ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்களும்கூட சில சமயங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மரணிக்கும்போது, அவர்கள் ஸ்வர்கத்தை அடைந்து விட்டனர் என குறிப்பிடுகின்றனர். பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசலை ஸ்வர்க வாசல்” என்று அழைத்து, ஸ்வர்கத்திற்கு செல்லும் தங்களது ஆர்வத்தை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஸ்வர்கத்தை அடைவதே தங்களது வாழ்வின் இலட்சியமாகக் கருதும் இவர்கள் பௌதிக, ஆன்மீக உலகின் தன்மைகளை சற்றேனும் அறிந்துகொள்வது அவசியம்.

 

பதினான்கு லோகங்கள்

நாம் வாழும் இந்த பௌதிக பிரபஞ்சமானது, ஸத்ய லோகம், தப லோகம், ஜன லோகம், மகர லோகம், ஸ்வர்க லோகம், புவர் லோகம் என்னும் ஆறு மேல் லோகங்கள், பூலோகம் என்னும் மத்திய லோகம், அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்னும் ஏழு கீழ் லோகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவை அனைத்தையும் சேர்த்து மூவுலகம்” என்று சாஸ்திரங்கள் அழைக்கின்றன. இதிலிருந்து ஸ்வர்க லோகம் என்பதும் பௌதிக உலகின் ஒரு பகுதியே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மனதில் எண்ணிப் பார்க்கவியலாத மதிமயக்கும் வாழ்க்கை ஸ்வர்கத்தில் கிட்டுகிறது. அங்கே ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை போன்ற நடன மங்கைகள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் பேரழகு வாய்ந்த அழகு பதுமைகளாவர். மேலும், ஸோம ரசம், பிரம்மாண்டமான மாளிகைகள், மிருதுவான பட்டுப் படுக்கைகள், அழகிய நந்தவனங்கள், மனம் மயக்கும் நறுமணமிக்க மலர்கள், காதிற்கு இனிய பாடல்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. ஆயினும், பௌதிக உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் பிறப்பு, இறப்பு முதலியவற்றை தவிர்க்க முடியாது என கிருஷ்ணர் பகவத் கீதையில் (8.16) கூறுகிறார்.

 

தற்காலிக வசிப்பிடம்

ஒருவன் தனது புண்ணிய காரியங்களுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஸ்வர்கத்தில் வசிக்கின்றான். ஸ்வர்கத்தை அடையும்போது அவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவன் மிகச்சிறந்த புலனின்பங்களை அனுபவிக்கின்றான். புலனின்பத்தில் மூழ்கியிருப்பதால், காலத்தின் வேகத்தை அவனால் அறிய இயலாது. புண்ணியம் தீரும்வரை அவன் அங்கே இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறான். புண்ணியம் முடியும் தருவாயில், அதற்கான ஓர் அறிகுறியாக, அவன் அணிந்திருக்கும் மலர் மாலையானது வாடத் துவங்கும். புண்ணியம் முழுவதும் தீர்ந்தவுடன் அவன் அங்கிருந்து வெளியேற்றப்படுவான். யாரும் அங்கே நிரந்தரமாக வசிக்க இயலாது. ஸ்வர்க லோக அரசன் இந்திரனுக்கும் அந்த பதவி நிரந்தரமானதல்ல.

பௌதிக உலகம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்டது. படைப்பு என்றாலே காலத்தினால் ஒருநாள் அழிவுக்கு உட்படும் என்பது இயற்கையின் நியதி. ஸ்வர்க லோகம் என்பது பௌதிக உலகின் ஒரு சிறு பகுதி என்பதால் பிரளயத்தின்போது அஃது அழிவுற்று விடும்.

ஸ்வர்கத்தில் காணப்படும் மதிமயக்கும் தற்காலிக வாழ்க்கை

ஸ்வர்க லோகத்தின் அபாயங்கள்

ஸ்வர்க லோகத்திலும் பொறாமை, அரசியல் சூழ்ச்சி முதலியவை காணப்படுகின்றன. உதாரணமாக, யாராவது பூமியில் அஸ்வமேத யாகத்தை மேற்கொண்டால், எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில் இந்திரன் அந்த யாகத்திற்கு கடும் இடையூறுகளைச் செய்வதை நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம். கடுந்தவம் புரியும் முனிவர்களைக் கண்டாலே, இந்திரனுக்கு எங்கே தனது பதவி பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் அவர்களது தவத்தை கலைப்பதற்கு, ரம்பை, மேனகை போன்ற நடன மாதர்களை அனுப்பி இடையூறு செய்வது வழக்கம். பிருது மஹாராஜர் நூறாவது அஸ்வமேத யாகத்தை மேற்கொண்டபோது, இந்திரன் யாக குதிரையைத் திருடினான். விஸ்வாமித்திரர் மற்றும் கண்டு முனிவரின் தவத்தைக் கலைப்பதற்கு நடன மங்கைகளை அனுப்பினான் இந்திரன். இதன் மூலம் ஸ்வர்க லோகத்திலும் ஒருவரின் வளர்ச்சி மற்றவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இவை மட்டுமல்ல. அசுரர்களான இராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் ஸ்வர்கத்தை தாக்கும்போது, இந்திரனுக்கும் இதர அமைச்சர்களுக்கும் மறைந்து வாழும் அவல நிலை ஏற்படுகிறது. அச்சமயத்தில், இந்திரனின் கௌரவம் முற்றிலும் கேள்விக்குறியாகிறது.

வாழ்வின் உண்மையான நோக்கம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும் என்பதே. ஸ்வர்க லோகவாசிகள் புலனின்ப மோகத்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்து காலத்தை விரயமாக்குவதால், அந்த ஸ்வர்க லோக வாழ்வினை வீழ்ச்சியடைந்த நிலை என ஆச்சாரியர்களும் வேத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன.

தன் கர்வம் அடங்கியதை உணர்ந்து இந்திரன் கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டல்

மதிமயங்கும் வாழ்க்கை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கோவர்தன லீலையின்போது இந்திரன் தொடர்ச்சியாக ஏழு நாள்கள் மழை பெய்வித்து, அதன் பின்னர் ஆணவம் அடங்கிய பிறகு மன்னிப்பு கேட்டான். இருப்பினும்கூட, சில வருடங்கள் கழித்து ஒருமுறை பகவான் கிருஷ்ணர் தமது மனைவி சத்யபாமாவிற்காக இந்திர லோகத்து பாரிஜாத மரத்தை எடுத்துச் சென்றபோது, இந்திரன் மீண்டும் தன் நிலையை மறந்து பகவானிடம் சண்டையிடத் துவங்கினான். இது ஸ்வர்க லோகத்தின் மதிமயக்கும் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.

நரகத்தில் வசிப்பவர்கள் எப்போதும் பல்வேறு துன்பங்களுக்கு உட்படுவதால், இறைவனை நினைப்பதற்கு வாய்ப்பற்றவர்களாக இருப்பர். அதனால், மதிமயக்கும் ஸ்வர்கத்திலும் சரி, வேதனையை அனுபவிக்கும் நரகத்திலும் சரி, பக்தித் தொண்டில் ஈடுபடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி வரும் இந்த பூவுலகமே பக்தித் தொண்டிற்கு மிகவும் அனுகூலமான சூழ்நிலையைக் கொண்டதாகும்.

வைகுண்ட வாழ்க்கை

ஆன்மீக உலகமான வைகுண்டம் அல்லது கோலோக விருந்தாவனத்தில், இவ்வுலகின் துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் முதலியவை காணப்படுவதில்லை. அங்கு ஒவ்வொரு ஜீவராசியும் தனது பிரகாசமான ஆன்மீக உடல், அழகான உடல் வாட்டம், தாமரையைப் போன்ற விழிகள், அகன்ற மார்பு, பல்வேறு ஆபரணங்கள் முதலியவற்றுடன் சக்தி வாய்ந்தவர்களாக காட்சியளிக்கின்றனர். பௌதிக உலகில் காணப்படும் அனைத்து ஐஸ்வர்யங்களும் ஆன்மீக உலகில் உள்ளவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆன்மீக உலகில்கூட சில நேரங்களில் போட்டி இருக்கும், ஆனால் அங்கே பொறாமை என்பது துளியளவும் தென்படுவதில்லை. கவலையில்லா வாழ்வே வைகுண்ட வாழ்க்கை என வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. வைகுண்டத்தை அடைந்தவர்கள் அங்கு நிரந்தரமாக, ஆனந்தமயமாக, பூரண அறிவுடன் வசிக்கின்றனர்.

வைகுண்டத்தில் பகவான் விஷ்ணு அன்னை இலக்ஷ்மி தேவியுடன் காட்சியளித்தல்

வைகுண்டவாசிகளின் சிந்தனை

ஆன்மீக உலகில் வசிப்பவர்கள் தங்களின் சேவையை முன்னிலைப்படுத்தாது மற்ற பக்தர்களின் சேவையை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பர். அதனால், கோலோக விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆனந்த சக்தியினால், அனுகூலமான உறவுமுறையினால், பக்தர்களின் ஆனந்தம் ஒவ்வொரு நொடியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அசிந்திய சக்திகளில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில், என் லோகத்தை அடைபவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை,” என அர்ஜுனனிடம் கூறுகிறார். (பகவத் கீதை 8.16)

கோலோக விருந்தாவனத்தை அடைந்தவர்கள் கிருஷ்ணரின் மீதான பிரேமையினால் ஒரு நொடியும் அவரை மறப்பதில்லை. இதுவே மனித வாழ்வின் பூரண குறிக்கோளாகும். இருண்ட பௌதிக உலகில் வெளிச்சம் தேவைப்படுவதால், இங்கு சூரியன். சந்திரன் முதலியவை தேவைப்படுகின்றன. ஆன்மீக உலகமான வைகுண்டமோ சுய பிரகாசமுடையது என்பதால், அங்கே சூரியன், சந்திரன், மின்சாரம் முதலியவை தேவையில்லை.

கிருஷ்ண உணர்வு என்பது இடம், சூழ்நிலை, காலத்திற்கு அப்பாற்பட்டதாகும். தூய பக்தரான நாரதர் எப்போதும் பகவத் சேவையில் ஈடுபட்டிருப்பதால் அவருக்கு ஸ்வர்கமும் நரகமும் வைகுண்டமும் ஒன்றே ஆகும். புத்திசாலியான கிருஷ்ண பக்தன் ஸ்வர்க லோகத்தில் சிறிதும் நாட்டம் கொள்வதில்லை. ஆச்சாரியர்களும் ஸ்வர்க லோக வாழ்க்கைக்கு தங்களது சீடர்களை சிறிதளவும் ஊக்குவிப்பதில்லை.

ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

ஆன்மீக உலகமான வைகுண்டத்தில் உடலும் ஆத்மாவும் ஒன்றே. பெருமாளுக்கு நிரந்தரமாக சேவை செய்ய வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசலை அணுக வேண்டும். அவ்வழிப் பயணம் ஸ்வர்க லோகத்தை அடைவதற்கான இலட்சியமல்ல என்பதை உணர வேண்டும். ஸ்வர்க லோக வாழ்க்கை என்பது வெறும் கால விரய வாழ்க்கையே என்பதைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஸவர்கத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நேரடியாக சேவை செய்வது சற்று கடினம். அதனால் முப்பத்து முக்கோடி தேவர்களும் சைதன்ய மஹாபிரபுவின் நாம ஸங்கீர்த்தனத்தில் பங்கெடுப்பதில் பெரும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். ஸ்வர்க லோக வாழ்வினை ஆனந்தமயமான வைகுண்ட வாழ்வுடன் ஒருபோதும் ஒப்பிட இயலாது. ஸ்வர்க லோகத்திற்கு எல்லை உண்டு, வைகுண்டத்திற்கு எல்லையே இல்லை; அதாவது, விரிந்து கொண்டே செல்லும் தன்மையைக் கொண்டது. ஆன்மீக உலகில் தென்படுவது மட்டுமே வைகுண்டம் அல்ல. கோயில், பேருந்து, இரயில், மரத்தடி, இல்லம், சாலை என எங்கெல்லாம் பக்தர்கள் ஒன்றுகூடி நாம ஸங்கீர்த்தனம் செய்கிறார்களோ, எங்கெல்லாம் கிருஷ்ணரின் புகழைப் பாடுகிறார்களோ, அவ்விடம் வைகுண்டமாக மாறிவிடுகிறது. எனவே, பக்தர்கள் ஸ்வர்க லோக ஆசைகளைத் தவிர்த்து, ஆனந்தமயமான வைகுண்டத்தில் கிருஷ்ணருக்கு நிரந்தரமாக சேவை செய்வதிலேயே ஊக்கம் கொள்கின்றனர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives