சரணாகதி

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

கிருஷ்ணரிடம் சரணடைவதற்கான வழி

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார். அவ்வாறு கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல் “சரணாகதி” எனப்படுகிறது. சரணடைந்த பக்தர்களை தான் பாதுகாப்பதாகவும் அவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளிக்கின்றார். (பகவத் கீதை 18.66). சரணாகதி என்றால் என்ன, சரணடையும் முறைகள், மற்றும் சரணடைந்த பக்தர்களைப் பற்றி இங்கு காண்போம்.

தீவிரவாதிகள் துப்பாக்கியை வைத்து யாரையாவது சுட முயற்சிக்கும்போது, இரு கைகளையும் உயர்த்தி “சரண்டர்” என்று ஆங்கிலத்தில் அவர் கூறுவர்; “நீங்கள் சொல்வதைச் செய்வோம்,” என்று அடிபணிகின்றார். ஆனால் சரணாகதி அதுபோன்றது அல்ல. பணம், பதவி, பாதுகாப்பு, உணவு போன்றவற்றை எதிர்பார்த்து ஒருவரிடம் தஞ்சமடைதல் சரணாகதி அல்ல.

தான் ஒன்றுமில்லாதவன் என்பதை அறிவதே சரணாகதி. மலத்திலுள்ள புழுவைக் காட்டிலும் தன்னைத் தாழ்ந்தவனாக எண்ணி கிருஷ்ணரை மிகப் பெரியவராக உணர்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவரிடம் தஞ்சமடைவதே சரணாகதி.

சரணாகதியின் அறிகுறிகள்

கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி-பக்தி-விலாஸத்தில் (11.676) கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனுகூல்யஸ்ய ஸங்கல்பப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்

ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோ  கோப்த்ருத்வே வரணம் ததா

ஆத்மநிக்ஷேபகார்பண்யே  ஷட்விதா ஷரணாகதி:

சரணாகதியின் அறிகுறிகள் ஆறு: (1) கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விஷயங்களை ஏற்றல், (2) கிருஷ்ண உணர்விற்கு எதிரான அல்லது பாதகமான விஷயங்களைக் கைவிடுதல், (3) கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவார் என்று பூரண நம்பிக்கை வைத்தல், (4) கிருஷ்ணரை தனது பாதுகாவலராக ஏற்றல், (5) ஆத்மாவை அர்ப்பணம் செய்தல், (6) எப்போதும் தன்னை மிகத் தாழ்வாக வைத்து பணிவுடன் நடந்து கொள்ளுதல்.

நமது முயற்சியும் கிருஷ்ணரின் கருணையும்

பகவத் பக்தியை பயிற்சி செய்பவரில் சிலர் தமது சொந்த முயற்சியினால் கிருஷ்ணரைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வேறு சிலர் கிருஷ்ணரே கருணை கொண்டு நம்மைக் கொண்டு செல்வார் என்றும் நம்புகின்றனர். “நான் சரணடைந்து விட்டேன், இனிமேல் அவன் பார்த்துக் கொள்வான்,” என முயற்சி செய்யாமல் இருப்பதா? அல்லது, “எனது சொந்த முயற்சியினால் நானே பகவானைப் பற்றிக் கொள்வேன்,” என்று கர்வத்துடன் இருப்பதா?

உண்மை என்னவெனில், கிருஷ்ண பக்தியில் நாம் நமது விரும்பிய பலனை அடைய இரண்டும் அவசியம். நமது முயற்சியும் அவசியம், பகவானின் கருணையும் அவசியம். பகவானின் கருணை காரணமற்றது என்றபோதிலும், பொதுவாக அந்த கருணையைப் பெறுவதற்காக முயலும் பக்தனிடம் அவர் கருணை கொள்கிறார். இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம்.

கிணற்றினுள் விழுந்த நபரைக் காப்பாற்ற நினைத்து யாரேனும் ஒரு கயிற்றைக் கொடுத்தால், கிணற்றினுள் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்? மேலே இருப்பவர் கிணற்றில் இருப்பவனை இழுத்து வெளியே கொண்டு வருவதற்கு தயாராக இருந்தாலும், கிணற்றினுள் இருப்பவன் கயிறை இறுக்கமாகப் பற்றினால் மட்டுமே அவன் வெளியே வர முடியும். அதுபோல, கிருஷ்ணர் கருணையைக் கொடுக்கின்றார், அந்த கருணையை ஜீவன் பற்றிக் கொள்ளுதல் அவசியம்.

இரண்டு அடிகளில் மூவுலகையும் அளந்த வாமனரிடம் மூன்றாவது அடிக்காக தன்னையே அர்ப்பணித்தார் மாமன்னர் பலி.

சரணடைந்த பக்தனுக்கு கட்டுப்படும் பகவான்

பக்தனின் முயற்சியும் பகவானின் கருணையும் இணைந்தால் மட்டுமே பக்தித் தொண்டில் வெற்றி ஏற்படுகிறது என்பதை கிருஷ்ணர் தனது தாமோதர லீலையில் வெளிப்படுத்தினார்.

பகவானைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம், ஆயினும் தூய பக்தர்களின் களங்கமற்ற பக்தியால் அவர் கட்டுப்படுத்தப்படுகிறார். கிருஷ்ணரைக் கட்டிப் போட அன்னை யசோதை முயற்சி செய்தபோது, அவளால் அவரைக் கட்ட முடியவில்லை. அவரிடம் இருப்பதோ சிறு வயிறு, அவள் கொண்டு வந்ததோ மிக நீளமான கயிறு. ஆயினும் அங்கே இரண்டு அங்குல பற்றாக்குறை இருந்தது. வீட்டிலிருந்த கயிறுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கொண்டு வந்து, அவற்றை இணைத்து கட்டிய பின்னரும் இரண்டு அங்குல பற்றாக்குறை நீடித்தது. இதனை வேடிக்கை பார்த்த கோபியர்கள் யசோதையிடம் முயற்சியை விட்டுவிடும்படி கூறினர். யசோதையோ தீர்மானமாக இருந்தாள், அவளது களைப்பைப் பார்த்த பகவான் கட்டுப்பட இசைந்தார். அந்த இரண்டு அங்குலங்கள் பகவானின் அன்பைப் பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் தேவை என்பதை எடுத்துரைக்கின்றது: (1) நமது விடாமுயற்சி, (2) பகவானின் கருணை. இந்த இரண்டும் இருந்தால்தான் கிருஷ்ண பக்தியில் வெற்றி கிட்டும். “என்னால் முடியாது” என்று சாக்கு சொல்லிக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது, “என் பக்தியால் நான் அடைந்து விடுவேன்” என்று கர்வமும் கொள்ளக் கூடாது. நம்மால் முடிந்த முயற்சியை செய்து கொண்டு, அவருடைய கருணைக்காக காத்திருக்க வேண்டும்.

சரணாகதி அடைந்த பலி மஹாராஜர்

பகவானிடம் நாம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும், அதாவது அவரிடம் நாம் முழுமையாக சரணடைய வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பலி மஹாராஜர் விளங்குகிறார். பிரஹலாதரின் பேரனான அவரிடம் வாமனரின் வடிவில் வந்த எம்பெருமான் மூன்றடி நிலத்தினை யாசகமாகக் கேட்டார். “வந்திருப்பவர் விஷ்ணு, உனது எல்லா செல்வத்தையும் இவர் பறித்துக் கொள்வார். எந்த தானத்தையும் கொடுக்காதே!” என்று அசுரர்களின் குல குருவான சுக்ராசாரியர் பலி மஹாராஜரைத் தடுத்தார். ஆயினும், பகவானே தன்னிடம் வந்த பின்பு, தனக்கு வேறென்ன வேண்டும் என்று நினைத்த பலி மஹாராஜர், அசுர குருவின் அறிவுரையையும் மீறி, பகவானுக்கு மூன்றடி நிலம் வழங்கினார். பகவான் தனது முதல் இரண்டடியில் உலகம் முழுவதையும் அளந்த பின்னர், மூன்றாவது அடிக்கு இடத்தைக் கேட்டபோது, பலி மஹாராஜர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார். சரணாகதி அடைய விரும்புவோர் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.

சரணடையாதவர்களும் சரணடைந்தவர்களும்

கிருஷ்ணரிடம் சரணடைதல் அனைவருக்கும் சாத்தியமான செயல். இருப்பினும், அனைவரும் அவரிடம் சரணடை வதில்லை. அவ்வாறு சரணடையாமல் இருப்போர் பகவத் கீதையில் (7.15) நான்கு விதமாக பிரிக்கப்படுகின்றனர்: (1) சற்றும் அறிவற்ற முட்டாள்கள், (2) மனிதரில் கீழ்நிலையில் உள்ளவர்கள், (3) மாயையிடம் அறிவை இழந்தவர்கள், (4) அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்கள்.

இத்தகைய தீயோர் பகவானிடம் சரணடையாமல் மாயையில் சிக்கி இறுதியில் காலனிடம் சரணடைந்து, பிறப்பு, இறப்பு, நோய், முதுமை என்னும் சக்கரத்தில் சுழல்கின்றனர்.

நான்கு வகையான தீயோர்கள் கிருஷ்ணரிடம் சரணடைய மறுக்கும் அதே சமயத்தில் நான்கு வகையான நல்லோர்கள் அவரிடம் சரணடைகின்றனர்: (1) துயரத்தில் இருப்பவர்கள், (2) செல்வத்தை விரும்புவோர், (3) வாழ்வின் குறிக்கோளை அறிவதற்கான கேள்விகளை எழுப்புவோர், (4) பரம்பொருளைப் பற்றிய அறிவுடன் இருப்போர். (பகவத் கீதை 7.16)

இந்த நான்கு வகையான நல்லோர்கள் கிருஷ்ணரிடம் சரணடையும்போதிலும், அவர்களின் செயல் தூய சரணாகதியாக ஏற்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் பௌதிக காரணங்களுக்காக, கிருஷ்ணரிடமிருந்து ஏதேனும் ஒன்றை விரும்பி, அவரிடம் சரணடைகின்றனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக தூய பக்தர்களின் சங்கத்தினை அவர்கள் பெற நேர்ந்தால், அவர்களும் கீதையின் இறுதியில் கிருஷ்ணர் கூறுவதைப் போன்று, அவரிடம் பூரணமாக சரணடைவர்.

சரணடைந்தவருக்கு கடமைகள் இல்லை

கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைவோர் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏதுமில்லை. இவ்வுலகில் பிறவி யெடுப்பவர்கள் ஒவ்வொருவரும் பெற்றோர்கள், முன்னோர்கள், தேவர்கள், ரிஷிகள் என பலருக்கும் கடன்பட்டுள்ளனர். ஆனால் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர்களுக்கு எந்தவொரு கடனும் இல்லை என்பதை ஸ்ரீமத் பாகவதம் (11.5.41) பின்வருமாறு உறுதி செய்கிறது.

 

தேவர்ஷிபூதாப்தந்ருணாம் பித்ரூணாம்

ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்

ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்

கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

 

“எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாத கமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை.”

இறுதி விளக்கம்

ஒருமுறை சரணம் என்று கூறி தீக்ஷை பெற்ற பிறகு அபக்தர்களைப் போல் வாழ்வதில் பயனில்லை. சரணாகதி என்பது ஒருநாள் மட்டும் சரணடைந்தவனாக வாழ்வதற்கு அல்ல, வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் சரணடைந்து வாழ்வதற்கானது.

கலி யுகத்தை காரணம் கூறி பகவானிடமிருந்து விலகுவோர் பலர், உறவினர்களைக் காட்டி விலகுவோர் பலர், அலுவலகப் பணிகளால் விலகுவோர் பலர், உடல் நலக் குறைவினால் விலகுவோர் பலர். ஆனால் உண்மையில் அவ்வாறு விலகுவதில் எந்த அர்த்தமும் இல்லை. யாருக்கும் பிரஹலாதரைப் போன்று உயிருக்கு ஆபத்து வருவதில்லை, திரௌபதியைப் போன்று கற்பிற்கு ஆபத்து வருவதில்லை; ஆயினும், பக்தியின் விதிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறிக் கொண்டு சிலர் விலகுகின்றனர். அவ்வாறு மாயையிடம் சரணடைவோருக்காக காலன் காத்திருக்கிறான். கிருஷ்ணரிடம் சரணடைவோருக்காக கோலோக விருந்தாவனம் காத்திருக்கிறது.

திருமதி. கீதா கோவிந்த தாஸி வேலூர் நகரத்தைச் சார்ந்தவர்; கணிப்பொறி வல்லுநராகப் பணியாற்றும் தன் கணவருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives