிச் செய்த செயல்களில் ஏதேனும் ஒரு வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், ஒருவன் வேதங்களின் சாரங்களை உணர்ந்தவனாக, பக்தர்களை அறிந்தவனாக. அனைத்திற்கும் மேலாக பக்தியுடையவனாக இருத்தல் வேண்டும்.

ஆண்டாளைப் பற்றி ஸ்ரீ மணவாளமாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில் பின்வருமாறு கூறுகிறார்:

அஞ்சுகுடிக்கு ஓர் சந்ததியாய்,

ஆழ்வார்கள் தம் செயலை,

விஞ்சி நிற்கும் தன்மையளாய்,

பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை,

பக்தியுடன் நாளும் வழுத்தாய்

மனமே ! மகிழ்ந்து!!

அதாவது, அஞ்சுகுடிக்கு சந்ததியாகத் திகழும் ஆண்டாளை தினமும் நாம் பக்தியுடன் வணங்க வேண்டும் என்று கூறுகிறார். அஃது என்ன, அஞ்சுகுடி? இதற்கான பூர்வாசார்யர்களின் மூன்று விளக்கங்களைப் பார்ப்போம்.

(1) அஞ்சுகுடி” என்பது அஞ்சும் குடி” என்பதன் சுருக்கமாகும். குன்றாத வாழ்வான வைகுண்ட வான்போகத்தை விடுத்து, நம்மை நல்வழிப்படுத்தி உய்விக்க, பகவான் ஸ்ரீமன் நாராயணர் இவ்வுலகில் அவதாரங்களை ஏற்கும்போது, அவரது பக்தர்கள் அதனால் அவருக்கு ஏதேனும் துன்பம் விளையுமோ என்று அஞ்சுகிறார்கள். உண்மையில், யாராலும் அவருக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது என்பதை பக்தர்கள் அறிவர்; இருந்தும், பக்திப் பெருக்கால் அவர்கள் அவ்வாறு அஞ்சுகின்றனர். அவ்வாறு பக்தியினால் அஞ்சக்கூடிய அந்தக் குடியின் சந்ததியாக ஆண்டாள் வர்ணிக்கப்பட்டுள்ளாள்.

(2) ஆண்டாளுக்கு முன்னால் அவதரித்த ஆழ்வார்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்: (அ) அயோனிஜர்களான (தாய் வயிற்றில் பிறக்காத) முதல் ஆழ்வார்கள் மூவர், (ஆ) திருமழிசை ஆழ்வார், (இ) நம்மாழ்வார், (ஈ) பெரியாழ்வார், (உ) குலசேகராழ்வார். இந்த அஞ்சு (ஐந்து) வகை ஆழ்வார்களின் சந்ததி ஆண்டாள் என பொருள் கொள்ளலாம்.

(3) ஆழ்வார்கள் பதின்மர்களையும் எடுத்துக் கொண்டாலும் அவர்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்: (அ) அயோனிஜர்கள், முதலாழ்வார்கள், (ஆ) பிறந்தவுடன் பெற்றோருடன் இல்லாமல் தனித்திருந்த நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், (இ) பூமாலை சூட்டி பாமாலையும் பாடிய ஆழ்வார்கள்: பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், (ஈ) அரசராக அரசாண்டு ஆழ்வாராக மாறியவர்கள்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், (உ) திருப்பாணாழ்வார். இந்த அஞ்சுகுடிகளின் சந்ததி ஆண்டாள்.

இவ்வாறு ஆண்டாளைப் பற்றிய ஒரு சொல்லிற்கே இத்தனை பொருள்களை ஆச்சாரியர்கள் வழங்குகின்றனர். அதனை விடுத்து சொந்தமாகப் பொருள் வழங்க நினைப்பவர்களால், அவளை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? எப்போதும் காமகவி பாடி காசு பார்ப்பவர்களால் வேதம் அனைத்திற்க்கும் வித்தாகத் திகழும் கோதையின் தமிழை எங்ஙனம் புரிந்துகொள்ள இயலும்?

கோயிலில் வீற்றுள்ள ஆண்டாள் மற்றும் ரங்க மன்னர் விக்ரஹங்கள்

இன்றைய நிலை

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப் பெயினும்

குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல், மிக்க

கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன்

மனம் புரிந்தவாறே மிகும். (நாலடியார் 341)

அதாவது, காலையிலேயே நொய்யரிசியை தேவையான அளவுக்கு வாய்க்கு இட்டாலும், குப்பையைக் கிளறுதலைக் கைவிடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற்பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும், கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான்.

எனவே, ஆன்மீகக் கண்களைக் கொண்டு காண வேண்டியவற்றை காமாலைக் கண்களைக் கொண்டு நோக்கும்போது, பக்திப் பக்கங்கள் அவர்களுக்கு மஞ்சள் பக்கங்களாக தெறிவதில் வியப்பேதும் இல்லை.

பரமனால் ஏற்கப்பட்டு பக்தர்களால் கொண்டாடப்படும் அருட்பெரும் தாயாரை, ஈடில்லாப் பரம்பொருளின் இதயம் கவர்ந்தாளை, தமிழ் இலக்கியத்தின் அழியாச் சொத்தான திருப்பாவை எனும் அமுதைத் தந்தவளைப் பற்றி, யாரோ ஒருவன் கூறிய கருத்தைக் கேட்டு நம் செவிகளும் உள்ளங்களும் தகித்துப்போய் இருக்கிற இவ்வேளையில், ஆண்டாள் எனும் அருமருந்தில் கூடியிருந்து குளிர்வதே நம் அனைவருக்கும் சாந்தியை நல்கிடும்.

பல்லாண்டு காலமாக பக்தர்கள் ஆண்டாளின் அந்த அமுதத்திலே ஆழ்ந்து அமிழ்ந்து குடைந்து குளிர்ந்து நீராடி ஆனந்தித்து அனுபவித்து உய்வு பெற்றுள்ளனர். நாமும் அந்த கிருஷ்ணானுபவத்தை வரும் நாள்களில் பெற ஆண்டாளை வணங்கி தொடர்வோம்.

ஆண்டாளை பெரியாழ்வார் பெருமாளுக்கு திருமணம் செய்வித்தல் (நாச்சியார் திருமொழியின் பாடல்களுக்கு ஏற்ப வரையப்பட்ட படங்கள்)

2018-03-15T16:58:12+00:00February, 2018|பொது|0 Comments

About the Author:

Leave A Comment