சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் காண்டம், ஒன்பதாவது அத்தியாயம்

சென்ற இதழில் பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகளைக் கண்டோம். அவற்றிக்கான சுகதேவ கோஸ்வாமியின் ஏற்புடைய பதில்களை இந்த அத்தியாயத்திலிருந்து காணலாம்.

பிரம்மாவின் தவம்

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பதிலளிக்கத் துவங்கினார்: “அரசே, தூய ஆத்மா, பகிரங்க சக்தியால் வசீகரிப்பட்டுள்ள காரணத்தால் பௌதிக எண்ணத்தில் ஆழ்ந்து உடலுடன் உறவாடுகிறான். இது தனது உடல் இயங்குவதை கனவில் காண்பதற்கு சமமானதாகும். மேலும், உடைகளை மாற்றுவதுபோல பலவித உடல்களை அவன் மாற்றுகிறான். உடல் சார்ந்த விஷயங்களை ’தான்’, ‘தனது’ என்றும் தவறாக எண்ணுகிறான். தூய ஆத்மா தன் உண்மையான நிலையை உணரும்பொழுது, தான் ஜட சக்திக்கு அப்பாற்பட்டவன் என்று உணர்ந்து, ’தான், தனது’ என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபடுகிறான்.”

பகவான் கர்போதகஷாயி விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய தாமரையில் பிரம்மதேவர் பிறந்தார். அவர் பிரபஞ்சத்தில் ஜடத் தோற்றங்களை எவ்வாறு நிர்மாணிப்பது என்பதில் குழப்பமடைந்து, தமது தாமரை ஆசனத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக நீரினுள் இறங்கியபோது, தப என்னும் சொல் இருமுறை உச்சரிக்கப்பட்டதை செவியுற்றார். அக்கட்டளையின்படி ஆயிரம் தேவ ஆண்டுகள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி தவம் இயற்றினார். பிரம்மதேவரின் உண்மையான பக்தி யோக தவத்தால் மிகவும் திருப்தியடைந்த பகவான் தனது நித்திய ரூபத்தில் பிரம்மாவிற்கு காட்சியளித்தார். மேலும் தம் நித்திய வசிப்பிடமான வைகுண்ட லோகத்தையும் வெளிப்படுத்தினார்.

வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் பௌதிக இயற்கை குணங்களின் பாதிப்போ, காலத்தின் ஆதிக்கமோ இல்லை. எனவே, பௌதிக மாயா சக்தி அங்கு செயல்படாது; வைகுண்டவாசிகள் பிரகாசிக்கும் நீல நிற மேனியை பெற்றிருப்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கண்கள் தாமரைப் பூக்களைப் போல இருக்கின்றன. மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்த அவர்களது தேக அம்சங்கள் மிக்க கவர்ச்சியுடனும் இளமைப் பருவத்துடனும் விளங்குகின்றன. நான்கு கரங்களுடன் அலங்கார பதக்கங்கள் கொண்ட முத்தாரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு, பவளம் வைடூர்யம் போல் பிரகாசத்துடன் விளங்கிய அவர்கள் பிரகாசிக்கும் மாலைகளை தலைகளில் அணிந்துள்ளனர்.

மின்னலைப் போன்ற அழகுடன் விளங்கும் துணைவிகளுடன் வைகுண்டவாசிகள் பளபளப்பான ஒளிவீசும் ஆகாய விமானங்களில் அங்குமிங்கும் பறந்து கொண்டுள்ளனர். உன்னத வடிவம் கொண்ட லக்ஷ்மிதேவி இணைபிரியாத தனது தோழிகளுடன் பகவானின் தொண்டில் ஈடுபட்டவாறே அவரது அற்புத பெருமைகளை பாடிய வண்ணம் காட்சியளிக்கிறாள்.

நெருங்கிய சகாக்களான நந்தர், சுனந்தர், பிரபலர், அர்ஹணர் முதலான அந்தரங்க தொண்டர்களால் சேவிக்கப்படுபவரும், பக்தர் குழாம் முழுமைக்கும் இறைவனாக இருப்பவரும், லக்ஷ்மிதேவியின் பதியும், அனைத்து யாகங்களின் உரிமையாளரும், அகில லோக நாயகனுமான முழுமுதற் கடவுளை வைகுண்ட லோகங்களில் பிரம்மதேவர் தரிசித்தார்.

பகவான் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தனது பல்வேறு சக்திகளும் ஐஸ்வர்யங்களும் சூழப்பட்டவாறு, தனது அன்பிற்குரிய பக்தர்கள்பால் ஆதரவுடன் சாய்ந்து போதையூட்டும் திவ்ய பார்வையுடனும் கவர்ச்சியுடனும் காணப்படுகிறார். மிகவும் திருப்தியுடையவராகக் காட்சியளிக்கும் அவர் மயக்கமூட்டும் சிவந்த வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட புன்னகை பூத்த முகத்துடன் மார்பில் லக்ஷ்மியின் அடையாளத்துடன் விளங்குகிறார்.

பிரம்மதேவர் நீண்ட தவம் செய்து, பகவானை தரிசித்த பின்னர் பல்வேறு பிரார்த்தனைகளை அர்ப்பணித்தார்.

பகவானின் திருப்தி

முழுமுதற் கடவுளின் தோற்றத்தை தரிசித்த பிரம்மதேவர் ஆனந்தத்தால் அன்பும் பரவசமும் மேலிட கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பியபடி பகவானின்முன் தலை வணங்கினார். இதனால் மிகவும் திருப்தியடைந்த பகவான், அவரை ஜீவராசிகளைப் படைப்பதற்கான தகுதிவாய்ந்தவராக ஏற்று, இலேசாக புன்னகை செய்தவாறு அவருடன் கைகுலுக்கினார். அழகிய முழுமுதற் கடவுள் பிரம்மதேவரை நோக்கி கூறினார்: “பிரம்மதேவரே, என்னிடமிருந்து வேதங்களைப் பெற்று சிருஷ்டிக்கும் விருப்பத்துடன் நீண்ட காலமாக நீர் செய்த தவத்தில் நான் மிகவும் திருப்தியடைகிறேன். போலித் தனமுடைய யோகிகளிடம் நான் திருப்தியடைவதில்லை. உமக்கு நன்மையுண்டாக வாழ்த்துகிறேன். என்னிடம் நீர் விரும்பும் வரங்களையெல்லாம் பெறலாம். தவங்களால் அடையப்படும் தன்னுணர்வின் மூலமாக என்னை தரிசிப்பதே மிகச்சிறந்த வரம் என்பதை நீங்கள் அறிவீராக.

“என்னுடைய கட்டளைக்கேற்ப கடுந்தவத்தை இயற்றுவதில் நீங்கள் மேற்கொண்ட அடக்கமான மனோநிலையினால் எனது லோகங்களை சொந்தமாக அனுபவித்தறிவது உமக்கு சாதத்தியமாகியுள்ளது.

“பாவமற்றவரே, கடமையில் நீங்கள் கலக்கமுற்று இருந்தபோது, தவத்தை மேற்கொள்ளுமாறு முன்பு கட்டளையிட்டது நானே என்பதை அறிவீராக. பக்தித் தொண்டை பயிற்சி செய்வதில் பற்பல தவங்களை மேற்கொள்வது அவசியமாகிறது.”

பிரம்மாவின் கேள்விகள்

அதன்பின் பிரம்மதேவர் வினவினார்: “எம்பெருமானே, தாங்கள் அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் அமர்ந்திருக்கிறீர்கள். அதனால் அனைவரது விருப்பங்களையும் முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள். தங்களது உருவம் உன்னதமானது, பௌதிக உருவம் இல்லாத தாங்கள் அதை எவ்வாறு ஏற்கிறீர்கள்? சேர்க்கை மற்றும் மாற்றத்தின் மூலமாக படைத்தல், அழித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிக்காக பலதரப்பட்ட சக்திகளை எவ்வாறு வெளிப்படுத்துறீர்கள்?

“அனைத்து சக்திகளுக்கும் எஜமானரே, சிலந்தி தன் சொந்த வலைப் பின்னலால் தன்னை மறைத்துக்கொள்வதைப் போலவே, தாங்களும் தங்களது சொந்த சக்தியால் தங்களை மறைத்துக்கொள்கிறீர்கள். தங்கள் சித்தத்தாலேயே அனைத்தும் நடைபெறுகின்றன.

“பரம புருஷரான தங்களது உபதேசத்தின் மூலம் எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டால், ஜீவராசிகளைப் படைப்பதில் தங்கள் கருவியாக செயல்பட முடியும். பிறப்பற்றவரே, சமநிலையில் உள்ள நண்பனைப் போல் தாங்கள் என்னிடம் கரம் குலுக்கினாலும், நான் தங்களது சேவகன் என்பதை மறக்காமல் கர்வமின்றி இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.”

சதுஸ்லோகி

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.

“எனது அகாரணமான கருணையால், எனது நித்தியரூபம், உன்னத வாழ்வு, நிறம், குணங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் உமக்குள் எழுந்தருளட்டும்.”

ஜடவுலகப் படைப்பிற்கு முன்பும் பின்பும் நான் மட்டுமே இருக்கிறேன். படைப்பின்போது காணப்படும் சக்திகளும் நானே.

மதிப்புடையதாகக் காட்சியளிக்கும் எதுவாக இருப்பினும் எனக்கு சம்பந்தப்படவில்லை எனில், அது மதிப்புடையது அல்ல. அது வெறும் மாயையின் சக்தியே. அஃது இருளில் பிரதிபலிக்கும் பொருளுக்கு ஒப்பானதாகும்.

பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்திற்குள் நுழைகின்றன, அதேசமயம் நுழையாமல் வெளியிலும் இருக்கின்றன. அதைப் போலவே படைக்கப்பட்ட அனைத்திற்குள்ளும் நான் இருக்கின்றேன், அவற்றிக்கு வெளியிலும் இருக்கிறேன்.

பரம சத்தியமான முழுமுதற் கடவுளைத் தேடும் ஒருவன் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நேராகவோ மறைமுகமாகவோ கிருஷ்ண பிரேமை நிலை வரை தேடுவான் என்பது நிச்சயம்.

“பிரம்மதேவரே, இந்த சதுஸ்லோகியின் (நான்கு ஸ்லோகங்கள்) முடிவை உறுதியான மன ஒருமையுடன் நீங்கள் பின்பற்ற வேண்டும். இதனால் எவ்வித அகங்காரமும் உமது அமைதியை குலைக்காது.”

சதுஸ்லோகத்தின் விரிவாக்கம்

சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜரிடம் கூறினார்: “தனக்கு பகவான் உபதேசித்துச் சென்ற பின்னர், பிரம்மதேவர் அதை நினைத்துக் கொண்டே கூப்பிய கரங்களுடன், முன்பு இருந்ததைப் போன்றே பிரபஞ்சத்தை மறுபடியும் சிருஷ்டிக்கத் துவங்கினார்.

“அதன் பிறகு, முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதும், பத்து சிறப்பியல்புகளைக் கொண்டதும், வேத அனுபந்தமுமான ஸ்ரீமத் பாகவதத்தை தன்னடக்கமும் பணிவும் புலனடக்கமும் உடைய நாரதரின் சேவையில் திருப்தியுற்ற பிரம்மதேவர் அவருக்கு உபதேசித்தார்.

“அரசே, சரஸ்வதி நதிக் கரையில் பரம புருஷ பகவானின் மீது பக்திமிக்க தியானத்தில் ஆழ்ந்திருந்தவரான எல்லையற்ற சக்தி படைத்த வியாஸதேவரிடம் மாமுனிவரான நாரதர், ஸ்ரீமத் பாகவதத்தை விரிவாக்கி உபதேசித்தார். சதுஸ்லோகத்தை விளக்கிக் கூறுவதன் மூலம் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கப் போகிறேன்.”

About the Author:

mm
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

Leave A Comment