வழங்கியவர்: சக்ரபாணி தாஸ்

பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உலக நியதியாகும். நம் வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகிய நான்கும் மருத்துவத்துடன் தொடர்புடையவை . பிறக்கும்போது மருத்துவர் தேவைப்படுகிறார், இறக்கும்போது மருத்துவர்கள் வாழ்வை நீட்டிக்க முயல்கின்றனர், முதுமை யின் பிரச்சனைகளைச் சமாளிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்; நோயினைப் பொறுத்தவரை யில் மருத்துவரின் தேவையைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை.

இவ்விதமாக, மருத்துவர்கள் மனித சமுதாயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் மருத்துவ வரலாறு நீண்ட நெடுங்கால பழக்கத்தைக் கொண்டதாகும். பல்வேறு புராணங்களில் மருத்துவ சிகிச்சைகளைப் பற்றிய பல குறிப்புகளைக் காண்கிறோம் . நவீன கால ஆராய்ச்சியாளர்கள் கூட இந்தியாவில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் பலர் வாழ்ந்து வந்துள்ளதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் பழங்கால மருத்துவர்களில் “அறுவை சிகிச்சையின் தந்தை” என்று அழைக்கப்படும் மானிவர் சுஸ்ருதர் குறிப்பிடத்தக்கவர். சுஸ்ருதர் தந்தருளிய சிகிச்சை முறைகளின் சிறப்புகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சுஸ்ருதரின் தனிச்சிறப்புகள்

சுஸ்ருதர் இன்றும் இமயமலையில் வசிப்பதாக சிலர் கருதுகின்றனர். நவீன ஆய்வாளர்கள் இவரை கி.மு. 1,500களில் வாழ்ந்தவராகக் கூறுகின்றனர். எப்படிப் பார்த்தாலும், இவர் இந்தியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற ஆயுர்வேத அறுவை சிகிச்சை மருத்துவராவார். அக்கால வழக்கத்திலிருந்த பல்வேறு ஆயுர்வேத நூல்களைக் கற்று, அவற்றைப் பயிற்சி செய்து, சுஸ்ருத சம்ஹிதை என்னும் பழமையான புகழ்பெற்ற நூலை இயற்றினார். அந்நூலில் அறுவை சிகிச்சையைக் குறித்து அதிசயிக்கத்தக்க தெள்ளத் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளதால், இவர் “அறுவை சிகிச்சை யின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். மேலும், “உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளர்” என்றும் அறியப்படுகின்றார்.

சுஸ்ருத சம்ஹிதை

சுஸ்ருத சம்ஹிதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறந்த மருத்துவ நூலாகும். இதில் புராதன வேத மருத்துவ முறையின்படி, பல்வேறு மருத்துவ துறைக ளுக்கான விளக்கங்கள் உள்ளன. இதில் காணப்படும் பல்வேறு அத்தியாயங்கள் அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள், கருவிகள் மற்றும் செ யல்முறைக ளை விளக்குகின்றன.இந்நூலின் தற்போதைய வெளியீடு 186 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; 1,120 நோய்கள், 700 மூலிகைகள், கனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 64 மருந்துகள், விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்ட 57 மருந்துகள் முதலிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக, சுஸ்ருதசம்ஹிதையின் மூலமாக பாரம்பரிய அறுவை சிகிச்சையாளர்களின் அனுபவங்களையும், வேத இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் மருத்துவ தகவல்களின் ஒருங்கிணைப்பையும் ஒரே புத்தக வடிவில் பெற முடிகின்றது. கண்ணாடி அல்லது மூங்கில் கீற்றுகளைக் கொண்டு கிழித்தல் போன்ற அற்புதமான அறுவை சிகிச்சை செயல்முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன.

பழங்கால இந்தியர்களின் மருத்துவ நூல்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் தொன்றுதொட்டு படிக்கப்பட்டு வந்துள்ளன. பழங்கால இந்தியர்களிடமிருந்து யுக்திகளைக் கற்று, அவர்கள் தத்தமது பாரம்பரியத்திற்கு ஏற்ற பெயரில் ஏற்றுக் கொண்டனர்; இருப்பினும், இவற்றிற்கான மூலாதாரம் இந்தியாவே என்பது தான் உண்மை.

ஹரித்வாரில் காணப்படும் சுஸ்ருதரின் சிலை

அறுவை சிகிச்சையின் எட்டு வகைகள்

மேற்கத்திய நாடுகளில் அறுவை சிகிச்சைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பன்நெடுங்காலத்திற்கு முன்பாகவே, பல்வேறு வகையான அறுவை சிகிச்சை கருவிகளையும் மருத்துவ நடவடிக்கைக ளையும் இவர் வழங்கியுள்ளார்.

அறுவை சிகிச்சை முறைகளை இவர் பின்வருமாறு வகைப்படுத்தினார்:

  1. ஆஹர்ய–உடலிலிருந்து அழுகிய பகுதிகளைப் பிரித்தெடுத்தல்
  2. பேத்ய –துண்டித்தல்
  3. சேத்ய –ஆழமாகக் கிழித்தல்
  4. எஸ்ய–கண்டறிதல்
  5. லெக்ய –சுரண்டுதல்
  6. சிவ்ய–தையல் போடுதல்
  7. வேத்ய–சிறு துவாரம் இடுதல்
  8. விஷ்ரவனிய–திரவங்களைப் பிரித்தெடுத்தல்

இந்த புராதன நூலில் மூலம் உடல் உறுப்புகளை நீக்குதல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கண் சிகிச்சை , கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை, மருத்துவ சேவை, மகப்பேறு முதலிய சிகிச்சை முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சுஸ்ருத சம்ஹிதையானது ஒட்டிணைப்பு சிகிச்சை , சுழல் சிகிச்சை , ரண சிகிச்சை முதலிய அறுவை சிகிச்சை யுக்திகளையும் கற்றுக் கொடுக்கின்றது. நெற்றியிலிருந்தோ கன்னத்திலிருந்தோ தோலை வெட்டி எடுத்து மூக்கை புனரமைக்கும் சிகிச்சை (மூக்கின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை ), அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) முதலியவையும் சுஸ்ருத சம்ஹிதையில் காணப்படுகின்றன.

அறுவை சிகிச்சைக்கான பயிற்சி

அறுவை சிகிச்சையைக் கற்றுக்கொள்வதற்கு இறந்த உடலைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உயிருள்ள மனிதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சுஸ்ருத சம்ஹிதை வலியுறுத்துகிறது.

அறுவை சிகிச்சையை திறம்பட செய்வதற்கு முன்பாக, உடலில் நோயுள்ள பகுதிகளை ஒத்திருக்கும் செயற்கையான பொருட்களின்மீது கத்தியை மீண்டும்மீண்டும் பிரயோகித்து பழகும்படி சுஸ்ருதர் மாணவர்களை அறிவுறுத்துகிறார். உதாரணமாக, உடல் உறுப்புகளை ஒத்திருக்கும் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், திரவத்தினால் நிரப்பப்பட்ட தோல் பைகள், இறந்த விலங்குகளின் சிறுநீர் பைகள் முதலிய பொருட்களின் மீதே பயிற்சியைத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறார்.

ஆயுர்வேத மாணவர்கள் இயற்கையான பொருட்களை வைத்து மேலும், அறுவை சிகிச்சைக்கான பயற்சியினை மேற்கொள்ளுதல்.

வரலாறு

பழங்கால இந்தியர்கள் அறுவை சிகிச்சை கலையை கிரேக்க மருத்துவத்திலிருந்து பெற்றதாக சில மேற்கத்திய அறிஞர்கள் அறைகுறையாக முடிவு செய்தனர். ஆனால், சமீபத்திய சான்றுகள் அதற்கு நேர்எதிராக உள்ளன. வெபர் என்பவரால் எழுதப்பட்ட The History of Indian Literature என்னும் நூலை இதற்கு சான்றாகக் கொள்ளலாம்.

சுஸ்ருதரால் வழங்கப்பட்ட பல சிகிச்சை முறைகள் நவீன நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இதய வலி, இரத்த சுழற்சி, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம், சிறுநீரக கல் நீக்கம் முதலியவையும் அடங்கும். தொழுநோயைப் பற்றிய முதல் குறிப்பை வழங்கியதும் சுஸ்ருத சம்ஹிதையே என்று மேற்கத்திய அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இந்நூல் அரேபயி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, முதலில் கிதாப் ஷா ஷன்னல் ஹிந்தி என்றும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாக்தாத்தில் கிதாப் ஐ சுஸ்ரத் என்றும் அறியப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதையின் அரேபிய மொழிபெயர்ப்பு இடைக்காலத்தின் இறுதியில் ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. இந்நூலானது கம்போடியாவின் கெமேர் அரசர் யஷோவர்மன் (889 அவர்களுக்கும் பரிச்சயமானதாகத் தெரிகிறது. மேலும், சுஸ்ருத சம்ஹிதை திபெத் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நூலாகவும் உள்ளது.

அறுவை சிகிச்சையின் விளக்கங்கள்

சுஸ்ருத சம்ஹிதை 125 அறுவை சிகிச்சை கருவிகளை அங்கீகரிக்கின்றது; அவற்றில் பல விலங்குகள் மற்றும் பறவைகளின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன; அத்துடன், தேவைக்கேற்ப புதிய கருவிகளையும் உருவாக்க அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான தகுதிகளும் அறுவை சிகிச்சை கருவிகளும் ஏறக்குறைய நவீன காலத்தைப் போன்றே உள்ளன.

பொதுவாக, அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகள் சிறிதளவு உணவு உண்ண அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வயிறு மற்றும் வாயினுள் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு முன்னர் நோயாளிகளை உண்ணாதிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிகளின் அறையானது வெண் கடுகு, கொத்தமல்லி விதை, வேப்பிலை, சால மரத்தின் பிசின் போன்றவற்றினால் தூய்மைப்படுத்தப்படுகிறது. இவையே வேத கால கிருமிநாசினியாகச் செயல்பட்டுள்ளன. இன்றைய உலகில அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் பற்பல நோய்கள் அன்றைய நாளில் பெரும்பாலும் மருந்துகளின் மூலமாகவே குணப்படுத்தப்பட்டன.

கண் புரை நீக்கும் மருத்துவம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மூக்கு மற்றும் கண் அறுவை சிகிச்சைகள்

பெர்லின் மருத்துவர் ஹிர்ஸ்ச்பெர்க் கூறுகின்றார், “ஐரோப்பாவில் காணப்படும் அனைத்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும், இந்திய சாதனையாளர்களிடமிருந்து பெறப்பட்டவையே.”

சுஸ்ருதர் சேதமடைந்த செவிப்பறைகளை கழுத்து அல்லது அக்கம்பக்கத்திலுள்ள மென்மையான தோல்மடல்களை சுரண்டியெடுத்து ஒட்டுவதன் மூலமாக சீர்படுத்துகிறார். மேலும், பழங்கால கிரேக்க, எகிப்திய அறுவை சிகிச்சையாளர்களும் அறிந்திராத, கண்புரை சிகிச்சை இவரது தனிச்சிறப்பாகும். சில நடைமுறை விஷயங்களில், சுஸ்ருதரரின் அறுவை சிகிச்சை யுக்திகள் நவீன ஐரோப்பியர்களின் யுக்திகளைவிட அதிகமான வெற்றியை நிரூபித்துள்ளது. மேலும், குடல் புண், காயமடைந்த வீரர்களுக்கான சிகிச்சை என பலவும் விவாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளுறுப்பு அறுவை சிகிச்சைகள்

சிறுநீரகப் பை, சிறுநீரகக் குழாய், பித்தப்பை முதலியற்றில் உருவாகும் கற்களை எவ்வாறு நீக்குவது என்பன தொடர்பான விளக்கங்களை சுஸ்ருதர் விரிவாக வழங்கியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளையும் எடுத்துரைக்கின்றார். கற்களை நீக்குவதற்கான சுஸ்ருதரரின் பல்வேறு யுக்திகள், ஆங்கில மருத்துவ வல்லுநர்களால் சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளன.

சுஸ்ருதரின் அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய  ஆயுதங்கள்

உறுப்புகளைத் துண்டித்தல்

அத்தியாவசியமான சூழ்நிலைகளில் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. மூலிகைகளின் மூலமாக மயக்க மருந்து வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளைப் பிரிப்பது, பிளப்பது, அதற்கான நிவாரணம், மயக்க மருந்து வழிமுறைகள் என பலவும் விளக்கப்பட்டுள்ளன.

முறையான பயிற்சியின் முக்கியத்துவத்தையும் குழப்பம் நிறைந்த அரைகுறை அறுவை சிகிச்சையாளரின் பேராபத்தையும் எடுத்துரைக்கும் வண்ணம், “பயிற்சி இல்லாத கல்வி, ஒரே சிறகினைக் கொண்ட பறக்கவியலாத பறவையைப் போன்றதாகும்,” என்று சுஸ்ருதர் விளக்குகின்றார்.

காசநோய் சிகிச்சை

கால்நடைத் தொழுவத்தின் காற்றை சுவாசிப்பதால், குறிப்பாக ஆட்டுக் கொட்டகையின் காற்றை சுவாசிப்பதால், காசநோய் கிருமிகள் அழிக்கப்படுவதாக சுஸ்ருதர் கூறுகிறார். மேலும், அஷ்டாங்க தூபமானது காச நோயாளிகளின் அறையில் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது.

வருமுன் காப்போம்

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பது சுஸ்ருதரின் முக்கிய அறிவுரையாகும். பல்வேறு நோய்களுக்கான தடுப்புமுறைகளை பல செய்யுள்களாக இவர் எழுதியுள்ளார். நோயாளி மீண்டும் வரக் கூடாது அல்லது அடிக்கடி வரக் கூடாது என்னும் மனோபாவத்தில் வேத கால மருத்துவர்கள் செயல்படுவர். அன்றைய மருத்துவர்கள் நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. நோயாளிகள் மனமுவந்து வழங்கும் வெகுமதிகளை மட்டுமே ஏற்பர். சிகிச்சைகள் இலவசமாகவே அளிக்கப்பட்டு வந்தன. மருத்துவர்களின் தேவைகள் அரசரால் நிறைவேற்றப்பட்டன.

ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள்

நவீன அலோபதி மருத்துவம் பக்க விளைவுகளைத் தருவதாகும். இதனை விடுத்து, பழங்கால இந்தியர்களின் மருத்துவ முறையை மக்கள் பின்பற்றினால் பெரும் அமைதி கிட்டும். அலோபதி மருந்துகளே பல்வேறு நோய்களுக்கு காரணம் என்பதை அறிய வேண்டும். காய்ச்சலுக்கான மருந்தை உட்கொள்வதால், சிறுநீரகப் பை பாதிக்கப்படுகிறது. அதற்கு மருந்து உண்டால், அது மற்றொரு புதிய வியாதியை உருவாக்கி, இந்நிலை முடிவற்ற ஒன்றாகத் தொடரும்.

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள், தாவரங்கள் மற்றும் இயற்கையான வழிமுறைகளின் காரணத்தினால், இதில் பக்கவிளைவு என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய மருத்துவமோ நீங்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதன் மூலமாக, தொழிலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது.

ஆயுர்வேத சாஸ்திரத்தின் இறைவனான  தன்வந்திரி பகவான்.

ஆத்ம உணர்வு

நவீன மருத்துவத்தின் இத்தகைய கொள்கைகளுக்கான காரணம், ஆத்மா இல்லை என்னும் நாத்திகக் கொள்கையே. ஆத்மா இல்லை என்று எண்ணுவதால், நீதி நெறிகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. நோயாளிகளின் மேல் வருத்தமோ கருணையோ இருப்பதில்லை. ஆனால் வேத முறைப்படியான மருத்துவர் நோயாளியைப் பார்க்கும்போது, அவரை தற்காலிகமான உடலில் குடிகொண்டுள்ள ஓர் ஆத்மாவாகப் பார்க்கிறார். இதனால், மருத்துவரின் நீதி நெறிகளும் கண்ணோட்டமும் முற்றிலும் மாறி விடுகிறது.

வியாதிகளும் அழிவுகளும் முந்தைய கர்ம விதிப்படியே நடக்கிறது என்பதை அறிந்து மருத்துவர் மருத்துவம் பார்ப்பார். இத்தகைய தர்ம சிந்தனைகளும் ஆன்மீகக் கல்வியும் சமுதாயத்தில் வளர்ச்சி பெறுமாயின், எங்கு நோக்கினும் அமைதியும் ஒற்றுமையும் பரவி நிற்கும். இன்றைய சமுதாயத்தை தலைமை தாங்கி வழிநடத்தும் சுய நல நோக்கம் முழுமையாக வீழ்ச்சியடையும்.