தீதும் நன்றும் பிறர்தர வாரா

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்
களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.

ஈடுஇணையற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களான பகவத் கீதையும் ஸ்ரீமத் பாகவதமும் வாழ்வின் பிரச்சனைகளுக்கான காரணத்தையும் நிரந்தர தீர்வையும் வழங்குகின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

அநீதி சாத்தியமா?

உண்மையாகப் பார்த்தால், யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை; ஏனெனில், பகவானுடைய அனுமதியின்றி எதுவும் நிகழ முடியாது. பகவான் எல்லா இடத்திலும் இருக்கிறார், எல்லாரின் இதயத்திலும் இருக்கிறார், அவருக்குத் தெரியாமல் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

உயர்குல பிறப்பு, செல்வம், வசதி, இன்பம், துன்பம், ஆபத்து, அநியாயம் என நாம் சந்திக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் நமது முந்தைய கர்ம வினைகளுக்கேற்ப சரியான முறையில், முழுமுதற் கடவுளின் வழிகாட்டுதலின்கீழ் தேவர்களால் வழங்கப்படுகின்றன.

“ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு” என்னும் நியூட்டனின் மூன்றாவது விதி, நமது வாழ்விற்கும் பொருந்தக்கூடியதாகும். இதில் கடவுளையோ தேவர்களையோ இதர மனிதர்களையோ குற்றம் சொல்வது அறியாமை. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

உலகில் நிகழும் அனைத்திற்கும் நமது அற்பமான வாழ்நாளில் கிட்டும் அனுபவத்தைக் கொண்டு காரணத்தை அறிய இயலாது. ஏனெனில், ஒவ்வொரு ஜீவனும் எண்ணிலடங்காத பிறவிகளாக பல உயிரினங்களில் பயணித்துக் கொண்டுள்ளான். நாம் இந்தப் பிறவியை மட்டுமே அறிவோம். ஆனால் அகிலத்தின் ஆளுநர்களான தேவர்களிடம் நமது எல்லாப் பிறவிகளின் கணக்கும் உள்ளது. அவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் நன்மை தீமைகள் வழங்கப்படுகின்றன.

நல்லவர்கள் ஏன் துன்புற நேரிடுகிறது?

முந்தைய கர்மத்தின்படி இன்ப துன்பங்கள் வருகின்றன என்பதைக் கூறும்போது, பலரும் எழுப்பும் வினாக்கள்: “நல்லவர்களுக்கு ஏன் தீமை வருகிறது? எந்தவொரு தவறும் செய்யாதவன் பலரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது ஏன்? குற்றமற்ற மனிதன் விபத்தில் உயிரைப் பறிகொடுப்பதற்கான காரணம் என்ன? பிறரின் நன்மைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த நல்லவர்கள் வஞ்சகமாகக் கொல்லப்படுவது ஏன்?”

இந்த வினாக்கள் நாம் ஏற்கனவே வழங்கியுள்ள விடைகளில் அடங்குகின்றன. இந்தப் பிறவியில் ஒருவன் நன்மைகளைச் செய்தவனாக இருந்தாலும், முந்தைய பிறவியில் அவன் செய்த செயல்கள் அவனைத் தொடருவதால், அவன் அத்தகு துன்பங்களை அனுபவிக்கின்றான்.

அப்படியெனில், நல்லவனாக ஏன் வாழ வேண்டும்? நல்லவனாக வாழாவிடில், அடுத்தடுத்த பிறவிகளில் மேன்மேலும் துன்பப்பட வேண்டி வரும். இந்தப் பிறவியிலும்கூட பிற்காலத்தில் துன்பப்பட நேரிடலாம்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

என்னும் திருக்குறளுக்கு (319) ஏற்ப, முந்தைய பிறவிகளில் பிறருக்கு தீங்கிழைத்ததன் விளைவையே நாம் தற்போதைய பிறவியில் அனுபவிக்கின்றோம். தவறு செய்ய விரும்பும் ஜீவன்களைக் கொண்டு தவறு செய்த ஜீவன்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுகிறது. நமக்கு தீங்கிழைப்பவர்கள் வெறும் கருவிகளே, உண்மையான காரணம் நாமே.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதைக் கேள்விப்பட்டும், உணரவில்லையே!

முக்கியமான துன்பங்கள்

அறியாமையின் உச்சத்திலுள்ள சிலர் தங்களது வாழ்வில் எல்லாம் நன்றாகவே உள்ளது என்றும், துன்பங்கள் இல்லை என்றும் நினைக்கின்றனர். காலம் கழுத்தை வெட்டத் தயாராக இருப்பது அவர்களது கண்களுக்குத் தெரியவில்லை. பிறப்பு, இறப்பு, நோய், முதுமை ஆகிய நான்கு துயரங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.

ஒருவன் இன்பமாக இருப்பதாகத் தோன்றினாலும், அவ்வப்போது நோயினால் துன்பப்படுகிறான், அதன் பின்னர் முதுமையினால் துன்பப்படுகிறான், இறுதியில் மரணத்தின் மூலமாக எல்லாவற்றையும் இழந்து துன்பப்படுகிறான்; அதனுடன் முடிந்துவிடுவதில்லை, அவன் மீண்டும் பிறந்து எல்லா துன்பங்களையும் மீண்டும் அனுபவிக்கின்றான். எனவே, அன்றாட துன்பங்கள் இல்லாமல் வாழ்பவருக்கும், பிறப்பு, இறப்பு, நோய், முதுமை ஆகிய நான்கு துன்பங்கள் தவறாமல் வருகின்றன.

அநீதிகளை அனுமதித்து விடலாமா?

முற்பிறவிகளில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பதால், அநியாயங்கள் அப்படியே இருக்கட்டும் என்று அவற்றை அனுமதித்து விடலாமா? இல்லை, கூடாது. அவ்வாறு அனுமதித்தால், அது சமுதாயத்திற்கு பெரும் தீங்காக அமையும்.

ஒரு நாட்டை ஆள்பவர் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும், நாட்டை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதைப் போலவே தாய்தந்தையரும் ஆசிரியரும் தங்களது பாதுகாப்பில் இருப்பவர்களை தர்மத்தின் பாதையில் வழிநடத்த வேண்டும். தவறுகள் செய்பவருக்கு கூடிய விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும், கர்மத்தின்படி நிகழ்கிறது என்று தண்டிக்காமல் விடக் கூடாது. செய்த தவறுக்கு இந்தப் பிறவியிலேயே முறையாக தண்டிக்கப்படுபவன், மறுபிறவியில் தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை.

பற்பல பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்கு இப்பிறவியில் சில விளைவுகளை அனுபவிக்கின்றோம். நமது கர்மங்கள் எல்லாம் இப்பிறவியுடன் கழிந்து விடாது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் சில கர்மங்களைச் சேர்க்கிறோம், சில கர்மங்களைக் கழிக்கின்றோம்.

நீரில் வாழும் மீனை நிலத்தில் வைத்தால் அஃது இன்பம் காணாது; அதுபோல ஜீவனுக்கு இந்த உலகம் ஒருபோதும் மகிழ்ச்சி தராது.

கர்ம வினைகள் எங்கிருந்து வந்தன?

சரி, இந்த கர்மங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன?

இவை நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து நம்முடன் வந்து கொண்டுள்ளன. பகவான் கிருஷ்ணருக்கு சேவை புரிந்து ஆன்மீக உலகில் (வைகுண்டத்தில்) நித்தியமான ஆனந்தத்துடன் வாழ்வதே நமது (ஜீவன்களின்) இயல்பான நிலை. ஆனால் அவ்வாறு வாழ விரும்பாமல், தனியாக அனுபவிக்க வேண்டும் என்று ஜீவன் விரும்பும்போது, அப்போது அவனது கர்மங்கள் ஆரம்பமாகின்றன. அந்த ஆரம்பம் எப்போது நிகழ்ந்தது என்பதை யாராலும் துல்லியமாகக் கணக்கிட இயலாது.

ஆன்மீக உலகில் வாழ வேண்டிய ஜீவன் தன்னை ஜடத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டு மாயையில் வாழ்கிறான். “நான் இந்த உடல்,” “இஃது என் வீடு,” “இவள் என்னுடைய மனைவி,” “இவர்கள் எனது உறவினர்கள்,” என பல்வேறு அடையாளங்களுடன் “நான்,” “எனது” என்ற எண்ணங்களில் செயல்பட்டு மீண்டும்மீண்டும் இவ்வுலகிலேயே வாழ்கிறான். இது சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 20.117) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

க்ரிஷ்ண புலி’ ஸேஇ ஜீவ அநாதி-பஹிர்முக

அதஏவ மாயா தாரே தேய ஸம்ஸார-து:க

“கிருஷ்ணரை மறந்த ஜீவன் ஆதிகாலம் தொட்டு அவரிடமிருந்து விலகியுள்ளான். ஆகையினால், கிருஷ்ணரின் மாயா சக்தி அவனுக்கு உலக வாழ்வின் பல்வேறு துன்பங்களை வழங்குகிறது.”

எனவே, பகவானிடமிருந்து தனித்து வாழ விரும்பிய ஜீவன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறைச்சாலையே நாம் வாழும் இந்த பெளதிக உலகமாகும். இந்த உலகம் ஆசைகளை நாம் பூர்த்தி செய்துகொள்வதற்கும், அதே சமயத்தில் நம்மைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கும் ஏற்ற வகையில், பகவானால் கருணையுடன் தற்காலிகமாகவும் துன்பமயமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, “எந்தப் பிறவியில் என்ன பாவத்தைச் செய்தேனோ?” “இஃது ஏன் நடந்தது?” “அஃது ஏன் நடந்தது?” என்று ஆராய்வதைக் கைவிட்டு, துன்பத்திற்கு நிரந்தர தீர்வைக் காண முயல வேண்டும். அவ்வாறு நிரந்தர தீர்வைக் காண்பதே மனித வாழ்வின் குறிக்கோளாகும்.

கழிப்பறை என்பது கழிவுகளை நீக்கி விட்டு துரிதமாக வெளியேறுவதற்கான இடம். “கழிப்பறை நன்றாக இருக்கிறதே,” என்று யாரும் அங்கே வாழத் தொடங்குவதில்லை. அதுபோல, அறிவுள்ளவன் இந்த உலகத்தைப் பற்றிய வீண் ஆராய்ச்சிகளைக் கைவிட்டு, இதிலிருந்து வெளியேற முயல்வான்.

தீர்வு என்ன?

நீரில் வாழும் மீன்களை நிலத்தில் விட்டால் அவற்றால் இன்பமாக இருக்க முடியாது; அதுபோலவே, கிருஷ்ணருக்கு சேவை புரிய வேண்டிய ஜீவன்களுக்கு பௌதிக உலகம் ஒருபோதும் இன்பம் தராது. மீனை மீண்டும் நீரில் சேர்ப்பதைப் போல, கிருஷ்ணருக்கும் நமக்கும் இடையிலான நித்திய உறவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிப்பதற்கான வழியே பக்தித் தொண்டு.

நமது கர்ம வினைகளின் கணக்கை பகவான் நம்மிடம் காண்பிப்பதில்லை. அவற்றை நாம் அறிய நேரிட்டால் குழப்பத்திலும் குற்ற உணர்விலும் செயலிழந்து விடுவோம். எனவே, கர்மங்கள் என்னும் ஆழமான மரத்தின் வேர் எங்குள்ளது கிளை எங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், பக்தித் தொண்டின் அறிவைக் கொண்டு அந்த மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும். இதுவே கர்ம வினைகளைப் போக்குவதற்கான தலைசிறந்த வழி.

ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் மூலமாக பகவத் கீதை முதலிய சாஸ்திரங்களை நாம் அணுக வேண்டும்; நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்; பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல ஸ்ரீல பிரபுபாதர் காட்டியுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; இறுதியாக, மேன்மேலும் பாவங்கள் செய்வதைத் தவிர்த்து கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். அப்போது, கிருஷ்ணர் நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுவித்து, தமது தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் தருவார். அதன் பின்னர், நமக்கு எந்தக் கவலையும் கிடையாது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives