வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அத: பும்பிர் த்விஜஷ்ரேஷ்டா

வர்ணாஷ்ரமவிபாகஷ:

ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய

ஸம்ஸித்திர் ஹரிதோஷணம்

“இரு பிறப்பு எய்தியவர்களில் சிறந்தவரே, ஒருவன் வர்ணம் மற்றும் ஆஷ்ரமத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதால் அடையப்படும் மிகவுயர்ந்த பக்குவநிலை முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே ஆகும்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.13)

மனித சமுதாயத்திற்கு வர்ணாஷ்ரம தர்மம் மிகவும் முக்கியமானதாகும். மனித சமுதாயம் வர்ணம் மற்றும் ஆஷ்ரமங்களின் கோட்பாடுகளை ஏற்காவிடில், அது மிருக சமுதாயமே. பிராமணர் (அர்ச்சகர்கள், ஆசிரியர்கள்), சத்திரியர் (ஆட்சியாளர்கள், போர் வீரர்கள்), வைசியர் (விவசாயிகள், வணிகர்கள்), சூத்திரர் (உழைப்பாளிகள்) ஆகிய நான்கும் வர்ணங்கள் அல்லது தொழில் சார்ந்த பிரிவுகளாகும். பிரம்மச்சாரி (திருமணமாகாத மாணவர்), கிருஹஸ்தர் (குடும்ப வாழ்வில் உள்ளவர்), வானபிரஸ்தர் (ஓய்வு பெற்றவர்), சந்நியாசி (துறவி) ஆகிய நான்கும் ஆஷ்ரமங்கள் அல்லது ஆன்மீக நிலைகளாகும். இவ்வாறு வர்ணம் மற்றும் ஆஷ்ரமத்தின் அடிப்படையில் சமுதாயத்தை அமைப்பதே வேத கலாசாரம்.

வர்ணாஷ்ரமாசாரவதா

புருஷேண பர: புமான்

விஷ்ணுர் ஆராத்யதே பந்தா

நான்யத் தத்-தோஷ-காரணம்

“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணு, வர்ணம் மற்றும் ஆஷ்ரமத்தின்படி விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் வழிபடப்படுகிறார். பரம புருஷ பகவானை திருப்திப்படுத்துவதற்கு வேறு எந்த வழியுமில்லை,” என்று விஷ்ணு புராணத்தில் (3.8.9) கூறப்பட்டுள்ளது.

வாழ்வின் குறிக்கோள்

பகவான் விஷ்ணுவின் கருணையைப் பெறுவதே வாழ்வின் ஒரே குறிக்கோள். ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம், “பகவான் விஷ்ணுவின் வாசஸ்தலமே உன்னத இலக்கு,” என்று ரிக் வேதம் கூறுகின்றது. ஆனால் மக்களோ வாழ்வின் குறிக்கோள் என்னவென்பதை அறிவதில்லை.

வாழ்வின் நோக்கத்தை அறியாத சமுதாயம் அறியாமையில் உள்ளது. பெளதிகமான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ முயல்கின்றனர். சமூகம், அரசியல், பொருளாதாரம், அல்லது மத ரீதியிலான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மகிழ்விக்க தலைவர்கள் முயல்கின்றனர். ஆனால், துராஷயா யே பஹிர்-அர்த-மானின:, அவர்கள் முழுமுதற் கடவுளின் பௌதிக சக்தியிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முயல்வதால், அவர்களது நம்பிக்கை ஒருபோதும் நிறைவேறாது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

அனைவரையும் திருப்திப்படுத்துவதற்கான வழி

முழுமுதற் கடவுள் என்பவர் விஷ்ணு அல்லது கிருஷ்ணர். பிரம்மா படைப்பவர், விஷ்ணு பராமரிப்பவர், சிவபெருமான் அழிப்பவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் ஆதிமூலம் தாமே என்பதே, அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: என்று கிருஷ்ணர் கூறுவதின் பொருளாகும். எனவே, நாம் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை திருப்தி செய்தால், தேவர்களை தனியாக திருப்தி செய்ய வேண்டியதில்லை. கிருஷ்ணரில் அனைத்தும் அடக்கம்.

யதா தரோர் மூல நிஷேசனேன த்ருப்யந்தி தத்-ஸ்கந்த புஜோபஷாகா:, ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதன் மூலம் அதன் கிளைகள், உபகிளைகள், இலைகள், பூக்கள் என மரத்தின் அனைத்து பாகங்களுக்கும் தானாகவே நீரூற்றுகிறோம். ப்ராணோபஹாராச் யதேந்த்ரியாணாம், வயிற்றுக்கு உணவளிப்பதன் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கும் தானாகவே சக்தி விநியோகிக்கப்
படுகிறது. கண், காது, மூக்கு என உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் தனித்தனியே உணவளிக்க வேண்டியதில்லை. அதே போல, ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம், முழுமுதற் கடவுளான ஹரியை திருப்தி செய்து விட்டால், மற்ற அனைவரையும் நீங்கள் திருப்தி செய்தவராகிறீர்கள்.

பாத்திரத்தில் ஓட்டியிருந்த உணவினை கிருஷ்ணர் உட்கொண்டவுடன், நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவரும் அவரது சீடர்களும் தங்களது வயிறு நிரம்பியதை உணருதல்

பக்தர்களைக் காக்கும் பகவான்

இதற்கான ஓர் உதாரணத்தை நாம் மஹாபாரதத்தில் காண்கின்றோம். பாண்டவர்கள் தங்களது மனைவியான திரெளபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்து விட்டு வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர்.

பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் என சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்தி விட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்து விட்டதாகக் கூறினாள். [திரெளபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாத வரை அந்த பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.]

சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா என கிருஷ்ணர் வினவ, பாத்திரத்தின் ஓரத்தில் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்த உணவினை திரெளபதி கிருஷ்ணரிடம் கொடுத்தாள். கிருஷ்ணர் அதை உட்கொண்டவுடன், நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவரும் அவரது சீடர்களும் தங்களது வயிறு நிரம்பியதை உணர்ந்தனர். பாண்டவர்களுடைய உணவை ஏற்க இயலாதே என்ற தர்மசங்கடத்தில், அவர்கள் நதிக்கரையிலிருந்து அப்படியே சென்று விட்டனர்.

ஏதேனும் ஒரு வகையில் கிருஷ்ணரை திருப்திப்படுத்துங்கள். ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம். அப்போது எல்லா பக்குவத்தையும் பெறுவீர்கள். இது மிகவும் எளிய வழிமுறை. கிருஷ்ணர் கூறுகிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, “அன்புடனும் பக்தியுடனும் இலையோ பூவோ பழமோ நீரோ எனக்கு அர்ப்பணியுங்கள்.” சுவைமிக்க உணவை பெருமளவில் கொண்டு வருமாறு கிருஷ்ணர் கேட்கவில்லை. கிருஷ்ணர் யாசகர் அல்லர், உங்களது இடத்திற்கு வந்து ஏதேனும் உண்பதற்கான பசியும் அவருக்கு இல்லை. உங்களது அன்பை மட்டுமே அவர் விரும்புகிறார்.

குடும்பத்தைப் பராமரிப்பதற்காக இரவும் பகலும் கடுமையாக உழைக்கும் குடும்ப தலைவர், தமது மனைவி மக்களிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார். அதுவே அவர் பணம் சம்பாதிப்பதற்கு தூண்டுகோலாக உள்ளது. பணம் சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கும் அவர் தனக்கென்று சிறிதளவே விரும்புகிறார். அதுபோல, கிருஷ்ணரும் தமது குடும்பத்தை விருத்தி செய்வதற்காக எண்ணற்ற உயிர்வாழிகளாக தம்மை விரிவுபடுத்தியுள்ளார். அதற்கான காரணம் என்ன? ஆனந்தமயோ ’ப்யாஸாத். அவர் பூரண ஆனந்தத்துடன் இருப்பதால் தனக்கும் உயிர்வாழிகளுக்கும் இடையில் அன்புப் பரிமாற்றத்தை அனுபவிக்க விரும்புகிறார். இதுவே அவரது நோக்கம். அவர் அன்பை விரும்புகிறார். இல்லாவிட்டால் அவர் ஏன் நம்மைப் படைத்தார்? ஆனால், அயோக்கியர்கள் அதை மறந்து விட்டனர். “கடவுள் இல்லை. நானே கடவுள். நானே அனுபவிப்பாளர்,” என்றெல்லாம் அவர்கள் பிதற்றுகின்றனர். கடவுளை நேசிப்பதற்குப் பதிலாக அவர்களே ‘கடவுளாக’ மாறுகின்றனர். இஃது ஒட்டுமொத்த சூழ்நிலையையும் சீரழித்துவிட்டது.

கிருஷ்ணரை திருப்திப்படுத்துதல்

ஸ்வனுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம். நீங்கள் என்ன தொழில் செய்கிறீர் என்பது பொருட்டல்ல. மதத்தின் நோக்கம் பரம புருஷரை திருப்தி செய்வதே. பிராமணரால் தவம், சத்தியம், சாஸ்திர அறிவு ஆகியவற்றின் மூலமாக கிருஷ்ணரை திருப்தி செய்ய முடியும், சாஸ்திர ஞானத்தை உலகிற்கு பிரச்சாரம் செய்ய முடியும், பகவானின் சார்பாக உண்ண முடியும். எனவே, பிராமணராக இருப்பவர் பிராமணராகவே வாழ்ந்து தமது செயல்களின் மூலம் பகவானை திருப்தியடையச் செய்யலாம். இது மற்ற வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.

அர்ஜுனன் ஒரு பிராமணனோ சந்நியாசியோ அல்லன்; அவன் ஒரு சத்திரியனாகவும் கிருஹஸ்தனுமாகவும் இருந்தான். அர்ஜுனன் முதலில் தனது சுய புலன்திருப்திக்காக போரிட மறுத்தான். ஆயினும், பின்னர் கிருஷ்ணருக்காக ஒப்புக் கொண்டான். கிருஷ்ணரும் திருப்தியுற்றார், அர்ஜுனனும் பக்குவமடைந்தான்.

பாத்திரத்தில் ஓட்டியிருந்த உணவினை கிருஷ்ணர் உட்கொண்டவுடன், நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவரும் அவரது சீடர்களும் தங்களது வயிறு நிரம்பியதை உணருதல்

தர்மத்தின் பொருள்

தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கிருஷ்ணர் அவதரிக்கிறார். பகவானால் வழங்கப்படும் கட்டளை
களே தர்மம், தர்மத்தை யாராலும் உருவாக்க இயலாது. பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு, “எப்போதும் என்னைப் பற்றியே சிந்திப்பாயாக (மன்-மனா), எப்போதும் எனது பக்தனாகவே இருப்பாயாக (மத்-பக்த), எப்போதும் என்னையே வழிபடுவாயாக (மத்-யாஜீ), எப்போதும் எனக்கு வந்தனை செய்வாயாக (மாம் நமஸ்குரு).”

“எனக்கு வேறொரு மதம் உள்ளது, நான் ஏன் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்? நான் காளிதேவியைப் பற்றி சிந்திக்க வேண்டும், இல்லாவிடில் மாமிசம் உண்ண முடியாது,” என்று சிலர் நினைக்கலாம். எனவே, பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “இவை அனைத்தும் அறிவீனம். இவற்றை விட்டொழித்து, என்னிடம் சரணடையுங்கள். தேவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.”

எனவே, இதுதான் உண்மையான தர்மம். ஏதேனும் ஒரு வழியில் கிருஷ்ணரை திருப்தி செய்ய வேண்டும். கிருஷ்ணர் அல்லது அவரது பிரதிநிதியால் அனுமதிக்கப்பட்ட செயலைச் செய்தால், அதுவே உண்மையான தர்மம்.

அர்ஜுனன் தனது சுய புலன்திருப்திக்காக போரிடாமல் கிருஷ்ணருக்காகப் போரிட்டான்.