உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகா மருந்து

வழங்கியவர்: திருமதி. ரமா பக்தி தேவி தாஸி

உணவினால் வரும் பாதிப்புகள்

ஆஹார ஷுத்தௌ ஸத்வ ஷுத்தி 

ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும்.

மஹாபாரதத்தில் இது குறித்த ஒரு சம்பவம் உள்ளது. மகாஜனங்களில் ஒருவரான பீஷ்மரிடம் திரௌபதி, துரியோதனனால் தான் அரசவையில் அவமானப்படுத்தப்பட்டபோது தன்னைக் காப்பாற்றத் தவறியது குறித்து வருத்தம் தெரிவித்தாள். அப்போது பீஷ்மர், துரியோதனன் இட்ட உணவை உண்டதால்தான் தனது மனநிலை பாதிக்கப்பட்டு அவனது பாவகரமான கர்மாக்களில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பீஷ்மருக்கே அந்த நிலை என்றால், நமது நிலை என்ன? பகவான் ஸ்ரீ சைதன்யர் கூறுகிறார், “ஜட விஷயங்களில் மிகுந்த பற்றுதல் கொண்டவனால் சமைக்கப்பட்ட உணவை ஒருவன் உண்டால், அவனது மனம் களங்கமடையும். மனம் களங்கமடைந்துவிட்டால் கிருஷ்ணரை ஒருவனால் முறையாக நினைக்க முடியாது. (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை 6.278)

சைவ உணவு போதுமா?

“நான் சைவ உணவு மட்டுமே உண்கின்றேன்,” என்று கூறும் நம் நாட்டினரில் சிலர், அதனால் பெருமிதம் கொள்வதைப் பார்க்கின்றோம். ஆனால், அந்த சைவ உணவும் நமக்கு கர்மாவை வழங்கக் கூடியதாகும். தாவரங்களுக்கும் உயிர் உள்ளது, அவற்றை நாம் உண்ணும்போது நாம் நிச்சயமாக அதற்கான பாவத்தை அனுபவித்தாக வேண்டும். (தாவர உணவினால் ஏற்படும் பாவம், அசைவ உணவினால் ஏற்படும் பாவத்தைக்காட்டிலும் மிகவும் குறைவு என்றபோதிலும்) தாவர உணவுகளை நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு (விஷ்ணுவிற்கு) நைவேத்யம் செய்யும்போது மட்டுமே, பாவ விளைவுகளிலிருந்து நாம் முற்றிலுமாக விடுபடுகின்றோம். பகவத் கீதையிலும் (3.13) இதுவே வலியுறுத்தப்படுகிறது:

யக்ஞ-ஷிஷ்டாஷின: ஸந்தோ  முச்யந்தே ஸர்வ-கில்பிஷை:

புஞ்ஜதே தே த்வகம் பாபா     யே பசந்த் யாத்ம-காரணாத்

“யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப் பவர்கள், பாவத்தையே உண்கிறார்கள்.” 

நைவேத்யம் செய்வது எப்படி?

கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வ தற்கென்றே ஒரு தட்டும், சில கிண்ணங்களும், தண்ணீருக்கு ஒரு குவளையும் (டம்ளரும்) தனியாக இருக்க வேண்டும். தட்டில் சாதமும் கிண்ணங்களில் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் முதலியவற்றையும், குவளையில் தூய நீரும் எடுத்துக் கொண்டு அவை ஒவ்வொன்றிலும் துளசி இலைகளை வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தட்டானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹம் அல்லது படத்திற்கு முன் ஒரு மேசையின் மீது வைத்து அதற்கு முன் அமர்ந்து கிருஷ்ணர் எங்கனம் உண்டு மகிழ்வார் என்பதை தியானித்துக் கொண்டு மணியை அடித்தவாறு கீழே உள்ள மந்திரங்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறை சொல்ல வேண்டும்.

(1)

நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-பிரேஷ்டாய பூ-தலே

ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே

நமஸ் தே ஸாரஸ்வதே தேவே கௌர-வாணி-பிரசாரிணே

நிர்விஷேஷ-ஷூன்யவாதி பாஷ்சாத்ய-தேஷ-தாரிணே

(2)

நமோ மஹா-வதான்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே

க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய-நாம்னே கௌர-த்விஷே நம:

(3)

நமோ ப்ரஹ்மண்ய-தேவாய கோ-ப்ராஹ்மண-ஹிதாய ச

ஜகத்-திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:

நைவேத்யம் செய்யும் பக்தர், அவற்றை தனது குருவிற்கு அர்ப்பணம் செய்வதாக தியானிக்க வேண்டும், குருதேவர் அதனை குரு பரம்பரையின் மூலம் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்வார். கிருஷ்ணருக்கு நேரடியாக எதையும் நைவேத்யம் செய்யும் தகுதி தனக்கு இல்லை என்று பக்தர் எண்ண வேண்டும்.

நைவேத்யமானது கிருஷ்ணருக்கு முன் சுமார் பதினைந்து நிமிடங்கள் வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர், உணவானது பிரசாதமாக மாறி விடுகின்றது; அதனை பரிமாறும் பாத்திரங்களிலுள்ள இதர உணவுடன் கலந்துவிடவும். இந்த நைவேத்திய முறை எளிமையானதாக இருக்கும்போதிலும், அன்புடனும் பக்தியுடனும் அர்ப்பணம் செய்யப்பட்டால், கிருஷ்ணர் அதனை நிச்சயம் ஏற்பார்.

எத்தகைய உணவை கிருஷ்ணர் ஏற்பார்?

பக்தியுடனும் பிரியத்துடனும் அளிக்கப்படுபவை மட்டுமே கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, பக்தர்கள், நல்ல தரமான சிறந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால், மற்றும் பால் பொருட்களை கவனத்துடனும் கவனிப்புடனும் கிருஷ்ணருடைய உவகைக்கு என வாங்கி தயாரிக்க வேண்டும். மாமிசம், மீன், முட்டை, பூண்டு, வெங்காயம், காளான், வினிகர், மசூர் பருப்பு போன்றவை கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யத்தகாதவை.

கிருஷ்ணர் எங்கனம் உண்டு மகிழ்வார் என்பதையே சமையல் செய்கையில் நினைக்க வேண்டும். சமையல் செய்பவர்கள் தங்களது சொந்த இன்பத்தையோ, குடும்பத்தினரின் மகிழ்ச்சியையோ எண்ணுதல் கூடாது. நைவேத்யம் செய்யப்படுபவை மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்படுகின்றனவா என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வதற்கு முன், சமைப்பவர் உட்பட எவரும் அதை ருசி பார்க்கவோ உண்ணவோ கூடாது.

பிரசாதம் என்றால் கருணை

பிரசாதம் என்றால் “கருணை” என்று பொருள். பிரசாதத்தினை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அது பகவானின் கருணை என்பதால், நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றமடைகிறோம். எனவே, பிரசாதமானது கவனத்துடனும் பக்தியுடனும் அளிக்கப்பட வேண்டும், ஏற்கப்பட வேண்டும்.

(இக்கட்டுரையானது தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் அருளப்பட்ட பக்தி யோகம்–ஓர் அறிமுகம்” என்னும் புத்தகத்திலுள்ள குறிப்புகளைத் தழுவி எழுதப்பட்டதாகும்.)