பக்திப் பரவசத்தை நல்கும் ஸ்ரீமத் பாகவதம்

Must read

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, புனித ஸ்தலங்களில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்ற இதழில், திருநாம உச்சாடனத்தைப் பற்றி கண்டோம். தற்போது, ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல் என்பது பற்றி காண்போம்.

வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்

ஸ்ரீமத் பாகவதம் என்றால் என்ன?

ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

 

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்

ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும்போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அதுபோலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்

நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாசதேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தியடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார்.

இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாசதேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார்.

இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் போன்றே கேள்வி பதிலின் வடிவில் அமைந்துள்ளது. கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான மார்கத்தை அறிய நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், ஸ்ரீல சூத கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களின் வடிவில் இஃது அமைந்துள்ளது. ஸ்ரீல சூத கோஸ்வாமியோ, பரிக்ஷித் மன்னரின் கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி எவ்வாறு பதிலளித்தாரோ, அதை அப்படியே நைமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.

போலி தர்மங்களுக்கு இடமில்லை

பக்தி யோகத்தை மட்டுமே வலியுறுத்தும் ஸ்ரீமத் பாகவதம், மற்ற எல்லா தர்மங்களையும் நிராகரிக்கும்படி பரிந்துரை செய்கின்றது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில், எல்லா தர்மங்களையும் கைவிட்டு தன்னை மட்டுமே சரணடையுமாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் ஸ்ரீமத் பாகவதமோ, அதன் இரண்டாம் ஸ்லோகத்திலேயே எல்லா விதமான போலி தர்மங்களையும் நிராகரிக்கும்படி வலியுறுத்துகின்றது (தர்ம: ப்ரோஜ்ஜித-கைதவோ (அ)த்ர பரமோ நிர்மத்ஸரணாம் ஸதாம் 1.1.2). எனவே, பகவத் கீதை எதில் முடிகின்றதோ, அதிலிருந்து ஸ்ரீமத் பாகவதம் தொடங்குகின்றது.

 

வேத ஞானத்தின் சாரம்

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்திலிருந்து தெரிய வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இக்கருத்து ஸ்ரீமத் பாகவதத்தில் (1.1.3) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம்  ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்

பிபத பாகவதம் ரஸம் ஆலயம்   முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுகதேவரின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது. 

பல வகையான சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றில் பலவிதமான கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு ஆண்டுகள் படித்த பிறகே கற்றுக்கொள்ள முடியும். எனவே, இவ்வெல்லா சாஸ்திரங்களின் சாரத்தை தேர்ந்தெடுத்து அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக விளக்குமாறு சூத கோஸ்வாமியிடம் நைமிசாரண்யத்தில் கூடியிருந்த முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

“எல்லா வேத சாஸ்திரங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் சாரத்தை எடுத்த வியாசதேவர், தன்னுணர்வு பெற்றவர்களில் அதிகமாக மதிக்கப்படும் தனது மகனான சுகதேவருக்கு, அந்த சாரமான ஸ்ரீமத் பாகவதத்தை கொடுத்தார்” என்று ஸ்ரீல சூத கோஸ்வாமி அவர்களுக்கு பதிலளித்தார். (பாகவதம் 1.3.41)

எனவே, எல்லா வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரமே ஸ்ரீமத் பாகவதம்.

கலி யுக மக்கள் ஒளி பெற

பரம்பொருளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய இருப்பிடத்திற்கு (ஆன்மீக உலகிற்குத்) திரும்பி சென்ற பின், மதக் கொள்கைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்திடம் தஞ்சமடைந்துள்ளன. ஸ்ரீமத் பாகவதம், சூரியனைப் போன்று பிரகாசமானது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றபின் இஃது உதித்துள்ளது. அறியாமை என்னும் அடர்ந்த இருட்டில் பார்வையை இழந்த கலி யுக மக்கள் இப்புராணத்திலிருந்து ஒளி பெற இயலும். இந்த ஸ்ரீமத் பாகவதம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தில் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகும்.

பூரண விடுதலையை நல்கும்

களங்கமற்ற (அமல) புராணமான ஸ்ரீமத் பாகவதம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானது. ஏனென்றால், இது மிகவுயர்ந்த தூய ஞானத்தை விளக்குகிறது; தெய்வீக ஞானம், துறவு, பக்தி ஆகியவற்றின் செயல்முறைகளை விளக்கி, பௌதிக செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலையடைய வழி வகுக்கின்றது. யாரொருவர் இந்த ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்துகொள்ள தீவிர முயற்சி செய்கின்றனரோ, முறையாக கேட்டு பக்தியுடன் உரைக்கின்றனரோ, அவர்கள் பூரண விடுதலையை அடைவர். (பாகவதம் 12.13.18)

புராணங்களில் சிறந்தது

எல்லா நதிகளிலும் கங்கை எவ்வாறு சிறந்ததோ, கடவுள்களில் அச்யுதர் (கிருஷ்ணர்) எவ்வாறு உயர்ந்தவரோ, வைஷ்ணவர்களில் எவ்வாறு சிவன் உயர்ந்தவரோ, அதே போல எல்லா புராணங்களிலும் ஸ்ரீமத் பாகவதமே உயர்ந்ததாகும். (பாகவதம் 12.13.16)

அமிர்தக் கடலான ஸ்ரீமத் பாகவதம் கேட்கப்படாத வரை மட்டுமே, சாதுக்களின் சங்கத்தில் மற்ற புராணங்கள் பிரகாசிக்க இயலும். (பாகவதம் 12.13.14.)

நாம் அணுகுவது எங்ஙனம்

ஸ்ரீமத் பாகவதத்தை நாம் பக்தரிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். அத்தகு பாகவத பக்தரிட மிருந்து நாம் நேரடியாக பாகவதத்தை கேட்கும்போது, அவரிடமிருந்து பக்தி சக்தியையும் பெறுகின்றோம்.

இந்த நவீன யுகத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு செயல்முறை விளக்கத்துடன் பிரச்சாரம் செய்திருக்கிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் காரணமற்ற கருணையினால் மட்டுமே நாம் ஸ்ரீமத் பாகவதத் தலைப்புகளுக்குள் எளிமையாக செல்ல முடியும். அவரது பரம்பரையில் வரும் ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவதத்திற்கு, எளிமையான, ஆனால் மிக அழகான கருத்துகளுடன் விளக்கவுரை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட பாகவத உரை, கடினமான தத்துவங்களையும், எளிய மொழியில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.

கேட்பதற்கான தகுதிகள்

ஸ்ரீமத் பாகவதத்தை தொடர்ந்து கேட்டு, அதனைப் புரிந்து கொண்டு, அதன்படி நடப்பவர்கள் தூய்மையான கிருஷ்ண பிரேமையை அடைவது உறுதி. வேத சடங்குகளின் பலன்கள், பொருளாதார முன்னேற்றம், கடவுளுடன் ஒன்றாகும் முக்தி போன்றவற்றை ஒருவன் குப்பையை போன்று தூக்கியெறிய வேண்டும், அவ்வாறு செய்ய இயலாதவன் ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்து கொள்ள முடியாது.

ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியப் பகுதி அதன் பத்தாம் காண்டம்; அதிலுள்ள கிருஷ்ண லீலைகளை துறவு மனப்பான்மையுடன் அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீமத் பாகவதத்தின் மீது ஈர்ப்பு இல்லாவிடில், ராஸ நடனம் போன்ற லீலைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாது. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே ஸ்ரீமத் பாகவதத்தை சுவைக்க முடியும்.

எச்சரிக்கை

ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இதனை பக்தரிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். அபக்தர்களிடமிருந்து, அதாவது வைஷ்ணவரல்லாதவரிடமிருந்து நாம் இதனைக் கேட்கக் கூடாது. பத்ம புராணத்திலுள்ள பின்வரும் எச்சரிக்கையினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்குகிறார்:

அவைஷ்ணவ-முகோத்கீர்ணம்    பூதம் ஹரி-கதாம்ருதம்

ஸ்ரவணம் நைவ கர்தவ்யம்     ஸர்போச்சிஷ்டம் யதா பய:

“வைஷ்ணவராக இல்லாதவரிடமிருந்து கிருஷ்ணரைப் பற்றிய எந்த விஷயத்தையும் கேட்கக் கூடாது. ஏனெனில், பாம்பின் உதடுகள் பட்ட பாலில், எவ்வாறு விஷத்தின் பாதிப்பு இருக்குமோ, அவ்வாறே அந்த அவைஷ்ணவர்கள் வழங்கும் கிருஷ்ண கதையிலும் விஷம் கலந்துள்ளது.”

பக்தரல்லாத நிறைய நபர்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக பாகவதத்தை மேடைபோட்டு ஒரு வார காலம் பேசுகின்றனர். பாகவத சப்தாஹ என்றும் இன்னும் வேறு தலைப்புகளிலும் அவர்கள் பேசுவதை நாம் கேட்கக் கூடாது. அது நமது பக்தியை முழுவதுமாக அழித்துவிடும்.

ஸ்ரீல பிரபுபாதரின் பரிந்துரைகளில் சில

(1)  “பகவத் கீதை உண்மையுருவில்” படித்த பிறகு ஸ்ரீமத் பாகவதத்தை படிப்பது நன்று. (2) ஸ்ரீமத் பாகவதத்தின் எல்லா பகுதிகளும் சுவையானதாக இருந்தாலும், முதல் காண்டத்திலிருந்து தொடங்கி படிப்படியாக இதர காண்டங்களைப் படிக்க வேண்டும். (3) இஸ்கான் கோவில்களில் தினசரி காலை நேரத்தில் நடைபெறும் பாகவத வகுப்பில் கலந்து கொண்டு பாகவதத்தை கேட்க வேண்டும்.

ஓம் தத் சத்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives