வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

இன்று மக்கள் மனதில் பக்தி பெருகுகின்றது. பல மதங்களில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நாள், கிழமைகளில் மக்கள் இறைவனின் அருளினை வேண்டி ஆலயங்களுக்குச் செல்கின்றனர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. அஃது உண்மையும் கூட. ஆனால் இவ்வளவு மக்கள் இவ்வளவு ஆலயங்களுக்குச் செல்கிறார்களே, அனைவரும் பக்தியில் உண்மையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்களா? அல்லது அதில் எந்தத் தளத்தில் உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது காண்போம்.

பக்தியின் தளங்கள்

பக்தியில் என்னென்ன தளங்கள் உள்ளன என்றும், அதில் நாம் எங்கு உள்ளோம் என்றும், எந்தத் தளத்தினை அடைந்தால் அது தூய பக்தி நிலை என்றும் நாம் அறிய வேண்டும்.

பக்தி மொத்தம் நான்கு தளங்களில் உள்ளது. அவை: புலன்களின் தளம், மனதின் தளம், புத்தியின் தளம் மற்றும் ஆன்மீகத் தளம். இதனை விவரமாக அலசுவோம்.

புலன்களின் தளத்தில் பக்தி

ஆரம்ப நிலையில் கடவுளிடம் மிதமான நம்பிக்கை கொண்டவர்கள் புலன்களின் தளத்தில் பக்தி செய்கின்றனர். இவர்கள் தங்களுடைய புலன்களின் திருப்திக்காக பகவானிடம் எப்போதும் ஏதேனும் வேண்டுகோளை வைத்தபடியே இருப்பார்கள். இறைவன் (அல்லது நமக்கு மேலே ஒரு சக்தி) இருப்பதை ஒப்புக்கொள்ளும் இவர்களை நாத்திகர்களை விட கொஞ்சம் முன்னேறியவர்கள் என்று கூறலாம்.

தங்களது அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், எதிர்காலத்தை வளமாக்கவும், சந்ததியினர் அனைத்து நலன்களையும் பலன்களையும் பெறுவதற்கும், ஏதேனும் ஒரு வழியில் தமது அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கவும் இவர்கள் கடவுளிடம் முறையிடுவர். மீண்டும்மீண்டும் முறையிட்டுக்கொண்டே இருப்பர். இவர்களைப் பொறுத்தவரை, தங்களது புலனின்பமே முக்கியமானது என்பதால், அதனை வழங்கும் ஒரு மேன்மையான சக்தியாகவே கடவுளைப் பார்ப்பதால், இந்த பக்தி (இதனை பக்தி என்று ஒப்புக்கொண்டாலும்) புலன்களின் அடிப்படையிலேயே உள்ளது.

இதிலுள்ள பரிதாபம் என்னவெனில், புலன்களைத் திருப்தி செய்யும் கடவுளே இவர்களுக்கு மெய்யான கடவுள்; எனவே, கடவுளை மாற்றுதல், மதத்தை மாற்றுதல், பலர் கூறும் பரிகாரங்களை குருட்டு நம்பிக்கையுடன் நிறைவேற்றுதல் போன்றவற்றை செய்வர். கடவுள் அதனை நிறைவேற்றாவிடில், அந்தக் கடவுளை திட்டுவது முதல் எல்லாம் நடக்கும். இவர்கள் நாத்திக எண்ணங்களையும் கூடவே கொண்டிருப்பர். கடவுளை பலனை வேண்டி வழிபடுவதைத் தவிர வேறொன்றும் அறியார்கள். ஒரு விதத்தில் கூறினால், இவர்கள் கடவுளிடம் வியாபாரம் செய்பவர்களைப் போன்றவர்கள்.

இதுபோன்ற பக்தர்கள் பல ஆலயங்களுக்குச் செல்வர், பல துறவிகளை வணங்குவர். ஆனால் மறந்தும் வாழ்வின் அர்த்தத்தைப் பற்றி கேள்வி எழுப்ப மாட்டார்கள். இவர்களாலேயே பல போலி துறவிகள் வளமுடன் வாழ்கின்றனர். இவர்கள் எந்தவித கட்டுப்பாட்டு விதிகளோ கோட்பாடுகளோ இன்றி, எளிதில் கடவுளின் அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதால், பல போலி சாமியார்கள் இவர்களிடமிருந்து அறுவடை செய்கின்றனர்.

எந்த மதமாக இருந்தாலும் இதுபோன்ற மக்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். வளம் வேண்டும் என்னும்போது கடவுளை வணங்குவதும், வளம் பெருகும்போது நாத்திகம் பேசி கடவுளை எளிதாக மறந்துவிடுவதும் மக்களின் இயல்பு.

மேலும் ஒரு சிறந்த அடையாளம்: புலன்களின் அடையாளத்திலேயே, அதாவது தான் இந்த உடல் என்ற எண்ணத்திலேயே இவர்கள் வாழ்வர். அதன் விரிவாக்கமாகிய இந்த உடல் பிறந்த குடும்பம், நாடு, மொழி எல்லாமே தனது என்றும் வாழ்வர். இவர்கள் அந்தந்த மதங்களின் கூட்டத்திற்குக் கணக்கெடுக்க வேண்டுமானால் பயன்படுவார்களே தவிர, உண்மையான சமய பலன் கிடைக்காது. இவர்களால் மத வியாபாரம் நன்கு நடைபெறும். மக்களை இந்த அளவிலேயே வைத்திருக்க பெரும் மடாதிபதிகளும் ஆலய நிர்வாகிகளும் முயல்கின்றனர்.

இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானோர் கடவுளின் திருப்திக்காகச் செயல்படுவதைக் காட்டிலும் தங்களுடைய அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடவே கடவுளிடம் முறையிடுகின்றனர்.

மனதின் தளத்தில் பக்தி

இவர்கள் புலன்களின் தளத்திலிருந்து பக்தி செய்பவர்களைக் காட்டிலும் சற்று முன்னேறியவர்கள், பக்தியில் அல்ல, உணர்வில். மனதின் பணி: எண்ணுதல், உணருதல், மற்றும் விரும்புதல். மனதின் தளத்தில் பக்தி செய்பவர்கள், சாஸ்திர விதிகளை நம்பாது தனக்கென சில திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதனை நியாயப்படுத்துவர். கடவுளின் உருவத்தினை கற்பனையானது என்று எண்ணுவர். கடவுள் எந்த வடிவினையும் ஏற்கலாம் என்று கூறி, சராசரி மனிதனையும் கடவுளாகப் போற்றுவர். கடவுளைப் பற்றியும் அவரது இடத்தினைப் பற்றியும் எவ்விதமான விவரமும் தெரியாது என்றாலும், இவர்கள் கற்பனை செய்வதை நிறுத்த மாட்டார்கள். மனம்போன போக்கில் இவர்களின் பக்தி இருப்பதால், ஆரம்பநிலையிலுள்ள அல்லது புலன்களின் தளத்திலுள்ள பக்தர்களையும் இவர்கள் குழப்பிவிடுவர். குரு மற்றும் ஆச்சாரியர்களிடம் மேலோட்டமாக சரணடைந்து அதனை தனது மன சந்தோஷத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வர்.

சில நேரங்களில் இவர்கள் கற்பனையாக கடவுளுடன் உறவாடும் நிலைக்குச் சென்று விடுவர். கடவுள் இவர்களுடன் நெருக்கமாக உறவாடுவதாக மற்றவர்களிடமும் காட்டி அதன் மூலம் பெரும் புலனின்பத்தினை, மன இன்பத்தினை அடைவர்.

ஆன்மீக வாழ்வின் ஆரம்ப நிலையில் புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று பகவத் கீதை (3.41) போதிக்கின்றது. கட்டுப்படுத்தாத மனம் மிகப்பெரிய எதிரி என்று கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார் (பகவத் கீதை 6.6).

மேலும், புலனின்பத்திலும் பெளதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. (பகவத் கீதை 2.44)

மனம் நமது நண்பனைப் போலவும் நமது நன்மைக்காகச் செயல்புரிபவனைப் போலவும் தோன்றினாலும், அது நமது ஜடப் பற்றுதலை மேன்மேலும் அதிகரிக்கின்றது. எனவேதான், சில நேரங்களில் நாம் எதையும் விரும்பவில்லை என்றாலோ எதையேனும் செய்து ஓய்வெடுக்க நினைத்தாலோ, மனம் மற்றொன்றின் மீது நம்மை திசை திருப்புகின்றது. இல்லை என்றால் வாழ்வினைப் பற்றி செயற்கையான அச்சத்தினை எழுப்புகின்றது. எனவே, எந்த நிலையிலும் நமக்கு பூரண திருப்தி வாய்ப்பதில்லை

அறிவின் தளத்தில் பக்தி

இந்த நிலை மிகுந்த நன்மையையும் வழங்கலாம், அல்லது மிகுந்த ஆபத்தையும் விளைவிக்கலாம். இந்தத் தளத்தில் மக்கள் அதிகமாக சிந்திப்பர், எதனையும் ஆராய்ந்து செய்திட விரும்புவர். வினாக்களை எழுப்பி, விடைகளைப் பெற்று, அதனை மேலும் ஆராய்ந்து, முடிவினை எட்ட மிகுந்த சிரமத்தை மேற்கொள்வர்; இருந்தும்கூட, மேன்மேலும் சந்தேகங்கள் இவர்களது மனதில் எழுந்து கொண்டிருக்கும். இவர்கள் அறிவைப் பயன்படுத்தி விஷயங்களை நன்கு புரிந்துகொள்வதால், எதனையும் முறையாகச் செய்திடவே விரும்புவர். இவர்கள் எதனையும் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், போலிகள் இவர்களை எளிதில் ஏமாற்ற முடியாது. எனவே, புலன்களின் தளம், மனதின் தளம் ஆகியவற்றில் உள்ள பெயரளவு பக்தர்களைக் காட்டிலும் இவர்கள் நிச்சயமாகச் சிறந்தவர்கள்.

இவர்கள் தங்களது புத்தியினை முறையாகப் பயன்படுத்தினால், அதாவது அங்கீகரிக்கப்பட்டவர்களின் அறிவுரையின்படி பயன்படுத்தினால், தங்களது ஸம்பிரதாயத்திற்கு (ஆன்மீகக் குழுவிற்கு) இவர்கள் உதவிகரமாக இருக்கலாம். ஆயினும், இந்த புத்தியின் தளத்திலுள்ள பக்தர்கள் தங்களின் அறிவினை அதிகப்படியாக நம்புவதால் பெரும்பாலும் சாஸ்திரங்களின் இறுதிக்கு வர முடியாது. புத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் இவர்கள் தங்களுடைய புத்திக்குள் கொண்டு வர முயல்வர். உதாரணமாக, பரந்துவிரிந்த இந்த ஜட பிரபஞ்சத்திற்கு அப்பால் ஆன்மீக உலகம் எல்லையற்று உள்ளது என்னும்போது அதனையும் அளந்திட முயல்வர், காலத்திற்கு அப்பாற்பட்ட என்றால் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்பர்.

அறிவினால் இவர்களுக்கு சற்று ஆனந்தம் கிடைத்தாலும், இவர்களின் அறிவே இவர்களைக் கட்டுப்படுத்திவிடுவதாக பகவத் கீதையில் (14.9) கிருஷ்ணர் கூறுகிறார்.

மேலும், அதிகப்படியான ஞானத்தில் இருப்பவர்களின் வாழ்வில் இறைவனின் மீதான அன்பிற்கான உணர்ச்சிகள் வெளிப்படாமல் போய்விடும், வறண்ட ஆன்மீக வாழ்வு காணப்படும். எனவே, இவர்கள் பல நேரங்களில் தங்களது சொந்த சித்தாந்தங்களை உருவாக்க முயல்வர். இவர்களை கிருஷ்ணர் மாயயாபஹ்ருத-ஜ்ஞானா (மாயையால் அறிவு கவரப்பட்டவர்கள்) என்று பகவத் கீதையில் (7.15) கூறுகிறார்.

சாஸ்திரங்களைப் படித்தாலும் சொந்த அறிவைக் கொண்டு அதனை அணுகுவோர் மாயையால் ஏமாற்றப்படுவர்.

இந்த மூன்றில் உள்ள பிரச்சனைகள்

இந்த மூன்று தளங்களில் நாம் பக்தி செய்ய முயலும்போது, அவை தூய பக்தியன்று. இந்த மூன்றிலும் “நான்” எனும் எண்ணமே பிரதானமாக இருக்கின்றது. நமக்கு என்ன வேண்டுமோ, நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன அறிகின்றோமோ, அப்படித்தான் செயல்பட விரும்புகின்றோம். பகவான் யார், பகவானின் தகுதிகள் யாவை என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள், தங்களது சுய விருப்பங்களை இவர்கள் கைவிடுவதில்லை. இந்த மூன்று தளங்களைப் பற்றியும் அதிலுள்ள ஆபத்தினைப் பற்றியும் கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்: புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும். இவற்றின் மூலம், ஜீவனின் உண்மையறிவை மறைத்து காமம் அவனை மயக்குகின்றது. (பகவத் கீதை 3.40)

இந்த ஜட வாழ்வில் நமது எதிரியாக கிருஷ்ணர் காமத்தினைக் குறிப்பிடுகின்றார். அந்த எதிரி நம்மை எப்பொழுதும் இறைவனிடம் சேரவிடாது தடுத்துக் கொண்டே இருக்கும். நாம் ஆலயத்திலேயே குடியிருந்தாலும் இந்த காமம் என்னும் நித்திய எதிரி நம்மை தூய பக்தியினை அறியவிடாது, ஏற்கவிடாது தடை செய்து கொண்டே இருக்கும். எனவே, இந்த மூன்று தளங்களில் ஒருவன் நின்றுவிட்டால், ஆன்மீக முன்னேற்றம் என்பது பகட்டாகவே இருந்துவிடும்.

ஆன்மீகத் தளத்தில் பக்தி

உண்மையில் பக்தியின் தளம் ஆன்மீகமே. ஆனால், நாம் இந்த ஜட இயற்கையின் முக்குணங்களில் சிக்கியுள்ளதால், நமது ஆரம்பநிலை பயிற்சியும் இந்த மூன்று குணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மூன்று தளங்களில் பக்தி செய்பவர்களை நாம் அதிகப்படியாகக் காண்கின்றோம்.

தூய பக்தியினை அறிந்து அதனை வளர்த்துக்கொண்டால், அஃது ஆன்மீகத் தளமாகும். நாமும் ஆன்மீகமாவோம், நமது பக்தியும் ஆன்மீகமாகும். “செயலாற்றக்கூடிய புலன்கள் ஜடப்பொருளைவிட உயர்ந்தவை; மனம் புலன்களைவிட உயர்ந்தது; புத்தி மனதைவிட உயர்ந்தது; மேலும், அவனோ (ஆத்மாவோ) புத்தியைவிட உயர்ந்தவன்.” (பகவத் கீதை 3.42).

முதல் மூன்று தளங்களிலுள்ள பக்தி தன்னை பிரதானப்படுத்தியும், ஆன்மீகத் தளத்திலுள்ள பக்தி பகவானை பிரதானப்படுத்தியும் இருக்கிறது. இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், இந்த மூன்றில் நாம் எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக ஆன்மீகத் தளத்திற்கு வரும் வழியினை போதித்துள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை  உச்சரிப்பதே கிருஷ்ணரை நேரடியாக திருப்தி செய்வதற்கான அந்த வழிமுறையாகும்.

வேருக்கு நீரூற்றுதல், வயிற்றுக்கு உணவளித்தல் என்பன போன்று, நாம் பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரை நேரடியாக திருப்திப்படுத்த வேண்டும். அவருக்காகப் பணியாற்ற வேண்டும், சுய தேவைகளை அணுவளவும் கலக்கக் கூடாது; அப்போது, அஃது ஆன்மீகத் தளத்தில் செயல்பட இயலும். அத்தளத்தில் பகவானுடைய கருணையால் நமது எல்லா தேவைகளும் தானாகவே பூர்த்தியடைந்துவிடுகின்றன. பகவானுக்கு முடிவில்லா சேவைகள் செய்யும்போது மட்டுமே பூரண திருப்தியும் முடிவில்லா ஆனந்தமும் கிடைக்கும். அந்த ஆனந்தத்தை அறியாதுபோது, நாம் முதல் மூன்று தளங்களில் நின்றுவிடுகிறோம்.

எனவே, மதங்களுக்கு ஆள் சேர்க்காமல், எந்த நிலையில் நாம் உள்ளோம், எங்குச் செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். கிடைத்தற்கரிய மானிடப் பிறவியினை முறையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தும்படியும் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பக்தன் என்றும் பகவானுக்கு சேவை செய்வதையே விரும்புகிறான்