வாழ்வில் வெற்றியடைய…

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ

யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம்

யாவத் க்ரியாஸ் தாவத் இதம் மனோ வை

கர்மாத்மகம் யேன ஷரீர-பந்தா: 

ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச் செயல்களுக்கும் (கர்மத்திற்கும்) உரிய விளைவுகள் உண்டு. ஒருவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தால், அஃது எத்தகையதாக இருந்தாலும், அவனது மனம் கர்மாத்மக, அதாவது, பலன்நோக்குச் செயல்களால் நிறைந்ததாகும். மனம் களங்கமாக இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன்நோக்குச் செயல்களில் ஒருவன் மூழ்கியிருக்கும் வரை, அவன் பௌதிக உடலை ஏற்றாக வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.5)

வாழ்வின் தோல்வி

நாம் எந்த செயலைச் செய்கிறோமோ அச்செயல்களில் நமது மனம் ஆழ்ந்துவிடுவது இயற்கையே. இது கர்மாத்மகம்  எனப்படுகிறது. ஆகவே, நமது மனம் எப்பொழுதும் கிருஷ்ணரில் ஆழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பௌதிக உடலின் பந்தத்திலிருந்து விடுபடவியலும். துரதிர்ஷ்டவசமாக, பௌதிக உடலின் பந்தத்தைப் பற்றி கற்பிக்கும் கல்வி முறை இல்லை, நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு இந்த பௌதிக உடல் ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது என்பதை யாரும் கற்பிப்பதில்லை.

பந்தப்பட்ட வாழ்வில் இருக்கும் வரை, பெயரளவிலான பௌதிக முன்னேற்றத்திற்காக நாம் எதைச் செய்தாலும், அது முன்னேற்றமல்ல. மாறாக, பராபவ:, தோல்வியே. மக்கள் இரவும் பகலும் பல்வேறு செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு, பௌதிக முன்னேற்றத்தைப் பெறுகின்றனர். ஆனால் அது முன்னேற்றமல்ல, பின்னேற்றமே. ஆயினும், அவர்கள் இதை அறிவதில்லை. ஏனெனில், அவர்கள் அறியாமையில் பிறந்துள்ள அயோக்கியர்கள், அபோத-ஜாத:. நீங்கள் அனைவரும் அறியாமையில் பிறந்துள்ள அயோக்கியர்கள்,” என்று நாம் கூறினால், அவர்கள் நம்மிடம் சண்டையிடுவர். ஆனால், அதுவே உண்மை.

யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம். மனிதனாகப் பிறந்தவன் தன்னைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வினவ வேண்டும். ஆனால், அத்தகைய வினாக்களை இன்று யாரும் எங்கும் வினவுவதில்லை. ஏனெனில், அதுகுறித்த தகவல் யாருக்குமில்லை. பெரும் பேராசிரியர்கள்கூட இவ்வுடல் தற்செயலாகக் கிடைத்தது என்றும், உடல் முடிந்தவுடன் அனைத்தும் முடிந்து விடுகின்றன என்றும் நினைக்கின்றனர். அவர்கள் ஆத்ம-தத்த்வத்தை அறியவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

குழந்தைகளின் திட்டங்கள்

தொழுநோயை குணப்படுத்துவதற்கான முயற்சி குறித்து இன்று காலையில் பேசிக் கொண்டிருந்தோம். அம்முயற்சி நல்லதுதான். ஆனால், தொழுநோய் ஏன் வருகிறது? இதனை அவர்கள் அறிவதில்லை. ஒருவன் தொழு நோயால் துன்பப்படுவதும், மற்றொருவனுக்கு தொழுநோய் வராதிருப்பதும் ஏன்? இதற்கு பின்னால் ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? அந்த ஏற்பாட்டினைச் செய்பவர் யார்? ஏற்பாடு ஏதுமின்றி இவையெல்லாம் எப்படி நடைபெறுகின்றன?

இதுபோன்ற வினாக்களை மக்கள் எழுப்புவதில்லை. அவர்கள் மரங்களைப் போன்று ஜடமாக, மந்தமாக இருக்கின்றனர். என்னை எதற்காக வெட்டுகிறீர்கள்?” என்று மரத்திற்கு கேட்கத் தெரியாது. நவீன மனித சமுதாயமும் அதைப் போன்றே உள்ளது. எனவே, அவர்கள் எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும், அவையனைத்தும் குறுகிய காலத்தில் பயனற்றதாகின்றன. எத்தகைய திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த விளையாட்டு விளையாடினால் நன்றாக இருக்கும்” என்று குழந்தைகள் நினைப்பதுபோல, அவர்களும் நினைக்கின்றனர். முதலில் ஒரு விளையாட்டு, அடுத்து ஒரு விளையாட்டு என்று குழந்தைகள் விளையாடுவதைப் போல, இவர்களும் திட்டங்களைத் தீட்டுகின்றனர். குழந்தைகளைப் போன்ற இத்தகைய நிலை அபோத, அறியாமை எனப்படுகிறது.

புத்தரின் தன்னுணர்வு

இந்த அபோத (அறியாமை) நிலையிலிருந்து போத (அறிவுள்ள) நிலைக்கு ஒருவன் வர வேண்டும். அபோத நிலையிலிருக்கும் அயோக்கியர்கள் இதிலிருந்து விடுபட, போத அல்லது புதா நிலையில் இருப்பவரை அணுக வேண்டும். வாழ்வின் இலக்கு என்ன என்பதை அறிந்தவன் புதா என்று அழைக்கப்படுகிறான்.

புத்தரின் பெயரும் புதா என்னும் வார்த்தையிலிருந்துதான் வந்துள்ளது. அவர் வாழ்வை அறிந்தவராக இருந்தார். இளவரசராக இருந்த அவர் அரண்மனையை விட்டு வெளியே சென்றதில்லை. ஒரு சமயம் அவ்வாறு அவர் வெளியே வந்தபோது, ஒரு முதியவர் கோல் ஊன்றியபடி சிரமத்துடன் நடந்து செல்வதைக் காண நேரிட்டது.

அவர் தமது சேவகர்களிடம், யார் இவர்?” என வினவினார்.

சேவகர்கள், இவர் முதியவர்” என்றும், அனைவரும் இதுபோல் ஆக வேண்டியவர்களே” என்றும் பதிலளித்தனர்.

இந்நிகழ்வு அவரது தன்னுணர்வுக்குத் தூண்டுதலாக அமைந்தது. ஒருவன் ஏன் இதுபோன்று முதுமையடைய வேண்டும்? எதற்காக கோல் ஊன்றி நடக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும்? இதுபோன்ற வினாக்களை தியானத்தின் மூலம் புத்தர் எழுப்பினார். இஃது அவரது லீலையாகும். இயற்கையைப் படிப்பதனால் இத்தகைய வினாக்களை எழுப்புவதற்கு ஒருவன் தூண்டப்படுகிறான்: மனிதன் நோய்வாய்ப்படுவது ஏன்? எதற்காக முதுமையடைகிறான்? அவன் துன்புற காரணம் என்ன? இதுபோன்ற வினாக்கள் அவனை நல்லறிவை நோக்கி இட்டுச் செல்கின்றன. அந்த நல்லறிவை யாரிடமிருந்து பெறுவது? அது குருவிடமிருந்து பெறப்பட வேண்டும். ஆயினும், ஒருவன் மரத்தைப் போன்றும் கல்லைப் போன்றும் ஜடமாக இருந்தால், குருவிடம் வினவுவது சாத்தியமா?

புத்தர் மக்களின் துன்பத்தைக் கண்டு வினாக்களை எழுப்பியதால் தன்னுணர்வைப் பெற்றார்.

குரு ஒரு ஃபேஷன் அல்ல

தற்போதைய கல்விமுறையானது நம்மை மரத்தைப் போன்றும் கல்லைப் போன்றும் ஜடமாக வைத்திருக்கின்றன. என்னை ஏன் வெட்டுகிறீர்கள்?” என மரத்தால் வினவ இயலாது. மக்களால் முடியும். உண்மையை அறிவதில் ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் மனிதன் குருவை ஏற்க வேண்டும். குருவை ஏற்றல் என்பது, சீடன் அவரிடமிருந்து அறிவைப் பெறுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளான் என்பதை காட்டுகின்றது. இன்றைய நாள்களில் மக்கள் குருவை ஒரு ஃபேஷனுக்காக வைத்துக் கொள்கின்றனர். அனைவரும் நாய் வைத்துள்ளனர், நானும் நாய் வைத்துக்கொள்கிறேன்” என்ற எண்ணத்தைப் போல, குருவையும் ஏற்கின்றனர்.

ஆனால், செல்லப் பிராணியை வைத்துக் கொள்வதுபோல குருவை வைத்துக்கொள்ளக் கூடாது. வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தீர்வை அறிவதில் ஆர்வமாக இருப்பவனே குருவை ஏற்க வேண்டும். குருவை அடக்கத்துடன் அணுகி பணிவிடை செய்து வினாக்களை எழுப்ப வேண்டும். ஆயினும், உங்களது வினாக்களை மலிவானதாக ஆக்கி விடாதீர். இதோ, எனது வினாக்களுக்கு விடையளிக்க குரு இருக்கிறார்,” என்று எண்ணி அபத்தமான வினாக்களை எழுப்பக் கூடாது.

குருவிற்குத் தொண்டு புரிய நீங்கள் தயாராக இருப்பீர்களானால், அவரிடமிருந்து கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. சேவை மனப்பான்மை இல்லாதபட்சத்தில் வினவுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. யாரிடம் உங்களால் முழுமையாக சரணடைய முடியுமோ அந்நபரை நீங்கள் தேட வேண்டும். பிறகு நீங்கள் வினவலாம், அதற்கு கைமாறாக நீங்கள் சேவை செய்ய வேண்டும். குருவிற்கு எந்த அளவிற்கு தொண்டு புரிய நீங்கள் ஆர்வமுடன் உள்ளீர்களோ, அந்த அளவிற்கு உண்மைகள் வெளிப்படுத்தப்படும்.

யஸ்ய தேவே பரா பக்திர்யதா-தேவே ததா குரௌ

தஸ்யைதே கதிதா ஹ்யர்தா:ப்ரகாஷந்தே மஹாத்மன

பகவானிடமும் ஆன்மீக குருவிடமும் அசையாத நம்பிக்கை உடைய மஹாத்மாக்களுக்கே வேத ஞானத்தின் கருத்துகள் அனைத்தும் தாமாக வெளிப்படுத்தப்படுகின்றன.” (ஷ்வேதாஸ்வதர உபநிஷத் 6.23) சேவை செய்ய உங்களுக்கு ஆர்வமில்லை என்றால், ஆன்மீக குருவை ஏற்காதீர்கள். 

புலனின்பத்திற்கு கல்வி தேவையில்லை

வாழ்வின் இறுதிக் குறிக்கோளை ஆய்ந்தறிய விரும்புபவனுக்கே குரு தேவைப்படுகிறார். வெறும் புலனின்பத்தை மட்டும் விரும்புபவனுக்கு குரு தேவையில்லை. பறவைகளும் விலங்குகளும்கூட தங்களது புலன்களுக்கு இன்பமளிப்பது எவ்வாறு என்பதை அறிந்து வைத்திருக்கின்றன. உண்ணுதல், உறங்குதல், பாலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைக் கற்பிப்பதற்கு பல்கலைக்கழகமோ ஆசிரியரோ தேவையில்லை. ஆனால், இன்றைய மக்களோ தங்களது புலன்களை விஞ்ஞானபூர்வமாக திருப்தி செய்வதற்காகவே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். விஞ்ஞான முறையில் திருடுவது எவ்வாறு, விஞ்ஞான முறையில் கழுத்தை வெட்டுவது எவ்வாறு என்பதைக் கற்பிக்கும் கல்வி தேவையா? இல்லை. மக்களுக்கு ஆன்மீகக் கல்வியே தேவைப்படுகிறது. இந்த நவீன பல்கலைக்கழக கல்வி வெறும் கால விரயமே.

மனித சமுதாயம் வர்ணாஷ்ரம முறையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வைசியர்களும் சூத்திரர்களும் கல்வி கற்க வேண்டியதில்லை. பிராமணர்கள் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டியவர்கள் என்பதால், அவர்களுக்குக் கல்வி தேவைப்படுகிறது. சத்திரியர்கள் சமுதாயத்திற்கு பாதுகாப்பளிக்க வேண்டியவர்கள் என்பதால், அவர்களுக்கு பிராமணர்கள் கல்வி கற்பித்தனர்.

வைசியர்கள் நிலத்தை உழுது பயிர் செய்வதற்கான கல்வியைத் தங்களது தந்தையிடமிருந்து கற்றுக் கொள்வர். அவர்களுக்குக் கல்வி தேவையில்லை, தந்தை செய்வதைப் பார்த்தே கற்றுக் கொள்வர்.

வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்கே கல்வி அவசியம். அஃது இந்த ஸ்லோகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தத்துவக் கல்வியைப் பெறாவிடில், மக்கள் அபோத-ஜாத என்னும் அறியாமையின் நிலையிலேயே இருப்பர். இன்றைய அயோக்கிய சமுதாயத்தில் வாழும் அபோத-ஜாத மக்கள் எத்தகைய திட்டங்களைத் தீட்டினாலும், எத்தகைய செயல்களைச் செய்தாலும், அவையனைத்தும் தோல்வியில்தான் முடிவடையும்.  அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளை அறியாதவர்கள். இப்பிறவியில் நான் பிரதமராகலாம், பல்வேறு திட்டங்களைத் தீட்டலாம். ஆனால், மறுபிறவியில் ஒரு நாயாகப் பிறக்க நேரிடலாம். உங்களால் அதனைத் தடுக்கவியலாது. கடவுளின் சட்டம் நீங்கள் பிரதமர் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது.

தொழிலைக் கற்பதற்கு கல்வி அவசியமில்லை. சிறு வயதிலிருந்தே தந்தையைப் பார்த்து தொழிலைக் கற்றுக்கொள்ள முடியும்.

கிருஷ்ணரின் திட்டத்தை ஏற்றல்

அறியாமையில் உள்ளவர்களால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் இறுதியில் தோல்வியையே அடைகின்றன. திட்டங்கள் தீட்ட வேண்டிய தேவை நமக்கில்லை. ஏனெனில், கிருஷ்ணர் திட்டங்களை வழங்கியிருக்கிறார். அவரிடம் சரணடைவதே இறுதி திட்டம். அதுவே உண்மையான திட்டம். கர்ம-யோகம், தியான-யோகம், இந்த யோகம், அந்த யோகம் என கிருஷ்ணர் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளபோதிலும், கிருஷ்ண பக்திக்கு வருவதையே அவர் இறுதி திட்டமாக வைத்துள்ளார். நீங்கள் ஹட-யோகத்தின் மூலம் யோகியாக முயல்கிறீர்கள்; சரி, ஆனால் யோகியானவன் தனிமையான இடத்திற்குச் சென்று குறிப்பிட்ட விதத்தில் அமர வேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். தூங்கி வழியாமல் பாதி மூடிய கண்களுடன் மூக்கின் நுனியைக் காண வேண்டும், பிரம்மசரியத்தைக் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறாக பல்வேறு நியமங்களை பகவான் விளக்கியுள்ளார்.

யோகியாவது எவ்வாறு? ஞானியாவது எவ்வாறு? கர்மியாவது எவ்வாறு? என்பதையெல்லாம் விளக்கிய பகவான் கிருஷ்ணர், இறுதியில், தம்மிடம் சரணடையும்படி கூறுகிறார். ஆகவே, இறுதி இலக்கு கிருஷ்ணரே. கிருஷ்ணரே இறுதி இலக்கு என்பதை அறியாவிடில் உங்களது ஞானம், கர்மம், யோகம், தவம் அனைத்தும் கால விரயமே. எனவே, அவை இங்கே பராபவ: என்று கூறப்பட்டுள்ளன.

தோல்வியைத் தவிர்த்தல்

ஆத்ம விஞ்ஞானத்தை அறியாது நீங்கள் எதைச் செய்தாலும், அவையனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடியும். இது மிகவும் அபாயகரமான நிலை. கிருஷ்ண உணர்வை நீங்கள் ஏற்காவிடில், உங்களது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியையே அடைவீர்கள், பின்னர் இறந்து வேறோர் உடலை ஏற்பீர்கள். அந்த புது உடலை நீங்களோ, உங்களது அரசாங்கமோ, உங்களது தந்தையோ தேர்வு செய்வதில்லை. இயற்கையே அதனைத் தேர்வு செய்கிறது. இதை உங்களால் தவிர்க்க இயலாது.

வாழ்வின் இறுதிக் குறிக்கோள் கிருஷ்ணரே என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (16,23) கூறுகிறார்,

ய: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்யவர்ததே காம-காரத:

ந ஸ ஸித்திம் அவாப்னோதிந ஸுகம் ந பராம் கதிம் 

சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.” நீங்கள் வெற்றிபெறாவிடில் கடின உழைப்பினால் என்ன பயன்?

கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். நீங்கள் பெயரளவிலான தலைவர்களால் தவறாக வழிநடத்தப்படுவதால் உங்களுக்கு உதவி செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். இந்தத் தலைவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்; நிச்சயம் உங்களை தவறாகவே வழிநடத்துவர். குருடர்களான அவர்களுக்கு எவ்வாறு வாழ்வது என்பது தெரியாது. ஆகவே கிருஷ்ணரே வருகிறார், எனது உபதேசங்களை ஏற்று என்னிடம் சரணடையுங்கள், எனது திருநாட்டை அடைவதற்கு நான் வழிகாட்டுகிறேன்” என்று கிருஷ்ணரே நமக்கு வழிகாட்டுவதற்கு வருகிறார். அதை ஏற்று பக்குவமடைவோமாக.

கிருஷ்ணரிடம் சரணடைவதே வாழ்வின் இறுதித் திட்டமாகும்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives