தூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்

Must read

வழங்கியவர்: திருமதி பிரபாவதி நாராயணன்

உண்ணுதல், உறங்குதல், பாதுகாத்தல், இனப்பெருக்கம் செய்தல் ஆகிய நான்கு செயல்களும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவானவை. மனிதன் இந்நான்கு விஷயங்களில் மட்டுமே முழு மூச்சாக ஈடுபட்டுள்ளான். யாரேனும் இதனை சற்று சிந்தித்தது உண்டா?

நாம் யார்? எதனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? நம் வாழ்க்கையில் அடைய வேண்டுவது என்ன? இவற்றை சிந்தித்துப் பார்க்கக்கூட நேரமின்றி எங்கேயோ, எதனையோ தேடி ஓடி களைத்து இளைத்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்.

என்ன செய்யலாம்?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.

முழுமுதற் கடவுளை ஏற்றல்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

“விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடியை மனதில் நிலைநிறுத்துவோருக்கு ஒருபோதும் துன்பமில்லை.” (திருக்குறள் 4)

கிருஷ்ணரை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்பதற்கு இப்பிறவியிலோ முற்பிறவியிலோ பெரும் தியாகங்களும் தவங்களும் புரிந்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு தூய பக்தரின் காரணமற்ற கருணையினால் கிருஷ்ணரை உள்ளவாறு புரிந்துகொள்ள முடியும். வேறு எவ்வழியிலும் அது சாத்தியமல்ல. பகவத் கீதையில் (7.7) பகவான் கிருஷ்ணர் தாமே பரம சத்தியம் (முழுமுதற் கடவுள்) என்பதை அறிவிக்கிறார்.

மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய

மயி ஸர்வம் இதம் ப்ரோதம்ஸுத்ரே மணிகணா இவ

“செல்வத்தை வெல்வோனே [அர்ஜுனா], என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.”

எனவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து அவருடைய பக்தராவதே மிகவும் இரகசியமான அறிவாகும். அவரது பக்தராவதன் மூலமாக அவரது இருப்பிடமான வைகுண்ட லோகத்தை அடையலாம்.

பகவானின் இருப்பிடத்தை அடைதல்

பரம புருஷரின் அந்த வாசஸ்தலத்தை அடையும் வழி என்ன என்ற வினா எழலாம். இதுபற்றிய விவரம் பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த காலே ச மாம் ஏவஸ்மரன் முக்த்வா கலேவரம்

: ப்ரயாதி ஸ மத் பாவம்யாதி நாஸ்த்-யத்ர-ஸம்ஷய

“வாழ்வின் முடிவில் எவனொருவன் என்னை நினைத்தவாறே உடலை நீக்குகின்றானோ அவன் உடனே என்னை அடைகின்றான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” (பகவத் கீதை 8.5)

எனவே, மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்தபடி உடலைக் கைவிட்டால், அப்போது நாம் கிருஷ்ணரின் உலகை அடைய முடியும்.

முத்துக்கள் எவ்வாறு நூலைச் சார்ந்து இருக்கின்றனவோ, அவ்வாறே ஜீவன்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே சார்ந்துள்ளனர்.

பக்தித் தொண்டைக் கடைபிடித்தல்

மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்தல் என்பது வாழ்நாள் முழுவதும் அவருக்கு பக்தி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். மனம் போனபடி வாழ்பவர்களால் அந்நிலையை அடைய முடியாது. கிருஷ்ணருடைய உன்னத இருப்பிடத்தை அடைவதென்பது முறையான பக்தித் தொண்டினால் மட்டுமே சாத்தியம். கிருஷ்ண உணர்வின் தத்துவமும் பயிற்சிகளும் குரு, சாது மற்றும் சாஸ்திரத்தினால் கொடுக்கப்பட்டவை.

பக்தித் தொண்டு ஒவ்வொரு நிலையிலும் இன்பமயமானது. மிகவும் வறுமையான நிலையிலும் பக்தித் தொண்டினை செயலாற்ற முடியும். பக்தித் தொண்டு மகிழ்ச்சியானது என்பதை நாம் எல்லா சாஸ்திரங்களிலும் காண்கிறோம், நேரடியாக நம்மால் எளிதில் உணரவும் முடிகிறது.

கிருஷ்ண உணர்வானது ஆர்வமற்ற, வறண்ட சடங்குகளைக் கொண்ட மதமன்று. திருநாமத்தைப் பாடுதல், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடுதல், கிருஷ்ண பிரசாதம் ஏற்றல், உயர்ந்த பக்தர்களுடன் பழகுதல், முழுமுதற் கடவுளின்  விக்ரஹத்திற்கு சேவை புரிதல், விக்ரஹத்தின் கண்கொள்ளா அழகினைப் பார்த்து மகிழ்தல், கிருஷ்ணருடைய திறன்களையும் லீலைகளையும் கேட்டல், அவரது புகழை பிரச்சாரம் செய்தல் என்று பல தரப்பட்ட செயல்களைக் கொண்டதே கிருஷ்ண உணர்வு.

ஆகவே, ஆன்மீக உணர்வில் முன்னேற்றம் காண விழைபவர் கிருஷ்ண உணர்வு என்னும் படித்தளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

செப்புவோம் அவன் நாமம்

கலி யுகத்திலுள்ள மக்கள் மந்த புத்தியுடனும் அற்ப ஆயுளுடனும் துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கின்றனர். எவ்வளவுதான் மெத்த படித்த மேதாவிகளாக இருந்தாலும், கிருஷ்ணரைப் பற்றிய ஆன்மீக அறிவு இல்லையென்றால், அவர்கள் மந்த புத்தி படைத்தவர்களே.

கலி யுக மக்கள் பகவானை உணர்வதற்கு அவரது திருநாமத்தை உச்சரிப்பதே வழி என்று கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மனம், மொழி, மற்றும் மெய்யால் சேவை செய்ய வேண்டும். பகவான் கிருஷ்ணரை மனதால் நினைத்து அவரது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிப்பதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. எனவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினமும் காதுகளுக்குக் கேட்கும்படி உச்சரியுங்கள். ஆன்மீக ஆனந்தத்தை நிச்சயம் அடைவீர்.

பெரியாழ்வாரின் பெரிய திருமொழியில், “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே” (நான்காம் பத்து, பத்தாம் திருமொழி 423) என்று அரங்கநாதரைப் பாடுகின்றார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது, நமது புலன்கள் செயலற்று, உணர்வற்று இருக்கும் வேளையில், நம்மை நினைப்பதற்கே சுய உணர்வு இருக்காது. அப்பொழுது இறைவனைப் பற்றிய நினைவு எப்படி வரும்?

ஆகையால்தான், இப்பொழுதே நாம் பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த திருநாம ஸங்கீர்த்தனம் மிகவும் ஆனந்தமான வழிமுறையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிப் பாடி ஆடுதல், அவரைப் பற்றிக் கேட்டல், அவரை தரிசித்தல், அவரது பிரசாதத்தை ஏற்றல், அவர் லீலை புரிந்த இடங்களுக்குச் செல்லுதல் முதலியவை கிருஷ்ண உணர்வின் செயல்களாகும்..

சரணாகதி அடைவோம்

நாம ஸங்கீர்த்தனத்தை கிருஷ்ணரிடம் சரணடைந்த நிலையில் செயல்படுத்த வேண்டும். அந்த சரணாகதியின் முறை ஹரி பக்தி விலாஸத்தில் (11.676) விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்

ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோகோப்த்ருத்வே வரணம் ததா

ஆத்மநிக்ஷேபகார்பண்யேஷட்விதா ஷரணாகதி:

சரணாகதி என்றால் பகவானுடைய பக்தித் தொண்டிற்கு வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஏற்று, பக்திக்கு விரோதமான கொள்கைகளைக் கைவிட வேண்டும். கிருஷ்ணர் எப்போதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரே நம்மைப் பரிபாலிப்பவர் என்று ஏற்க வேண்டும். மேலும், தன்னிடம் உள்ள அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்து பணிவுடன் இருக்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணரிடம் சரணடைபவன் இதர வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணரிடம் சரணடைதல் ஒருவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காப்பாற்றும்.

பூரண கிருஷ்ண உணர்வுடன் கிருஷ்ணரிடம் சரணடைவதே மிகமிக இரகசியமான உபதேசமாகும். இதுவே பகவத் கீதையின் சாரம்.

குலசேகர ஆழ்வார் தம்முடைய பெருமாள் திருமொழியில் (நாலாயிர திவ்ய பிரபந்தம் 685) பாடுகிறார்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

இதுவல்லவோ சரணாகதி.

தூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்

ஜடவுலகில் நாம் அழிந்து போவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. அவருடன் ஆன்மீக உலகத்தில் நித்தியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திடுமாறு அவர் நம்மை அழைக்கிறார். இந்த யுகத்தில் கலியின் களங்கத்தினால் அனைத்தும் தூய்மைக்கேடு அடைந்துள்ளன. எனவே, பகவானின் நாம ஸங்கீர்த்தனத்தால் அவ்வெல்லா களங்கத்திலிருந்தும் விடுபட்டு படிப்படியாக ஆன்மீகநிலைக்கு உயர்ந்து, இறுதியில் பகவானை அடைய முடியும். இதையே பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரச்சாரம் செய்தார்.

அந்தத் தூய வாழ்விற்கு உயர்வு பெற, தூய பக்தித் தொண்டை நிறைவேற்ற பின்வரும் ஆறு கொள்கைகளைக் கடைபிடித்தல் அவசியம்: (1) கிருஷ்ண உணர்வில் என்றும் உற்சாகமாக இருத்தல் (2) நம்பிக்கையுடன் செயல்படுதல் (3) பொறுமையுடன் இருத்தல் (4) கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுதல் (5) பக்தரல்லாதவர்களின் சகவாசத்தைக் கைவிடுதல் (6) முந்தைய ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல். இந்த ஆறு கொள்கைகளும் தூய பக்தித் தொண்டின் முழு வெற்றியைத் தரும் என்பதில் தினையளவேனும் ஐயமில்லை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives