ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தனர் (உதாரணம், இராவணன்). துவாபர யுகத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தில் வசித்தனர் (உதாரணம், கம்சன்). கலி யுகத்திலோ அசுரத் தன்மையானது ஒவ்வொருவரின் இதயத்திலும் குடி கொண்டுள்ளது. பொதுவாக அசுரர்களைக் கொன்று பக்தர்களைக் காத்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதரிக்கும் எம்பெருமான், கலி யுகத்தில் அனைவரிடமும் உள்ள அசுரத் தன்மையினைக் கொன்று அவர்களிடம் உள்ள பக்தியைக் காத்து யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகத் தோன்றினார்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் யார்?

பெற்றோர்களின் பேச்சை குழந்தைகள் கேட்காதபோது பெற்றோர்கள் அதிகம் வருந்துகிறார்கள். அதுபோல, அனைத்து ஜீவராசிகளின் தந்தையாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னிடமிருந்து விலகிய ஜீவன்களின் அவல நிலையைப் பார்த்து, அவர்களை தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதில் அதிக ஆவலுடன் இருக்கிறார். அதற்காகவே அவர் யுகந்தோறும் அவதரிக்கின்றார்,

சாஸ்திரங்களை வழங்குகிறார், தனது தூய பக்தர்களையும் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கின்றார்.

 

ஒவ்வொரு யுகத்திலும் அவர் அவதரிக்கும்போது அசுரர்களை ஆயுதங்களால் வதம் செய்வது வழக்கம். அதே முறையை அவர் கலி யுகத்திலும் கடைப்பிடித்தால், மனித குலம் இருக்காது என்பதால், கலி யுகத்தில் பகவான் வேறு விதமாக அவதரிக்கின்றார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால், பக்த ரூபத்தில் தோன்றிய பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவினை மறைக்கப்பட்ட அவதாரமாக உணர முடியும். ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கின்ற அசுர குணத்தை அழிப்பதற்கு சைதன்ய மஹாபிரபு கொண்டு வந்த சூட்சும ஆயுதமே ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே). சைதன்ய மஹாபிரபு சாக்ஷாத் கிருஷ்ணரே, ஆயினும் அவர் ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் (பக்தி மனப்பான்மையையும்) மேனி நிறத்தையும் ஏற்று அவதரித்ததால், ராதா கிருஷ்ணரின் இணைந்த ரூபமாக ஏற்கப்படுகிறார்.

நாம ஸங்கீர்த்தனமும் சைதன்யரும்

சைதன்ய மஹாபிரபுவிற்கு பல பெயர்கள் உண்டு: வேப்ப மரத்தடியில் பிறந்ததால் நிமாய் என்றும், பிரபஞ்சத்தைப் பராமரிப்பவர் என்பதால் விஸ்வம்பரர் என்றும், உருக்கிய பொன்னிற மேனியைக் கொண்டதால் கௌராங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். சந்நியாசம் பூண்ட பின்னர் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்று அழைக்கப்பட்டார்.

 

சைதன்ய மஹாபிரபு சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தின் நவத்வீப பகுதியிலுள்ள மாயாபுர் என்னுமிடத்தில் அவதரித்தார். அவர் தோன்றியபோது அவருடன் நாம ஸங்கீர்த்தனத்தையும் அழைத்து வந்தார். எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் கிருஷ்ண பக்தியின் உன்னத நிலையான பிரேமையை வழங்கினார் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. அவர் தனது திருப்பணியை சிறு வயதிலேயே தொடங் கினார் என்பதை பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

 

சைதன்ய மஹாபிரபு சுமார் மூன்று அல்லது நான்கு வயது சிறுவனாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வெளியே சில நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவற்றில் ஒரே ஒரு குட்டியை மட்டும் தனியாக எடுத்து வீட்டிற்குள் எடுத்து வந்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது அன்னை சச்சிதேவி, “என்ன செய்கிறாய்? நாயை வீட்டிற்குள் அழைத்து வரக் கூடாது,” என்று கூறி நாயை வெளியே கட்டிப்போடும்படி கூறினார். வேத கலாசாரத்தில் நாயை யாரும் வீட்டினுள் அனுமதிக்க மாட்டார்கள் அல்லவா!

 

பின்னர், நிமாய் தனது நண்பர்களுடன் கங்கைக்கு நீராடச் சென்றபோது, சச்சிதேவி அந்த நாயினை அவிழ்த்துவிட்டாள். வீட்டிற்குத் திரும்பிய நிமாய் நாயைக் காணாமல் வருத்தமடைந்தார்.

 

அச்சமயத்தில், நகரின் வேறு பகுதியில், கௌராங்கரால் அரவணைக்கப்பட்ட அந்த நாய்க் குட்டி கிருஷ்ண பிரேமையின் அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கியது. “ஹரி போல்! ஹரி போல்!” என்று குரைத்தபடி, நாய் மேலும் கீழும் குதிக்கத் தொடங்கியது. அக்காட்சியைக் காண மக்களும் கூடினர். நாய்குட்டி பெரும் ஆன்மீக பரவசத்துடன் தரையில் உருண்ட வண்ணம் உடலை விட்டது. அப்போது நாயின் உடலிலிருந்த ஆத்மா வெளியே வந்தது, விண்ணிலிருந்து ஆன்மீக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் வர, ஆத்மாவும் வைகுண்டவாசியின் உடலைப் பெற்று வைகுண்டம் சென்றது. தனது அவதார நோக்கத்தினை சைதன்ய மஹாபிரபு எளிய நாய்க் குட்டியின் மூலமாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார்.

ராதா கிருஷ்ணரின் இணைந்த ரூபமாக காணப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

கருணையின் மொத்த உருவம்

பகவத் கீதையை உரைத்த கிருஷ்ணர் முதலில் தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்; அவ்வாறு சரணடைந்தால் எல்லா பாவங்களையும் போக்கி விடுவதாக உறுதியளிக்கிறார். அதாவது, கிருஷ்ணர் கீதையில் ஒரு வகையான நிபந்தனையை விதிக்கின்றார். ஆனால் அதே கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக வரும்போது, நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும் என்று வேண்டுகிறார். கம்சனால் அனுப்பப்பட்டு கிருஷ்ணரால் கொல்லப்பட்ட பூதனை என்னும் அரக்கி கிருஷ்ணரின் கருணையினால் அவரது லோகத்தில் தாய்க்கு சமமான வாத்ஸல்ய பக்தியைப் பெற்றாள். பகவான் கிருஷ்ணரின் கருணையை வெளிப்படுத்தும் இத்தகவல், சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மன்னருக்கு உபதேசித்தபோதுதான் உலக மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் நவத்வீபத்தில் அசுர குணம் நிரம்பிய ஜகாய், மாதாய் என்னும் இரு தீயோர்களுக்கு சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண பிரேமையை வழங்கியதை அங்கிருந்த மக்கள் அனைவரும் கண்கூடாகக் கண்டனர்.

 

கிருஷ்ணரும் மற்ற அவதாரங்களும் செல்வத்தையும் முக்தியையும் கொடுப்பார்கள், பக்தியை அவ்வளவு எளிதில் கொடுத்துவிட மாட்டார்கள். பக்தனின் பக்திக்கு பகவானே அடிமையாகி விடுவார் என்பதே இதற்கு காரணம். ஆனால் சைதன்ய மஹாபிரபுவோ தான் அனுபவிக்கும் கிருஷ்ண பிரேமையை மூடி மறைக்காமல் அனைவருக்கும் விநியோகம் செய்தார். அதனால்தான் சைதன்ய மஹாபிரபுவை கடல் போன்ற கருணை கொண்ட மஹாவதான்யாய அவதாரம் என ஆச்சாரியர்கள் போற்றுகின்றனர்.

பஞ்ச தத்துவத்தின் மகிமை

சைதன்ய மஹாபிரபுவை அவரது நான்கு சகாக்களுடன் இணைத்து வழிபட வேண்டும். கிருஷ்ணர் எப்போதும் தனது சகாக்களுடன் இருப்பதைப் போல, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரும் எப்போதும் தனது சகாக்களுடனே இருப்பார். குறிப்பாக, நித்யானந்த பிரபு, அத்வைத ஆச்சாரியர், கதாதரர், ஸ்ரீவாஸ தாகூர் ஆகிய நால்வருடன் இணைந்து ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பஞ்ச தத்துவமாக வழிபடப்படுகிறார்.

 

நித்யானந்த பிரபு: தன்னை அடைவதற்கு பலராமரின் அவதாரமான நித்யானந்த பிரபுவின் திருவடிகளில் தஞ்சம் புகுவதே வழி என சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். நித்யானந்த பிரபுவின் கருணை குறித்து ஒருமுறை ஸ்ரீல பிரபுபாதர் பின்வருமாறு கூறினார். “தாயின் கருவிற்குள் இருக்கும் குழந்தை எட்டி உதைக்கும்போது தாய் அதனைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக் கொள்வதைப் போல, பிரபஞ்சம் என்கிற கருவினுள் இருக்கும் ஜீவராசிகள் என்ன தவறு செய்தாலும் கடல்போன்ற கருணை கொண்ட நித்யானந்த பிரபு அவர்களை மன்னித்து விடுகிறார்.”

அத்வைத ஆச்சாரியர்: கங்கை நீரையும் துளசி இலையையும் வைத்து கிருஷ்ணரை மிகுந்த ஆழத்துடன் வேண்டி இவ்வுலகிற்கு சைதன்ய மஹாபிரபுவை வரவழைத்தவர் அத்வைத ஆச்சாரியர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாவார்.

 

கதாதரர்: கிருஷ்ணர் சைதன்ய மஹாபிரபுவாக வரும்போது ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தை எடுத்து வருகிறார். அவருக்கு உறுதுணை புரிய ஸ்ரீமதி ராதாராணி கதாதர பண்டிதராக வருகிறார்.

 

ஸ்ரீவாஸ தாகூர்: நாரதரின் அவதாரமான ஸ்ரீவாஸ தாகூரின் இல்லம், ஸ்ரீ சைதன்யர் தினமும் நாம ஸங்கீர்த்தனம் செய்யும் இடமாகும். அவ்வீட்டிலிருந்த புழு, பூச்சிகள், பறவைகள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் இவரது சங்கத்தினால் ஆன்மீக உலகைச் சென்றடைந்தன.

 

எனவே, கலி யுகத்திலுள்ள கதியற்றவர்களின் ஒரே நம்பிக்கை பஞ்ச தத்துவ வழிபாடு என்று பக்தி வினோத தாகூர் திடமாக வலியுறுத்துகிறார்.

 

சச்சிதேவி கண்ட கனவு

சைதன்ய மஹாபிரபுவின் அன்னை சச்சிதேவி ஒருநாள் விசித்திரமான கனவு ஒன்றினைக் கண்டாள். அக்கனவில் அவள் கிருஷ்ணரையும் பலராமரையும் பூஜையறையில் வழிபட்டுக் கொண்டிருந்தாள். திடீரென்று சைதன்யரும், நித்யானந்தரும் சிறு குழந்தைகளாக பூஜையறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது நித்யானந்தரின் கையில் பலராம விக்ரஹமும், சைதன்யரின் கையில் கிருஷ்ண விக்ரஹமும் இருந்தன. அவர்கள் இருவரும் விக்ரஹங்களுடன் பேசினர். “எங்களை ஏன் பூஜையறையிலிருந்து வெளியே எடுத்தீர்கள்? என் சகோதரன் கிருஷ்ணனே முழுமுதற் கடவுள் என்று உனக்குத் தெரியாதா?” என்று பலராமர் நித்யானந்த பிரபுவிடம் வினவினார். நித்யானந்தரோ, “உங்களின் துவாபர காலம் முடிந்து விட்டது, கலி யுகம் ஆரம்பித்து விட்டது. இப்போது சைதன்ய மஹாபிரபுதான் பூஜையறையில் உட்கார வேண்டும். உங்களுக்கு இங்கு இடமில்லை,” என்று பதிலளித்தார்.

 

கிருஷ்ணரும் பலராமரும் பூஜையறையில் மீண்டும் உட்கார முயற்சித்தபோது, சைதன்யரும் நித்யானந்தரும் அவர்களைத் தடுத்துக் கொண்டே இருந்தனர். குறிப்பாக, நித்யானந்த பிரபு அவர்களை கீழே இழுத்துக் கொண்டேயிருந்தார். சிறிது நேரத்தில், “ஓரமாக நில்லுங்கள். சைதன்ய மஹாபிரபுவே கலி யுக மக்களுக்கு ஒரே வழி” என்று கோபத்துடன் கூறிய நித்யானந்தர் விவாதத்தில் வென்று விட்டார். சைதன்யரும் நித்யானந்தரும் பூஜையறையில் அமர்ந்து சச்சிதேவியின் அன்பையும் பக்தியையும் ஏற்கின்றனர்.

 

தான் கண்ட கனவினை தனது மகனிடம் விளக்கிய சச்சிதேவி அதற்கான விளக்கத்தை வினவினாள். இதைக் கேட்ட சைதன்ய மஹாபிரபு உள்ளுக்குள் மிகவும் மகிழ்ந்தார். கிருஷ்ணரும் பலராமரும் கலி யுகத்தில் சைதன்யராகவும் நித்யானந்தராகவும் தோன்றி நடத்திய திவ்யமான லீலை இது.

 

தனது சகாக்களுடன் நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

நவத்வீப மண்டல பரிக்ரமா

கிருஷ்ண லீலைகளின் பூமியான விருந்தாவனத்தில் வசிப்பதற்கு தகுதிகள் தேவை. உன்னதமான கிருஷ்ண பக்தியில் ஏதேனும் சிறு தவறு செய்தாலும் அதனை ஸ்ரீமதி ராதாராணி பொறுத்துக் கொள்ள மாட்டாள். இருப்பினும், சைதன்ய மஹாபிரபுவின் பூமியான நவத்வீபம் அவரைப் போலவே மிகவும் கருணை வாய்ந்த ஸ்தலம். விருந்தாவனத்திலிருந்து சற்றும் வேறுபடாத இந்த தெய்வீக ஸ்தலம், விருந்தாவனத்தில் வசிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொடுக்க வல்லது. அதனால்தான், முதலில் நவத்வீபத்திற்குச் சென்று தகுதியை வளர்த்து, பின்னர் விருந்தாவனம் செல்ல வேண்டும் என்று பக்திவினோத தாகூர் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.

 

நவத்வீபம் என்றால் ஒன்பது தீவுகள் என்று பொருள்: இங்குள்ள தீவுகள் கங்கையால் பிரிக்கப்பட்டுள்ளன. குருக்ஷேத்திரம், நைமிசாரண்யம், பிரயாகை, காஞ்சி, அயோத்தியா, புஷ்கர், ஸ்ரீரங்கம், திருப்பதி, காசி உட்பட பிரபஞ்சத்திலுள்ள அனைத்து புனித ஸ்தலங்களும் நவத்வீபத்தில் இருக்கின்றன. நித்யானந்த பிரபுவின் கருணையினால் தூய்மையடைந்த கண்கள் மட்டுமே இந்த க்ஷேத்திரத்தின் உண்மை உருவைக் காண முடியும், இதன் மேலுள்ள மெல்லிய திரையை விலக்கி ஆன்மீக உலகைப் பார்க்க முடியும்.

 

நவத்வீபத்திற்கு வந்தவன் வேறு ஏதேனும் புனித ஸ்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால். அவன் ஒரு மூடன் என்று பக்திவினோத தாகூர் கூறுகிறார். அனைத்து புனித நதிகளும் க்ஷேத்திரங்களும் நவத்வீபத்தில் இருக்கும்போது, இதை விட்டு வெளியே எங்கு செல்ல வேண்டும்? நவத்வீபத்தின் மகிமைகளை ஆயிரம் திருவாய் கொண்ட அனந்த சேஷரால்கூட முழுமையாகப் பாட முடியாது என நவத்வீப தாம மஹாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்ச தத்துவங்களும் மஹாபிரபுவின் இதர சகாக்களும் லீலை செய்த புண்ணிய பூமி என்பதால், நவத்வீபத்தின் தூசி ஒருவரின் மீது படும்போது கற்பனைக்கெட்டாத தூய்மை ஒருவருக்கு ஏற்படுகின்றது.

நவத்வீபத்தின் ஒன்பது தீவுகளை பாதயாத்திரை மற்றும் படகு சவாரியின் மூலமாக பக்தர்கள் நவத்வீப மண்டல பரிக்ரமாவை ஏழு நாள்கள் மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த யாத்திரை இவ்வருடம் மார்ச் 16 முதல் 22 வரை நடைபெறுகிறது. ரஷ்யம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் என பல குழுக்களாக பிரிக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேரானந்தத்துடன் இதில் பங்கு கொள்கிறார்கள். தமிழ் பக்தர்கள் அதிகமானால் எதிர்காலத்தில் தனியாக தமிழ் பரிக்ரமாவும் நடைபெறும். நவத்வீப தாமத்தின் மையப் பகுதியும் சைதன்ய மஹாபிரபு தோன்றிய இடமுமான மாயாபுரில் இஸ்கான் சார்பில் கட்டப்பட்டு வரும் உலகிலேயே மிகப்பெரிய கோயில் 2016இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அவரது சகாக்களுடன் பஞ்ச தத்துவமாக வழிபடுதல் சிறந்தது.

பக்தி வினோத தாகூரின் அறிவுரை

கலி யுகத்தில் கிருஷ்ணரை சைதன்ய மஹாபிரபுவின் மூல மாக புரிந்துகொள்ள வேண்டும், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரை பஞ்ச தத்துவ ரூபத்தில் வழிபடுபவர்கள் புத்திசாலிகள். இவ்வுலகில் மட்டுமின்றி பிரபஞ்சத்திலுள்ள அனைத்து புனித க்ஷேத்திரங்களும் நவத்வீபத்தில் உள்ளன. கௌடீய வைஷ்ணவர்களின் இலக்கு விருந்தாவனம் என்றபோதிலும், அவர்கள் நவத்வீபத்திலும் பஞ்சதத்துவ வழிபாட்டிலும் அடைக்கலம் பெற்று விருந்தாவனத்தை அடைய வேண்டும்.

 

திரு. ஜீவன கௌரஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வண்ணம் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

 

 

ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற நவத்வீப மண்டல பரிக்ரமாவில் கலந்து கொண்டுள்ள பக்தர்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives