பகவானின் இராஜ்ஜியத்தைப் பற்றிய விளக்கம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பதினைந்தாம் அத்தியாயம்

சென்ற இதழில் மைத்ரேயர் விதுரரிடம் திதியின் தவறான செயலைப் பற்றியும் அதன் விளைவுகளின் முன்னறிவிப்பையும் பற்றி விளக்கியதைக் கண்டோம். அதன்பின் நடந்த விஷயங்களை மைத்ரேயர் தொடர்ந்து விளக்குவதை இவ்விதழில் காணலாம்.

பிரபஞ்சம் இருளில் மூழ்குதல்

மைத்ரேய மாமுனிவர் கஸ்யபரின் மகன்களுடைய வரலாற்றினை விதுரரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

கஸ்யப முனிவரின் மனைவியான திதிக்கு தன் கருப்பையில் வளரும் மைந்தர்கள் தேவர்களுக்கு தொல்லை கொடுக்கப் போகிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் அத்தொல்லைகளை சில காலமாவது தவிர்ப்பதற்காக, நூறு வருடங்கள் வரை அவள் மைந்தர்களை தன் கர்ப்பத்திலேயே வைத்திருந்தாள்.

திதியினுடைய கர்ப்பத்தின் உந்துதலினால் அனைத்து உலகங்களும் சூரிய சந்திர ஒளியின்றி போயின. அதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு உலகங்களைச் சேர்ந்த தேவர்கள் பிரம்மதேவரை அணுகி, அவரின் உன்னத தன்மையைப் புகழ்ந்து பேசிய பின்னர், எல்லா திசைகளும் இருளால் சூழப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு, பிரம்மதேவர் திதியின் வயிற்றில் வளரும் குழந்தைகளைப் பற்றி விளக்கலானார். அது தொடர்பாக, நான்கு குமாரர்களின் வைகுண்ட பயணம் பற்றி நினைவுகூர்ந்த பிரம்மதேவர் அதனை இதர தேவர்களிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

குமாரர்களின் வைகுண்ட பயணம்

பிரம்மாவின் மனதிலிருந்து பிறந்த ஸனகர், ஸநாதனர், ஸனந்தனர், ஸனத்குமாரர் எனும் நால்வரும் தேவர்கள் அனைவருக்கும் மூத்தவர்கள். மேலும், மாசற்றவர்களும் பூரணத்தில் நிலைபெற்றவர்களுமான அவர்கள் தங்கள் சுய இச்சைப்படி பௌதிகப் பிரபஞ்சங்கள் முழுவதையும் சுற்றித் திரிந்தபின்னர் வைகுண்ட லோகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த காடுகளும் பூக்களும்

பழங்களும் பௌதிக மாசுகளின்றி முற்றிலும் ஆன்மீகமாக இருந்ததை அவர்கள் கண்டனர். வைகுண்டவாசிகள் பகவானின் அதியற்புத அழகுடன் பகவானுக்கு ஒப்பான உருவங்களுடன் இருந்தனர். வைகுண்டம் முழுதும் நறுமணமிக்க மலர்களும் ரீங்காரமிடும் வண்டுகளும் நிறைந்திருந்தன. அழகிய அவயங்களை உடைய ஆண்களும் பெண்களும் பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாக ஆழ்ந்திருந்ததால், புலனுகர்வில் சற்றும் ஈடுபாடின்றி ஆனந்தமாக இருந்தனர்.

அங்கிருந்த அனைத்து உயிர்களும் தூய அன்புடன் பகவானை திருப்திப்படுத்தும் ஒரே விருப்பத்துடன் இருந்தனர். இதுவே வைகுண்டத்தின் தனிச்சிறப்பாகும். திருமகளைப் போன்ற எழில் மங்கையர் பலர், அசுத்தம் என்பதற்கே இடமற்ற பகவானின் அரண்மனையை சுத்தம் செய்த வண்ணம் இருந்தனர். இதற்கு காரணம் அவர்கள் பகவானின் சிறப்பான கருணையைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

அங்கே மல்லிகை, பாரிஜாதம், சம்பகம் போன்ற பற்பல வகையான நறுமணமிக்க மலர்கள் துளசியின் தனிப்பெரும் மகிமையை புரிந்து கொண்டு போற்றின. இதுவே ஆன்மீக உலகின் தனிச்சிறப்பாகும். அதாவது, அங்கு பக்தர்களுக்கிடையில் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது. இஃது உண்மை என்பதை மலர்களும்கூட நிரூபிக்கின்றன.

மனித வாழ்க்கையானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், அஃது ஒருவனை பூரண உண்மையைப் பற்றிய ஞானத்தையும் பக்தித் தொண்டையும் செய்ய வாய்ப்பளித்து, பகவானின் இருப்பிடமான வைகுண்ட லோகத்தை அடைய உதவுகிறது. அதனால் தேவர்களும் கூட மனிதப் பிறவியை பெற விரும்புகின்றனர்.

பகவானின் பொருமைகளை கேட்ட மாத்திரத்திலேயே மெய்மறந்து ஆனந்தத்தில் திளைக்கின்றனரோ, அவர்கள் பகவானின் இருப்பிடமான வைகுண்டம் செல்ல தகுதியானவர்கள். இந்த நிலையை நாம் அடைய அபராத மின்றி பகவானின் நாமத்தை ஜெபிக்க வேண்டும்.

குமாரர்கள் நுழைய தடை

ஸனகாதி குமாரர்கள் வைகுண்ட லோகத்தை அடைந்ததும் முன்னர் ஒருபோதும் உண்ர்ந்தறியா மகிழ்ச்சியினை அனுபவித்தனர். வைகுண்ட லோகத் திலுள்ள பகவானைக் காணும் ஆவலில் விரைந்து சென்ற அந்த இளம் முனிவர்கள் ஆறு நுழைவாயில்களைக் கடந்து சென்றனர். பின்னர் ஏழாவது வாயிலில், கைகளில் கதைகளைத் தாங்கி, வைர வைடூரியங்களால் ஆன கிரீடங்களையும் கண்ணைக் கவரும் வண்ண ஆடைகள் மற்றும் நறுமண மலர்மாலைகளையும் அணிந்திருந்த ஒளிமிக்க இரு காவலர்களைக் கண்டனர். அவர்களின் விழிகள் சினத்தால் சிவந்திருந்தன.

நான்கு குமாரர்களும் ஐந்து வயது குழந்தைகளைப் போல் ஆடையின்றி இருப்பதைக் கண்ட அக்காவலர்கள் அவர்களின் பெருமைகளை அறியாமல் தம் ஈட்டியால் தடுத்து நிறுத்தினர்.

குமாரர்களின் சாபம்

தங்களது நேசத்திற்குரிய பகவான் ஹரியைக் காண்பது தடை செய்யப்பட்டதால், குமாரர்களின் மனதில் வருத்தமும் கோபமும் ஒருசேர எழவே அவர்கள் பின்வருமாறு பேசினர்: “முழுமுதற் கடவுள் பகைவர்கள் இல்லாதவர் ஆயிற்றே. அவர்மீது யார் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியும்? இறைவனது உலகத்தில் பகைவர் எவ்வாறு நுழைய முடியும்? பகவானுக்கு பணி செய்யும் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டும் முரண்பட்ட செயலைச் செய்கின்றனரே, இவர்கள் இருவரும் ஏமாற்று பேர்வழிகளாக இருக்க வேண்டும். அதனால்தான் இவர்கள் பிறரையும் தம்மைப் போல கருதுகின்றனர்.

“வைகுண்டவாசிகளுக்கும் பகவானுக்கும் முழு இணக்கம் நிலவுகிறது. இந்த இருவரும் வைகுண்டவாசிகள் போல் ஆடை அணிகளுடன் தோன்றினாலும், இந்த இணக்கமின்மையை இவர்கள் எவ்வாறு பெற்றனர்? வைகுண்ட வாழ்வில் இருமையைக் கண்டதால் இவர்கள் மாசுடையவர்கள். அத்தகைய இவர்களை எவ்வாறு தண்டிக்கலாம்? அத்தண்டனை இவர்களுக்குநன்மையருள்வதாக இருக்க வேண்டும். இவர்களை மண்ணுலகிற்கு அனுப்புவதே பொருத்தமாயிருக்கும்.”

பகவானின் பக்தர்களாக இருந்த அக்காவலர்கள், அந்தணர்களின் சாபத்தை எவ்வித ஆயுதத்தாலும் தடுக்க முடியாது என்பதை உடனே உணர்ந்து, அவர்களது பாதம் பணிந்து பின்வருமாறு பேசினர்: “மதிப்பிற்குரிய முனிவர்களே, நீங்கள் எம்மை தண்டித்தது நியாயமானதே. அதன்படி நாங்கள் கீழ் உலகம் அடைந்தாலும் முழுமுதற் கடவுளை ஒருபோதும் மறக்காமலிருக்கே அருள்புரிய வேண்டுகிறோம்.”

நாராயணரின் வருகை

வைகுண்ட வாசலில் நடைபெற்ற இந்நிகழ்வை அறிந்து கொண்ட பக்தவத்சலரான பகவான் ஸ்ரீ ஹரி விரைந்து அங்கே வந்தடைந்தார். இதுவரை தியானத்தில் மட்டுமே கண்டிருந்த பகவானை ஸனகாதி முனிவர்கள் தற்போது நேரே தரிசித்தனர். அச்சமயம் பகவான் மிகவும் அழகிய பொன் மஞ்சள் பட்டாடையுடன் ஒளிர்கின்ற ஒட்டியாணம் இடையில் அலங்கரிக்க, மார்பில் புத்தம்புதிய மலர்மாலையுடன் ரம்மியமாக காட்சி தந்தார். அவரது வன்மைமிக்க மணிக்கட்டுக்களை கைவளையல்கள் அணி செய்தன. அவர் தன்னுடைய ஒரு திருக்கரத்தை தன் வாகனமான கருடனின் தோள்மீது வைத்தபடி மற்றொரு திருக்கரத்தால் தாமரை மலரை சுழற்றியவாறு நடந்து வந்தனர். அப்போது அவரது செவிகளில் அணிந்திருந்த மகர குண்டலங்கள் அழகுற அசைந்தாடின. வைர வைடூரியங்கள் பதித்த மணிமகுடம் அவரது திருமுடியை அலங்கரித்தது. கௌஸ்துப மணிமாலை ஒன்று அவரது கழுத்தை அழகு செய்தது. அழகுக்கெல்லாம் அழகு சேர்க்கும் செல்வத் திருமகள் லக்ஷ்மியின் அழகையும் வெல்லும் வகையில் பகவானது அழகு கண்ணைக் கவர்ந்தது. நம் அனைவரின் வணக்கத்திற்குரிய பகவானின் அழகை அள்ளிப்பருகிய முனிவர்கள் பேரானந்தம் அடைந்து அவரது தாமரைத் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்கினர்.

அத்திருவடிகளில் இருந்த துளசி இலையின் நறுமணமானது அம்முனிவர்களின் நாசிகளில் புகுந்தவுடன் அவர்களது உடல்களிலும் மனங்களிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தனர். இதுவரை பரம உண்மையை அருவமாகக் கருதிக் கொண்டிருந்த அவர்கள் பகவானுக்கு பக்தித் தொண்டாற்றுவதே இறுதி இலட்சியம் என்பதை தெளிவாக உணர்ந்தனர்.

குமாரர்கள் உணர்ந்தறிதல்

பகவானின் திருவுருவ தரிசனம் பெற்ற முனிவர்கள் மிகவும் திருப்தியடைந்து பின்வருமாறு கூறினர்: “போற்றுதலுக்குரிய பகவானே, நீங்கள் அனைவரின் இதயத்திற்குள்ளும் வீற்றிருக்கிறீர்கள். நாங்கள் தங்கள் திருவுருவத்தைப் பற்றி எங்கள் தந்தையான பிரம்ம தேவரிடமிருந்து கேள்விப்பட்டிருந்தோம். இப்போது தங்கள் தரிசனம் அதை உண்மையென்று உணர வைக்கின்றது. இத்தரிசனம் மாறாத பக்தி தொண்டின் மூலம் பெறப்படும் உங்கள் கருணையாலேயே சாத்தியமாகிறது.

“இந்நிலையில் எங்களுக்கு தேவலோக வாசமோ முக்தியோ தேவையேயில்லை. நாங்கள் நரகம் சென்றாலும்கூட எப்போதும் தங்களது உன்னத குணங்களின் பெருமைகளைப் பாடி பக்தித் தொண்டில் நிலைத்திருக்கவே வேண்டுகிறோம். எங்கள் அன்பு வணக்கங்களை மீண்டும்மீண்டும் தங்களின் திருவடிகளில் அர்ப்பணிக்கிறோம்.”

 

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives