வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 1

முந்தைய ஸ்கந்தங்களில் சுயாம்புவ மனுவின் புத்திரிகளான தேவஹூதி, ஆகூதி, ப்ரசூதி ஆகியோரைப் பற்றியும் புத்திரர் உத்தானபாதரைப் பற்றியும் அவர்களது சந்ததியினரைப் பற்றியும் அறிந்தோம்.

ஐந்தாம் ஸ்கந்தத்தில் மனுவின் மற்றொரு புத்திரரான பிரியவிரதரைப் பற்றியும் அவரது சந்ததியினரைப் பற்றியும் காணலாம்.

அழியாத பக்தி

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.

சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: “அன்பிற்குரியவரே! நீர் கூறியது முற்றிலும் உண்மை. முழுமுதற் கடவுளின் பெருமைகள் பக்தர்களுக்கு தேவாமிர்தம் போன்று இனிமையானவை. அதில் திளைத்திருக்கும் பக்தர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். ஆயினும், அவர்களது பக்தி என்றும் அழியாது.” அதனைத் தொடர்ந்து சுகதேவர் பிரியவிரதரைப் பற்றிய விளக்கங்களை ஆரம்பித்தார்.

பிரம்மாவின் வருகை

நாரத முனிவரின் சீடரான இளவரசர் பிரியவிரதர் ஒரு தூய பக்தர். அவரது தந்தை சுயாம்புவ மனு ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு பிரியவிரதரிடம் கூறினார். அரச போகம் தமது பக்தித் தொண்டிற்கு தடையாக இருக்கும் எனும் அச்சத்தினால் இளவரசர் அரியணையை ஏற்க மறுத்தார். அச்சூழ்நிலையில், பிரம்மதேவர் தமது துணைவர்களுடன் பிரியவிரதர் தியானம் செய்து கொண்டிருந்த கந்தமாதன மலையை அடைந்தார். அவரை சுயாம்புவ மனு, பிரியவிரதர், நாரதர் ஆகியோர் வரவேற்று வணங்கினர்.

பிரம்மதேவர் தமது துணைவர்களுடன் சுயாம்புவ மனு, பிரியவிரதர் மற்றும் நாரதரைக் காண வருதல்

அனைவரையும் ஆளும் பகவான்

பிரம்மதேவர் மிக்க கனிவுடன் பிரியவிரதரை நோக்கி புன்னகைத்து பேசலானார்: “நான், நீங்கள், சிவபெருமான், உங்களது தந்தை, மாமுனிவர் நாரதர் முதலிய அனைவரும் பரம புருஷ பகவானின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். அவரது கட்டளையை ஒருநாளும் நம்மால் மீற இயலாது. தவ வலிமை, உயர்ந்த கல்வி, வீரம், யோக சித்திகள், புத்திசாலித்தனம் என எதன் துணை கொண்டும் முழுமுதற் கடவுளின் கட்டளைகளை மீற இயலாது.

நான் (பிரம்மதேவர்) முதற்கொண்டு சிறு எறும்பு வரை எந்த உயிர்வாழியும் இறைவனின் ஆணையை மீற இயலாது. உயிர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு, செயல், மோகம், சோகம், அச்சம், எதிர்கால ஆபத்துக்கள், சுகம், துக்கம் முதலியவற்றை அனுபவிக்க வேண்டிய காரணத்தினால், பகவானின் கட்டளைப்படி பல்வேறு உடல்களை ஏற்கின்றனர்.

நாம் நமது குணம் மற்றும் செயல்களுக்கேற்ப, வேதக் கட்டளைகளின்படி வர்ணாஷ்ரம பிரிவுகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். ஒருவன் தான் இருக்கும் நிலையில் இருந்து முழுமுதற் கடவுளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும்.”

முக்தர்களின் மனோநிலை

முக்தி பெற்ற ஒருவர், தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் தனது முந்தைய கர்மத்தால் ஏற்பட்டது என்பதை அறிகிறார். இது நித்திரையின்போது கண்ட கனவை விழித்தபின் எண்ணிப் பார்ப்பதைப் போன்றதாகும். (அதாவது இவ்வுலக வாழ்வு ஒரு கனவு என்பதை உணர்ந்துள்ளார்.)

எனவே, தான் செய்யும் செயல்கள் தனக்கு மீண்டும் இவ்வுலகப் பிறவியை ஏற்படுத்தாத வண்ணம் அவர் செயல்படுகிறார், முக்குணங்களால் பாதிக்கப்படாமல் வாழ்கிறார். தன்னில் திருப்தியுற்று புலன்களை வென்றுள்ள ஒரு கற்றறிந்த மனிதனை இல்லற வாழ்க்கைகூட துன்புறுத்த இயலாது. ஒருவர் இல்லற வாழ்வில் பயிற்சி பெற்று காம இச்சைகள் குறைந்தபின், அச்சமின்றி உலகெங்கும் செல்லலாம். எனவே, பகவானின் தாமரைத் திருவடிகளை சரணடைந்து, மனம் உட்பட ஆறு புலன்களை வெல்வாயாக!

நீங்கள் பௌதிக இன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பகவானின் சிறப்புக் கட்டளை. இதை நீங்கள் சிரமேற் கொண்டு பற்றற்ற நிலையிலிருந்து பகவானின் கட்டளைகளை நிறைவேற்றும் திறனுடையவராக விளங்குவீராக!”

மன்னர் பிரியவிரதர் தமது ஒளிமிக்க ரதத்தினால் இரவைப் பகலாக்குதல்

பிரியவிரதரின் ஆட்சி

பிரம்மதேவரின் இந்த அறிவுரைகளையும் தமது தந்தையின் விருப்பத்தையும் புரிந்து கொண்ட பிரியவிரதர் அனைத்து கிரகங்களையும் காப்பதற்கான ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இதனால் திருப்தியடைந்து மனு துறவறம் ஏற்று கானகம் சென்றார்.

மன்னர் பிரியவிரதர் பௌதிக மாசுக்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவராக விளங்கியபோதிலும், தமது முன்னோர்களின் கட்டளைகளை மதிப்பதற்காக மட்டுமே இந்த உலகை ஆட்சி புரிந்தார். அவர், பிரஜாபதி விஷ்வகர்மாவின் புதல்வியான பர்ஹிஷ்மதியை மணந்து தமக்கு இணையான அழகு, நடத்தை, பெருந்தன்மை முதலிய நற்குணங்களை உடைய பத்து புதல்வர்களையும் கடைசியாக ஊர்ஜஸ்வதி என்ற ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

பிரியவிரதரின் வம்சம்

மன்னருடைய மூன்று புதல்வர்களான கவி, சவன், மகாவீரன் ஆகியோர் பகவானின் தூய பக்தித் தொண்டில் முன்னேறி பரமஹம்ச நிலையை அடைந்தனர். மன்னரின் தேர்ச் சக்கரங்களின் தடங்கள் ஏழு சமுத்திரங்களையும் ஏழு தீவுகளையும் படைத்தன. அவற்றை அவரது மற்ற ஏழு புத்திரர்கள் ஆண்டனர்.

மன்னர் தமது இரண்டாவது மனைவியின் மூலம் உத்தமன், ரைவதன், தாமஸன் என்ற மூன்று புதல்வர்களைப் பெற்றார். அவர்கள் மூவரும் எதிர்கால மனுக்களாக உயர்வு பெற்றனர்.

பிரியவிரதரின் சக்தி

மன்னர் பிரியவிரதர் இப்பிரபஞ்சத்தினை பதினொரு அற்புத வருடங்கள் (ஒரு அற்புதம் என்பது பத்து கோடி) ஆட்சி செய்தார். அவர் தன்னிகரற்றவராக விளங்கியதால், அவர் தமது வலிமைமிக்க கரங்களால் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நாண் ஏற்றும் போதெல்லாம் தர்மங்களுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் கண்ணில் படாமல் ஓடி விடுவர்.

அவர் ஒரு சாதாரண மனிதரைப் போல தம் மனைவி பர்ஹிஷ்மதியை மிகவும் நேசித்தார். எனினும், உண்மையில், அவர் ஒரு மஹாத்மா ஆவார். அவர் முழுமுதற் கடவுளை வழிபட்டதால் மிக்க ஆற்றலுடன் விளங்கினார். இதனால் சூரியனின் கோளப் பாதையில், ஓர் பிரகாசமான ரதத்தில் சுற்றி வந்து, இரவைப் பகலாக்கினார்.

அந்த ரதத்தின் சக்கரங்கள் பதித்த தடங்களிலிருந்து சமுத்திரங்கள் தோன்றின. அவை பூமண்டலத்தை ஏழு தீவுகளாகப் பிரித்தன. மன்னர் இத்தீவுகளை ஆளும் உரிமையை தன் ஏழு புதல்வர்களுக்கு அளித்தார். தம் புதல்வி ஊர்ஜஸ்வதியை சுக்ராசாரியருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர்களுக்கு தேவயானி என்ற மகள் பிறந்தாள்.

பிரியவிரதரின் துறவு

பிரியவிரதர் தமது உலகச் செல்வங்களைத் துய்த்துக் கொண்டிருந்த வேளையில், நாரதரிடம் தாம் முழுமையாக சரணடைந்து கிருஷ்ண உணர்வு பாதையில் உண்மையில் நிலைபெற்றிருந்தபோதிலும் எவ்வாறோ மீண்டும் பெளதிக விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக சிந்திக்கத் தொடங்கினார். இதனால் அவரது மனம் நிம்மதி இழந்தது, முற்றும் துறந்த உணர்ச்சியுடன் தன்னைத்தானே நொந்து கொண்டார். “உலக இன்பம் எனும் பாழுங்கிணற்றினுள் வீழ்ந்து, மனைவியின் கையில் ஆடும் குரங்குபோல ஆகி விட்டேனே, இது கண்டிக்கத்தக்கது,” என்றெல்லாம் எண்ணி வேதனைப்பட்டார்.

தமது மனைவியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் ஆட்சிப் பொறுப்பையும் செல்வங்களையும் புதல்வர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிரியவிரதர் துறவு வாழ்வை மேற்கொண்டார். நாரத முனிவரின் கருணையால் அவரது உபதேசங்களை மீண்டும் முழுமையாகப் பின்பற்றி இதயத் தூய்மையுடன் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றார்.

மிகச்சிறந்த பக்தரான பிரியவிரதர், பலன்தரும் செயல்களால் பெற்றிருந்த செல்வங்களை எல்லாம் மிகவும் துச்சமாகக் கருதி, கிருஷ்ண உணர்வு எனும் மிகவுயர்ந்த ஆன்மீக இன்பத்தைச் சுவைத்தார்.