வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக அவர் வருகிறார். பகவானின் அவதாரம் லௌகீகத்தில் மூழ்கியுள்ளவர்களுக்கு மிகப்பெரிய புதிராகும். கடவுளைப் பற்றிய குறுகிய கருத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான ஆன்மீகவாதிகள்கூட, கடவுள் எவ்வாறு இவ்வுலகத்திற்கு தனிப்பட்ட முறையில் வர இயலும் என்று சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் தான் விரும்பும் எதையும் முழுமுதற் கடவுளால் செய்ய இயலும்; தனது திவ்யமான லீலைகளை அரங்கேற்றுவதற்காகவும் தனது பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும் பிரபஞ்சத்தை உய்விப்பதற்காகவும் இவ்வுலகில் தோன்றுவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கவியலாத ஒரே நபராக இருப்பினும், அவர் பல்வேறு ரூபங்களை ஏற்றுக் கொள்கிறார். அவரது அவதாரங்கள் சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டு, அனைத்து ஆச்சாரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். அதன்படி. முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தனது சுயமான தெய்வீக உருவில் 5,000 வருடங்களுக்கு முன்பு, இன்றைய டில்லிக்கு அருகிலுள்ள விருந்தாவனத்தில் தோன்றினார் என்பதை அனைத்து ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக திடீர் திடீரென்று பல்வேறு போலி அவதாரங்கள் முளைப்பதை நவீன யுகத்தில் காண்கிறோம். இத்தகைய வஞ்சகர்கள், வசீகரமாகப் பேசி முட்டாள் மக்களைத் தங்களையே கடவுள் என்று ஏற்றுக்கொள்ளும்படி மயக்குகின்றனர். பூரண செல்வம், சர்வ சக்தி, எல்லாப் புகழ், ஒப்பிடவியலாத அழகு, முழு அறிவு, முழுத் துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களை உண்மையான அவதாரங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை அறியாமையில் மூழ்கியுள்ள இக்கூட்டத்தினர் அறிவதில்லை. ஏமாற்றப்பட விரும்பும் அத்தகு நேர்மையற்ற மக்கள், ஒரு போலியைக் கடவுள் என்று ஒப்புக் கொள்கின்றனர். இதனால், ஏமாற்றுபவர்களும் ஏமாற்றப்படுபவர்களும் நரகத்திற்கான தங்களது பாதையை தயார் செய்கின்றனர்.

மிகச்சிறந்த யோகிகளின் கற்பனைக்குக்கூட எட்டாத அசாதாரணமான செயல்களாலும் சாஸ்திர குறிப்புகளாலும் ஒரு உண்மையான அவதாரத்தினை அறிந்துகொள்ளலாம். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ சைதன்யர் இவற்றைப் பூர்த்தி செய்வதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் அறியலாம். அவர் மலிவான போலி அவதாரங்களைப் போன்றவர் அல்லர். ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணரே, பக்தித் தொண்டின் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவும் தன்னை எவ்வாறு வழிபடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், தானே தனது பக்தனின் வடிவில் வந்தார். தான் ஏற்றுக் கொண்டிருந்த பக்தன் என்னும் மனோபாவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அவர் தன்னை முழுமுதற் கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அவர் மறைக்கப்பட்ட அவதாரம் என்று அறியப்படுகிறார். கலி யுகத்தில் முழுமுதற் கடவுள் மறைக்கப்பட்ட உருவில் தோன்றுகிறார் என்று வேத இலக்கியங்களில் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.38) கணிக்கப்பட்டுள்ளது:

சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுக ஸ த்வம்
“கலி யுகத்தில் நீங்கள் சில சமயங்களில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுவதால், த்ரி-யுக (மூன்று யுகங்களில் அவதரிப்பவர்) என்று அறியப்படுகின்றீர்.”

சில பண்டிதர்கள், கலி யுகத்தில் பகவான் இவ்வுலகில் அவதரிப்பதில்லை என்ற அர்த்தத்துடன் இதற்கு விளக்கமளிக்கின்றனர். ஆனால் இக்கருத்து பகவத் கீதையிலுள்ள (4.8) அவரது கூற்றிற்கு ஒத்துப்போகவில்லை:

பரித்ராணாய ஸாதூனாம்வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாயஸம்பவாமி யுகே யுகே

“சாதுக்களைக் காத்து, கொடியவர்களை அழித்து, தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, யுகந்தோறும் நான் தோன்றுகிறேன்.”

ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுவதாக பகவான் உறுதிப்படுத்துவதை வைத்து, அவர் கலி யுகத்திலும் தோன்றுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அவர் கலி யுகத்தில் எவ்வாறு தோன்றுகிறார் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) விவரிக்கப்பட்டுள்ளது:

க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸு-மேதஸ:

“கலி யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின் அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும் இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.”

