தீவிரவாதச் செயல்கள்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

ஓர் ஆன்மீகப் பார்வை

தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

 

இவ்வுலகம், பல்வேறு பிரச்சனைகளைக் கொண்ட மோசமான இடம். அப்பிரச்சனைகளுடன் இணைந்து தற்போதைய நவீன வாழ்வில் உருவெடுத்திருக்கும் மற்றுமொரு பிரச்சனை, தீவிரவாதம். உலகில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் நிகழலாம்; தெருவில் சாதாரணமாக நடந்து செல்லும்போது, திடீரென்று குண்டு வெடித்து நாம் மரணத்தைத் தழுவலாம், அல்லது கைகால்களை இழக்கலாம். இந்த அச்சம் தற்போது எல்லோரின் மனதிலும் உள்ளது. உலகில் எங்குச் சென்றாலும், தீவிரவாதத்தின் இறுக்கத்தை உணர்கிறோம்.

 

காரணம் என்ன?

இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு செயலுக்குப் பல காரணங் கள் இருப்பதை வேத வழிமுறையைப் பின்பற்றுவோர் அறிவர். உதாரணமாக, ஒரு மண் பானைக்கான காரணம் என்ன? களிமண்ணும் சக்கரமும் அதற்கான காரணங்கள். ஆனால் மூல காரணம் குயவனே. களிமண்ணும் சக்கரமும் இருக்கலாம், ஆனால் குயவன் அதனை வடிக்காவிடில், பானை நமக்குக் கிட்டாது. மேலும், பானைக்கான காரணம் மக்களே என்றும் கூறலாம், மக்கள்தானே பானையை வாங்குகிறார்கள். மக்கள் ஏன் பானையை வாங்குகிறார்கள் என்று அடுத்ததாகக் கேட்கலாம். தண்ணீர் பிடிப்பதற்காக என்பது பதில். ஏன் தண்ணீர் பிடிக்க வேண்டும்? இப்படியே கேட்டுக் கொண்டே சென்றால், இறுதியில் கிருஷ்ணரைக் காண்பீர்கள். அவர் ஸர்வ காரண காரணம், எல்லா காரணங்களுக்கும் காரணமானவர்.

தீவிரவாதத்திற்கான காரணம் என்ன? குண்டுகளைத் தயாரிக்க உதவும் நவீன தொழில்நுட்பம், நவீன காலத்தின் நகர வாழ்க்கை என இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். நாட்டில் மக்கள் பரவலாக வாழ்ந்தால், குண்டு வைத்து பல பேரைக் கொல்வது சாத்தியமல்ல; மாறாக, மக்கள் (மும்பையைப் போன்று) நெருக்கமாக வாழ்ந்தால், குண்டு வெடிக்கும்போது நிறைய பேர் கொல்லப்படுகின்றனர், காயமடைகின்றனர். எனவே, நவீன வாழ்வின் ஜன நெருக்கமும் தீவிரவாதத்திற்கான ஒரு காரணமாக அமைகிறது. வெறுப்பு, வெறித்தனம் போன்றவையும் இதர காரணங்களாக அமைகின்றன.

மதவெறி என்பது தீவிரவாதத்திற்கான காரணம் என்று தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. மதவெறி மட்டுமின்றி, பல்வேறு அரசியல் வெறிகளையும் இவ்வுலகம் கண்டுள்ளது. அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான சண்டைகள், இனவெறி யினால் எழுந்த தீவிரவாதச் செயல்கள், ஜெர்மனியர்களின் விசித்திரமான நம்பிக்கையால் எழுந்த சண்டைகள் என்று பல்வேறு உதாரணங்களைக் கொடுக்கலாம்.

சில நேரங்களில், தீவிரவாதிகளின் போராட்டத்திற்குப் பின்னால்கூட, ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்கள் இருப்பதாக கூறப்படுவதுண்டு. உதாரணமாக, இரயில்களைத் தகர்த்து, ஜவான்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகளுக்குப் பின்னால் உண்மையான மனக்குறைகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அரசுகள், குடிமக்களை ஓட்டுக்காக மட்டுமே பார்க்கின்றனர், நிலத்தை அபகரித்து அவர்களை பலவந்தமாக வெளியேற்றுகின்றனர்; அப்போது மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஆயுதம் ஏந்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆச்சரியம் இல்லை என்று சொல்வதால், அதை நியாயப்படுத்துகிறேன் என்று அர்த்தமில்லை, காரணங்களை எடுத்துரைக்கின்றேன்.

 

தினசரி வாழ்க்கை

தீவிரவாதம் நவீன வாழ்வின் ஓர் அன்றாட அங்கமாகிவிட்டது. சுவாமி நாராயணன் கோவிலில் நடந்த தாக்குதல், கோத்ரா ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்த கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பினால் எழுந்த கலவரங்கள், மும்பையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அடிக்கடி தீவிரவாதச் செயல்கள் நடைபெறக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது. வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எத்தனையோ தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில்கூட சில வருடங்களுக்கு முன்பு தூதரகம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் அனைவரும் அறிந்ததே; மேலும், பிரிட்டன், ரஷ்யா என எல்லா நாடுகளிலும் இதைக் காண்கிறோம். தாக்குதல் நடக்காத இடமே இல்லை என்று கூறலாம்.

 

நாடுகளே அரங்கேற்றும் தீவிரவாதம்

தீவிரவாதம் மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அந்த தீவிரவாதத்தை ஒரு நாடே முன்னின்று அரங்கேற்றும்போது, அத்தகு தீவிரவாதம் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் மோசமானது என்று அமெரிக்கா கருதுகிறது. அதன்படி, பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று இந்தியாவும், ஈரான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதைப் பார்க்கிறோம். தீவிரவாதம் என்று சொல்லும்போது, நம் மனதில் வருவது மனிதர்களைக் கொல்வது மட்டுமே. மனிதர்களைக் கொல்வது தீவிரவாதமே, ஆனால் கோடிக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் தினமும் கசாப்புக் கூடங்களில் கொல்லப்படுகின்றனவே, அவற்றிற்கு என்ன பதில்? அதுவும் தீவிரவாதச் செயலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில், உண்மையில் எல்லா நாடுகளிலும், குறிப்பாக வளர்ச்சி பெற்ற நாடுகளில், அந்த நாட்டினரே அரங்கேற்றும் இந்த தீவிரவாதச் செயல் நடைபெற்று வருகிறது. முன்னேறிய நாடுகளில் முன்னேற்றம் வாய்ந்த இயந்திரங்கள் மற்றும் வழிமுறைகளின் மூலம் மிருகங்களும் பறவைகளும் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன; இஃது ஒரு பெரிய தொழிலாக நடைபெற்று வருகிறது. இதுவும் தீவிரவாதச் செயல்தானே?

மிருகங்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? உணவிற்காக மிருகங்களைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. மாமிசம் இல்லாமலேயே நீங்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் வாழ முடியும். மிருகங்களுக்கு வலியைக் கொடுத்து, அவற்றைக் கொலை செய்வதற்காக கசாப்புக் கூடங்களை நடத்துவது என்பது ஒரு தீவிரவாதச் செயலே.

தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது

மிருகங்களின் மீது இவ்வளவு துன்பத்தைத் திணிக்கும்போது, மக்களின் மீதான தீவிரவாதச் செயல்களையும் போர்களையும் தவிர்த்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. வியட்நாமில் போர் நிகழ்ந்தபோது, மிருகங்கள் கட்டுப்பாடின்றி கொல்லப்படுவதால் போர் நடப்பது நிச்சயமே என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். மேலும், போர் நடைபெறும்போது, போரிலிருந்து காப்பாற்றும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்றும் அவர் கூறினார். உங்களுடைய பாவ காரியங்களினால் நீங்களே போரை உண்டாக்கினீர்கள். ஆனால் இப்போது போரிலிருந்து காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டுவது என்பது கபடத்தனம், மூடத்தனம்.

தீவிரவாதிகளின் குண்டுகள் எங்காவது வெடிக்கும்போது, உடனடியாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் அதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் இவையனைத்தும் வெறும் கபடத்தனமே. கோடிக்கணக்கான மிருகங்களைக் கொடூரமாகக் கொல்வதற்கு தங்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கும் அவர்கள், சில மனிதர்கள் கொடூரமாகக் கொல்லப்படும்போது கண்டனம் தெரிவிப்பது கபடத்தனம் இல்லையா? இத்தலைவர்கள் அவ்வப்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுண்டு; ஆனால் அப்பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த அயோக்கியர்கள் மாமிசம் சாப்பிடுவதும் வழக்கம். இது கபடத்தனம் இல்லையா? ஏமாற்றுவதில்லையா?

எனவே, தீவிரவாதத்தை உங்களால் ஒழிக்க முடியாது. உங்களைக் காட்டிலும் ஒருபடி முன்னேறியவன் எப்போதும் இருப்பான். நீங்கள் கைரேகையை எடுக்கலாம், கைபேசிகளை சோதனையிடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உங்களைவிட அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். நீங்கள் விரும்பாத மோசமான செயல்களைச் செய்வதற்கு அவர்கள் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பர். எனவே, இதற்கான தீர்வு உங்களிடம் இல்லை என்பதே உண்மை.

கீழ்த்தரமான உணர்வு

தீவிரவாதத்திற்கான தீர்வினை எங்களால் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தால்) வழங்க முடியும். எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம், கிருஷ்ணருடனான நமது உறவை நாம் மறந்திருப்பதே. அந்த மறதியினால் பல்வேறு ஆசைகள் தோன்றுகின்றன, அவை ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. மாமிசம் உண்பது என்பது தமோ குணத்தின் செயலாகும். கசாப்புக் கூடங்களை வைத்து மிருகங்களைக் கொலை செய்வதால், கர்ம வினைகளைப் பெறுவது மட்டுமின்றி, மக்களின் உணர்வும் கொடூரமாகின்றது. மக்களின் உணர்வை தமோ குணத்திற்கு அழைத்துச் செல்லும் மாமிச உணவுகள், தகாத செயல்களைச் செய்வதற்கு அவர்களைத் தூண்டுகின்றன.

அதுமட்டுமின்றி, தொலைக்காட்சியிலும் வீடியோ விளையாட்டுகளிலும் எப்போது பார்த்தாலும், கொலை, கொலை, கொலை என்று இருக்கும்போது, அதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? கொலை செய்வது இயல்பானது என்று நினைத்து வன்முறையில் ஈடுபடத் தொடங்குவர்.

எனவே, வாழ்க்கை குறித்த இந்த விஞ்ஞானத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில், வாழ்வின் பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை. இவ்வுலகின் விதிகளை நாம் தெரிந்துகொண்டு, அதன்படி வாழ வேண்டும்; அவற்றை நாம் மீறும்போது, இயற்கையின் சட்டத்தினால் தண்டிக்கப்படுவோம். போர்கள், எய்ட்ஸ் போன்ற வியாதிகள், மனோவியாதிகள் (இன்றைய உலகின் முக்கியமான நோய்), தீவிரவாதச் செயல்கள் என இவையாவும் பாவகரமான உணர்வின் விளைவுகளே.

பாவத்தை ஒழித்து, இயற்கையின் விஞ்ஞானத்திற்கு ஏற்ப வாழ வேண்டும். இதுவே தர்மம் எனப்படுகிறது. இது மதவெறியோ மனவெழுச்சியோ அல்ல. உலகிலுள்ள பெரும்பாலான மதத்தினர் மாமிசம் உண்பதை அனுமதித்து, வசதி செய்து தருகின்றனர். கடவுளின் பெயரால், கடவுளின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். நாம் தர்மத்தின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுதல் அவசியம்.

நாம் நமது உணர்வைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதே அத்தூய்மையை அடைவதற்கான மிகச்சிறந்த வழியாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புவதில்லை. மக்கள் இறைவனின் ஆட்சியை விரும்புகின்றனர், ஆனால் இறைவனை விரும்புவதில்லை என்று ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவார். அவர்கள் அமைதியை விரும்புகின்றனர்; அந்த அமைதி எதற்காக? அமைதியான முறையில் மிருகங்களைக் கொல்வதற்காகவும் தகாத பாலுறவில் ஈடுபடுவதற்காகவுமே. மிருகங்களை நாம் வதைக்கும்போது, எங்கிருந்து அமைதி கிட்டும்? மிருகங்களையும் அமைதியாக வாழவிட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

அமைதியாக வாழ விரும்பும் மக்கள், இவர்களையும் அமைதியாக வாழ விடலாமே!

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives