ஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: லோசன தாஸ தாகூர்

ஸ்ரீ கௌரர் மற்றும் நித்யானந்தரின் கருணை

(1)

பரம கருண, பஹூ து3ஜன,

நிதாஇ கௌ3ரசந்த்3

ஸப3 அவதார- ஸார ஷி2ரோமணி,

கேவல ஆனந்த3-கந்த3

 

பகவான் நித்யானந்தரும் கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும்.

 

(2)

ப4ஜோ ப4ஜோ பா4இ, சைதன்ய நிதாஇ,

ஸுத்3ருட4 விஷ்2வாஸ கோரீ

விஷய சா2ஃடி3யா, ஸே ரஸே மஜியா,

முகே2 போ3லோ ஹரி ஹரி

 

எனதருமை சகோதரர்களே, பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுமாறு நான் தங்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த வழியில் கிருஷ்ண உணர்வை அடைய ஒருவன் விரும்பினால், அவன் தன்னுடைய புலனின்ப ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும். பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் வழிபாட்டில் மூழ்கி, எந்த பௌதிக நோக்கமும் இன்றி, “ஹரே கிருஷ்ண! ஹரி! ஹரி!” என்று உச்சரிப்பீராக.

 

(3)

தே3கோ2 ஒரே பா4இ, த்ரி-பு4வனே நாஇ,

ஏமோன த3யால தா3தா

பஷு2 பாகீ2 ஜு2ரே, பாஷாண வித3ரே,

ஷு2னி ஜாங்ர கு3ண-கா3தா2

 

எனதருமை சகோதரர்களே, இதைச் சற்று சோதித்துப் பாருங்கள். மூவுலகினுள் பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்யானந்தரைப் போன்று யாருமே இல்லை. அவர்களுடைய கருணை வாய்ந்த குணங்கள் மிகவும் அற்புதமானவை, அவற்றைக் கேட்டு பறவைகளும் விலங்குகளும்கூட அழுகின்றன, பாறைகளும் உருகுகின்றன.

 

(4)

ஸம்ஸாரே மஜியா, ரோஹிலி போரியா,

ஸே பதே3 நாஹிலோ ஆஷ2

ஆபன கரம, பு4ஞ்ஜாயே ஷ2மன,

கஹோயே லோசன-தா3

 

ஆனால் லோசன தாஸனாகிய நான், புலனின்பத்தில் பந்தப்பட்டுள்ளதை எண்ணி வருந்துகிறேன். பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்யானந்தரின் தாமரைத் திருவடிகளில் எனக்கு பற்றுதல் இல்லை; இதனால், மரணத்தின் மேற்பார்வையாளரான எமராஜர் என்னை தண்டிக்கின்றார், இந்த திருப்பணிகளில் பற்றுதல் கொள்வதிலிருந்து என்னைத் தடுக்கிறார்.

 

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் வழங்கிய பொருளுரை

 

இது லோசன தாஸ தாகூரின் பாடல். பஹூ என்றால் “இறைவன்” என்றும் து3ஜன என்றால் “இருவர்” என்றும் பொருள்படுகிறது. இரண்டு இறைவன்களான நிதாய்-கௌரசந்திர–பகவான் நித்யானந்தரும் பகவான் சைதன்யரும்–மிகமிக கருணை வாய்ந்தவர்கள் (பரம கருண) என்று லோசன தாஸ தாகூர் அறிவிக்கின்றார். ஸப3 அவதார-ஸார ஷி2ரோமணி. ஸப3 அவதார என்றால் “எல்லா அவதாரங்கள்” என்று பொருள். அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவம் என்னவெனில், தன்னுணர்விற்கான அவர்களுடைய பாதை முற்றிலும் ஆனந்தம் மட்டுமே நிறைந்ததாகும் (கேவல ஆனந்த3-கந்த3); ஏனெனில், அவர்கள் கீர்த்தனத்தையும் நர்த்தனத்தையும் அறிமுகப்படுத்தினர். பகவான் இராமர், கிருஷ்ணர் என பல அவதாரங்கள் உள்ளனர், கிருஷ்ணர் வழங்கிய பகவத் கீதையைப் புரிந்துகொள்வதற்கு அறிவும் புரிந்துணர்வும் தேவை. ஆனால் பகவான் சைதன்யரும் நித்யானந்தரும் ஆடுதல், பாடுதல் என்னும் எளிமையான ஆனந்தமயமான வழிமுறையினை அறிமுகப்படுத்தினர்.

 

அதனால், லோசன தாஸ தாகூர் அனைவரிடமும் வேண்டுகிறார், ப4ஜோ ப4ஜோ பா4இ, சைதன்ய நிதாஇ, எனதருமை சகோதரர்களே, பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடும்படி நான் உங்களை வேண்டுகிறேன். இந்த ஆடலும் பாடலும் விரும்பிய இலக்கை நோக்கி அழைத்துச் செல்லாது என்று நினைத்துவிடாதீர்கள். இந்த வழிமுறையினால் ஒருவன் எல்லா பக்குவத்தையும் அடைவான் என்பதற்கு சைதன்ய மஹாபிரபு உறுதியளிக்கிறார். எனவே, ஒருவன் திடமான நம்பிக்கையுடனும் உறுதியுடனும் (விஷ்2வாஸ கோரீ) கீர்த்தனத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் அது என்ன வழிமுறை? விஷய சா2ஃடி3யா, ஸே ரஸே மஜியா. ஒருவன் கிருஷ்ண உணர்வின் இந்த கீர்த்தன வழிமுறையில் ஈடுபட விரும்பினால், அவன் புலனின்பத்தின் மீதான தனது ஈடுபாட்டினைத் துறக்க வேண்டும். அது மட்டுமே தடை செய்யப்படுகிறது. ஒருவன் புலனுகர்ச்சியை துறந்தால், அவன் விரும்பிய பலனை அடைவது உறுதி. முகே2 போ3லோ ஹரி ஹரி, ஒருவன் புலனுகர்ச்சியின் நோக்கமின்றி, “ஹரே கிருஷ்ண! ஹரி! ஹரி!” என்று உச்சரித்தால் போதும்.

 

தே3கோ2 ஒரே பா4இ, த்ரி-பு4வனே நாஇ. லோசன தாஸ தாகூர் கூறுகிறார், “எனதருமை சகோதரரே, நீங்கள் இதனைச் சோதித்துப் பாருங்கள். மூவுலகங்களிலும் பகவான் சைதன்யர் அல்லது பகவான் நித்யானந்தரைப் போன்று யாரும் இல்லை; ஏனெனில், அவர்களுடைய கருணை வாய்ந்த குணங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளைக்கூட அழச் செய்யும் அளவிற்கு உயர்ந்தவை. மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது.” உண்மையில், சைதன்ய மஹாபிரபு ஜாரிகண்ட காட்டின் வழியாகச் சென்றபோது, புலிகள், யானைகள், பாம்புகள், மான்கள் மற்றும் இதர மிருகங்களும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபட்டன. அனைவரும் இணையும் அளவிற்கு கீர்த்தனம் அற்புதமானதாகும். மிருகங்கள்கூட இணைய முடியும் என்னும்பட்சத்தில், மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது. விலங்குகளை கீர்த்தனத்தில் ஈடுபடுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமல்ல என்பது உண்மையே. ஆயினும், சைதன்ய மஹாபிரபுவினால் விலங்குகளையும் கீர்த்தனத்தில் ஈடுபடுத்த முடியும்பட்சத்தில், நம்மால் குறைந்தபட்சம் மனிதர்களையாவது இந்த ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தின் பாதையினை ஏற்கும்படி தூண்ட முடியும். கல்போன்ற இதயம் கொண்ட நபர்கள்கூட உருகுமளவிற்கு இஃது அற்புதமானதாகும். பாஷண என்றால் கல் என்று பொருள். கீர்த்தனத்தினால் கல்கூட உருகும்.

 

ஆயினும், தான் புலனுகர்ச்சியில் பந்தப்பட்டிருப்பதாக லோசன தாஸ தாகூர் வருந்துகிறார். அவர் தன்னைத்தானே விளிக்கின்றார்: “எனதருமை மனமே, நீ புலனுகர்ச்சியின் பாதையில் பந்தப்பட்டுள்ளாய், ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தின் மீது உனக்கு கவர்ச்சியில்லை. பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்யானந்தரின் தாமரைத் திருவடிகளில் உனக்கு பற்றுதல் இல்லை என்னும்போது, என்னால் என்ன சொல்ல முடியும்? நான் வெறுமனே என்னுடைய துரதிர்ஷ்டத்தை எண்ணி வருந்த வேண்டியதுதான். இந்த திருப்பணியினால் கவரப்படுவதிலிருந்து என்னைத் தடுத்து எமராஜர் என்னை தண்டிக்கின்றார்.”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives