வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 5

சென்ற இதழில் ரிஷபதேவரின் உன்னத குணங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்த இதழில் அவர் தமது மகன்களுக்கு வழங்கிய உபதேசங்களைப் பற்றி பார்ப்போம்.

மஹாத்மாக்களுக்கு சேவை

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும்.  மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

“மஹாத்மாக்களுக்குத் தொண்டு செய்வதால் பௌதிக துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும். மஹாத்மாக்கள் சமநிலை உடையவர்கள், பக்தித் தொண்டில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளவர்கள், கோபத்தைத் தவிர்த்து பிறரின் நலனுக்காக உழைப்பவர்கள், பிறர் வெறுக்கும் வகையில் நடக்காதவர்கள். பெண்களிடம் சகவாசம் கொள்ளும் சிற்றின்பவாதிகளுடனும் அபக்தர்களுடனும் ஒருவன் தொடர்புகொள்ளும்போது, அந்தத் தொடர்பானது அவன் நரகம் செல்வதற்கான பாதையை அகலத் திறந்து வைக்கிறது. கிருஷ்ண பக்தியில் ஆர்வமுள்ளவர்கள், கிருஷ்ணருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் ஈடுபடுவதோ அத்தகைய விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதோ இல்லை. அவர்கள் இல்லற வாழ்வில் இருந்தாலும் மனைவி, மக்களின் மீது பெளதிகப் பற்றுகொள்வதும் இல்லை, அதே சமயம் தம் கடமைகளைச் செய்யாமல் விடுவதும் இல்லை.

“புலனுகர்ச்சியே வாழ்வின் இலட்சியம் என்று கருதுபவர்கள் பாவச் செயல்களில் வெறியுடன் ஈடுபடுகின்றனர். முன்வினைப் பயனில் கிடைத்த இந்த உடல் அழியக்கூடியதும் துன்பத்திற்கு காரணமானதுமாகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. புத்திசாலியானவன் பிறப்பின் சுழற்சிக்கு ஆதாரமான புலனின்பச் செயல்களில் ஈடுபட மாட்டான் என்பதே எனது கருத்தாகும். பாவமோ புண்ணியமோ அறியாமையால் செய்யப்படும் செயல்கள் துன்பத்திற்கு காரணமாகின்றன. மனதில் களங்கங்கள் இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது.

“பகவான் வாஸுதேவரிடம் அன்புகொள்ளாத வரை மீண்டும்மீண்டும் உடலை ஏற்க வேண்டியுள்ளது. ஜடக் கல்வியில் தேர்ச்சி
உடையவனாக இருப்பினும், புலனுகர்ச்சி பயனற்றது என்பதை அறியாத வரை அவன் புத்தியற்றவனே. அப்படிப்பட்டவன், பாலுறவில் பற்றுதல் கொண்டு அதன் மூலமாக மகிழ்ச்சியைப் பெற முயல்கிறான். அந்நிலையில் அவன் மூட விலங்கினைக் காட்டிலும் கீழானவனே. ஆண், பெண் கவர்ச்சியே உலக வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக உள்ளது. இதன் மூலம் அவர்களின் இதயம் பின்னி பிணைந்து மேன்மேலும் உடல், குடும்பம், ஆஸ்தி, குழந்தை, சுற்றம், செல்வம் என எல்லாவற்றின் மீதான கவர்ச்சியும் அதிகரிக்கிறது. மேலும், இது “நான்,” “எனது” எனும் மயக்க சிந்தனையை அதிகரிக்கிறது. மஹாத்மாக்களுடன் ஏற்படும் தொடர்பினால் பக்தித் தொண்டில் ஈடுபடும்பொழுது, இதயத்திலுள்ள பற்றின் முடிச்சானது தளர்ச்சி அடைந்து, “நான்,” “எனது” முதலிய மயக்கங்களிலிருந்து ஒருவன் விடுதலை அடைகிறான்.

பக்தி யோகம்

பகவான் ரிஷபதேவர் தொடர்ந்து கூறினார்: “எனதருமை புதல்வர்களே! அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகி அவரது வழிகாட்டுதலின்கீழ், ஸ்ரவணம், கீர்த்தனம் முதலிய பக்தி யோகத்தில் நீங்கள் ஈடுபட வேண்டும். உடலுடனும் குடும்பத்துடனும் உங்களை அடையாளப்
படுத்துவதைத் தவிர்த்து, சாஸ்திரங்களைப் பயின்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, பிரம்மசரியத்தை மேற்கொண்டு உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள். வீண் பேச்சுகளைத் தவிர்த்திடுங்கள், புலனின்பமே துன்பத்திற்கு காரணம், தேவலோகத்தில்கூட துன்பம் உண்டு என்பதை உணர்ந்து அந்த துன்பத்திற்கான புலனின்பத்தைக் கைவிட்டு, முழுமுதற் கடவுளை எப்போதும் சிந்திப்பீர்களாக.

“பக்தி யோகத்தை இவ்வாறு அமைதியுடனும் பொறுமையுடனும் பயிற்சி செய்வதால் ஞானத்தை அடைவதோடு அஹங்காரத்தைக் கைவிடும் திறனையும் நீங்கள் பெறுவீர்கள். பலன்தரும் செயல்கள் மற்றும் முக்திக்கான வழிமுறைகள் போன்றவற்றின்மீது பற்றுதல் வைக்காமல் எச்சரிக்கையுடன் முழுமுதற் கடவுளின் மீது மட்டுமே பற்றுதல் கொள்வீர்களாக!”

பகவான் ரிஷபதேவர் தம் மகன்களுக்கு ஆன்மீக அறிவுரை கூறுதல்

குருவின் கடமைகள்

“தன்னைச் சார்ந்திருப்போரை பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும்மீண்டும் சிக்க வைக்கும் பாதையிலிருந்து மீட்க முடியாதவன் ஓர் ஆன்மீக குருவாகவோ தந்தையாகவோ கணவனாகவோ தாயாகவோ வணங்கத்தக்க தேவனாகவோ ஆகுதல் கூடாது. ஆன்மீக குரு சீடனுக்கும், தந்தை மகனுக்கும், அரசன் தனது குடிமக்களுக்கும் உபதேசம் செய்யும்பொழுது அவர்கள் அக்கட்டளைகளை சில சமயங்களில் கடைபிடிக்க இயலாமல் போனாலும் அவர்களின் மீது சினம்கொள்ளாது தொடர்ந்து உபதேசிக்க வேண்டும். பகவானின் போதனைகளை மாற்றாமல் உள்ளது உள்ளவாறு உபதேசிக்க வேண்டும். அறியாமைமிக்க அவர்கள் பாவ, புண்ணியச் செயல்களில் ஈடுபட்டிருப்பினும் அன்புகூர்ந்து அவர்களை பகவானின் பக்தித் தொண்டில் எவ்வாறேனும் ஈடுபடுத்த வேண்டும்.”

பக்தித் தொண்டு திருப்திப்படுத்தும்

பகவானின் அவதாரமான ரிஷபதேவர் தொடர்ந்தார்: “நான் மானுட வடிவில் தோன்றினாலும், எனது உடல் பெளதிகமானதல்ல, எனது உன்னத உடல் ஸச்சிதானந்தமானது.” (ஸத் என்றால் நித்தியமானது; சித் என்றால் அறிவு நிறைந்தது; ஆனந்த என்றால் ஆனந்தமயமானது) கர்ம பந்தத்தினாலோ, ஜட இயற்கையின் தூண்டுதலினாலோ நான் இந்த உடலைப் பெறவில்லை. எனது சுய விருப்பத்தின் பேரில் எனது ஆன்மீக உடலுடன் நான் இவ்வுலகிற்கு இறங்கி வருகிறேன். நான் எப்போதும் எனது பக்தர்களின் நலனைப் பற்றியே சிந்திக்கின்றேன். எனது இதயத்தில், பக்தர்களுக்கான பக்தித் தொண்டு முறைகள் நிறைந்துள்ளன. பக்தித் தொண்டில் சிறந்த உங்கள் மூத்த சகோதரன் பரதன் எனது பிரதிநிதி என்பதால், அவனது வழிகாட்டுதலின்கீழ் செய்யப்படும் பக்தித் தொண்டு என்னை முழுமையாக திருப்திப்படுத்தும்.”

(குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்கீழ் பக்தித் தொண்டு செய்வதால், பகவானை திருப்திப்படுத்தலாம்.)

உயிர்வாழிகளின் நிலை

பல்வேறு உயிர்வாழிகளின் உயர்தரங்கள் குறித்து ரிஷபதேவர் பின்வருமாறு விளக்கினார்: உயிருள்ளவை, உயிரற்றவை என்னும் இரண்டு சக்திகளில், உயிரற்ற கல், மண் ஆகியவற்றைக் காட்டிலும் உயிர் இருந்தும் அசையாதவையான மரம், செடி, கொடிகள் உயர்ந்தவை. அசையாத மரம், செடி கொடிகளைக் காட்டிலும் அசையும் உயிர்களான பூச்சிகள், புழுக்கள், பாம்புகள் முதலிய ஊர்வன மேலானவை, அவற்றைக் காட்டிலும் அறிவைக் கொண்ட விலங்குகள் உயர்ந்தவை, விலங்குகளைக் காட்டிலும் மனிதர்கள் மேலானவர்கள்.

பேய், பிசாசுகளுக்கு ஸ்தூல உடல் கிடையாது என்பதால், அவை மனிதர்களைக் காட்டிலும் மேலானவை. அவற்றைக் காட்டிலும் கந்தர்வர்களும், கந்தர்வர்களைக் காட்டிலும் சித்தர்களும், சித்தர்களைவிட கின்னரர்களும், கின்னரர்களைவிட அசுரர்களும், அசுரர்களைவிட தேவர்களும், தேவர்களைவிட இந்திரனும், இந்திரனைவிட தக்ஷன் முதலிய பிரஜாபதிகளும், பிரஜாபதிகளைவிட சிவபெருமானும், சிவபெருமானைவிட அவரது தந்தை என்பதால் பிரம்மதேவரும் உயர்ந்தவராவார்.

பக்தித் தொண்டின் உயர்நிலை

ரிஷபர் தொடர்ந்தார்: “அந்த பிரம்மதேவரும் பரம புருஷ பகவானாகிய எனக்குக் கீழப்படிந்தவரே. பிராமணர்களின் மீது நான் பெரிதும் நாட்டம் கொண்டவன் என்பதால், பிராமணர்களே அனைவரிலும் சிறந்தவர்களாவர். அத்தகைய பிராமணர்களுக்கு பக்தியுடன் உணவளிக்கப்படும் போது, அந்த நிவேதனத்தை நான் முழு திருப்தியுடன் ஏற்கிறேன்.

“ஸத்வ குணத்தில் நிலைபெற்று இருத்தல், தூய்மை, மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், வாய்மை, கருணை, தவம், பொறுமை ஆகிய எட்டு நற்குணங்கள் நிரம்பியவர்களே பிராமணர்கள் என அறியப்படு கின்றனர். பிறப்பின் அடிப்படையில் அல்ல. உண்மையான பிராமணர்கள் பகவானிடம் பெளதிக இன்பங்களை வேண்டுவதில்லை. அவர்கள் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டு திருப்தியடைகின்றனர்.

“மைந்தர்களே! எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருப்பதை அறிந்து, தக்கபடி மரியாதை செலுத்த வேண்டும். மனம், வாக்கு, புலன்களை பக்தித் தொண்டில் ஈடுபடுத்தாவிடில் உலக வாழ்வின் சிக்கல்களிலிருந்து எந்த உயிர்வாழியும் விடுதலை பெற இயலாது.”

பகவான் ரிஷபதேவர் சமுதாயத்தில் ஒரு பைத்தியக்காரனாகக் காட்சியளித்தல்

அவதூதர்

இவ்வாறு தம் மைந்தர்களுக்கு உபதேசித்த பகவான் ரிஷபதேவர் தமது மூத்த மகனான பரதனை அரியணையில் அமர்த்தினார். பின் சிறிது காலம் தன் இல்லத்திலேயே துறவியைப் போல் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர், வீட்டை விட்டுப் புறப்பட்டு தர்மத்தைப் பற்றி கவலைப்படாத ‘அவதூதர்’ நிலையில் உலகம் முழுவதும் சுற்றி வந்தார்.

பகவான் ரிஷபதேவரின் மார்பு மிக விரிந்தும் கரங்களும் கால்களும் நீண்டு உயரமாகவும் இருந்தன. அவரது தோள்கள், முகம், அவயங்கள் எல்லாம் மிக்க எழிலுடனும் அளவாகச் செதுக்கி வைத்தாற்போலவும் இருந்தன. இயற்கையான புன்னகை திருமுகத்தை அழகு செய்ய, பனித்துளி படர்ந்த செந்தாமரை மலரின் இதழ்போல் சிவந்த அழகிய விழிகள் இனிமையாகவும் காண்போரின் துன்பங்களைப் போக்குபவையாகவும் இருந்தன. அவரது நெற்றி, செவி, நாசி, கழுத்து, அடர்ந்த தலைமுடி என அனைத்துமே தெய்வீகமாகவும் கவர்ச்சிகரமாகவும் விளங்கின.

ஆயினும், அவர் தம் உடலைப் பேணாததால், பித்துபிடித்த அழுக்கு மனிதராகக் காட்சியளித்தார். இதனால் அவரை அறியாத பொதுமக்கள் பலவகையில் அவருக்கு தொந்தரவு செய்தபோதிலும், அவரோ சற்றும் பாதிக்கப்படாமல் திவ்ய ஆனந்தத்தில் திளைத்திருந்தார். மலைப்பாம்பின் மனோபாவத்தை ஏற்று ஒரே இடத்தில் இருந்தபடி, தானாகக் கிடைப்பதை மட்டும் உண்டு வாழ்ந்தார்.

யோக சித்திகளின் தலைவரான பகவான் ரிஷபதேவர் அனைத்து அதிசயங்களையும் நிகழ்த்த வல்லவராயினும் அச்சக்திகளைப் பயன்படுத்தவே இல்லை. இவ்வாறு அவர் எல்லாத் துறவிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.