வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

ஒரு கருத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், “ஏன், எதற்கு, எவ்வாறு” என வினாக்களை எழுப்பி ஆய்ந்தறிவதே புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்யாமல், அதனை நம்பினால், அதை மூட நம்பிக்கை என்று கூறலாம். கடவுளை நம்பாத நாத்திகர்கள் கடவுளை நம்பும் மக்களை “மூட நம்பிக்கையில் வாழ்பவர்கள்” என்று கூறுகின்றனர். ஆயினும், நாத்திகர்கள் கடவுளைப் பற்றி ஆய்வு செய்தார்களா? கடவுளை விஞ்ஞான ரீதியில் அணுகுவதற்கு முயன்றார்களா? சற்று ஆராயலாம்.

தானாகத் தோன்றியதா?

பிரபஞ்சத்தின் சீரான அமைப்பினை உற்று நோக்கும்போது, அதற்குப் பின்னால் ஒரு கூர்மையான சீரமைப்பாளர் இருப்பதை உணரலாம், அனைத்திலும் ஓர் ஒழுங்கினைக் காணலாம். அதாவது, அறிவுடைய ஒருவன் சிறந்த படைப்பைக் கண்டவுடன் அதற்குரிய படைப்பாளியைப் பற்றி வினவுவான். படைப்பாளி இல்லாமல் படைப்பு சாத்தியமல்ல என்பதை அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் காண்கிறோம்.

பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிகள் வளரவளர, இப்பிரபஞ்சம் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது என்னும் கருத்து விஞ்ஞானிகளால் உணரப்பட்டு வருகிறது. இருப்பினும், சில முட்டாள் விஞ்ஞானிகளும் நாத்திகர்களும் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஏதோ தானாக செயல்படுகிறது என்று கூறுவது புத்திசாலித்தனமா?

தாஜ்மஹாலைக் காட்டி, “இதனை உருவாக்கியவர் யார்?” என்ற வினாவை எழுப்பினால், ஷாஜஹான் என்னும் பதிலைப் பெறுகிறோம். போயிங் 787 ரக விமானம், சர்வதேச விண்வெளி நிலையம், கார், ரோபோ, கைபேசி முதலிய பொருட்களின் மீதும் இதே வினாவினை எழுப்புவோமானால், அவற்றிற்குப் பின்னால் பல புத்திசாலிகளின் புத்தி இருப்பதை நிச்சயமாக உணர முடியும். இவ்வாறிருக்க, மனிதர்களால் படைக்கப்படாதவற்றை எல்லாம் படைத்தவர் யார்? என்ற வினாவை எழுப்பும்போது, இயற்கையின் படைப்புகளுக்குப் பின்னால் ஒரு படைப்பாளனின் பூரணமான அறிவு இருப்பதை உணர முடியும்.

காகித ரோஜாக்களை உருவாக்கவே ஒரு படைப்பாளி தேவைப்படும்போது, உண்மை ரோஜாக்கள் படைப்பாளி இல்லாமல் உருவாகி விடுமா?

மனிதனின் கண் சில மணித் துளிகளில் சுமார் ஏழு முதல் பத்து கோடி நிறங்களைக் காணும் திறனுடையது. கண் முதலிய சிக்கலான பல்வேறு அதிசயங்களை வடிவமைத்து படைத்தவர் யார்? ஒவ்வொரு சிக்கலான வடிவமைப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தால், அதுவே அதன் வடிவமைப்பாளரை சுட்டிக்காட்டி விடும்

படைப்பாளரை மறுப்பவர்களுக்கு அறிவியல் பூர்வமான சில கேள்விகள்

பிரபஞ்சம் எவ்வாறு அதிசயத்தக்க முறையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவற்றைக் காணும்போது கண்டிப்பாக ஒரு புத்திக் கூர்மையுள்ள வடிவமைப்பாளர் இருந்திருக்க வேண்டும் என்பதை உணரலாம். சில உதாரணங்கள்:

பூமியின் சுழற்சி வேகம்: பூமி தனது வேகத்தை சிறிது அதிகரித்தால் சுழற்காற்றும் சூறாவளியுமே மிஞ்சும், சற்று குறைத்தால் இரவு மிகவும் குளிராகவும் பகல் மிகவும் வெப்பமானதாகவும் இருக்கும்.

பூமி தனது சுழற்சி வேகத்தைப் பற்றி தானே கற்றுக் கொண்டதா? அல்லது விஞ்ஞானிகள் செயற்கைக்கோளைக் கட்டுப்படுத்துவதுபோல பூமியையும் யாராவது கட்டுப்படுத்துகிறார்களா?

பூமியின் அளவு: பூமியின் மேற்பரப்புக்கு மேலே மெல்லிய நைட்ரஜன்-ஆக்ஸிஜன் படலம் உள்ளது. அதைத் தக்கவைப்பதற்கு ஏற்றாற்போல பூமியின் அளவும் ஈர்ப்புத் தன்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமி சற்று சிறிதாக இருந்திருக்குமானால், இந்த வளிமண்டலம் இருப்பதற்கே சாத்தியக் கூறில்லாமல் போயிருக்கும். பூமி சற்று பெரிதாக இருந்திருக்குமானால், வளிமண்டலம் அதிகமான ஹைட்ரஜன் வாயுவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இவை உயிர் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றியிருக்கும். இந்த துல்லியமான அளவை பூமிக்குத் தந்தது யார்?

பூமியின் அமைவிடம்: பூமி மணிக்கு சுமார் 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வளவு வேகத்தில் சுற்றினாலும் பூமி தன் அமைவிடத்தை முறையாகப் பராமரித்துக்கொள்கிறது. தற்போதைய நிலையைவிட பூமி சூரியனிலிருந்து சற்று தொலைவில் இருக்குமானால், நாம் உறைந்து போவோம்; சற்றே அருகில் இருக்குமானால், நாம் கருகிப் போவோம். இந்த பூமியை சூரியனிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இவ்வளவு துல்லியமாக பொருத்தி வைத்தது யார்?

பூமியை சூரியனிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இவ்வளவு துல்லியமாக பொருத்தி வைத்தது யார்?

100% கழிவு மீளுருவாக்கம் (Recycling)

ஒவ்வொரு கணமும் நாம் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன்-டை-ஆக்ஸைட்டை வெளியேற்று
கிறோம், அது தாவரங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது. ஆக்சிஜன் உயிரை வாழ்விக்கும், அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடோ உயிரைக் கொல்லும். ஆயினும், இயற்கை தனது அற்புதமான சமநிலையால், சுவாசத்தின் கழிவான கார்பன்-டை-ஆக்ஸைட்டை ஒளிச்சேர்க்கையின் மூலம் எடுத்துக் கொண்டு சுவாசத்தின் மூலப்பொருளான ஆக்சிஜனை வெளியேற்றுகிறது.

ஒரு கழிவை மூலப்பொருளாகப் பெற்று, அந்தக் கழிவை முதல் இடத்திற்கு மூலப்பொருளாக வழங்கக்கூடிய அற்புத தொழிற்சாலையை விஞ்ஞானிகளால் உருவாக்கிட முடியுமா?

வியப்பான விதிகள்

ஒரு சாட்டையிலிருந்து விடுபட்ட பம்பரம் வேகமாக சுற்றத் துவங்கி படிப்படியாக வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது. ஆனால் பூமியோ மனித அறிவுக்கு எட்டிய காலம் முதல் ஒரே வேகத்தில் சுற்றி வருகிறது. என்றும் மாறாத இந்த இயற்கை நியதிகளை எவ்வாறு புரிந்துகொள்வது? இப்பிரபஞ்சம் ஒழுங்காகவும் நம்பகமாகவும் செயல்படுவதற்கான காரணம் என்ன?

குவாண்டம் மின்னியக்கவியலுக்கான நோபல் பரிசு வென்ற ரிச்சர்டு ஃபெயின்மான் கூறுகிறார்: “இயற்கை பல விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது என்பதே ஒரு புதிர். அனைத்து இயற்கை விதிகளும் வியப்பானதே.” அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு சட்டங்களுக்குப் பின்பும் அதை இயற்றியவர் உள்ளார். ஒரு சட்டத்தை உருவாக்குவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் ஒரு புத்திசாலிக்கு மட்டுமே சாத்தியம்.

எனவே, பிரபஞ்சத்தின் சட்டங்களும் அவற்றின் நடத்தைகளும் ஒரு சட்ட வல்லுநரின் இருப்பை நிரூபிக்கின்றன என்பதை புத்திசாலிகளால் புரிந்துகொள்ள முடியும்.

இயற்கை தானாக இயங்குகிறது என்னும் நாத்திகர்களின் எண்ணம் விளையாட்டுப் பொம்மை தானாக இயங்குவதாக நினைக்கும் குழந்தையின் எண்ணத்தைப் போன்றது.

இயற்கை தானாக இயங்குகிறதா?

ஓர் இயந்திரம் தானாக இயங்குகிறது என்றால், அஃது இயக்குபவருடன் நேரடித் தொடர்பில் இல்லை என்பதே பொருள், இயக்குனரே இல்லாமல் இயங்குகிறது என்பது பொருளல்ல. இயக்குநர் இயக்குகிறார், கண்காணிக்கவும் செய்கிறார். எனவே, தானாக நடைபெறும் செயல்களுக்குப் பின்னால் இயக்குநர் இருப்பதில்லை என்பது அறிவின்மையை எடுத்துக்காட்டுகிறது.

விளையாட்டு பொம்மை தானாக இயங்குவதைப் பார்த்து ஒரு குழந்தை ஆச்சரியப்படலாம், ஆனால் அறிவுடைய பெரியவர்களோ அதன் இயக்கத்தை நன்கறிவர். அதைப் போலவே, இயற்கையின் பிரம்மாண்டமான செயல்பாடுகள் அனைத்தும் அனுபவமற்ற குழந்தை நினைப்பதைப் போல தானாக நிகழ்வதில்லை, நமது கண்ணுக்குத் தெரியாத நிபுணரின் மேற்பார்வையிலேயே நடைபெறுகின்றன. இதுவே புத்திசாலிகளின் எண்ணம்.

புகழ்பெற்ற இயற்பியலாளர் லார்ட் கெல்வின் கூறினார், “நீங்கள் ஆழமாக சிந்தித்தால், ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கைக்கு அறிவியலே உங்களைக் கொண்டு சேர்த்து விடும்.”

நாத்திகனின் மூட நம்பிக்கை

“நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இந்த உலகிற்கு வருவதற்கு முன்பு நான் எங்கிருந்தேன்? இவ்வுலகிற்கு வந்த பிறகு நான் படும் இன்னல்களுக்கெல்லாம் என்ன காரணம்?” முதலிய வினாக்களை எழுப்பி இவற்றிற்கான விடையைப் பெற அறிவற்ற விலங்குகள் ஒருபோதும் முயல்வதில்லை.

அறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

ஆத்திகன் சொல்வதாக இருந்தாலும், நாத்திகன் சொல்வதாக இருந்தாலும், அதில் என்ன உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். ஆய்வுகளும் அறிவியலும் ஆன்மீகத்தில் இல்லாவிடில், அஃது ஒரு மனவெழுச்சியாக மட்டுமே இருக்கும், உண்மையான ஆன்மீகமாக இருக்காது. எனவே, அனைத்து ஆன்மீக விஷயங்களையும் முறைப்படி அறிய வேண்டும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் பல முறை வலியுறுத்தியுள்ளார்.

கடவுளை ஆய்வு செய்யாமல் ஏற்கும் ஆத்திகர்களைக் காட்டிலும், (இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில்) கடவுளை ஆய்வு செய்யாமல் மறுக்கும் நாத்திகர்களை மூட நம்பிக்கையில் உழல்பவர்கள் என்று நாம் நிச்சயம் கூறலாம். பல நாத்திகர்கள் தங்களை புத்திசாலிகளைப் போலக் காட்டிக்கொள்கின்றனர், ஆனால் கடவுளைப் பற்றிய அடிப்படை ஆய்வைக்கூட அவர்கள் நிகழ்த்தவில்லை என்பது உறுதி.

கடவுளை ஏற்கும் ஆத்திகர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கை என நாத்திகர்கள் கூறுகின்றனர். ஆனால் கடவுளை மறுக்கும் நாத்திகர்களின் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எனவே, நாம் அந்த மெய்ப்பொருளை முறையாக அறிந்து வாழ்வைப் பயனுள்ள
தாக்குவோம்.