தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.

மொழியின் முக்கியத்துவம்

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகும். எத்தகு தகவல்கள் ஒரு குறிப்பிட்ட மொழியின் மூலம் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு, அந்த மொழி முக்கியத்துவம் பெறுகின்றது. சாதாரண உலகாயதத் தகவல்களை அளிக்கக்கூடிய மொழிகள் காலத்திற்கு நிலைத்திருப்பதில்லை. மனதிற்கு இதமளிக்கக்கூடிய, நுண்மையான அறிவுத் திறனை வளர்க்கக்கூடிய, உயர்ந்த உண்மை களை விளக்கக்கூடிய இலக்கியங்கள் காலத்தால் அழிவு பெறுவதில்லை. அத்தகைய உயர்ந்த இலக்கியங்களை எந்த மொழியின் மூலம் மக்கள் அறிந்து கொள்கின்றனரோ, அந்த மொழி முக்கியத்துவத்தை அடைகின்றது. இவ்வாறாக, இலக்கியங்களில் உள்ள கருத்துகளாலேயே ஒரு மொழி முக்கியத்துவம் பெறுகின்றதேயொழிய, தனிப்பட்ட முறையில் வெறும் மொழியாக மட்டும் எந்தவொரு மொழியும் ஒருபோதும் முக்கியத்துவம் பெறுவதில்லை. கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளுடன் இணைந்து நமது தமிழ் மொழியும் செம்மொழியாக அறியப்படுவதற்கு இதுவே காரணம்.

தமிழ் மொழியின் சிறப்புகள்

தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் கருத்துமிக்கதாகவும், தமிழ் மொழி யினைப் பின்பற்றிய முன்னோர்கள் பண்பாடு மிக்கவர்களாகவும் விளங்கியதால், தமிழ் இன்றும் சிறப்புமிக்க மொழியாக விளங்குகின்றது. செம்மொழி என்னும் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் அனைத்தும் பல்வேறு கருத்துகளை நமக்கு நல்கு கின்றன. அத்தகு கருத்துகள் கைவிடப் பட்டு, வெறும் மொழியாகத் தமிழை நாம் அணுகினோம் என்றால், தமிழ்த்தாய் தனது செம்மையை இழந்துவிடுவாளோ என்ற அச்சம் மனதில் எழுகின்றது. பல்வேறு அறிஞர்களாலும் புலவர்களாலும் எழுதப்பட்ட கருத்துப் பொதிந்த இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவியாகத் திகழ்ந்தன. அவ்விலக்கியங்களின் மேன்மையை நாம் பாராட்டுகின்றோம், இத்தகு மேன்மை பொருந்திய இலக்கியங்களை வழங்கிய நமது முன்னோர்களைக் கண்டு பெருமைப்படுகின்றோம். அதே சமயத்தில் அந்த இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நாம் பின்பற்றுவதில்லை என்பதை நினைக்கும்போது ஏற்படும் மனவேதனையை எழுத்துகளால் வடிக்க இயலாது.

தமிழர்களின் உயர் பண்பாடு

தமிழர்களுக்கென்று ஒரு பண்பாடு உண்டு. ஒரு மொழியைப் பற்றிப் பேசும்போது அந்த மொழியுடன் கூடிய பண்பாடும் அவசியமாகும். பண்பாட்டினை மறந்துவிட்டு மொழியில் மட்டும் கவனத்தைச் செலுத்தினால், அறிஞர்கள் அதனை பக்குவமான தாகக் கருதுவதில்லை. இஸ்லாமிய பண்பாட்டினைக் கைவிட்டு விட்டு, யாரேனும் அரேபிய மொழியில் கவனத்தைச் செலுத்தினால், அது பக்குவ மானதாகுமா? அதுபோலவே, தமிழர்கள் கொண்டிருந்த உயர் பண்புகளை நாம் ஒதுக்கிவிட்டோம் என்றால், அது தமிழ் மொழிக்கு எவ்விதத்திலும் பலனளிக்காது. அசைவ உணவு உண்ணுதல், சூதாடுதல், போதைப் பொருள்களை எடுத்துக் கொள்ளுதல், தகாத பாலுறவு போன்ற தீய செயல்கள் அனைத்தும் பண்பாடற்ற மக்களின் பழக்கமாகும். அத்தகு தீய செயல்களுக்கு பாரதப் பண்பாட்டில் இடமில்லை, தமிழ் இலக்கியங்களிலும் இடமில்லை, திருவள்ளுவரும் இடமளிக்க வில்லை. அவ்வாறு இருக்கையில், தமிழகத்தில் அசைவ உணவுகள் தேவையா? மதுக்கடைகள் தேவையா? உயர் பண்பாடு என்றால், அழகான உடை உடுத்தி, அடுக்குமாடி கட்டிடம் கட்டி, அதிகமான செல்வத்துடன் வாழ்வதே என்று பலர் நினைப்பது வேதனைக் குரியதாகும்.

ஆங்கிலம் வளர்ச்சி பெறுவது ஏன்?

தமிழ் வேண்டும், ஆனால் தமிழர்களின் பண்பாடு வேண்டாம் என்று நினைப்பது ஆகாயப் பூக்களுக்கு விருப்பப்படுவது போன்றதாகும். பண்பாட்டை ஓரமாக ஒதுக்கிவிட்டு, நவீன நாகரிகத்தின் அடிப்படையில் வாழ நினைக்கும் மனிதர்கள், அந்த நாகரிகத்துடன் ஒத்திருக்கும் மொழியினை மட்டுமே கற்றுக் கொள்ள விருப்பப்படுவர். அதன் காரணத்தினால் தான், இன்று தமிழகத்தில் ஆங்கிலம் கற்போர் மிகுந்து வருகின்றனர், தமிழ் வழிக் கல்வி காண்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நகரங்களிலுள்ள அனைவரும் ஆங்கில வழிக் கல்வியை நோக்கிச் செல்வது ஏன்? இன்றைய நாகரிக வாழ்வில் பொருளீட்ட வேண்டுமெனில், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம், தமிழ் தெரிய வேண்டியது அவசியம் இல்லை என்பது தான் இதற்குக் காரணம். ஆங்கிலேயர்களின் பண்பாடு மக்களிடம் இருந்தால், ஆங்கில மொழி தான் வளர்ச்சி பெறும். தமிழ் எவ்வாறு வளர்ச்சி பெற முடியும்? தமிழ் வளம் பெற வேண்டுமெனில், தமிழகம் தமிழர்களின் பண்பாட்டின்படி அமைதல் அவசியம்.

பொருத்தமற்ற தமிழோ!

ஆங்கிலேயர்களின் பண்பாட்டைப் பின்தொடரும் தமிழகத்திற்கு, தமிழ் என்பது பொருந்தாத மொழியாகவே விளங்கும். ஆங்கிலப் பண்பாட்டிற்கு ஆங்கிலமே பொருத்தமான மொழி, தமிழரின் பண்பாட்டிற்கு தமிழ் பொருத்தமான மொழியாகத் திகழும். அசைவ உணவை பழக்கமாகக் கொண்ட ஆங்கிலப் பண்பாட்டில், மாட்டுக் கறிக்கு beef என்றும், ஆட்டுக் கறிக்கு mutton என்றும், கோழிக் கறிக்கு chicken என்றும், பன்றிக் கறிக்கு pork என்றும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அசைவ உணவு என்பது தமிழர்களின் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல, குறிப்பாக பசுவை உண்பது என்பது பண்பாட்டிற்கு எதிரான செயல். எனவே, தமிழர்களின் பண்பாட்டில், பல்வேறு விலங்குகளின் கறிக்கு என்று தனிப்பட்ட பெயர்கள் கிடையாது. நவீன காலத்தில் மட்டுமே, அவ்விலங்கின் பெயருடன் கறி என்னும் சொல் இணைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு தரப்பட்ட தவறான பாலுறவுகளுக்கும் தமிழில் வார்த்தைகள் கிடையாது. கையூட்டு (இலஞ்சம்), விவாகரத்து, கருக்கலைப்பு போன்றவை அனைத்தும் புதிதாக தமிழில் உலாவும் வார்த்தைகளாகும்.

கைவிடப்படும் கருத்துகள்

பெரிதும் மதித்துப் போற்றப்படும் தமிழ் இலக்கியங்கள் பல்வேறு நல்ல கருத்துகளை மக்களுக்கு வழங்கு கின்றன. புகழ்பெற்ற சிலப்பதிகாரம், கீழ்காணும் மூன்று கருத்துகளை நிலைப்படுத்துகின்றது: 1) அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும்–பிழை செய்த அரசியல்வாதிகளை அறமே தண்டிக்கும், 2) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்–சோதித்து நிரூபிக்கப்பட்ட பத்தினியை உயர்ந்தோர் புகழ்வர், 3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்–ஒருவனது பாவச் செயல்கள் அவனை தேடி வந்து துன்புறுத்தும். இக்கருத்துகள் மக்களிடம் அறிவுறுத்தப்படுவதில்லை என்பதை அனைவரும் அறிவர்.

தெய்வத் தமிழ் என்று அறியப் படும் தமிழ் மொழி, ஆன்மீகத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது என்பதை தமிழ் இலக்கியம் கற்ற எவராலும் மறுக்க முடியாது. மதுரை மீனாட்சி கோவிலின் குளத்தில், சங்கப் பலகையில் ஏற்றி மிதக்கவிட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே திருக்குறள்கூட ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கம்ப இராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரிய புராணம் போன்றவை தற்போதைய தமிழ்க் கல்வியில் அதிகளவில் இடம் பெறுவதில்லை. அவற்றில் கூறப் பட்டிருக்கும் கருத்துகள் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. இராமாயணம் என்னும் ஓர் இலக்கியத்தை கற்பனைக் கதை என்று கூறி விட்டு, சிலப்பதிகாரம் என்னும் மற்றோர் இலக்கியத்தை உண்மையாக ஏற்று, கண்ணகியை வழிபடுகின்றனர். கற்புக்கரசியான கண்ணகியை பாராட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் கற்பின் சிறப்பை விளக்கும் சிலப்பதிகாரம் பெற்ற தமிழ்நாட்டில், தவறான பாலுறவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன, திருமணத்திற்கு முந்தைய பாலுறவில் தவறில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். என்னே அபத்தம்!

ஆன்மீக இலக்கியங்களையும் ஆன்மீகத்துடன் தமிழை வளர்த்த பெருங் கலைஞர்களையும் இன்றைய சமுதாயம் ஒதுக்கிவிட்டது. சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்களில் ஒன்றானதும் மக்களுக்கு நல்லறிவுரை வழங்கக் கூடியதுமான திருக்குறளுக்கு மேலோட்டமான முக்கியத்துவத்தை வழங்கு கின்றது. இருப்பினும், திருவள்ளுவர் அத்திருக்குறளில் கூறியுள்ள நன்நெறிகளை யாரும் பின்பற்றுவதில்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இதயத்தில் ஒருவித வலியை உணரலாம்.

திருக்குறளையாவது பின்பற்றலாமே?

திருக்குறளைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் பேசுபவர்களும் அதன்படி நடத்தல் அவசியம். ஊருக்குத்தான் உபதேசம், தனக்கல்ல என்று இருந்து விடல் நல்லதல்ல என்பதை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (திருக்குறள் 391)

இச்சிறப்புமிக்க குறள், திருக்குறள் கற்பவர்களுக்கும் பொருந்தும். ஒழுக்கம், அடக்கம், பிறனில் விழையாமை (பிறர் மனைவியை நோக்காதிருத்தல்), விருந்தோம்பல், அன்புடைமை, செய்நன்றியறிதல், பொறையுடைமை (மன்னித்தல்), அழுக்காறாமை (பொறாமை இல்லாதிருத்தல்), தீவினையச்சம் (பாவத்தைக் கண்ட அச்சம்), ஈகை, புலால் மறுத்தல், வாய்மை, இன்னா செய்யாமை, கொல்லாமை என பற்பல நற்பண்புகள் திருக்குறளில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி நடத்தல் நன்மை பயக்கும்.

அசைவ உணவு உண்பது தவறு என்பதை ’புலால் மறுத்தல் ’கொல்லாமை ஆகிய இரண்டு தலைப்புகளில் இருபது குறள்களில் அற்புதமாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் இன்றைய தமிழர்களோ பெரும்பாலும் அசைவ உணவு உண்பவர்களாகத் தான் இருக்கின்றனர். தமிழை வளர்ப்பதாகக் கூறுபவர்கள், மேடையில் திருவள்ளுவரைப் பற்றி பேசிவிட்டு, நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்தோர் அனைவருக்கும் அசைவ உணவு வழங்குவதைக் கண்டு தமிழ்த்தாயும் திருவள்ளுவரும் பெருமிதம் கொள்வார்களா?

கள்ளுண்ணாமை என்ற தலைப்பில், மது அருந்துதல் தவறு என்பதை உரைப்பதற்காக பத்துக் குறள்களை வடித்துக் கொடுத்த திருவள்ளுவர், அவரது புகழை வெளிப்புறமாகப் பாடி விட்டு, ஊரெங்கும் இருக்கும் மதுக்கடைகளில் தஞ்சமடையும் தமிழ்க் ’குடி’ எப்படிக் காண்பார்?

தமிழின் மிக முக்கிய பகுதி

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் மனிதன் அடைய வேண்டியவையாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் அறக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும், அறக் கொள்கைகளே அனைத்திற்கும் அடிப்படை. அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவன் பொருளீட்டுவதும், அந்தப் பொருளைக் கொண்டு இன்ப மடைவதும் வழக்கம். எப்போது ஒருவன் அத்தகு இன்பத்தினால் களைப்படைந்து இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேடுகின்றானோ, அப்போது அவன் வீடுபேறு (முக்தி) அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவான்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (திருக்குறள் 2)

“தூய்மையான இறைவனின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்?” என்று வள்ளுவரே வினவுகிறார். எனவே, இலக்கியங்களைக் கற்பவர் இறைவனை வழிபடும் நிலைக்கு உயர்வு பெறுதல் மிகவும் அவசியம். அவ்வாறு இறைவனை வழிபடுவதன் மூலம் ஒருவர் வீடுபேறு அடைய முடியும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தவர் (திருக்குறள் 10)

“இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும், மற்றவர்களால் கடக்க முடியாது.” பிறவிப் பெருங்கடலைக் கடப்பது (வீடுபேறு அடைவது) என்பது மிகவும் அவசியம்.

பிறவிப் பெருங்கடலைக் கடப்பது குறித்தும், இறைவனின் திருவடிகளை வழிபடுவது குறித்தும் திருவள்ளுவர் அதிக விளக்கத்தினை வழங்கவில்லை. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி விளக்கமளித்த வள்ளுவர் வீடுபேறு குறித்தும் விளக்கமளித்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அது காலத்தினால் அழிவுற்றிருக்கலாம்.

மொழியின் பலன் மக்களை இறைவனிடம் கொண்டு செல்வதற்காக என்பதை உணர்த்தவே தமிழ் முன்னோர்கள், வீடுபேறு அடைவதற்கான வாய்ப்பை நல்கக்கூடிய கம்ப இராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற இலக்கியங்களை வழங்கியுள்ளனர். அவை தமிழ் மக்களின் களஞ்சியங்கள் என்றால் அது மிகையன்று. அத்தகு இலக்கியங்கள் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும் அவரை வழிபடுவது பற்றியும் அதன் மூலம் பிறவிப் பெருங்கடலைக் கடப்பது பற்றியும் நமக்கு விளக்கமளிக்கின்றன.

இறுதியாகச் சில வரிகள்…

மனிதர்களை உண்ணும் காட்டுவாசிகளுக்கும் மொழி உண்டு, அவர்களும் தங்களது மொழியினைப் பெருமையாக எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் அம்மொழியினைப் பேசுவோரிடத்தில் உயர்ந்த பண்பாடு இல்லாத காரணத் தினால், அம்மொழிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. நமது தாய்மொழியான தமிழ் ஒரு செம்மொழி என்பதை கருத்தில் கொண்டு, காட்டுவாசிகளைப் போல (மது, மாது, மாமிசம் என்று) வாழாமல், மொழிக்கு ஏற்ற பண்பாட்டுடன் நாம் வாழ்ந்தால், அது தமிழ் மொழிக்கும் சிறப்புத் தரும், நாமும் உயர்வு பெறலாம்.

மக்கள் மறந்துபோன திருக்குறள்களில் சில…

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்கள் தீமையை விளைவிப்பதால், அந்தத் தீயவற்றைக் கண்டு தீயைக் காட்டிலும் அஞ்சிட வேண்டும். (202)

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

தனது உடலை வளர்ப்பதற்காக பிற உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவன் எவ்வாறு கருணை உடையவனாக இருக்க முடியும். (251)

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்

புலால் உண்ணாதவர்களையும் அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். (260)

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்

நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறவியில் பல உயிர்களை கொலை செய்தவர்கள் என்று அறிந்தோர் கூறுவர். (330)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ணேவல் செய்வார்கண் இல்

ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண் பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது. (909)

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு

இருமனங் கொண்ட பொதுமகளிருடனும் மதுவுடனும் சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரிடமிருந்து நற்பண்புகள் அனைத்தும் விலகிவிடும். (920)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

மது அருந்துவோருக்கும் நஞ்சு அருந்துவோருக்கும் வேறுபாடு கிடையாது என்பதால், மது அருந்துவோரின் உறக்கத்திற்கும் நஞ்சு அருந்துவோரின் இறப்பிற்கும் வேறுபாடு கிடையாது. (926)

பின் குறிப்பு: வீடுபேறு அடைவதற்கு உதவும் வேத சாஸ்திரங்களில் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தின்படி, அசைவ உணவு, சூதாட்டம், போதைப் பொருள்கள், தகாத பாலுறவு ஆகிய நான்கு பாவச் செயல்களும் அதர்மத்தின் நான்கு தூண்களாகும். இந்நான்கும், தர்மத்தின் தூண்களாகத் திகழும் வாய்மை, தூய்மை, தயை, தவம் ஆகிய நான்கு நற்செயல்களை அழித்துவிடக் கூடியவை. அதர்மத்தின் தூண்கள் வலுப்பெற்றால், தர்மத்தின் தூண்கள் வலுவிழந்துவிடும் என்பதால், யாரொருவர் தங்களது உண்மையான நன்மையில் ஆர்வமுடையவராக உள்ளாரோ, அவர் இந்நான்கு பாவச் செயல்களையும் அறவே ஒழித்துவிடுதல் அவசியம். தர்மத்தை நாம் முறையாகப் பின்பற்றினால், அதர்மத்திலிருந்து நம்மைப் பாதுகாத்தல் எளிமையாக அமையும். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க விரும்புவோர் அனைவரும் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகின்றனர். வாய்மை, தூய்மை, தயை, தவம் ஆகிய நான்குடன் இணைந்து பரம்பொருளான இறைவன் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுதல் என்னும் உண்மையான தர்மத்தில் பயிற்சியளிக்கப்படும் மக்கள், அசைவ உணவு, சூதாட்டம், போதைப் பொருள்கள், தகாத பாலுறவு ஆகிய பாவச் செயல்களிலிருந்து எளிமையாக விடுபட்டு வருகின்றனர். இந்நான்கு பாவச் செயல்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்று வள்ளுவரும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives