பாட்டு வகை: தரவு கொச்சகக் கலிப்பா

வழங்கியவர்: தயாள் கோவிந்த தாஸ்

பிரபுக்கள்  சரண்புகுவர்  பிடித்துய்வோம்  அவர்பதங்கள்

பரம்பொருளின்  தத்துவத்தைப்  பகர்வதனால்  எமைவென்றார்

சிரம்தாழ்த்திக்  கரம்கூப்பிச்  சிந்தனையை  மேல்வைத்தோம்

வரம்வேண்டும்  அவர்புகழை  வாழ்நாளில்  வகுத்துரைக்க

பொருள்: பிரபுக்கள் பலரும் சரணடையும் ஸ்ரீல பிரபுபாதரின் பாதங்களைப் பின்பற்றி ஈடேறுவோமாக. முழுமுதற் கடவுளைப் பற்றிய தத்துவத்தை எடுத்துக் கூறி, எமது உள்ளத்தை வென்ற அவரை, சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி எண்ணங்களை எல்லாம் அவர் மீது வைத்தோம். வாழ்நாளில் அவர் புகழைப் பகிர்ந்து எடுத்துரைக்க வரம் வேண்டும். (1)

பக்திவினோ  தர்தவம்  பயனளிக்க  இங்குவந்தார்

எத்திக்கும்  ஹரிநாமம்  இசைக்கவழி  பலசெய்தார்

பக்திக்கு  ஆசானாய்ப்  பரம்பரையில்  தான்அமர்ந்தார்

சக்திக்கு  இயன்றாற்போல்  சாதகரை  யாம்புகழ்வோம்

பொருள்: பக்திவினோத தாகூர் அவர்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பக்தர்கள் மாயாபுர் சாலைக்கு வந்து ஹரி நாம ஸங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என தவமிருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் இந்நாட்டில் தோன்றி அதை நிறைவேற்றினார். அனைத்து திசைகளிலும் ஹரி நாமம் இசைத்திட பல வழிகளை அவர் செய்தார். கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஆச்சாரியராக அமர்ந்து பக்திக்கு ஆசானாக விளங்குகிறார். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பி சாதனை செய்த ஸ்ரீல பிரபுபாதரை நம்மால் முடிந்த வரை புகழ்வோமாக. (2)

விருந்தா  வனம்விடுத்து  வெளியுலகில்  பிரச்சாரம்

பெருந்துயர்கள்  பாராது  பேரருளால்  தான்செய்தார்

மருந்தாகும்  பாகவதம்  மானிடர்க்கு  வைத்ததனால்

இருந்தேனுக்  கினிதாமோ  இப்பொழுதும்  எப்பொழுதும்

பொருள்: அழகிய விருந்தாவனத்திலிருந்து வெளியேறி, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதிலும் கிருஷ்ண பக்தி பிரச்சாரம் செய்தார். உலகிலுள்ள மக்களுக்கு கருணை காட்டும் வகையில் பெரும் துன்பங்களையும் பொருட்படுத்தாது செயல்பட்டார். பவ (பிறப்பு இறப்பு) நோய்க்கு மருந்தாகும் பாகவத இலக்கியத்திற்குப் பொருள் தந்து, அதை நூலாக மக்களிடையே வைத்தார். இஃது இந்த அடியேனுக்கு இப்பிறவியிலும் வேறு பிறவிகளிலும் இனிதாகவே இருக்கும். (3)

வேதங்கள்  யாமறியோம்  வித்தகத்தில்  தாழ்ந்திருந்தோம்

காதல்வழி  வகுத்தார்  கண்ணன்பால்  யாவர்க்கும்

வேதத்தின்  பொருளுணர்ந்தோம்  வேறென்ன  இனிவேண்டும்

ஏதுபயம்  இனியும்  எமதூதர்  பணியிழந்தார்

பொருள்: வேதங்கள் குறித்து நமக்குத் தெரியாது. வேத இலக்கிய அறிவும் கிடையாது. ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாகவும் தமது நூல்களின் மூலமாகவும், கடைப்பிடிப்பவர் யாவர்க்கும் கிருஷ்ணரின் மீது காதல் உருவாக வழி செய்தார். கிருஷ்ணரின் பேரில் காதல் கொள்வதே, வேத இலக்கியங்களின் நோக்கம். இனி வேறு என்ன இந்த உலகில் தேவை. மக்கள் கிருஷ்ண பக்தர்களாகும்பொழுதே பயத்தை இழப்பர், எம தூதர்களும் தங்களது வேலையை இழப்பர். (4)

விஞ்ஞானம்  பாரென்று  வேதத்தை  இகழ்வோரின்!

அஞ்ஞானத்  தைஉடைத்து  ஆழ்ந்தபெரும்  இலக்கியத்தால்

மெஞ்ஞானம்  யாதென்று  மேதினியில்  மிகவுரைத்தார்

எஞ்ஞான்றும்  நிலைக்கின்றார்  எமதிதயப்  பொருளவரே

பொருள்: ஸ்ரீல பிரபுபாதர், ஆழ்ந்த தத்துவங்கள் கொண்ட பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய இலக்கியங்களைக் கொண்டு, வேதத்தை இகழும் ஜட விஞ்ஞானிகளின் அறியாமையைத் தகர்த்தார். உண்மையான அறிவு என்ன என்பதை மேற்கூறிய இலக்கியங்களின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்தார். தமது நூல்களில் எப்பொழுதும் நிலைத்து இருக்கின்ற அவர், எமது இதயத்திற்கும் பொருளாவார். (5)

விருந்தா  வனலீலை  விரைந்தெங்கும்  எடுத்துரைத்து

பெரும்தேரில்  சகந்நாதர்  பெயர்ந்தருள  அணிவகுத்தார்

அருள்பாயும்  நவதீப  அரும்பெருமை  அறிவித்து

வரும்நாளில்  உலகத்தார்  வாழ்ந்துய்ய  வழிசெய்தார்

பொருள்: விருந்தாவனத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளை விரைந்து சென்று (குறுகிய காலத்தில்) உலகெங்கும் எடுத்துரைத்தார். பெரிய தேரில் ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி ஆகியோரை யாத்திரையாக எடுத்துச் சென்று, அவர்களின் அருள் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்தார், தாமும் அணியில் பங்கெடுத்தார். சைதன்யரின் அருள் பொங்கிப் பாயும் நவத்வீபத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பியதால், வரவிருக்கும் நாள்களில் மக்கள் வாழ்ந்து ஈடேற வழி செய்தார். (6)

கீதைக்குப்  பொருளுரைத்தார்  கிட்டும்உண்  மைஉருவில்

பேதைக  ளாய்த்திரிந்தார்  பேருரையால்  மிகத்தெளிந்தார்

காதைகள்  பலவுண்டு  கற்றிடவும்  கேட்டிடவும்

மேதையார்  இவர்போல  மேல்நாட்டில்  கீழ்நாட்டில்?

பொருள்: பகவத் கீதைக்கு உண்மையுருவில் பொருள் நமக்குக் கிடைக்கும்படி உரை தந்தார். அறிவின்றித் திரிந்தவர்களும் பிரபுபாதரின் பேருரையால் தெளிவு பெற்றனர். இது தொடர்பான கதைகள் கற்கவும் கேட்கவும் பல உண்டு. ஸ்ரீல பிரபுபாதரைப் போன்ற அறிவாளி மேல்நாடுகளிலும் கீழ்நாடுகளிலும் யாரிருக்க முடியும்? (7)

நாயைநாய்  பிடித்துண்ணும்  நடைமுறைசூழ்  கலியுலகில்

தூயபெரும்  பக்திலதா  துளிர்விட  வளம்செய்தார்

நேயமிது  போல்மிகுந்தார்  நெடும்உலகில்  வேறுளரோ?

காயம்சொல்  மனம்கருணைக்  கடலாவார்  தாள்வைப்போம்

பொருள்: நாயை நாய் பிடித்துண்ணும் சூழல் நிறைந்த இக்கலி யுகத்தில் மக்களின் இதயங்களில் தூய கிருஷ்ண பக்திக் கொடி துளிர்விட்டு வளர வளம் செய்தார்; பண்படுத்தி உரம் ஊட்டினார் என்க. இந்த நீண்ட உலகத்தில் இதுபோன்ற மனிதநேயம் மிகுந்தவர் யார் இருக்க முடியும்? உடல், மனம், சொல் எல்லாவற்றையும் கருணைக் கடல் போன்ற ஸ்ரீல பிரபுபாதரின் பாதங்களில் வைப்போமாக. (8)