ஸ்ரீபாத மத்வாசாரியர்

Must read

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.

வழங்கியவர்: விக்ரம கோவிந்த தாஸ்

குழந்தைப் பருவம்

நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள பாஜக என்னும் கிராமத்தில் அத்தம்பதியினரின் மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். அதே வயதில் பூணூல் தரித்த அவர் சிறுவயதிலேயே சாஸ்திர அறிவில் ஒப்பில்லாதவராகத் திகழ்ந்தார்.

கல்வி, சந்நியாசம்

தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த பாஷ்யத்தை கவனமாகப் படித்தார். அப்போது வேதாந்தத்திற்கான அத்வைத விளக்கத்தின் உபயோகமற்ற தன்மையை நன்கு உணர்ந்த அவருக்கு, தூய உண்மையான விளக்கத்தை வேதாந்தத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. (பின்னர், அவர் துவைத வாத விளக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது) சந்நியாசம் எடுத்த 40 நாட்களிலேயே, தர்க்கத்தில் புகழ் பெற்ற வாசுதேவ பண்டிதரை வாதத்தில் வென்றார். அவரின் மேலான அறிவை உணர்ந்த அச்சுத பிரகாசர், மடத்தின் தலைமைப் பொறுப்பை அனந்த தீர்த்தர் என்ற திருநாமத்தோடு ஏற்க அவரைப் பணித்தார்.

 

வியாசதேவரை மத்வர் சந்தித்த காட்சி

யாத்திரைகள்

அவர் தனது விளக்கங்களைப் பரப்புவதற்காக பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். உடுப்பியிலிருந்து கன்னியாகுமரி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உட்பட பற்பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். அவ்வாறு சென்றபோது தனது விளக்கங்களை ஒரு நூலாக்கி வேதாந்த சூத்திரத்திற்கு ஒரு பாஷ்யம் எழுத உறுதி பூண்டார். அதற்கு வேதாந்த சூத்திரத்தை அருளிய வியாசரிடம் இருந்தே ஆசீர்வாதம் பெற வட இந்திய யாத்திரையைத் தொடங்கினார்.

வியாசதேவர் சாதாரண மக்களுக்குப் புலப்படாத வண்ணம் தனது ஆஸ்ரமமாகிய பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வருகிறார். நீண்ட கால நடைப் பயணத்திற்கு பிறகு மத்வாசாரியர் பத்ரிநாத் வந்தடைந்தார். அங்கு ஒரு மண்டலம் (ஏழு வார காலம்) விரதம் மேற்கொண்டு, பக்தியோடு பிரார்த்தித்தார். உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மேலும் உயரத்தில் இருக்கும் பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்று வியாசதேவரை அவர் சந்தித்தார். வியாசரிடம் தன்னுடைய பகவத் கீதையின் வியாக்கியானத்தை காட்டி அங்கீகாரம் பெற்றார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் எழுத ஆசியும் பெற்றார். வியாசதேவரை நேரடியாக சந்தித்துப் பேசியதால் சாஸ்திரங்களில் பொதிந்து இருக்கும் உண்மையான அர்த்தத்தை மேலும் நன்றாக உணர்ந்து, வேதாந்தத்திற்கு தனது விளக்கத்தை எழுதினார். பின்னர் பத்ரிநாத்திலிருந்து திரும்பி பீகார், வங்காளம், ஒரிசா, ஆந்திரா வழியாக உடுப்பி திரும்பினார்.

உடுப்பி கிருஷ்ணர்

உடுப்பியில் வசித்தபோது அருகிலுள்ள (மால்பே கடற்கரையில்) சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஒருநாள் ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்தபடி கடற்கரையில் அவர் இருந்தபோது, துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல், மணல் திட்டுகளில் சிக்கிக் கொண்டதைக் கண்டு, அது பாதுகாப்பாக கரை சேருவதற்கு வழிகாட்டினார். கப்பல் தலைவன் அவருக்குப் பரிசு வழங்க முன்வந்த போது, கப்பலில் இருந்த இரு பெரிய கோபிசந்தன (திலகம் அணிவதற்கும் பூஜைகளுக்கும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகை மண்) பாறைகளைக் கேட்டுப் பெற்றார். அப்பாறை ஒன்றினுள் இருந்த பலராமரின் விக்ரஹத்தை கடற்கரையின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். (அத்திருக்கோவில் வடபந்தேஸ்வரர் திருக்கோவில் என்று அறியப்படுகிறது.) மற்றொரு பாறையினுள் ஓர் அழகான கிருஷ்ணரின் விக்ரஹம் இருந்தது. கிருஷ்ணரின் கருணையாக அதனை ஏற்று, அழகான பாடல்களில் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார். அந்த விக்ரஹத்தை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டு முறையையும் நடத்தை விதிகளையும் உண்டாக்கினார்.

இடது: மத்வர் அவதரித்த வீடு, வலது: மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உடுப்பி கிருஷ்ணர்.

சீடர்கள்

பின்னர் இரண்டாம் முறையாக வட இந்திய யாத்திரை மேற்கொண்டு பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றார். மேலும், தில்லி, குருக்ஷேத்திரம், காசி, கோவா போன்ற இடங்களுக்கும் சென்ற அவர், அவ்வழிகளில் பலரையும் வாதத்தில் வென்று தனது சிஷ்யர்களாக்கிக் கொண்டார். பற்பல சிறந்த பண்டிதர்களுக்கும் சந்நியாசம் வழங்கினார். தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய அவர்களைப் பணித்தார். பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மத்வ தீர்த்தர், ஆக்ஷோப்ய தீர்த்தர் போன்றோர் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.

நூல்கள்

ஸ்ரீபாத மத்வாசாரியர் பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல உபநிஷத்துகளுக்கும் வியாக்கியானம் அளித்துள்ளார். மேலும் நியாய விவரண, கர்மநிர்ணய, கிருஷ்ணாம்ருத மஹார்ணவ போன்ற பல புத்தகங்களை எழுதினார். பற்பல பக்திப் பாடல்களையும் இயற்றினார். இறுதியாக ஐத்ரேய உபநிஷத்துக்கு விளக்கம் எழுதிய பிறகு, மடத்தின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தனது எழுபத்து ஒன்பதாம் வருட முடிவில், கி.பி.1317ஆம் ஆண்டு மார்கழி மாதம் வளர்பிறை நவமியில் பத்ரிகாஸ்ரமத்திற்கு தனது யாத்திரையைத் தனியாகத் தொடங்கினார். அதன் பின்னர் அவர் உடுப்பிக்குத் திரும்பவில்லை. அத்திருநாள், மத்வ நவமியாக இன்றும் பெரும் சிறப்பாக உடுப்பியில் கொண்டாடப்படுகின்றது.

ஸ்ரீபாத மத்வாசாரியரின் உபதேசங்கள்

  1. ஹரி என்று அறியப்படும் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள்.
  1. அவரை சாஸ்திரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
  1. பௌதீக உலகம் உண்மையானது.
  1. ஜீவாத்மாக்கள் பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவர்கள்.
  1. ஜீவாத்மாவின் இயற்கை பகவானின் சேவகனாக இருப்பதுவே.
  1. முக்தி பெற்ற நிலை, மாயைக்கு உட்பட்ட நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமே ஜீவன்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.
  1. முக்தி என்பது பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளை அடைவதே; அருவப் பிரம்மனில் கலப்பது அல்ல.
  1. தூய பக்தித் தொண்டினால் அந்த முக்தி சாத்தியமாகும்.
  1. பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.

ஸ்ரீத மத்வாசாரியரின் மேற்கூறிய அடிப்படைக் கோட்பாடுகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் ஏற்கப்பட்டது. இதை பலதேவ வித்யாபூஷனர் தனது ப்ரமேய ரத்னாவளியில் உறுதி செய்கிறார்.

 

ஸ்ரீபாத மத்வாசாரியர் பற்றிய சில தகவல்கள்

பிறந்த நாள்: புரட்டாசி மாதம் விஜயதசமி; கி.பி.1238, 4339 கலியுகம்

பிறந்த இடம்: உடுப்பியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பாஜக க்ஷேத்திரம்

பெற்றோர்: நாராயண பட்டர், வேதவதி

பெற்றோர் இட்ட பெயர்: வாசுதேவர்

சந்நியாச நாமம்: தனது 11 வயதில் பூர்ண பிரக்ஞர் என்ற திருநாமத்துடன் சந்நியாசம் எடுத்தார்

உபதேசித்தது: தத்துவவாதம் (துவைதம்)

ஸ்தாபித்தது: உடுப்பியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹத்தை ஸ்தாபித்தார்.

அருளிய பாஷ்யம்: வேதாந்த சூத்திரத்திற்கு பூர்ண பிரக்ஞ பாஷ்யம் என்ற தனது வியாக்கி யானத்தை அளித்தார். மேலும் பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்றவற்றிற்கு தனது விளக்கத்தை அளித்து, பல பக்திப் பாடல்களையும் இயற்றினார்.

ஸ்ரீபாத மத்வாசாரியரின் அதிசயத்தக்க உடல் வலிமை

மத்வாசாரியர் இயற்கையிலேயே தலைமைப் பண்புடையவராகவும், புத்தி, நல்லொழுக்கம், ஆன்மீக கலாசாரம் மட்டுமல்லாது உடல் வலிமையும் நன்றாக பெற்றவராக இருந்தார். மல்யுத்தம், நீச்சல், மலையேற்றம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். பரசுராமரின் வம்சத்தின் வழியே வந்த பிராமண குலத்தில் பிறந்தவர் என்பதால், நல்ல உயரமும் உடல் பலமும் பெற்றவராக இருந்தார்.

அவர் ஒருமுறை யாத்திரை சென்றபோது, அவரது சிஷ்யரான சத்ய தீர்த்தரை பயங்கரமான வங்காளப் புலி ஒன்று தாக்கியபோது, தீரத்தோடு அப்புலியை எதிர்த்த மத்வாசாரியர் அதனை ஓடச் செய்தார்.

மற்றொரு புண்ணிய யாத்திரையின் போது கொள்ளைக்கார கும்பல் ஒன்றினை எதிர்த்து அவர்களையும் ஓடச் செய்தார்.

காதான்சரி என்ற முப்பது பேர் பலம் கொண்ட ஒருவன், ஒரு முறை மத்வாசாரியருக்கு சவால் விட்டபோது, தமது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய ஆச்சாரியர், “இதை அசைத்தால் போதும்” என்று கூற, காதான்சரி அதைச் செய்ய இயலாமல் தோற்று ஓடினார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives