வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

இத்தம் ந்ரு-திர்யக்-ருஷி-தேவ-ஜஷாவதாரைர்
லோகான் விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம் மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம்
சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ஸ த்வம்

“எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.9.38)

 

மஹாபிரபுவைப் பற்றிய குறிப்பு

இங்கே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய விசேஷ தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் முழுமுதற் கடவுளாவார்; ஆயினும், அவர் சன்ன: என அழைக்கப்படுகிறார். சன்ன: என்றால் மறைக்கப்பட்டவர், அல்லது நேரடியாகத் தோன்றாதவர் என்று பொருள்; ஏனெனில், அவர் ஒரு பக்தராக தோன்றினார். ரூப கோஸ்வாமி அவரை கிருஷ்ணரின் அவதாரமாக அடையாளம் கண்டார். சார்வபௌம பட்டாசாரியர், ரூப கோஸ்வாமி மற்றும் இதர பக்தர்கள் உட்பட சாஸ்திரங்கள், உபநிஷத்துகள், மஹாபாரதம் என பல இடங்களில் அவர் அவதாரமாக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஓர் அவதாரம் என்பவர், மாபெரும் பக்தர்கள் மற்றும் சாஸ்திரங்களின் கூற்றுகளால் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் மற்றோர் இடத்தில் மேலும் ஒரு கூற்று காணப்படுகிறது.

க்ருஷ்ண-வர்ணம் த்விஷா க்ருஷ்ணம்
ஸங்கோ பாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸுமேதஸ:

கரபாஜன முனிவரால் வெவ்வேறு யுகங்களுக்கான வெவ்வேறு அவதாரங்கள் குறித்து மன்னர் நிமியிடம் பேசப்பட்டபோது, சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய மேற்குறிப்பிட்ட கூற்று காணப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு விருந்தாவன தாஸ தாகூரால், யுக தர்ம பாலோ என்று வர்ணிக்கப்பட்டுள்ளார். இங்கே அவர் சன்ன: கலௌ என்று அழைக்கப்படுகிறார். கலி யுகத்தில் அவர் நரசிம்மதேவர், வாமனதேவர், இராமசந்திர பகவான் ஆகியோரைப் போன்று தோன்றுவதில்லை. அவர் ஒரு பக்தராகத் தோன்றுகிறார். ஏன்? இஃது அவருடைய மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாகும்.

கருணையே வடிவான அவதாரம்

மக்கள் மிகவும் முட்டாள்களாக இருப்பதால் அவர்களால் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் என்று கிருஷ்ணர் கூறியபோது, “இவர் எல்லா தர்மங்களையும் விடும்படி கட்டளையிடுகிறாரே? இது சரியா?” என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். “எனக்குக் கட்டளையிட நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். இதுவே தற்போதைய நிலை. கட்டளையிடுவது கடவுளாகிய கிருஷ்ணரின் பணி. “நீங்கள் இதைச் செய்யுங்கள்” என்று அவர் நமக்குக் கட்டளையிடும்போது, “யார் இவர், நமக்கு இப்படி கட்டளையிடுகிறாரே, எல்லாவற்றையும் துறக்கச் சொல்லி கூறுகிறாரே?” என்று முட்டாள்தனமாக நினைக்கின்றோம். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய என்று கிருஷ்ணர் கூறும்போது, “நான் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளேனே, இதனை எவ்வாறு கைவிட முடியும்?” என்று நாம் நினைக்கின்றோம். நம்முடைய இத்தகைய எண்ணங்களினால், அதே பகவான் மீண்டும் சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் சரணடைந்து பிரார்த்தனை செய்யும் ரூப கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் சரணடைந்து பிரார்த்தனை செய்யும் ரூப கோஸ்வாமி

ரூபரின் மூலமாக அணுகுவோம்

சைதன்ய மஹாபிரபுவினை ரூப கோஸ்வாமி ப›ுரிந்து கொண்டார். இதனால் நாம் அவரை ரூபரின் மூலமாக அணுகுதல் வேண்டும். ரூப கோஸ்வாமி நம்முடைய குரு ஆவார். நரோத்தம தாஸ தாகூர் கூறியுள்ளார்:

ரூப-ரகுநாத-பதே ஹஇபே ஆகுதி
கபே ஹாம புஜப ஸே ஜுகல-பீரிதி

பரம புருஷ பகவானின் தெய்வீக நிலையை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், நாம் குரு பரம்பரையின் வழிமுறையை ஏற்றுக்கொள்வது அவசியமாகும். இல்லாவிடில் அது சாத்தியமல்ல. ரூப-ரகுநாத-பதே ஹஇபே ஆகுதி. பக்தியின் வழிமுறை முழுவதும் பணிவை அடிப்படையாகக் கொண்டதாகும். கிருஷ்ணர் அதையே விரும்புகிறார். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய. நீங்கள் கிருஷ்ணரை அணுக வேண்டுமெனில், பணிவுடன் இருத்தல் அவசியமாகும்.”கிருஷ்ணர் இங்கு இல்லை. நான் யாரிடம் பணிவாகச் செயல்பட வேண்டும்?” என்று நீங்கள் கேட்கலாம். கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் நீங்கள் பணிவுடன் செயல்பட வேண்டும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முட்டாள்களாக இருக்கும் கட்டுண்ட ஜீவன்கள் அனைவருக்கும் கருணையை வழங்குவதற்காக இந்த யுகத்தில் தோன்றினார், கிருஷ்ண உணர்வை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதை அவர் தானே சுயமாக கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்த கீர்த்தன வழிமுறையினை இன்றும் நீங்கள் காணலாம். பிரயாகையில் சைதன்ய மஹாபிரபு கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தபொழுது ரூப கோஸ்வாமி அவரை நமஸ்கரித்து பிரார்த்தனை செலுத்தினார். அதுவே ரூப கோஸ்வாமிக்கும் சைதன்ய மஹாபிரபுவிற்கும் இடையிலான முதல் சந்திப்பாகும், அந்த முதல் சந்திப்பிலேயே அவர் சைதன்ய மஹாபிரபுவை புகழ்ந்துரைத்தார்:

நமோ மஹா-வதான்யாய
க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே
க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய-
நாம்னே கௌர-த்விஷே நம:

 

“கிருஷ்ண பிரேமையை விநியோகம் செய்யும் நீங்கள் மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாவீர்.”

இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபு, சன்ன: அவதார, மறைக்கப்பட்ட அவதாரமாக உள்ளார். அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே; ஆயினும், கிருஷ்ண பிரேமையை வழங்குவதற்காக வந்த காரணத்தினால், அவர் ஒரு கிருஷ்ண பக்தரைப் போல செயல்பட்டார். அவர் மறைக்கப்பட்டிருந்தார்.”நீங்கள் இதைச் செய்யுங்கள்” என்று அவர் நேரடியாகக் கட்டளையிடவில்லை, அவர் தன்னுடைய கட்டளையை வேறுவிதமாக வழங்குகிறார்.

பணிவுடன் கிருஷ்ணரை அணுகுதல்

நாம் நம்மை பணிவுடன் ஒப்படைக்காவிடில், கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் பெறுதல் என்ற கேள்விக்கு வாய்ப்பே இல்லை. சில நேரங்களில் பெயரளவிலான அயோக்கிய அறிஞர்கள், “நான் ஏன் என்னை பணிவுடன் ஒப்படைக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். நம்மை ஒப்படைப்பதே சைதன்ய மஹாபிரபுவின் போதனையாகும்.

த்ருணாத் அபி ஸு-நீசேனதரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானினா மான-தேனகீர்தனீய: ஸதா ஹரி:

நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க விரும்பினால், இந்த கொள்கையினை ஏற்றுக் கொண்டாக வேண்டும். த்ருணாத் அபி ஸு-நீசேன. புல்லைவிட பணிவாக இருக்க வேண்டியது அவசியம். தெருவிலுள்ள புல்லை ஒவ்வொருவரும் மிதிக்கின்றனர், அஃது ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தரோர் அபி ஸஹிஷ்ணுனா, மரத்தைவிடப் பொறுமையுடன் இருக்க வேண்டும். மரமானது அதிகமான உதவிகளை வழங்குகிறது. பழம், பூ, இலை, நிழல் போன்ற பலவற்றை அது நமக்கு வழங்குகிறது. இவ்வளவு நன்மைகளை வழங்கும்போதிலும், நாம் அதனை வெட்டுகிறோம். ஆனால் அஃது எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.”நான் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளை செய்தேன், நீங்கள் ஏன் என்னை வெட்டுகிறீர்?” என்று மரம் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, பொறுத்துக் கொள்கிறது. அதனால்தான் சைதன்ய மஹாபிரபு தரோர் அபி ஸஹிஷ்ணுனா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமானினா மான-தேன. ஒருவன் எந்தவொரு மதிக்கத்தக்க பதவியையும் எதிர்பார்க்கக் கூடாது, ஆனால் எல்லாருக்கும் எல்லாவித மரியாதையையும் வழங்க வேண்டும். அமானினா மான-தேன கீர்தனீய ஸதா ஹரி: நாம் இந்த தகுதிகளைப் பெற்று விட்டால். அப்போது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை எந்த தொந்தரவுமின்றி நம்மால் கீர்த்தனம் செய்ய முடியும். இதுவே தகுதியாகும்.

சைதன்ய மஹாபிரபு இந்த கொள்கைகளைக் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார். அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே. ந சைதன்யாத் க்ருஷ்ணாஜ் ஜகதி பர-தத்த்வம் பரம் இஹ, சைதன்ய மஹாபிரபு பரம்பொருளாகிய பரம தத்துவமே ஆவார். கிருஷ்ணரே பரம்பொருள், ஆயினும் சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபடாதவராவார். யத் அத்வைதம் ப்ரஹ்மோபனிஷதி. அத்வைதிகளும் உபநிஷதங்களும் பிரம்மன் என்று யாரைக் குறிப்பிடுகின்றனரோ, பரமாத்மா என்று யோகிகள் யாரைக் குறிப்பிடுகின்றனரோ, பகவான் என்று யார் குறிப்பிடப்படுகிறாரோ, அவரே சைதன்ய மஹாபிரபு ஆவார். பிரம்மன், பரமாத்மா, பகவான் ஆகிய மூன்றும் பரம பூரண உண்மையின் மூன்று அம்சங்களாகும்.

வெட்டினால்கூட மறுப்பு தெரிவிக்காத மரத்தைப் போன்று, ஒரு பக்தன் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

வெட்டினால்கூட மறுப்பு தெரிவிக்காத மரத்தைப் போன்று, ஒரு பக்தன் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

கிருஷ்ணரை உணர்தல் எளிது

பகவான் மனித சமுதாயத்தில் மட்டும் தோன்றுவதில்லை. அவர் ஆமையாக வருகிறார், நரசிம்மராக வருகிறார், வாமனராக வருகிறார், மேலும் பல்வேறு இதர ரூபங்களிலும் வருகிறார். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், “மரங்களுக்கு மத்தியில் நான் அரச மரம். மிருகங்களுக்கு மத்தியில் நான் சிங்கம்.” இவ்வாறு தன்னுடைய தன்மைகளை கிருஷ்ணர் பல்வேறு விதங்களில் சுட்டிக்காட்டுகிறார். கிருஷ்ணரை எவ்வாறு உணர வேண்டும் என்பதை அவரே விளக்கியுள்ளார். நீங்கள் உங்களுடைய சொந்த வழிமுறையினை முயற்சி செய்தால், அவரை உணர இயலாது, கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமும் கிடையாது. கிருஷ்ணர் கூறுகிறார், ரஸோ ‘ஹம் அப்ஸு கௌந்தேய, “எனதருமை அர்ஜுனா, நானே நீரின் சுவையாவேன்.” நீரைப் பருகாதவர் யாரேனும் உளரோ? மிருகம்கூட நீரைப் பருகுகிறது, மனிதனும் நீரைப் பருகுகிறான். ஆனால் நீரின் சுவை கடவுளாக உள்ளபோதிலும், மிருகத்தினால் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. மனிதனால் அதனைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, மனிதன் மிருகத்திடமிருந்து வேறுபட்டவனாவான். நாமும் மிருகங்களைப் போன்று நீரைப் பருகிவிட்டு கிருஷ்ணரை உணராவிடில், அப்போது நாமும் மிருகமாகிவிடுவோம். நாம் எத்தனை முறை நீரைப் பருகுகிறோமோ அத்தனை முறை நம்மால் கிருஷ்ணரை நினைக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணரை நினைப்பதே பக்தியின் வழிமுறையாகும்.

எனவே, ஒவ்வொரு முறை நீங்கள் நீரைப் பருகும்போதும் கிருஷ்ணரை நினைவுகொள்ளுங்கள். அஃது உங்களுடைய பக்தித் தொண்டாக அமையும். இதில் என்ன சிரமம் உள்ளது. சிரமமே இல்லாதபோதிலும் அயோக்கியர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாகம் ஏற்படும்போது அனைவரும் நீரைப் பருகுகின்றனர், நீரின் சுவையானது உங்களுடைய தாகத்தைத் தணிக்கின்றது, அச்சமயத்தில் “பகவத் கீதையில் கிருஷ்ணர் தன்னை நீரின் சுவையாகக் கூறியுள்ளார்,” என்று நீங்கள் நினைக்க வேண்டும். அப்போது நீங்கள் கிருஷ்ணரை உடனடியாக நினைவுகொள்கிறீர்கள். நீங்கள் கிருஷ்ணரை நினைத்த மாத்திரத்தில், அது பக்தித் தொண்டாக ஸ்மரணமாக ஆகுகிறது. இதில் என்ன சிரமம் உள்ளது? ப்ரபாஸ்மி ஷஷி-ஸூர்யயோ, “நானே சூரிய சந்திரனின் ஒளியாவேன்.” சூரிய ஒளியையும் சந்திர ஒளியையும் பார்க்காதவர் யார்? பகல் நேரத்தில் நீங்கள் சூரிய ஒளியையும் இரவில் நிலவொளியையும் காண்கிறீர்கள். நிலவொளியையும் சூரிய ஒளியையும் காணும்போது, “இந்த ஒளி கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறது,” என்று நினைப்பதில் என்ன சிரமம் உள்ளது?

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சாக்ஷாத் ராதா கிருஷ்ணரிலிருந்து வேறுபடாதவர்; அவர் பக்தியைக் கற்பிக்க வந்த பகவான்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சாக்ஷாத் ராதா கிருஷ்ணரிலிருந்து

வேறுபடாதவர்; அவர் பக்தியைக் கற்பிக்க வந்த பகவான்.

பக்தனாக பகவான்

இவ்வாறாக, கிருஷ்ண உணர்வைப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கிருஷ்ணர் போதித்துள்ளார். ஆயினும், அயோக்கியர்களான நம்மால் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் கிருஷ்ணர் மீண்டும் வருகிறார்:”இந்த அயோக்கியர்கள் என்னைப் புரிந்துகொள்ள தவறிவிட்டனர், நான் தற்போது என்னுடைய சொந்த நடத்தையின் மூலமாக கிருஷ்ண பக்தராவது எவ்வாறு என்பதை கற்றுத் தரப் போகிறேன்.” அவ்வாறு அவதரித்தவரே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. அவர் தனது சொந்த நடத்தையின் மூலமாக பக்தியைக் கற்பிக்கின்றார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பக்தராக அவதரித்துள்ளபோதிலும், அவர் சாக்ஷாத் முழுமுதற் கடவுள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உதாரணமாக, யாரேனும் ஒருவர் என்னுடைய உடலைப் பிடித்துவிடும்போது, அவர் எவ்வாறு பிடித்துவிட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக, “இவ்வாறு பிடியுங்கள், அவ்வாறு பிடியுங்கள்,” என்று நான் அவருடைய கைகளைப் பிடித்து கற்றுக் கொடுக்கலாம். அதுபோலவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் கிருஷ்ணராக உள்ளபோதிலும், பக்தித் தொண்டை அவர் நமக்குக் கற்றுத் தருகிறார். ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ராதா-க்ருஷ்ண நஹே அன்ய. கிருஷ்ணரும் சைதன்ய மஹாபிரபுவும் வேறுபட்டவர்கள் அல்ல.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணரே, இது சாஸ்திரங்களில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இங்கே (ஸ்ரீமத் பாகவதத்தில்) சன்ன: கலௌ யத் அபவ: என்று கூறப்பட்டுள்ளது. நரசிம்மதேவர், வாமனதேவர் அல்லது இராமசந்திரரைப் போன்று அவர் கலியுகத்தில் நேரடியாக அவதரிப்பதில்லை, ஆனால் பக்தராக அவதரிக்கின்றார். அதனால், சில நேரங்களில், த்ரி-யுக, மூன்று யுகங்களில் தோன்றுபவர் என்று அவர் அறியப்படுகிறார். அதாவது, மூன்று யுகங்களில் அவர் வெளிப்படையாகத் தோன்றுகிறார், நான்காவது யுகமான கலி யுகத்தில் பக்தராகத் தோன்றுகிறார்; இதனால் த்ரியுக என்று அறியப்படுகிறார்.

இன்று சைதன்ய மஹாபிரபுவின் அவதார தினம், இந்த மாயாபுர் அவருடைய அவதார ஸ்தலம். இது நம்முடைய நல்லதிர்ஷ்டமாகும். எப்போதும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை நினைவுகூர்ந்து, ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த என்று உச்சரிப்பீராக. இஃது உங்களுடைய வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும்.