வழங்கியவர்: தயாள் கோவிந்த தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.

வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

தவம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஒருவனால் விரும்பி ஏற்கப்படும் சில அசௌகரியங்களைக் குறிக்கும். பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில், பேச்சின் தவங்கள், மனதின் தவங்கள், உடலின் தவங்கள் என்று மூன்று விதமான தவங்கள் கூறப்பட்டுள்ளன.

பேச்சின் தவங்கள்

அனுத்வேக-கரம் வாக்யம்ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத்

ஸ்வாத்யாயாப்யஸனம் சைவவாங்-மயம் தப உச்யதே

உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மையளிக்கும் பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை பேச்சின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.15)

ஸ்ரீல பிரபுபாதர் இதனை மேலும் தமது உரையில் விளக்குகிறார்: மற்றவர்களது மனம் கிளர்ச்சியடையும்படி ஒருவன் பேசக் கூடாது. ஓர் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும்போது உண்மையைப் பேசலாம் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் அத்தகு ஆசிரியர் தனது மாணவர்கள் அல்லாத பிறரிடம் பேசும்போது அவர்களது மனதைத் துன்புறுத்தும்படி பேசக் கூடாது. இதுவே பேசுவதைப் பொருத்த தவமாகும். இது மட்டுமின்றி அபத்தமாகவும் பேசக் கூடாது. ஆன்மீக வட்டாரத்தில் பேசும்போது, அவனது உரைகள் சாஸ்திரங்களால் ஆதரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்… அத்தகு உரை கேட்பதற்கு இனிமையாகவும் இருக்க வேண்டும். அத்தகு உரையாடல்களால் ஒருவன் மிகச்சிறந்த நன்மையைப் பெற்று மனித சமுதாயத்தை உயர்த்த முடியும்.”

இதே போன்ற கருத்தினை வள்ளுவர் தமது குறளில் பின்வருமாறு விளக்குகிறார்:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.” (திருக்குறள் 97)

மனதின் தவங்கள்

மனதிற்குத் தேவையான தவங்களை கிருஷ்ணர் கீதையில் பின்வருமாறு கூறுகிறார்: திருப்தி, எளிமை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.16)

மனம் பொறிவழி போகாது தடுத்து நிறுத்தி, உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்வது தவம். உயர்ந்த இலக்கு என்பது கிருஷ்ணரை அடைவதைத் தவிர வேறு ஏதும் கிடையாது. மனம், புலன்கள், செயல்களின் பலன்கள் முதலியவை தங்களை மகிழ்விக்கும் என்று கருதி சிற்றறிவுடையோர் பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரிசெய்ய முயல்கின்றனர். ஸ்வர்க லோகம் உட்பட பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும், அங்கே பெறப்படும் உடல்கள் துயரில்லா வாழ்வைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஆயினும், தனது நிலை இறைவனுக்குத் தொண்டு புரிவது என்பதை உணர்பவன் வைகுண்ட லோகத்திற்குச் செல்லத் தகுதி பெறுகிறான். அவ்வாறு தொண்டாற்றுவதே புத்தியோகம் அல்லது எளிமையாகச் சொன்னால் பக்தித் தொண்டு எனப்படுகிறது.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனதின் பங்கு முக்கியமானது என்பதை வள்ளுவர், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தி னேமாப் புடைத்து

மனதின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.” (திருக்குறள் 459)

ஒருவரின் பேச்சு நன்மையளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

உடலின் தவங்கள்

உடலின் தவங்களைப் பற்றி பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்: முழுமுதற் கடவுள், பிராமணர்கள், ஆன்மீக குரு, பெரியோர்களான தாய்தந்தையர் ஆகியோரை வழிபடுதல், தூய்மை, எளிமை, பிரம்மச்சரியம், அகிம்சை ஆகியவை உடலின் தவங்களாகக் கூறப்படுகின்றன.” (பகவத் கீதை 17.14)

முழுமுதற் கடவுளை வழிபடுவதே தவம் என்றும் அவருடைய நாமத்தைச் சொல்வதே தவம் என்றும் இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் கூறுகின்றார்:

உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால் – உறுங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவன் பேர்ஈரரைஞ்ஞா றெப்பொழுதும்

சாற்றி யுரைத்தல் தவம்

நல்ல மனமே! உனக்கு இதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய். எல்லாரையும் வசீகரிக்கும் சிறந்த குணம் வாய்ந்த புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு பிராப்தம் என்று எடுத்துக்கொள், அவரது அத்திருவடிகளைத் தாமரை மலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பதே ஸ்வரூப பிராப்தம் என்று கொள், அவனை வாயாரத் துதித்துத் தலையார வணங்கி அவனது திருப்பெயர்கள் ஆயிரத்தையும் எப்போதும் உரைப்பதே நமக்குத் தவம் என்று கொள்.” (நாலாயிர திவ்ய பிரபந்தம் 2258)

மேலும், கிருஷ்ணரின் நாமம் சொல்வதை மேற்கொண்டால் தன்னுணர்வு பெறுவது எளிது என்று ஸ்ரீல பிரபுபாதர் காட்டியுள்ளார். தன்னுணர்வென்பது தான் இந்த உடலல்ல, உணர்வுள்ள ஆத்மா என்பதை உணர்வதாகும். வள்ளுவர் இதனை அழகாக,

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் (உடல்) என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவருடைய பெருமையை உணர்ந்து தொழும்.” (திருக்குறள் 268)

தவத்தின் முக்கியத்துவம்

தவத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதை (2.58) கூறுகிறது, ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதைப் போல, புலன்களை அவற்றின் நோக்கப் பொருட்களிலிருந்து விலக்கிக்கொள்பவனே உண்மையான அறிவில் நிலைபெற்றவன்.”

இதனை வள்ளுவரும் உணர்த்துகிறார்:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில் ஆமையைப் போல ஐந்து பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால், அஃது அவனுக்கு ஏழு பிறவிக்கும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.” (திருக்குறள் 126)

இத்தகைய தவங்களின் மகிமைகளை வள்ளுவர் மேலும் உணர்த்துகிறார்:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் பொருள் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.” (திருக்குறள் 266)

ஸ்ரீல பிரபுபாதர் அமைத்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், நிலையான மறுவாழ்வின் பொருட்டு மனதைப் பக்குவப்படுத்துவதற்காகவே உள்ளது. தாமாக முயல்வதைவிட ஒத்த மனமுடைய சமுதாயத்தின் துணையுடன் முயல்வது சிறப்பான பலனை நல்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, உலகத்தார் இதனை உணர்ந்து இஸ்கான் இயக்கத்தில் ஈடுபட்டுப் பயன் பெற வேண்டும்.

கிருஷ்ணரை வழிபடுவதே உடலால் நாம் செய்ய வேண்டிய தவமாகும்.