தனது திருநாம ஸங்கீர்த்தனத்தில் தானும் ஈடுபட்டு மற்றவர்களுக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பதற்காக, முழுமுதற் கடவுள் கலி யுகத்தில் தோன்றுகின்றார் என்பதையும், தன்னை முழுமுதற் கடவுள் என்று நேரிடையாக வெளிப்படுத்தாமல் உள்ளார் என்பதையும் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். பகவான் சைதன்யரே இந்த யுகத்தின் அவதாரம் என்பதை இவ்விளக்கம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றது.

பகவான் ஒவ்வொரு யுகத்திலும் யுக தர்மத்தைப் பரப்புவதற்காக அவதரிக்கின்றார்.

சைதன்ய மஹாபிரபு அவதரித்திருந்த காலக் கட்டத்தில், ஸார்வபௌம பட்டாசாரியர், பிரகாசானந்த சரஸ்வதி, ஸநாதன கோஸ்வாமி, ரூப கோஸ்வாமி, இராமானந்த ராயர், மற்றும் பல்வேறு கற்றறிந்த பண்டிதர்கள் அவரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் சாதாரண மனோபாவத்தினர் அல்லர், மாறாக மிகுந்த ஞானத்துடன் வேத இலக்கியங்களை கடுமையாகப் பின்பற்றியவர்கள்; அந்த வேத இலக்கியங்களின் அடிப்படையிலேயே அவர்கள் கௌராங்கரின் புனிதத்தன்மையை ஏற்றுக் கொண்டனர். மேலும், அவரின் அசாதாரணமான செயல்களையும் அவர்கள் ஆதாரமாக ஏற்றனர்–நிலைதாழ்ந்த பாவிகள் பலரின் வாழ்வை மாற்றி, அவர்களுக்கு பகவான் சைதன்யர் உயர்ந்த பகவத் பிரேமையை வழங்கியது நிச்சயம் அசாதாரணமானதே. அதுமட்டுமின்றி, அவரது அதிகாரப்பூர்வமான வரலாற்றுச் சரிதங்களின்படி, பல்வேறு தருணங்களில் அவர் தனது கிருஷ்ண ரூபத்தை தனது நெருங்கிய பக்தர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தற்போதைய வளர்ச்சி பகவான் சைதன்யரின் தெய்வீகத் தன்மைக்கு மற்றுமொரு சாட்சியாகும். புண்ணியச் செயல்கள், வேத கலாசாரம், அல்லது ஆன்மீக ஞானத்தின் எந்தவொரு பின்னணியும் இல்லாத உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணித்து எல்லா பாவச் செயல்களையும் கைவிட்டுள்ளனர். கிருஷ்ணரின் விக்ரஹங்களை வழிபட்டு ஸ்ரீமத் பாகவதத்திற்கு விளக்க மளிக்கும் அளவிற்கு அவர்கள் தூய்மையடைந்துள்ளனர். மிகத் தாழ்ந்தவனும் மிக உயர்ந்தவனாக மாறுவதென்பது கடவுளின் தனிக்கருணையினால் மட்டுமே சாத்தியமாகும்.

யாரெல்லாம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்று, அவரது திருநாமத்தை அவரது சகாக்களுடன் இணைத்து,

ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த
என்று உச்சரித்து, அதனுடன் மஹா மந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரிக்கின்றார்களோ, அவர்கள் பகவான் சைதன்யரின் கருணையைப் பெற்று இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கான தங்களது பாதையில் விரைவாக முன்னேறுவர்.

பகவான் சைதன்யரின் கருணை எனும் வெள்ளம் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நகரம், கிராமம், வீடு மற்றும் இதயத்தை மூழ்கடிக்கட்டும்! கருணை வழங்குவதில் தலைசிறந்த பகவான் கௌராங்கரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! உலக மக்கள் அவரது தெய்வீக நாமத்தை உச்சரித்து மகிழ்ச்சியடையட்டும்! மஹாபிரபுவின் பெருமைகள் அவர் தோன்றிய காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, அப்பெருமைகள் புவியெங்கும் பரப்பப்பட வேண்டும். கிருஷ்ணர் எவ்வாறு உலகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளாரோ, அதுபோலவே அவரது மிக கருணை வாய்ந்த அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அனைவராலும் அறியப்பட்டு பூஜிக்கப்பட வேண்டும்.

பகவான் சைதன்யரின் தெய்வீகத் தன்மைக்குச் சான்றாக, பக்தியின் எந்தவொரு பின்னணியும் இல்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் கிருஷ்ணரின் சேவையில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.