ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஸ்ரீ கிருஷ்ண தாஸ கவிராஜரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் வெளியிடப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதரால் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியம் தமிழில் தற்போது வெளிவந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அறிகிறோம். இத்தருணத்தில், இந்த தமிழ் நூல் எவ்வாறு உருவாகியது என்பதுகுறித்த முக்கிய தகவல்களை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்

ஊக்கம்

எந்தவொரு செயலும் சிறப்பாக நிறைவேற அதனைச் செய்பவர்களுக்கு ஊக்கமளித்தல் அவசியம். அதுபோல, இந்த தெய்வீகப் பணியில் அடியேன் ஈடுபட ஊக்கமளித்தவர்கள் பலர்.

அடியேன் பகவத் கீதையை செம்மைப்படுத்தி, பகவத் தரிசனத்தை ஆரம்பித்து சீர்படுத்தியிருந்த தருணம். அடுத்ததாக, ஸ்ரீமத் பாகவதத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்று எமது குருவான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் கூறினார். இருப்பினும், எமது வழிகாட்டிகளில் ஒருவரான திரு. கோகுல சந்திர தாஸ் அவர்கள், பாகவதம் ஏற்கனவே ஒரு வடிவத்தில் உள்ளது, ஆனால் சைதன்ய சரிதாம்ருதம் இல்லையே,” என்று கூறி, ஸ்ரீமத் பாகவதத்தை செம்மைப்படுத்துவதற்கு முன்பாகவே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை மொழிபெயர்க்கும்படி அறிவுறுத்தினார். அதனை எமது குருவிடம் ஆலோசித்தபோது, அவரும் அக்கருத்தினை ஆமோதித்து ஊக்குவித்தார். அதிலிருந்து தொடங்கியதே ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதப் பணி.

பல்வேறு தருணங்களில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி அவர்களும் தவத்திரு பானு ஸ்வாமி அவர்களும் நூல் எந்த நிலையில் உள்ளது என்பதுகுறித்து விசாரித்து அறிவுரைகளை வழங்கி ஊக்குவித்தனர். மும்பை பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையைச் சார்ந்த திரு ஆனந்த தீர்த்த தாஸ் அவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்கமளித்து இந்நூல் சிறப்பாக வருவதற்கு உதவினார்.

சில பக்தர்கள் நன்கொடை வழங்கி ஊக்குவித்தனர், சிலர் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை விசாரித்து ஊக்குவித்தனர், பலர் உதவியளித்து ஊக்குவித்தனர். இன்னும் சொல்லப் போனால், அடியேனை அறிந்த, அறியாத எண்ணற்ற பக்தர்கள் இந்த ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் பிரார்த்தனை செய்தும் விசாரித்தும் ஊக்கமளித்தனர்.

பகவான் ஸ்ரீ சைதன்யர் எவ்வாறு அத்வைதரின் பிரார்த்தனையினால் இவ்வுலகில் தோன்றினாரோ, அவ்வாறே அவரிலிருந்து வேறுபடாத இந்த ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பல்வேறு பக்தர்களின் வேண்டுதலினால் தற்போது தமிழில் தோன்றியுள்ளது.

அறிஞர்களுடன் ஆலோசனை

ஸ்ரீல பிரபுபாதரின் மிக முக்கிய நூல்களில் ஒன்றும், அவருக்கு மிகவும் பிரியமானதுமான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் வர வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதலில் உதித்த சிக்கல், வங்காள ஸ்லோகங்களை தமிழில் எவ்வாறு வழங்குவது என்பதே. வடமொழியிலிருந்து எண்ணற்ற நூல்கள் தமிழில் வந்துள்ளன, ஆனால் வங்காளத்திலிருந்து எந்த நூலும் எழுத்துப்பெயர்ப்புடன் படிப்பதற்கு உகந்தாற்போல வந்ததில்லை.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை பிரபுபாதர் அதன் மூல வங்காள ஸ்லோகம், அதை அப்படியே படிப்பதற்கான ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு, பதவுரை (வார்த்தைக்கு வார்த்தை பொருள்), மொழிபெயர்ப்பு, பொருளுரை என வழங்கியுள்ளார். நாமும் அவ்வாறுதானே வழங்க வேண்டும்!

தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தற்போது மாயாபுரில் வசிக்கும் திரு வித்வான் கௌராங்க தாஸ் அவர்கள் வங்காளம், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றவர். அவரைச் சந்தித்து பல ஆலோசனைகளைப் பெற்றேன். இருவரும் அமர்ந்து எழுத்துப்பெயர்ப்பின் விதிகளை வகுத்தோம். இருப்பினும், சில சிக்கல்களை எங்களால் தீர்க்க முடியவில்லை. அத்தருணத்தில், பன்மொழி வித்தகராகத் திகழும் திரு ஸ்ரீ ரமண சர்மா அவர்களின் தொடர்பு கிட்டியது. மொழி வடிவமைப்புகள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு, இத்துறையில் ஒரு தலைசிறந்த அதிகாரியாக இருக்கும் அவரால், எங்களது சிக்கல்களுக்கு தெளிவான தீர்வினை வழங்க முடிந்தது. எழுத்துப்பெயர்ப்பினைத் தொடங்கினோம்.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பினை ஒலி வடிவில் பதிவு செய்யும் பணியில் ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மொழிபெயர்ப்பு பணிகளின் தொடக்கம்

எழுத்துப்பெயர்ப்பிற்கான விதிகளை அமைத்த பின்னர், திரு வேங்கடேஷ் அவர்கள் அப்பணியினை மேற்கொள்ளத் தொடங்கினார். சுமார் ஒரு வருடம் கடந்த பின்னர், எழுத்துப்பெயர்ப்பின் பணிகள் மெதுவாகச் செல்கின்றனவே, என்ன செய்யலாம் என்று சிந்தித்த தருணத்தில், மஹாபிரபுவின் கருணையினால், திரு சக்ரபாணி தாஸ் அவர்களுக்கு ஒரு உத்தி தோன்றியது. அதன்படி, கணிப்பொறியின் உதவியுடன் வங்காள ஸ்லோகங்கள் அனைத்தும் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பிலிருந்து தமிழ் எழுத்துப்பெயர்ப்பாக நேரடியாக மாற்றுவதற்குத் திட்டமிட்டு, அதனைச் செம்மையாக நிறைவேற்றினோம். பல வருடங்கள் செய்ய வேண்டிய எழுத்துப்பெயர்ப்பினை சில வாரங்களில் நிறைவேற்றினோம். அதிலிருந்த சில பிழைகள் பிற்காலத்தில் அகற்றப்பட்டன.

அடியேனும் நான் செய்ய வேண்டிய மொழிபெயர்ப்புப் பணியினை மெல்ல செய்து கொண்டிருந்தேன். பதவுரையினை வழங்குதல் என்பது முக்கிய மொழிபெயர்ப்பினைப் போன்று சிரமமானதல்ல என்பதால், அதற்கான பணி பல்வேறு பக்தர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழிபெயர்ப்புகளை பின்னர் கூர்ந்தாய்வு செய்து செம்மைப்படுத்தலாம் என்பது திட்டம். அந்த பக்தர்களும் தங்களது பணியினைத் தொடர்ந்தனர்.

இவ்வாறு ஜுலை 2011இல் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, பல்வேறு திசைகளில் பல ஆய்வுகள், ஆலோசனைகளுடன் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பிப்ரவரி 2014 வரை, நான் சுமார் 100 பக்கங்களை மட்டுமே மொழிபெயர்த்திருந்தேன். இருப்பினும், இத்திருப்பணிக்கான எல்லா ஏற்பாடுகளும்ஶீஎழுத்துருக்கள், வடிவமைப்பு, எழுத்துப்பெயர்ப்பு, பதவுரை முதலியவை அனைத்தும்ஶீதயாராக இருந்தன. பணியினைத் துரிதப்படுத்துவதற்கு அதனை உகந்த தருணமாக நினைத்தேன்.

தடையில்லா சேவைக்கான திட்டம்

பணிகளை எவ்வாறு துரிதப்படுத்துவது? ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆங்கில வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட சூழ்நிலையில், ஸ்ரீல பிரபுபாதர் அவற்றினை இரண்டே மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட, அந்த அசாத்தியமான ஒன்றை அவரது சீடர்கள் சாத்தியமாக்கினர் என்பது வரலாறு. அதிலிருந்து அடியேனுக்கு சற்று உந்துதல் ஏற்பட்டது. நாம் ஏன் சைதன்ய சரிதாம்ருதத்தை இரண்டே மாதங்களில் மொழிபெயர்க்க இயலாது? ஆழ்ந்து யோசித்தேன், முடியும் என்று பரமாத்மாவின் தூண்டுதலால் உணர்ந்தேன், 2014ஆம் ஆண்டின் மே-ஜுன் மாதங்களைத் தேர்ந்தெடுத்தேன், அதற்கான திட்டங்களைத் தீட்டத் தொடங்கினேன். முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே என்னும் சொற்றொடர் பலமாக ஒலித்தது.

அதன்படி, ஏப்ரல் 30ஆம் நாளில், இந்த சேவைக்கு நான் யாரையெல்லாம் அழைத்திருந்தேனோ, அவர்கள் அனைவரும் சென்னையின் புறநகரான மறைமலைநகரில் கூடினர். இரண்டு மாதம் தடையில்லா சேவைக்கான எனது திட்டத்தினை அனைவருக்கும் தெளிவாக விளக்கினேன்.

மொழிபெயர்ப்பினை தட்டச்சு செய்யும் பணியில் பக்தர்கள்

இரண்டு மாத தொடர் திருப்பணி

மே முதல் தேதியிலிருந்து பணிகள் வெகு வேகமாகத் தொடங்கின; எனது மொழிபெயர்ப்பினை ஒலி வடிவில் பதிவு செய்தேன்; மூன்று பக்தர்கள் அதனை தட்டச்சு செய்தனர்; அதனை வங்காள ஸ்லோகம், ஸ்லோகத்தின் எழுத்துப் பெயர்ப்பு, பதவுரை என வடிவமைப்புடன் பல பக்தர்கள் இணைத்தனர்; இரண்டு பக்தர்கள் அதனை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு சீர்படுத்தினர்; மூன்று பக்தர்கள் அதன் பிழைத்திருத்தத்தில் ஈடுபட்டனர்; அனைவருக்கும் சமையல் செய்யும் சேவையில் இருவர் ஈடுபட்டனர்; இவ்வாறு 17 பக்தர்கள் இரண்டு மாதம் முழு நேரமாகவும், இன்னும் சுமார் 20 பக்தர்கள் அவ்வப்போது பல வழிகளிலும் இந்த தொடர் சேவையில் ஈடுபட்டனர். அனைவரும் இரவு பகல் பாராமல் மஹாபிரபுவிற்காக உழைத்தனர்.

நடுவில் எண்ணற்ற சிக்கல்கள், இயற்கையாகவே எடுத்த காரியத்தை நிறைவேற்ற முடியுமா என்பதில் பலருக்கு ஐயமும் எழுந்தது. இருப்பினும், முடியும்” என்பதில் அடியேனை மஹாபிரபு தீர்க்கமாக நிறுத்தினார். பணிகள் வேகவேகமாக வேகமெடுத்தன, எந்த வேகம் என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இன்று நினைத்தாலும் அந்த இரண்டு மாதங்கள் கனவைப் போலவே உள்ளன. மஹாபிரபுவின் கருணையால் அடியேனால், ஆங்கிலத்தில் பார்த்து அதனை அப்படியே வேகமாக தமிழில் படிக்க முடிந்தது. அதே கருணையால் பலராலும் தத்தமது சேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடிந்தது.

இறுதியாக, திட்டமிட்டபடி, ஜுன் 30ஆம் நாளன்று, ஒட்டுமொத்த சைதன்ய சரிதாம்ருத மொழிபெயர்ப்புப் பணியும் நிறைவேறியது!. ஆம், இரண்டே மாதத்தில் சுமார் 8,000 பக்கத்தின் மொழிபெயர்ப்பு, தட்டச்சு, வடிவமைப்பு, ஆங்கில சோதனை, பிழைத்திருத்தம் என அனைத்து பணிகளும் நிறைவுற்றன. பக்தர்களின் முகத்தில் சொல்லவியலா மகிழ்ச்சி, கனவா, நினைவா என்ற ஐயம். மஹாபிரபுவின் மாபெரும் அதிசயம்!

ஐயங்களைத் தெளிவுபடுத்துதல்

இந்த இரண்டு மாத தொடர் பணி முடிந்தவுடன் பல்வேறு பக்தர்கள், எப்போது நூலை வெளியிடுவீர்கள்?” என்று வினவி, தங்களது ஆர்வத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் ஒரு நூலை வெளியிடுதல் என்பது மொழிபெயர்ப்பு மட்டுமல்லவே.

நூலை விரைவாக மொழிபெயர்க்கையில், பல்வேறு இடங்களில் சிக்கல்கள் இருந்தன, மற்றவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியதாக இருந்தன. அவற்றை அப்போது செய்ய இயலாது என்பதால், அந்த இடங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் பதிவிடப்பட்டிருந்தன. ஸ்ரீல பிரபுபாதரின் ஆங்கில நூலில் பணியாற்றியவர்கள், தமிழ் அறிஞர்கள், வங்காள வல்லுநர்கள், வடமொழிக் கலைஞர்கள், இஸ்கான் மூத்த பக்தர்கள், தமிழ் சைதன்ய சரிதாம்ருதத்திற்காக அமைக்கப்பட்ட மின்னஞ்சல் குழுவினர் என பலருடன் ஆலோசனை நிகழ்த்தினோம். அதற்கான மின்னஞ்சல்கள் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தலைப்புகளைச் சார்ந்தவை.

அந்த ஆலோசனைகள் அனைத்தும் அடியேனின் பல்வேறு ஐயங்களுக்கு விடையளித்தன. ஐயத்திற்குரிய தகவலை பிரசுரிக்க இயலாதே!

நூலை முறையாக வடிவமைத்து அதனை பிழைத்திருத்தத்திற்காக அனுப்பும் பணியில் பக்தர்கள்

செம்மைப்படுத்தும் பணி

ஐயங்களை ஓரளவு தெளிவுபடுத்திய பின்னர், நூலைச் செம்மைப்படுத்தும் பணி முழு வீச்சில் தொடங்கியது. அதற்காக நூல் முழுவதையும் இரண்டாவது முறையாக ஆங்கிலத்துடன் இணைத்து படித்தேன், பல்வேறு இடங்களில் இருந்த மொழிபெயர்ப்பினைக் கண்டு நானே வியந்தேன்; சிக்கலான இடங்கள், ஆனால் அருமையான மொழிபெயர்ப்புகள். பல்வேறு அறிஞர்களுக்கும் சவாலான இடங்கள் சாமானியமாக வந்துள்ளதை அறிந்து வியந்தேன். இவை நிச்சயம் என்னால் செய்யப்பட்டவை அல்ல என்பதையும், பகவானின் கருணையினால் நிகழ்ந்தவையே என்பதையும் மேன்மேலும் உணர்ந்தேன்.

ஒரு நூலை மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் அதனைச் செம்மைப்படுத்துதல் முக்கியமானது என்பதையும் அதற்கு அதிக நேரமாகும் என்பதையும் இத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் அறிவர். பதவுரையைச் செம்மைப் படுத்தினோம், தமிழ் நடையினைச் சீராக அமைத்தோம், தேவைப்படும் இடங்களில் சொற்றொடரை மாற்றி யமைத்தோம், இலக்கணப் பிழைகளை அகற்றினோம், பல்வேறு வகையில் கூர்ந்தாய்வில் ஈடுபட்டோம். பெரிய குழுவாக அல்லாமல், இரண்டு-மூன்று பக்தர்கள் மட்டும் அவ்வப்போது எங்கேனும் தனிமையான இடத்திற்குச் சென்று சில மாதங்கள் தங்கி, முழு வீச்சில் இத்திருப்பணியில் ஈடுபட்டோம். இன்றைய கணிப்பொறி மென்கருவிகள் பல வகையில் உதவியாக அமைந்தன. ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் முதல் பக்கத்திலிருந்து இறுதி வரை அனைத்தும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் இரண்டு வருட செம்மைப்படுத்தும் பணியில், அந்த சீர்படுத்தும் பணிக்காக மட்டுமே மூன்று மாதங்கள் கழிந்தன.

ஆராய்ச்சிப் பணிகள்

நூலைச் செம்மைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அவற்றில், வங்காள உணவு முறை, வாழ்க்கை முறை, தமிழ் மெய்ப்பாட்டியல் முதலியவற்றின் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.

வங்காள உணவுப் பொருட்களையும் பதார்த்தங்களையும் ஸ்ரீல பிரபுபாதர் ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு உகந்த நடையில் வழங்கியுள்ளார். ஆனால் தமிழர்களுக்கு அவற்றின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்துதல் நலம் என்பதால், அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பெயர்கள் வழங்கப்பட்டன. உதாரணமாக, பீட என்னும் வங்காள உணவினை பிரபுபாதர் கேக் என்று ஆங்கிலத்தில் வழங்கியுள்ளார். நாமும் அதனை கேக் என்று எழுதியிருக்கலாம், ஆனால் ஆய்வு செய்தோம். பீட என்றால், கொழுக்கட்டை என்பதை அறிந்து வியந்தோம், புன்னகைத்தோம்! இதுபோன்ற ஆய்வுகள் ஏராளம். மரங்களின் பெயர்கள், பூக்களின் பெயர்கள் முதலியவையும் இதில் அடங்கும்.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் காணப்படும் முக்கியமான தத்துவங்களில் ஒன்று, பக்தனுக்கும் பகவானுக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றத்தில் உருவாகும் சுவைகளைப் (ரஸங்களை) பற்றியதாகும். இந்தச் சுவைகளும் அதன் பல்வேறு வகைகளும் தொன்றுதொட்டு தமிழ் இலக்கியத்தில் மெய்ப்பாட்டியல், நாடகவியல் என்னும் பிரிவுகளில் வழங்கப்பட்டு வருவதால், அத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள நேர்ந்தது. பல்வேறு ரஸங்களுக்கான பாரம்பரிய தமிழ்ச் சொற்கள் மிகுந்த ஆர்வத்தை வழங்கின. அவற்றையும் எமது தமிழ் வாசகர்களுக்கு முறையாக வழங்கினோம்.

மொழிபெயர்ப்பினை சரிபார்க்கும் பக்தர்கள்

பிழைத்திருத்தம்

இரண்டு மாத தொடர் திருப்பணியின்போதே, முதல் சுற்று பிழைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், செம்மைப்படுத்திய பின்னர், இரண்டாம் சுற்றில் பிழைத்திருத்தம் செய்வதற்கான சேவை அதிகமான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றபோதிலும், ஒன்பது பக்தர்கள் ஏறக்குறைய இறுதி வரை இந்நூலின் பிழைத்திருத்தத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தமிழ் உரைநடை, மொழிபெயர்ப்பு முதலியவை குறித்து தமிழ் அறிஞர்கள் எழுதிய நூல்களில் சுமார் 50 நூல்களைப் படித்தேன், எனது தமிழ் அறிவையும் வளர்த்தேன். நான் ஏற்கனவே வைத்திருந்த மொழிபெயர்ப்புக் கையேட்டின் அளவு பெரியதாக மாறியது. நான் செய்திருந்த சில பிழைகளை உணர்ந்தேன், கணிப்பொறி தேடலின் மூலமாக எல்லா இடங்களிலும் அவற்றைத் தேடிப் பிடித்து அகற்றினேன். தேவையில்லாத இடங்களில் வடமொழிச் சொற்களுக்கு பதிலாக, தமிழ்ச் சொற்களை மாற்றினேன்.

பிழைத்திருத்தத்தில் பக்தர்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை அகற்றினோம். வங்காள மூல ஸ்லோகத்தையும் வங்காள பக்தரைக் கொண்டு சோதித்து திருத்தினோம். மீண்டும் ஒருமுறை (அதாவது மூன்றாவது முறையாக) நூல் முழுவதையும் நானும் படித்தேன், பிழைத்திருத்தத்தில் ஈடுபட்ட பக்தர்களுக்கு மீண்டும் மூன்றாவது முறையாக அனுப்பி வைத்தோம். அனைத்தையும் சரிசெய்து நூலை உருவாக்கினோம்.

பணி நிறைவு

இறுதியாக, ஸ்லோகங்களின் அட்டவணை, வண்ணப்படங்களின் வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு, முன்பக்கக் குறிப்புகள், பின்பக்கக் குறிப்புகள் முதலிய சின்னஞ்சிறு பணிகள் மூன்று மாதங்களை முழுமையாக அபகரித்தன. இறுதிக் கட்டத்திலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை; குருவின் கருணையாலும் ஸ்ரீல பிரபுபாதரின் கருணையாலும் மஹாபிரபுவின் கருணையாலும் அனைத்தையும் கடந்து நவம்பர் 2017இல் நூலை நிறைவு செய்தோம்.

மும்பையில் உள்ள பக்தர்கள் அச்சகப் பணியினைத் துரிதப்படுத்தினர்; மிகமிகத் தரம் வாய்ந்த தாளில், மிகமிகத் தரம் வாய்ந்த அச்சகத்தாரிடம் அச்சிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். அதன்படி, ஒன்பது பாகங்களும் செம்மையான முறையில் முதல் தரத்தில் அச்சிடப்பட்டு, காண்பவர்களைக் கவரும் வண்ணம் தற்போது வெற்றிகரமாக வெளிவந்துள்ளது.

தம்முடைய நூல்களைக் காணும்போதெல்லாம் ஸ்ரீல பிரபுபாதர் பேரானந்தம் அடைவார். தமிழ் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதமும் நிச்சயம் அவருக்கு பேரானந்தத்தை வழங்கியிருக்கும் என நம்புகிறோம். அவரது மகிழ்ச்சியே எங்களுடைய ஆன்மீக வாழ்வின் ஆதாரம்.

அனைவருக்கும் நன்றி

எம்மால் இயன்ற அளவில், இந்நூலைச் செம்மையாகவும் உயர்வாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் வழங்க முயன்றுள்ளோம். இருப்பினும், நிச்சயமாக எமது குறுகிய அறிவாற்றலின் காரணத்தினால், வாசகர்களின் கண்களில் சில பிழைகள் தென்படலாம். அவற்றினை எமக்குச் சுட்டிக் காட்ட வேண்டுகிறோம்.

இந்த மாபெரும் நூலின் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் பாக்கியம் செய்தவர்கள்! அனைத்தும் ஸ்ரீல பிரபுபாதரின் கருணை! என்னை இந்நூலின் மொழிபெயர்ப்பாளனாக அறிபவர்கள் அதற்காக என்னைப் பாராட்டலாம். ஆயினும், இந்நூலினை உருவாக்க என்னைப் போலவே கடினமாக உழைத்த எனது குழுவினரும் சமமான பாராட்டுதல்களுக்கு உரியவர்கள். மற்றவர்களின் பார்வைக்குப் படாமல் முக்கிய சேவைகளை ஆற்றிய அவர்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, நான் இங்கே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்தும் அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்! நாம் ஒரு சிறு கருவியே!

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்திற்கான இரண்டு மாத தொடர் சேவையில் ஈடுபட்ட பக்தர்களில் சிலர்.

About the Author:

mm
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

Leave A Comment