எல்லா காரணங்களுக்கும் காரணம்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம் காண்டம், ஐந்தாம் அத்தியாயம்

சென்ற இதழில் பரீக்ஷித் மஹாராஜரின் கேள்விகளையும் சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகளையும் பார்த்தோம். அக்கேள்விகளுக்கு பதிலாக, நாரதருக்கும் பிரம்மாவிற்கும் நடந்த உரையாடலை சுகதேவர் விவரிப்பதை இந்த இதழில் காண்போம்.

நாரதரின் கேள்விகள்

பிரம்மாவிடம் நாரத முனிவர் வினவினார், “தேவர்களில் தலைமையானவரே! ஜீவராசிகளில் முதன்மையானவரே! தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். ஆத்ம தத்துவத்தைப் பற்றி எனக்கு தயவுசெய்து விளக்குங்கள். எனதன்பு தந்தையே! இந்த உலகத்தைப் படைப்பதும் காப்பதும் யார்? படைப்பின் விவகாரத்தில் கடந்த, நிகழ், மற்றும் எதிர்காலத்தை தாங்கள் அறிவீர்கள். சிலந்தி தன் வலையை பின்னுவதுபோல அனைத்து ஜீவராசிகளையும் பௌதிக மூலப் பொருட்களையும் உமது சொந்த சக்தியால் தனித்து நின்றே சிருஷ்டிக்கிறீர்களா?

“சிருஷ்டிப்பதற்காக தாங்கள் கடுந்தவத்தை மேற்கொண்டீர்கள். ஆதலால், தாங்கள் யாரை நோக்கி தவம் செய்தீர்களோ, அவரைப் பற்றி இந்த சீடனுக்கு விளக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.”

பிரம்மாவிற்கு பகவான் சக்தியளித்தல்

நாரதரின் கேள்விகளுக்கு பிரம்மா பின்வருமாறு பதிலளித்தார்: “எனதன்பு நாரதா, உமது கேள்விகள் எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை பயப்பவை. அக்கேள்விகளால், பகவானின் மகத்துவத்தை ஆழ்ந்து சிந்திக்க நான் ஊக்கம் பெற்றுள்ளேன். நீர் பேசியது அனைத்தும் சரியே. பகவானைப் பற்றி அறியாதவர்கள் என் சிருஷ்டியைக் கண்டு மயங்குவது உறுதி.

“சூரியனால் சந்திரன், ஆகாயம், கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் ஒளியூட்டப்படுவதுபோல, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வரும் பிரம்மஜோதியால் ஏற்படுத்தப்படும் சிருஷ்டிக்குப் பிறகே, பிரபஞ்சத்தின் பலதரப்பட்ட நிலைகளை நான் படைக்கிறேன். பகவானின் வெல்ல முடியாத மாயா சக்தியால் கவரப்பட்டு, புத்தியில் தாழ்ந்தவர்கள் தங்களைத் தாங்களே பரம ஆளுநர்கள் என்று நினைக்கின்றனர். மேலும், அச்சக்தியால் குழப்பத்திற்கு ஆளானவர்கள் எப்பொழுதும் “நான்,” “எனது” என்ற எண்ணங்களிலேயே மூழ்கி, அர்த்தமற்ற பேச்சுக்களிலேயே ஈடுபட்டுள்ளனர்.”

நாராயணரே மூல படைப்பாளர்

பிரபஞ்ச படைப்புப் பற்றி பிரம்மா தொடர்ந்து நாரதருக்கு அறிவுறுத்தினார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, பொய் அஹங்காரம் ஆகியவை பகவானின் பகிரங்க சக்தியிலிருந்து உருவாக்கப்பட்டவை ஆகும். வேதங்களை இயற்றியவரும் வேதங்களால் அறியப்படுபவரும் பரம புருஷ பகவானே ஆவார். தேவர்கள் அவரது அங்கங்கள் மற்றும் தொண்டர்கள் ஆவர். எல்லா கிரகங்களின் உரிமையாளரும் அனைத்து யாகங்களின் அனுபவிப்பாளரும் அவரே ஆவார்.

அந்த பரம புருஷ பகவான் நாராயணரை உணர்வதற்காகவே தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் உள்ளன. தவம் என்பது அவரை அடைவதற்காகவே உள்ளது, ஞானமும் அவரைப் புரிந்துகொள்வதற்காகவே. முக்தி என்பது அவரது இராஜ்ஜியத்திற்குள் நுழைவதே. நானும் அவரால் படைக்கப்பட்டவனே. அவர் படைத்த மூலப் பொருட்களைக் கொண்டு, அவரால் ஊக்குவிக்கப்பட்டு, அவரது மேற்பார்வையின்கீழ் நான் இரண்டாம்நிலை சிருஷ்டியை செய்கிறேன்.

பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன. இக்குணங்களின் காரணத்தால், ஜீவராசிகள் தங்களின் நித்திய தன்மையை மறக்கின்றனர்.

 

காரணக் கடலினுள் பள்ளி கொண்டுள்ள காரணோதகஷாயி விஷ்ணுவின் சுவாசத்திலிருந்து எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் வெளிவருகின்றன.

ஸர்கம் (சிருஷ்டி)

பிரம்மஜோதி எனும் ஆன்மீக வானத்தின் ஒரு மூலையில் சில சமயங்களில் ஆன்மீக மேகமொன்று தோன்றுகிறது. அப்பகுதி, முதலில் பிரதானம் என்றும், பின்னர் மஹத்தத்வம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பிறகு பகவான் அவரது முதல் புருஷ அவதாரமாகிய காரணோதகஷாயி விஷ்ணுவாக மஹத்தத்துவ நீருக்குள் (காரணக் கடலினுள்) பள்ளி கொள்கின்றார். அவரது உறக்கத்தின்பொழுது எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் அவரது சுவாசத்திலிருந்து வெளிவருகின்றன. இப்பிரபஞ்சங்கள் காரண ஜலம் முழுவதும் மிதந்த வண்ணம் பரவியுள்ளன.

காலம், உயிர்வாழிகள், அவர்களின் கர்மம் ஆகியவை அடங்கிய பகவானின் பார்வையால் சலனமடையும் மஹத்தத்துவத்திலிருந்து பொய் அஹங்காரம் உருவாகிறது. இந்த பொய் அஹங்காரமானது ஸத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஒவ்வொன்றிலும் விரிவடைந்து, பின்னர் படிப்படியாக மேலும் உருமாறுகின்றது.

பிரபஞ்சத்தின் பரிணாமமானது அவரது சக்திகளால் தொடர்ந்து நடக்கிறது. அவரது திரவ்ய சக்தியின் மூலம் ஜடம் பரிணமிக்கிறது. அவரது ஞான சக்தியின் மூலம் ஜடச் செயல்களை வழிநடத்தும் அறிவு பரிணமிக்கிறது.

தமோ குண பொய் அஹங்காரத்திலிருந்து ஆகாயமும் சப்தம் எனும் புலன் விஷயமும் உருவாகின்றன.

ஆகாயத்திலிருந்து வாயுவும் அதன் தன்மையான ஸ்பரிசமும் உருவாகின்றன. வாயுவிலிருந்து அக்னியும் உருவம் எனும் புலன் விஷயமும் உருவாகின்றன. அக்னியிலிருந்து நீரும் அதன் தன்மையான சுவையும் உருவெடுக்கின்றன. நீரிலிருந்து நிலமும் மணம் என்னும் புலன் விஷயமும் உருவாகின்றன. ஒவ்வொரு பூதத்திலும் அதற்கு முன்பு தோன்றிய அனைத்து புலன் விஷயங்களும் அடங்கியுள்ளன.

ஸத்வ குண பொய் அஹங்காரத்திலிருந்து மனமும் திசைகளைக் கட்டுப்படுத்தும் தேவர்களும் தோன்றுகின்றனர். ரஜோ குண பொய் அஹங்காரத்திலிருந்து புத்தி, உயிர் சக்தி, ஐந்து ஞான இந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்) மற்றும் ஐந்து கர்ம இந்திரியங்கள் (வாய், கால், கை, பிறப்புறுப்பு, ஆசனவாய்) ஆகியவை தோன்றுகின்றன.

பிரபஞ்ச படைப்புத் திட்டத்தின்படி, பரமாத்மாவின் சக்தியால் அவரது வழிகாட்டலின்கீழ் ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவின் தகுதிக்குப் பொருத்தமானவகையில், புதிதாகத் தோன்றிய இந்த பாகங்கள் எல்லாம் உடனடியாக உடல்களாக உருவாக்கப்படுகின்றன.”

 

இரண்டாம் புருஷ அவதாரமான கர்போதகஷாயி விஷ்ணு

பிரபஞ்சங்கள் அனைத்தும், ஆயிரக்கணக்கான யுகங்களாக காரணக் கடல் நீருக்குள் மூழ்கிக் கிடந்தன. அக்கடலில் பள்ளி கொண்டுள்ள காரணோதகஷாயி விஷ்ணு, ஹிரண்யகர்ப அல்லது கர்போதகஷாயி விஷ்ணுவாக விரிவடைந்து ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் புகுந்து, அவற்றை சுறுசுறுப்பாக இயங்கும்படி செய்தார். மேலும் ஆயிரக்கணக்கான கால்கள், கரங்கள், வாய்கள், தலைகள் முதலியவற்றைக் கொண்ட விராட ரூபத்தையும் அவர் மேற்கொண்டார்.

பிரபஞ்சத்திலுள்ள முழு கிரக அமைப்புகளும், பகவானுடைய பிரபஞ்ச உடலின் மேலும் கீழும் உள்ள வெவ்வேறு அங்கங்களின் தோற்றங்கள் என்று சிறந்த தத்துவவாதிகள் கற்பனை செய்து கொள்கின்றனர்.

பிராமணர்கள் பகவானின் வாயையும் சத்திரியர்கள் அவரது கரங்களையும் வைசியர்கள் அவரது இடையையும் சூத்திரர்கள் அவரது கால்களையும் பிரதிநிதிக்கின்றனர். பகவானின் விராட ரூபத்தில் மார்பின் முற்பகுதியிலிருந்து கழுத்துவரை ஜனலோகம் மற்றும் தபோ லோகம் என்ற பெயர்களில் உள்ள கிரக அமைப்புகள் அமைந்துள்ளன. மிகவுயர்ந்த கிரக அமைப்பான ஸத்ய லோகம், அவ்வுருவத்தின் தலைமீது அமைந்துள்ளது. ஆனால் ஆன்மீக கிரகங்கள் நித்யமானவையாகும்.

புவர்லோகத்திலிருந்து துவங்கும் மத்திய கிரகஅமைப்புகள் அவரது நாபியில் அமைந்துள்ளன. ஏழு கீழான கிரக அமைப்புகளில் அதளம் பகவானின் இடுப்பில் அமைந்துள்ளது, விதளம் தொடையில் அமைந்துள்ளது. சுதளம் முழங்கால்களின் மீதும், தலாதளம் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பாகத்திலும், மகாதளம் கணுக்காலின் மீதும் ரஸாதளம் பாதத்தின் மேற்பகுதியிலும், பாதாளம் உள்ளங்கால்களிலும் அமைந்திருக்கின்றன. இவ்வாறாக, பகவானின் விராட ரூபம் எல்லா கிரக அமைப்புகளாலும் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் விராட புருஷரைப் பற்றிய விளக்கம் அடுத்த இதழிலும் தொடரும்.

பல்வேறு கிரக அமைப்புகள் பரம புருஷரின் விராட ரூபத்தின் பகுதிகளாக அமைந்துள்ளன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives