வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள்

வாழ்வின் உயர்ந்த இலக்கான கிருஷ்ணரின் அன்புத் தொண்டைப் பெறுவதற்கு, வரையறுக்கப்பட்ட விதிகளை (நியமங்களை) பின்பற்றுவதும் பற்றுதலற்ற வழிபாடும் அவசியம். நியமங்களைப் புலனடக்கத்தால் தான் கடைப்பிடிக்க முடியும்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது பக்தர்களுக்கு வழங்கியுள்ள நியமங்களை எமது பிரபுபாதர் நூற்றந்தாதி என்னும் பாடல் தொகுப்பில் (பாடல் 100) பின்வருமாறு வழங்கினோம்:

சுட்டும் நியமங்கள் சூதுபுலால் வேளாமை

நட்டுப்பிறன் மனையை நாடாமை – சொட்டும்கள்

உண்ணாமை நான்கொடும் உச்சாடனம் செய்தல்

கண்ணான் பெயரைக் கனிந்து

ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டும் நியமங்கள்– சூதாடாமை, மாமிசம் உண்ணாமை, தகாத பாலுறவில் ஈடுபடாமை மற்றும் மது அருந்தாமை. அவர் கூறும் தவம் கண்ணனுடைய பெயரைக் கனிவுடன் திரும்பத் திரும்பச் சொல்லுதலே.”

இந்த நான்கு நியமங்களும் தர்மத்தின் நான்கு தூண்களைக் காக்க உதவுகின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தமது ஸ்ரீமத் பாகவத பொருளுரையில் தர்மத்தின் நான்கு தூண்கள் குறித்தும், கலி புருஷனின் ஆதிக்கத்தால் அவை இழிவடைந்தது பற்றியும் விளக்குகிறார்.

எருதின் வடிவில் இருந்த தர்மத்தின் ஸ்வரூபம், பசுவின் வடிவிலிருந்த பூமித்தாயிடம் உரையாடிக் கொண்டிருந்தது. வாய்மை, தூய்மை, தயை, தவம் என்னும் நான்கு கொள்கைகளால் தர்மம் நிலைநாட்டப்படுகிறது. இவை தர்மத்தின் நான்கு தூண்களாக அல்லது கால்களாக கருதப்படுகின்றன. ஆனால் அரசனைப் போன்ற மாறுவேடத்தில் இருந்தவனும், மிகத்தாழ்ந்தவனுமான கலி புருஷன் அந்த எருதின் கால்களை சிதைத்து காயப்படுத்துகிறான்; அதைப் பார்த்து மிகுந்த வருத்தத்துடன் பசு அழுது கொண்டிருந்தது. அச்சமயத்தில் அங்கே மாமன்னர் பரீக்ஷித் வந்து சேர்ந்தார். அநீதியைக் கண்ட மாத்திரத்தில் கலி புருஷனை தண்டிப்பதற்காக அவர் தமது வாளை உயர்த்தினார்.

அப்போது மாமன்னரிடம் சரணடைந்த கலி புருஷன் தனக்கு தஞ்சமளிக்க வேண்டும் என்று வேண்டினான். அதன் பெயரில், சூது, குடி, விபச்சாரம், மிருகவதை ஆகியவை நடைபெறும் இடங்களில் மட்டும் வாழ்வதற்கு மாமன்னர் பரீக்ஷித் கலிக்கு அனுமதி வழங்கினார். இந்த நான்கும் எங்கே உள்ளதோ அங்கே தர்மத்தின் தூண்கள் அழிக்கப்படுகின்றன. இதனை இன்றும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

(1) மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான்.

(2) சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான்.

(3) வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி மிருகங்களைக் கொன்று உண்பவன் தயை (கருணை) என்னும் நற்குணத்தை இழந்துவிடுகிறான்.

(4) சூதாட்டத்தில் ஈடுபடுபவன் உண்மை என்னும் உயர்ந்த குணத்தைக் கைவிடுகிறான்.

இதனால் இந்த நான்கு தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது. இந்த நியமங்கள் ஒவ்வொன்றிற்கும் திருவள்ளுவர் ஒவ்வோர் அதிகாரமே படைத்துள்ளார். அவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நான்கு குறள்களை மட்டும் இங்கு வைக்கிறோம்.

நான்கு மிகப்பெரிய பாவங்களைக் கைவிடுதல் என்னும் நியமம் வாழ்விற்கு அவசியமானதாகும்.

கலி புருஷன் மாமன்னர் பரீக்ஷித்திடம் சரணடைதல்

பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்களுக்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.” (திருக்குறள் 148)

புலால் மறுத்தல்

துறவறவியலில், அருளுடைமையின் பின் இந்த அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

தன் உடம்பைப் பெருக்குவதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் திண்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?” (திருக்குறள் 251)

சூது

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது

சூது, உள்ள பொருளை அழித்து பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.” (திருக்குறள் 938)

கள்ளுண்ணாமை

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்

கள் (மது) அருந்துதல் கூடாது, சான்றோரிடம் நற்பெயர் பெற விரும்பாதவர் வேண்டுமானால் கள்ளை அருந்தலாம்.”(திருக்குறள் 922)

சான்றோர் என்பவர் அன்பு, நாணம், கண்ணோட்டம் (அருள்), ஒப்புரவு (உலக ஒழுக்கம்), வாய்மை ஆகிய ஐந்தையும் தாங்கியவர் என்று சான்றாண்மை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்.

இவற்றை ஆழமாகச் சிந்தித்து, ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு வழங்கியுள்ள இந்த நியமங்கள் நமது நன்மைக்கும் உயர்விற்கும் உரித்தானவை என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுதல் நன்று.